25 ஜனவரி, 1944 (நள்ளிரவில்).
பரிசுத்த திருக்குடும்பத்தின் இனிய காட்சி. இடம் எஜிப்தில். அதைப் பற்றி ஐயமில்லை. ஏனென்றால் நான் பாலைவனத்தையும் ஒரு எஜிப்திய கூம்புக் கோபுரத்தையும் காண்கிறேன்.
மாடி இல்லாத ஒரு சிறிய வீடு. முழுவதும் வெள்ளை நிறமாயிருக்கிறது. மிக ஏழைகளின் எளிய இல்லம். சுவர்கள் பூசி வெள்ளை மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இரண்டே அறைகள். அவற்றினுட் செல்ல அடுத்தடுத்து இரண்டு வாசல்கள். தற்சமயம் நான் வீட்டினுட் செல்லவில்லை. அவ்வீடு ஒரு சிறு மணல் நிலத்தின் நடுவில் அமைந்துள்ளது. நிலத்தைச் சுற்றி சிறு மூங்கில் கழிகள் நடப்பட்ட வேலி. அலையும் நாய்கள் பூனைகள் உள்ளே வராமல் இருக்குமேயயாழிய திருடர்களிடமிருந்து அது வீட்டைப் பாதுகாக்காது. ஆனால் பணத்தின் நிழல்கூட இல்லாத அங்கிருந்து எதையும் திருட யார் நினைப்பார்கள்? கழி வேலியடைத்த அந்தத் தரை வறண்டு சாரமற்றிருந்தாலும், அதிலே ஒரு சிறு தோட்டம் பொறுமையோடு உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. வேலியின் இடைவெளியைக் குறைப்பதற்காக அதில் படர்செடி வளர்க்கப்பட்டிருக்கிறது. அது கொன்வோல்வுலி செடி போலிருக்கிறது. ஒரு பக்கத்தில் மட்டும் ஒரே ஒரு முல்லைச் செடி நன்றாகப் பூத்திருக்கிறது. ஒரு சாதாரண ரோஜாச் செடியும் இருக்கிறது. அந்த சமையல் தோட்டத்தில் சில சாதாரண காய்களைக் காண்கிறேன். ஓர் உயரமான மரம் நடுவில் நிற்கிறது. அது எனக்கு இனம் தெரியவில்லை. அது நிலத்திற்கும் வீட்டிற்கும் கொஞ்சம் நிழல் கொடுக்கிறது. அதில் வெள்ளையும் கறுப்புமான ஒரு வெள்ளாடு கட்டப்பட்டுள்ளது. தன்முன் தரையில் போடப்பட்டுள்ள சில தழைகளைத் தின்று கொண்டிருக்கிறது.
அதற்குப் பக்கத்தில் தரையில் விரிக்கப்பட்டுள்ள ஒரு பாயில் சேசு குழந்தையைப் பார்க்கிறேன். அவருக்கு நான் நினைக்கிறேன் இரண்டு வயது, கூடினால் இரண்டரை வயது இருக்கும். அவர் சின்ன ஆடுகள் சின்னக் குதிரைகள் போல் செதுக்கப்பட்ட மரத்துண்டுகளையும் சில மரச் சீவல்களையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவை சுருள் சுருளாக உள்ளன. அவைகளை அந்த பொம்மை மிருகங்களின் கழுத்தில் மாலையாக தம் சின்னக் கரங்களால் போட முயற்சிக்கிறார்.
சேசு குழந்தை அமைதியாக புன்னகையுடன் மிக்க அழகுடன் காணப்படுகிறார். அவருடைய தலை அடர்ந்த பொன் சுருள்களால் நிரம்பியிருக்கிறது. அவருடைய நிறம் இள ரோஜா நிறமாயிருக்கிறது. அவருடைய கண்கள் உயிரோடு, ஆழ்ந்த நீல விழிகளுடன் பிரகாசமாயிருக்கின்றன. அவற்றின் பார்வை வேறாயிருந்தாலும் நான் என் சேசுவின் கண்களின் நிறத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன்: இரண்டு அழகிய இருண்ட நீலமணிகள். குறுகிய கையுள்ள ஒருவகை நீண்ட வெள்ளைச் சட்டை அணிந்திருக்கிறார். அவர் பாதங்களில் காலணி இல்லை. அவை அந்தப் பாயில் கிடக்கின்றன. அவைகளை வைத்தும் அவர் விளையாடுகிறார். மரப் பொம்மை மிருகங்களை பாயில் வைத்து காலணிகளின் வார்களைப் பிடித்து சிறு வண்டியை இழுப்பது போல இழுக்கிறார். காலணிகள் மிக எளியவை. பாத மிதியின் முன்புறமிருந்து ஒரு வார் வருகிறது. குதிங்கால் பதியுமிடத் திலிருந்து மற்றொரு வார் உள்ளது. முதல் வார் ஓர் இடத்தில் இரண்டாய்ப் பிரிந்து அதில் ஒன்று குதிங்கால் வாரின் துளை வழியாக வந்து கரண்டையைச் சுற்றிக் கட்டப்படுகிறது.
சற்றுத் தொலைவில் மாதா மர நிழலில் கரடான ஒரு தறியில் நெய்து கொண்டே குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களின் ஒல்லிய வெண் கரங்கள் ஓடத்தை இழைகளூடே செலுத்த முன்னும் பின்னும் அசைவதையும், காலணி அணிந்த பாதங்கள் பாத மிதிகளை மிதிப்பதையும் காண்கிறேன். செவ்வந்திக் கல் நிற ஊதா கலந்த அங்கி அணிந்திருக்கிறார்கள். அவர்கள் தலையில் முக்காடு இல்லை. உச்சி வகிடு எடுத்து பின்கழுத்தில் முடியெல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கியின் கைகள் நீண்டு ஒடுங்கியிருக்கின்றன. அவர்களின் அழகையும் இனிய முகபாவத்தையும் தவிர வேறு ஆபரணம் எதுவுமில்லை. நான் எப்போது அவர்களைப் பார்த்தாலும் அவர்களின் முகம், முடி, கண்கள், வதனம் எல்லாம் ஒரே மாதிரிதான் உள்ளன. மிக இளமையாய் இருபது வயதுடையவர்கள் போல் காணப்படுகிறார்கள்.
மாதா எழுந்து, குனிந்து குழந்தை சேசுவின் காலணிகளைக் கட்டுகிறார்கள். பின் குழந்தைக்கு முத்தங் கொடுத்து அவர் பேசும் மழலை மொழிக்குப் பதில் சொல்கிறார்கள். வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை. அதன்பின் தறியில் நெய்திருந்த துணியையும் நூல்விரிப்பையும் ஒரு துணியால் மூடுகிறார்கள். தான் அமர்ந்திருந்த இருக்கையை உள்ளே கொண்டு செல்கிறார்கள். சேசு பாலன் மாதாவையே பார்க்கிறார். அவர் தனியே விடப்படும்போதும் அமைதியாயிருக்கிறார்.
மாலை நேரம் ஆகிவிட்டது. வேலையும் முடிகிறது. வெறும் மணற்பரப்பில் சூரியன் அடைகிறது. தூரத்திலிருக்கிற கூம்புக் கோபுரத்தின் பின்னாலுள்ள ஆகாயம் முழுவதும் பெரிய நெருப்புப்போல் காணப்படுகிறது.
மாதா திரும்பி வருகிறார்கள். சேசுவின் கையைப் பிடித்துப் பாயிலிருந்து தூக்குகிறார்கள். எந்த மறுப்புமின்றி பாலன் கீழ்ப்படிகிறார். மாதா அவருடைய விளையாட்டுச் சாமான்களையும் பாயையும் வீட்டிற்குள் கொண்டு செல்கிறார்கள். பாலகன் தன் வடிவான சிறு கால்களில் தத்தி நடந்து சென்று ஆட்டின் பக்கமாய்ப் போய் அதன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறார். அதுவும் சத்தம் கொடுத்து அவர் தோள்மேல் தன் தலையை உராய்க்கிறது.
மாதா வருகிறார்கள். அவர்கள் தலையில் ஒரு நீண்ட முக்காடிட்டிருக்கிறார்கள். கையில் தண்ணீர்ப் பாத்திரம் ஏந்தியிருக்கிறார்கள். மாதா சேசுவின் கையைப் பிடித்துக் கொள்ள இருவரும் நடக்கிறார்கள். வீட்டிலிருந்து அடுத்த பக்கம் செல்கிறார்கள்.
அந்தக் காட்சியின் இரம்மியத்தை வியந்தபடி நான் பின்தொடர்ந்து செல்கிறேன். மாதா சேசு பாலனின் நடைக்குத் தன் நடையை சரிசெய்து நடக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் அவர் சிறுநடை பயில்கிறார். அந்தப் பாதையில் மணலில் சேசுவின் ரோஜா வண்ணப் பாதங்கள் குழந்தைகளுக்கே உரிய முறையில் மேலும் கீழும் அசைவதைக் காண்கிறேன். அவருடைய அங்கி, பாதம் வரையிலும் நீளமாயில்லை. அது முழங்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் தொங்குகிறது. அது மிகச் சுத்தமாயும் எளிமையாயுமிருக்கிறது. அது அவருடைய இடையில் ஒரு வெள்ளைக் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது.
வீட்டின் முன்னாலிருக்கிற வேலியின் ஒரு தட்டிக் கதவு உள்ளது. அதைத் திறந்து கொண்டு மாதா வெளியே தெருவுக்கு வருகிறார்கள். அது ஒரு எளிய வீதி. ஊரோடு முடிகிறது. மணலால் ஆக்கப்பட்டது. அங்கு வேறு சில இதேபோல் எளிய வீடுகளும் உள்ளன. அவற்றிற்கு சிறிய சமையல் தோட்டங்களும் இருக்கின்றன.
யாரும் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. மாதா ஊரின் நடுப்புறமாக நோக்குகிறார்கள். யாரையோ அவர்கள் எதிர்பார்க்கிறது போலிருக்கிறது. ஒரு பத்து மீட்டர் தள்ளியிருக்கிற ஒரு கிணறுபோல் காணப்படும் இடத்துக்குப் போகிறார்கள். அங்கே சில தால மரங்கள் நிழல் கொடுத்து நிற்கின்றன. அங்கே சில பச்சிலைச் செடிகளும் காணப்படுகின்றன.
தெருவில் ஒரு மனிதன் வருவது தெரிகிறது. ஆள் அதிக உயரமில்லை. ஆனால் நல்ல உடற்கட்டு. அவர் சூசையப்பர்தான் எனக் கண்டுபிடிக்கிறேன். அவர் புன்னகை புரிகிறார். மோட்ச காட்சியில் நான் கண்டபோது அவர் இருந்ததைவிட இளமையாக காணப்படுகிறார். மிஞ்சினால் நாற்பது வயதிருக்கும். அவருடைய முடியும் தாடியும் அடர்த்தியாகவும் கறுப்பாகவும் உள்ளன. அவருடைய சருமம் வெயிலடிபட்டுத் தெரிகிறது. இருண்ட விழிகள். நேர்மையான வசீகரமான நம்பிக்கையூட்டும் முகம்.
அவர் சேசுவையும் மாதாவையும் கண்டதும் வேகமாய் நடக்கிறார். அவருடைய இடது தோளில் ஒருவகையான ரம்பமும் இழைப்புளியும் உள்ளன. மற்ற கருவிகளைக் கையில் வைத்திருக்கிறார். அவை நாம் உபயோகிப்பவை போல் இல்லை. ஆனால் ஏறக்குறைய அப்படி உள்ளன. யார் வீட்டிலோ வேலை செய்தபின் திரும்பி வருகிறார் போலுள்ளது. பழுப்பு நிறத்திற்கும் இருண்ட மர நிறத்திற்கும் இடையிலுள்ள ஒரு நிறத்தில் அங்கி அணிந்திருக்கிறார். அது அதிக நீளமில்லை. கரண்டைக்கு சற்று மேலே நின்று விடுகிறது. அதன் கைகளும் குட்டையாயிருக்கின்றன. இடையில் ஒரு தோல்வார் கட்டியிருக்கிறாரென நினைக்கிறேன். அதுவே ஒரு தொழிலாளியின் உடை. காலணிகள் கரண்டையுடன் பொருத்திக் கட்டப்பட்டுள்ளன.
மாதா புன்முறுவல் செய்ய சேசு பாலன் விடுபட்ட ஒரு கையை நீட்டி மகிழ்ச்சிக் குரல் கொடுக்கிறார். சூசையப்பர் அவர்கள் அருகில் வந்ததும் குனிந்து சேசுவுக்கு ஒரு பழம் கொடுக்கிறார். அது ஆப்பிள் என்று நினைக்கிறேன். அதன் நிறமும் உருவமும் அப்படி இருக்கின்றன. சூசையப்பர் தன் கரத்தை நீட்ட சேசு பாலன் தாயைவிட்டு அவரிடம் வருகிறார். சூசையப்பர் அவரைக் கரத்தில் எடுத்துக் கொள்கிறார். சேசு சூசையப்பரின் கழுத்தில் சாய்ந்து கொள்கிறார்... இக்காட்சி மனோகரமான அன்பின் காட்சியாயிருக்கிறது.
சூசையப்பர் பாலனை எடுத்துக் கொள்ள வசதியாக மாதா அவரிடமிருந்த தொழிற்கருவிகளை வாங்கிக் கொண்டதைச் சொல்ல மறந்துவிட்டேன்.
சேசுவின் உயரத்திற்குச் சரியாக இருக்கும்படி குனிந்த சூசையப்பர், எழுந்து தன் இடது கரத்தில் தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வலதுகரத்தால் சேசுவை ஏந்தி தன் திட மார்புடன் அணைத்துக் கொள்கிறார். அப்படியே வீட்டை நோக்கி நடக்கிறார். மாதா தண்ணீர்ப் பாத்திரத்துடன் நீர்ச் சுனைக்குப் போகிறார்கள்.
வீட்டின் அடைப்பிற்குள் போனதும் சூசையப்பர் பாலனைக் கீழே விடுகிறார். பின் மாதாவின் தறியை வீட்டிற்குள் எடுத்துச் செல்கிறார். ஆட்டில் பால் கறக்கிறார். சேசு குழந்தை இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் - விசேஷமாக வீட்டின் ஒரு பக்கமாக இருக்கிற பட்டியில் ஆட்டை அடைப்பதைக் கூர்ந்து கவனிக்கிறார்.
நேரம் மங்குகிறது. மணற்பரப்பில் சூரியனின் செங்கதிர்கள் ஊதாவாகின்றன. மணல், வெப்பத்தினால் நடுங்குவது போலிருக்கிறது. கூம்புக் கோபுரம் இருண்டு தெரிகிறது.
சூசையப்பர் வீட்டில் ஓர் அறைக்குள்ளே செல்கிறார். அந்த அறையே அவருடைய தொழிற்கூடமாகவும் சமையல் கூடமாகவும் சாப்பிடும் இடமாகவும் இருக்க வேண்டும். மற்ற அறை படுக்கையறை. நான் அதனுட் செல்லவில்லை. தாழ்ந்த கனல் அடுப்பில் நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. அங்கே ஒரு தச்சு மேஜை. ஒரு சிறு மேஜை, சில கருவிகள்; அல்மேரா தட்டுகளில் இரண்டு எண்ணெய் விளக்குகள், சமையல் சாமான்கள் சில ஆகியவை உள்ளன. ஒரு மூலையில் மாதாவின் தறி உள்ளது. அந்த இடம் ஒழுங்காகவும் சுத்தமாகவும் இருக்கிறது. மிக எளிய வீடு. ஆனால் மிகச் சுத்தமானது.
ஒரு குறிப்பை இங்கு சொல்ல விரும்புகிறேன். சேசுவின் மானிட வாழ்வைப் பற்றிய எல்லாக் காட்சிகளிலும், சேசுவும், மாதாவும், சூசையப்பரும், அருளப்பரும் தங்கள் உடையிலும், உடலிலும் எப்போதும் மிகவும் சுத்தமாகவே காணப்பட்டனர். அவர்கள் ஒழுக்கமான, எளிய, ஆனால் பண்புடைய மனிதர்களைப் போல் எண்ணப்படக்கூடிய ஆடையில் காணப்பட்டனர்.
மாதா தண்ணீர்ச் சாடியுடன் வருகிறார்கள். கதவைச் சாத்துகிறார்கள். இருள் பரவுகிறது. சூசையப்பர் பெஞ்ச் ஒன்றின்மேல் கொளுத்தி வைத்த விளக்கால் அந்த அறை வெளிச்சம் பெறுகிறது. அவர் சில சிறு பலகைகளில் வேலை ஆரம்பிக்கிறார். மாதா இரா உணவு தயாரிக்கிறார்கள். நெருப்பும் அறையை வெளிச்சமாக்குகிறது. சேசு பாலன் பெஞ்சில் தன் சிறு கைகளை ஊன்றி தலையை மேலே தூக்கி சூசையப்பர் செய்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பின் ஜெபம் சொல்லப்படுகிறது. அவர்கள் சிலுவை அடையாளமிடவில்லை. ஆனால் ஜெபிக்கிறார்கள். சூசையப்பரே ஜெபங்களைச் சொல்கிறார். மாதா பதில் சொல்கிறார்கள். எனக்கு அது எதுவும் புரியவில்லை. அது ஒரு சங்கீதமாயிருக்க வேண்டும். அது சொல்லப்படும் மொழி எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பின் சாப்பிட அமருகிறார்கள். இப்போது விளக்கு மேசையின் மேல் இருக்கிறது. மாதா சேசுவைத் தன் மடியில் அமர்த்தியபடி, தான் ஒரு வட்ட ரொட்டியிலிருந்து வெட்டிய துண்டுகளை ஆட்டின் பாலில் நனைக்கிறார்கள். பாலை சேசு பருகக் கொடுக்கிறார்கள். அந்த ரொட்டியின் மேல் தோடும் உள்பாகமும் கரிந்தது போலிக்கின்றன. அது கம்பு அல்லது பார்லி ரொட்டி போலிருக்கிறது. அதன் நிறத்தைப் பார்த்தால் அதில் அதிகமான தவிடு இருக்க வேண்டுமென்று தெரிகிறது. சூசையப்பர் ரொட்டியும் பாற்கட்டியும் சாப்பிடுகிறார். அதிக ரொட்டியும் கொஞ்சம் பாற்கட்டியும். பின் சேசுவை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு மாதா போய், வேக வைத்து எண்ணையிடப்பட்ட மரக்கறி கொண்டு வருகிறார்கள். நாம் பயன்படுத்தும் காய்கறி போலவே அது உள்ளது. சூசையப்பர் சாப்பிட்டபின் மாதாவும் உண்கிறார்கள். சேசு பாலன் தன் ஆப்பிளைக் கடித்து உண்கிறார். கொஞ்சம் ஒலிவக்காய் அல்லது ஈச்சங்கனிகளுடன் உணவு முடிவடைகிறது. அது என்னவென்று சொல்ல என்னால் கூடவில்லை. காரணம் ஒலிவக்காய் என்று சொல்ல முடியாமல் அதிக வெளுப்பாகவும் ஈச்சம் பழம் என்று சொல்ல முடியாமல் கடினமாகவும் உள்ளது. திராட்ச இரசம் கிடையாது. ஏழைகளின் உணவு.
ஆனால் இங்கே எவ்வளவு சமாதானமாயிருக்கிறதென்றால், ஒரு பெரிய ஆடம்பரமான மாளிகையின் காட்சி கூட இவ்வளவு அமைதியைத் தராது. எவ்வளவு மன இசைவு இங்குள்ளது!
இன்று மாலையில் சேசு என்னிடம் பேசவில்லை. இக்காட்சியை அவர் எனக்கு விளக்கிக் கூறவில்லை. இக்காட்சியாலேயே எனக்கு அவர் படிப்பிக்கிறார். அது போதுமானது. அவர் எப்போதும் சமமாய் வாழ்த்தப்படுவாராக!