இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என் மாமிசத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்

நம் இரட்சகர் திவ்விய நன்மையை விட மற்ற எல்லாற்றிலும் அதிக நேசத்திற்குரியவராகவும், அதிகக் கனிவுள்ளவராகவும் ஒருபோதும் காணப்பட முடியாது, இவர் அதில் தம்மையே அழித்துக் கொண்டு உணவாக மாறி, தமது விசுவாசிகளின் இருதயங்களோடும், உடல்களோடும் தம்மை இணைத்துக் கொள்கிறார் என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார். ஆகவே, நம் ஆன்மாக்களில் கடவுளின் மீதான பக்தியையும், பரிசுத்த நேத்தையும் தூண்டுவதற்கு திவ்விய நன்மையை விட அதிக பயனுள்ள வேறு எந்த வழியுமில்லை என்று அறிஞரான ஜெர்சன் கூறுவது வழக்கம்.

உண்மையில், கடவுளுக்கு உகந்த ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி நாம் பேசுவோம் என்றால், திவ்ய நன்மை உட்கொள்வதைத் தவிர அவருக்கு அதிகம் உகந்த வேறு எதை ஓர் ஆத்துமம் செய்ய முடியும்? அன்பு எப்போதுமே உத்தம ஐக்கியத்தை நோக்கிச் செல்கிறது என்று அர்ச். டெனிஸ் நமக்குக் கற்பிக்கிறார்; ஆனால், ""என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்'' என்று அவர்தாமே கூறியுள்ள முறையிலேயன்றி, வேறு எந்த முறையில் ஓர் ஆன்மா சேசுவோடு அதிக உத்தமமான முறையில் ஐக்கியம் கொள்ள முடியும்? ஒவ்வொரு நாளும் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தை நீ உட்கொள்வாய் என்றால், சேசு எப்போதும் உன்னோடு இருப்பார், நீ எப்போதும் தேவசிநேகத்தில் வளர்வாய் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

மேலும், நம் ஞான நோய்களைக் குணமாக்கும் பிரச்சினை இருக்குமானால், ""நம் அன்றாடப் பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பதும், சாவான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதுமான மருந்து'' என்று திரிதெந்தீன் பொதுச் சங்கத்தால் அழைக்கப்படும் திவ்ய நன்மையை விட அதிக நிச்சயமான மருந்தை நாம் கொண்டிருக்க முடியாது.

அடிக்கடி நன்மை வாங்கிய பின்பும் ஏராளமான ஆன்மாக்களில் மிகக் குறைவான பலனையே நாம் காண முடிவதற்ம், அவை தொடர்ந்து ஒரே பாவங்களில் விழுந்து கொண்டிருப்பத்கும் என்ன காரணம் என்று கர்தினால் போனா கேட்கிறார். அதன்பின் அவரே பதிலும் சொல்கிறார்: ""பிரச்சினை உணவில் அல்ல, மாறாக அதை உட்கொள்பவனின் மனநிலையில் உள்ளது'' என்று. ""தன் வஸ்திரங்கள் வேகாமல் மனிதன் தன் நெஞ்சத்து அக்கினியை ஒளிக்கக் கூடுமோ?'' (பழ.6:27) என்று கேட்கிறார் சாலமோன். கடவுள் சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கிறார். இந்த தெய்வீக நெருப்பைத் தூண்டும்படி அவரே திவ்விய நன்மையில் நம்மிடம் வருகிறார். அப்படியிருக்க, இத்தகைய தீச்சுவாலைகளுக்கு மத்தியில் தெய்வீக அன்பில் ஆன்மாக்கள் குளிர்ந்தவர்களாகவே நிலைத்திருப்பதாகிய பேய்த்தனமுள்ள புதுமையை நாம் காண்பது எவ்வாறு நிகழ்கிறது என்று பாரிஸின் வில்லியம் என்பவர் கேட்கிறார். அனைத்தும் முறையான மனநிலைகள் இல்லாமையாலும், குறிப்பாக, தகுந்த ஆயத்தம் இல்லாமையாலும் வருகிறது. நெருப்பு காய்ந்த விறகை உடனடியாக எரிக்கிறது, பச்சை மரமோ உடனே தீப்பற்றுவதில்லை. பச்சை மரம் எரிப்பதற்குத் தகுதியானது அல்ல. புனிதர்கள் தங்கள் திவ்விய நன்மைகளால் பெரும் பயன் அடைந்தது ஏனெனில் அவர்கள் மிக அதிக கவனத்தோடு தங்களை ஆயத்தம் செய்தார்கள். அர்ச். அலாய்சியஸ் கொன்ஸாகா திவ்ய நன்மை உட்கொள்ள மூன்று நாள் ஆயத்தம் செய்வார், நன்மை வாங்கியபின் மூன்று நாட்கள் தம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்!

திவ்ய நன்மை வாங்க நன்கு ஆயத்தம் செய்வதற்கு, ஓர் ஆன்மா இரண்டு முக்கியக் காரியங்களில் அது நல்ல மனநிலை கொண்டிருக்க வேண்டும்: அது சிருஷ்டிகளிடம் பற்றில்லாததாக இருக்க வேண்டும், தேவ சிநேகத்தில் வளர அது பெரும் ஆசை கொண்டிருக்க வேண்டும்.

1. அகவே, முதலாவதாக ஓர் ஆன்மா எல்லாக் காரியங்களிலும் தனக்குள்ள பற்றை அறுத்துக் கொண்டு, கடவுளல்லாத அனைத்தையும் தன் இருதயத்திலிருந்து வெளியே துரத்தி விட வேண்டும். ""குளித்து விட்டவன் தன் பாதங்களையன்றி மற்றொன்றையும் கழுவ வேண்டுவதில்லை. மற்றப்படி அவன் முழுதும் சுத்தமாயிருக்கிறான்'' (அரு.13:10). அர்ச். பெர்னார்ட் இதை விளக்குகிறபடி, இந்தத் தேவத்திரவிய அனுமானத்தை மிகுந்த பலனோடு பெற்றுக்கொள்வதற்கு, நாம் சாவான பாவங்களிலிருந்து சத்திகரிக்கப்படுவது மட்டும் போதாது, மாறாக நம் பாதங்களும் கழுவப்பட வேண்டும், அதாவது நாம் உலக நாட்டங்களிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். ஏனெனில் பூமியோடு தொடர்புள்ளவை என்ற முறையில் அவை கடவுளில் ஒரு வகையான அருவருப்பைத் தூண்டுகின்றன, ஆன்மாவைக் கறைப்படுத்தி, திவ்விய நன்மையின் பலன்களைத் தடுக்கின்றன என்பதையே இவ்வாக்கியம் குறித்துக் காட்டுகிறது.

அர்ச். ஜெர்த்ரூத் நம் ஆண்டவரிடம், திவ்ய நன்மை வாங்கத் தன்னிடம் என்ன ஆயத்தங்களை அவர் எதிர்பார்க்கிறார் என்று கேட்க, ""என்னைப் பெற்றுக்கொள்ள உன்னையே நீ வெறுமையாக்கி விட்டு வர வேண்டும் என்று மட்டும்தான் நான் கேட்கிறேன்'' என்று அவர் பதிலளித்தார்.

2. இரண்டவதாக, திவ்விய நன்மை உட்கொள்வதில், சேசுநாதரையும், அவருடைய பரிசுத்த அன்பையும் பெற்றுக் கொள்ள ஒருவன் மிகுந்த ஆசை கொண்டிருக்க வேண்டும். இந்தப் புனித விருந்தில், மிகுந்த பசியோடு இருப்பவர்கள் மட்டுமே வயிறாற உண்கிறார்கள்; மகா பரிசுத்த கன்னிகை ஏற்கெனவே இதே காரியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்: ""பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பினார்'' (லூக்.1:53). சேசுநாதர் அதிகமாகவும் நீண்ட காலமாகவும் தாம் ஆசிக்கப்பட்டிருந்த பிறகுதான் இவ்வுலகிற்கு வந்தார், அதே போல, தம்மை ஆசித்துத் தேடும் ஓர் ஆன்மாவில் மட்டுமே அவர் பிரவேசிப்பார். ஏனெனில் இந்த உணவின் மீது வெறுப்புள்ளவனுக்கு அது வழங்கப்படுவது தகுதியானதல்ல என்று தந்தை அவிலா எழுதுகிறார். நம் ஆண்டவர் ஒருநாள் அர்ச். மெட்டில்டாவிடம், ""என் அன்பின் வன்மையால் துரத்தப்படுபவராக திவ்விய நன்மையில் ஆன்மாக்களிடம் நான் பறந்து செல்வது போன்ற ஆற்றலுடனும் வேகத்துடனும் எந்தத் தேனீயும் மலர்களின் தேனை உண்ணும்படி அவற்றிடம் விரைந்து செல்வதில்லை'' என்றார். ஆகவே, கிறீஸ்துநாதர் நம் ஆன்மாக்களில் வர இவ்வளவு பெரும் ஆசை கொண்டிருப்பதால், நாமும் திவ்ய நன்மையில் அவரையும், அவரது தேவசிநேகத்தையும் பெற்றுக் கொள்ள மிகுந்த ஆசை கொண்டிருப்பதே சரியானது. திவ்ய நன்மை உட்கொள்வதில் ஓர் ஆத்துமம் கொண்டிருக்க வேண்டிய முதன்மையான நோக்கம், தேவசிநேகத்தில் வளர்வதேயாகும் என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் நமக்குக் கற்பிக்கிறார். நேசத்திற்காக மட்டுமே தம்மை நமக்குத் தருபவர் நேசத்திற்காகவே உட்கொள்ளப் பட வேண்டும்.