5 பெப்ருவரி 1944. பிற்பகல் 1-30.
இக்காட்சி இராஜ தோரணையில் காணப்படுகிறது. நான் அந்தக் கைப்பிரதியை, அதிலும் இன்றைய போலி மதங்களைப் பற்றிய உரையைத் திருத்திக் கொண்டிருந்தேன். எப்படிக் காண்கிறேனோ, அப்படி எழுதுகிறேன்.
ஒரு தச்சனுடைய வேலைப்பட்டரையின் உட்புறத்தைப் பார்க்கிறேன். அதன் இரண்டு சுவர்கள் பாறைகளால் ஆனவை. அதைக் கட்டியவர்கள் இயற்கையிலேயே இருந்த கெபிகளை ஒரு வீட்டின் அறைகளாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. வடக்குச் சுவரும் மேற்குச் சுவரும் பாறைகள். தெற்குச் சுவரும் கிழக்குச் சுவரும் நம் வீடுகளில் உள்ளதுபோல் காரை பூசப்பட்டிருக்கின்றன.
வடக்குப் பக்கத்தில் பாறை வெடிப்பில் ஒரு கரடான நெருப்புக் குழி உள்ளது. அதிலே ஏதோ பூச்சு சாயமோ அல்லது பசையோ நிச்சயமில்லை - ஒரு பாத்திரத்தில் இருக்கிறது. அந்தச் சுவர்கள் தார் பூசப்பட்டதுபோல் கறுப்பாயிருக்கின்றன. அங்கே பல ஆண்டுகளாக விறகு எரிக்கப்பட்டதால் அப்படி உள்ளன. சுவரில் ஒரு துவாரம்; அதன் உச்சியில் ஒரு பெரிய ஓடு. இது புகையை வெளியேற்றும் புகைக்கூண்டு. இப்புகைக் கூண்டு சரியாக வேலை செய்திராது, ஏனென்றால் மற்றச் சுவர்களும் புகையால் கரியடைந்துள்ளன. இப்பொழுதுகூட ஒரு புகைப்படலம் அறையெங்கும் நிற்கிறது.
சேசு ஒரு பெரிய தச்சு மரப் பெஞ்சில் வேலை செய்கிறார். சில பலகைகளை இழைப்புளியால் சீவுகிறார்... அவற்றைப் பின்பக்க சுவரில் சாய்த்து வைக்கிறார். பின் ஒரு முக்காலி போன்ற ஒன்றை அதைப் பிடித்திருந்த இடுக்கியிலிருந்து விடுவித்து, அந்த வேலை சரியா என்று பார்க்கிறார். எல்லாக் கோணத்திலிருந்தும் பரிசோதித்துக் கொள்கிறார். மேலும் கனல் அடுப்புக்குப் போய் அந்தப் பாத்திரத்தை ஒரு குச்சியாலோ ஒரு தூரிகையாலோ தெரியவில்லை, கிண்டி விடுகிறார் - வெளியே குச்சிபோல் நீண்டு நிற்கும் பாகம்தான் எனக்குத் தெரிகிறது.
சேசு செம்பழுப்பு நிற குட்டையான அங்கி அணிந்திருக்கிறார். கைகளை முழங்கை வரை மடித்து வைத்திருக்கிறார். தாம் அணிந்துள்ள முன்றானைத் துணியில், அப்பாத்திரத்தைத் தொட்டபின் விரல்களைத் துடைத்துக் கொள்கிறார்.
சேசு தம் போக்கில் கவனமாக வேலை செய்கிறார். அமைதியோடு அவருடைய வேலை நடக்கிறது. அவருக்கு எதுவும் எரிச்சலை மூட்டவில்லை. முடிச்சு உள்ள மரம் சமப்படுத்த முடியாதபடி உள்ளது. அடிக்கடி திருப்புளி கீழே விழுகிறது. புகை அவருடைய கண்ணைக் கரிக்கிறது. இவை எதுவும் அவரை ஆத்திரப்படுத்தவில்லை.
இடைக்கிடையே சேசு தெற்குச் சுவரில் உள்ள பூட்டப்பட்ட கதவைப் பார்க்கிறார். ஒரு தடவை கிழக்குப் பக்கத்தில் சாலையை நோக்கும் கதவைத் திறந்து வெளியே பார்க்கிறார். புழுதியான சாலையின் ஒரு பகுதி எனக்குத் தெரிகிறது. அவர் யாருக்காகவோ காத்திருக்கிறார் போலிருக்கிறது. அதன்பின் தன் அலுவலைத் தொடருகிறார். அவர் துயரமாயில்லை. மிக ஆழ்ந்த கனத்தோடிருக்கிறார். கதவைப் பூட்டிவிட்டு மீண்டும் வேலை செய்கிறார்.
சேசு ஒரு சக்கரத்தின் பாகத்தைச் செய்கிறார் என்று நினைக்கிறேன். அப்போது அவருடைய தாயார் தெற்குக் கதவின் வழியாக அங்கு வருகிறார்கள். இருண்ட நீல உடை தரித்திருக்கிறார்கள். தலையில் ஒன்றும் அணியவில்லை. இடுப்பில் அதே நிறக் கயிறு அங்கியைக் கட்டியிருக்கிறது. அவர்கள் கவலையோடு சேசுவைக் கூப்பிடுகிறார்கள். ஜெபித்த மேரையில் சேசுவின் கரத்தில் தன் இரு கரங்களையும் சாய்த்தபடி நிற்கிறார்கள். சேசு அவர்களைத் தேற்றுகிறார். தன் முன்றானை துகிலை அவிழ்த்துவிட்டு, வேலையை விட்டுவிட்டு மாதாவுடன் வெளியே செல்கிறார்.
மாதா சேசுவிடம் சொன்ன வார்த்தைகளை அறிய நீங்கள் விரும்புவீர்கள். அவை சுருக்கமாக இருந்தன. “ஓ சேசு! வாரும், வாரும்! அவர் ரொம்ப சுகமில்லாமலிருக்கிறார்” என்கிறார்கள். மாதாவின் உதடுகள் நடுங்க, கண்ணீர் துளிர்க்கிறது. கண்கள் களைத்து சிவந்திருக்கின்றன. “அம்மா” என்று மட்டும் சேசு சொல்கிறார். அதிலே எல்லாம் அடங்கிவிட்டன.
அவர்கள் பக்கத்து அறைக்குள் போகிறார்கள். அது சமையல் தோட்ட வாசல் வழியாக வருகிற சூரிய ஒளியில் பிரகாசமா யிருக்கிறது. தோட்டமும் பளிச்சென்று பச்சையாயிருக்கிறது. உலரப் போட்ட துணிகள் பக்கத்தில் புறாக்கள் சிறகடிக்கின்றன. அவர்கள் சென்ற அறை எளிமையாக சுத்தமாக இருக்கிறது. அங்கே ஒரு தாழ்ந்த படுக்கை. மிருதுவான மெத்தை போன்றவை அதில் பரப்பப்பட்டுள்ளன. அவை தடிப்பாக உள்ளன. நம் படுக்கைகள் மாதிரி அது இல்லை. அதிலே பல தலையணைகளில் சாய்ந்தபடி சூசையப்பர் படுத்திருக்கிறார். அவர் மரணத்தறுவாயில் இருக்கிறார். அவருடைய இரத்தமற்று வெளுத்த முகத்திலிருந்து அது தெரிகிறது. கண்களில் உயிரில்லை. நெஞ்சு பதைக்கிறது. முழு உடலுமே தளர்ந்து உள்ளது.
மாதா அவருடைய படுக்கையின் இடதுபக்கம் செல்கிறார்கள். சூசையப்பரின் கரங்கள் விரல் நகங்களில் வெளிறிக் காணப்படுகின்றன. மாதா அவருடைய கரத்தைத் தேய்த்து, அவர் சென்னிமேல் காணப்படும் வியர்வையை ஒரு சிறு துகிலால் துடைக்கிறார்கள். அவருடைய கண்களில் அரும்பும் கண்ணீர்த் துளியை ஒற்றியெடுத்து, கொஞ்சம் வெள்ளை முந்திரிப்பழ இரசத்தை என நினைக்கிறேன். அதை சிறு துகிலில் துவைத்து வறண்ட அவருடைய உதடுகளை நனைக்கிறார்கள்.
சேசு அர்ச். சூசையப்பருடைய வலது பக்கத்திற்கு வருகிறார். துவண்ட அவரைத் தூக்கி நேராய்க் கிடத்தி தலையணைகளையும் மாதாவுடன் சேர்ந்து சரிசெய்கிறார். அவருடைய தலையில் கை வைத்து அவரைத் தேற்றுகிறார்.
மாதா சத்தமில்லாமல் அழுகிறார்கள். கண்ணீர் தாரையாக வழிந்து அவர்களின் இருண்ட நீல ஆடையை நனைக்கிறது...
சூசையப்பர் சற்று தேறி சேசுவை உற்றுப் பார்க்கிறார். அவருடைய கையைப் பிடித்து ஏதோ சொல்ல விரும்புகிறார். தம் கடைசி துன்பத்தில் சேசுவின் தெய்வீக தொடுதலின் உதவியைத் தேடுகிறார். சேசு அந்தக் கரத்தைக் குனிந்து முத்தமிட அர்ச். சூசையப்பர் புன்னகை செய்கிறார். பின் அவருடைய கண்கள் மரியாயைத் தேடுகின்றன. அவர்களைப் பார்த்தும் புன்னகை புரிகிறார். மாதா முழங்காலிட்டு புன்முறுவல் செய்ய முயல்கிறார்கள். அவர்களால் கூடவில்லை. தலையைக் குனிகிறார்கள். அவர்களை ஆசீர்வதிப்பதுபோல் சூசையப்பர் தம் கரத்தை மாதாவின் சிரசின்மேல் வைக்கிறார்.
வெளியே புறாக்களின் சிறகடிப்பும் கூவுதலும், இலைகளின் சலசலப்பும் நீரோடையின் ஒலியும், உள்ளே சூசையப்பரின் மூச்சும் தவிர மற்றெல்லாம் நிசப்தமாயிருக்கிறது.
சேசு ஒரு முக்காலியைக் கொண்டு வந்து, மறுபடியும் “அம்மா” என்று மட்டும் சொல்லி மாதாவை அதில் அமர வைக்கிறார். பின்னும் சூசையப்பரின் பக்கமாக வந்து அவருடைய கையைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொள்கிறார். மாதாவின் வேதனையைப் பார்க்கிற எனக்கு அழாமல் இருக்க முடியவில்லை. அந்தக் காட்சி அவ்வளவு எதார்த்தமாயிருக்கிறது.
சேசு தன் தந்தையின் பக்கமாய்க் குனிந்து நின்று ஒரு சங்கீதத்தைச் சொல்கிறார். அது எது என்று எனக்குத் தெரியவில்லை.மீ அது இப்படித் தொடங்குகிறது:
“ஆண்டவரே நான் உமது பேரில் நம்பிக்கை வைத்திருப்பதால் என்னைக் காப்பாற்றும்...”
அவருடைய சொந்தப் பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எனது விருப்பங்களையெல்லாம் அதிசயிக்கத்தக்க விதமாய் நிறைவேற்றினார்.
என் ஆலோசகரான ஆண்டவரை வாழ்த்துவேன்.
எந்நேரமும் ஆண்டவர் என் முன்பாக இருக்கிறார். ஏனெனில் நான் அசைக்கப்படாதபடிக்கு அவர் என் வலது பாரிசத்திலிருக்கிறார்.
ஆகையால் என் இருதயம் பூரித்தது. என் நாக்கு மகிழ்ந்தது. என் மாமிசமும் நம்பிக்கையில் இளைப்பாறும்.
ஏனெனில் என் ஆத்துமத்தைப் பாதாளத்தில் விட்டுவிட மாட்டீர். உமது பரிசுத்தவான் அழிவைக் காண விடமாட்டீர்.
சீவியத்தின் மார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர். உம்முடைய முகத்தைக் காட்டி ஆனந்தத்தால் என்னை சம்பூரணமாக்கிவிடுவீர்...”
அர்ச் சூசையப்பர் கொஞ்சம் ஊக்கமடைகிறார். சேசுவை உற்சாகத்துடன் பார்த்துப் புன்முறுவல் கொண்டு அவர் விரல்களை இறுகப் பிடிக்கிறார். சேசுவும் சிரித்தபடி... குனிந்து நின்றபடியே, மெல்லிய குரலில்:
(சங்கீதம் 83.) “தளங்களின் ஆண்டவரே, உம்முடைய வாசஸ்தலங்கள் எம்மாத்திரம் இன்பமாயிருக்கின்றன! என் ஆத்துமம் ஆண்டவருடைய ஆலயப் பிரகாரங்களிலே பிரமை கொண்டு சோர்ந்து போகின்றது...”
அடைக்கலான் குருவிக்குக் கூடும் தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்க கூடுமுண்டு. என் ஆண்டவரே, உமது பீடங்களை நோக்கி தாகமாயிருக்கிறேன்.
ஆண்டவரே, உமது வீட்டில் வாசம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்...
உம்மால் சகாயம் பெறுகிற மனிதன் பாக்கியவான்... ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்...
உமது கிறீஸ்துவின் முகத்தைப் பார்த்து உமது பார்வையை எங்கள்மேல் திருப்பியருளும்.
அர்ச். சூசையப்பர் கண்ணீருடன சேசுவைப் பார்க்கிறார். ஏதோ பேச, சேசுவை ஆசீர்வதிப்பதாகக் கூற விரும்புகிறார். ஆனால் அவரால் பேசக் கூடவில்லை. அவர் கண்டுபிடிக்கிறார். ஆனால் பேச ஏதோ தடை உள்ளது. ஆயினும் மகிழ்ச்சியாயிருக்கிறார். நம்பிக்கையுடன் ஊக்கமாக சேசுவைப் பார்க்கிறார்.
சேசு தொடர்ந்து சொல்கிறார்:
(சங்கீதம் 84.) “ஆண்டவரே தேவரீர் உமது பூமியை ஆசீர்வதித்தீர். யாக்கோபை அவருடைய அடிமைத்தனத்திலிருந்து மீட்டீர்...
ஆண்டவரே தேவரீர் உமது கிருபையை எங்களுக்குக் காண்பியும். உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
என்னிடத்தில் அவர் என்ன பேசப் போகிறார் என்று கேட்பேன். ஏனென்றால் சர்வேசுரனாகிய ஆண்டவர் தமது ஜனத்திற்கும் பரிசுத்தருக்கும் இருதயத்தில் மனந்திரும்புகிறவர் களுக்கும் கூறுவது சமாதானமே.
ஏனெனில் நமது பூமியில் அவரது மகிமை விளங்கும் படியாக அவரது இரட்சண்யம் அவருக்குப் பயப்படுகிறவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
கிருபையும் உண்மையும் சந்தித்துக் கொண்டன. நீதியும் சமாதானமும் முத்தமிடுகின்றன. உண்மை பூமியிலிருந்து உதித்தது. நீதி வானத்திலிருந்து நோக்கிப் பார்த்தது.
ஏனெனில் ஆண்டவர் தமது ஆசீர்வாதத்தைத் தருவார். நமது பூமி தனது கனியைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்பாக நடக்கும்...
“தந்தாய்! நீங்கள் அந்த நேரத்தைக் கண்டு கொண்டீர்கள். அதற்காக நீங்கள் உழைத்தீர்கள். இந்த நேரத்தை உருவாக்குவதில் நீங்கள் ஒத்துழைத்தீர்கள். ஆண்டவர் அதற்காக உங்களுக்கு சன்மானம் அளிப்பார்.” இப்படிக் கூறிய சேசு, அர்ச். சூசையப்பரின் மகிழ்ச்சிக் கண்ணீரைத் துடைக்கிறார். சேசு மேலும் தொடர்ந்து,
(சங்கீதம் 113.) “ஆண்டவரே தாவீதையும் அவருடைய பெரிய சாந்தத்தையும் நினைத்தருளும். அவர் ஆண்டவருக்குக் கொடுத்த பிரமாணிக்கத்தையும் யாக்கோபின் தேவனுக்குச் செய்த பொருத்தனையையும் நினைவுகூரும். நான் ஆண்டவருக்கு ஒரு இடத்தையும் யாக்கோபின் தேவனுக்கு ஒரு கூடாரத்தையும் ஏற்படுத்துகிற வரையிலும் என் வீட்டின் வாசஸ்தலத்தில் நான் பிரவேசிப்பதில்லை. என் படுக்கையாகிய மஞ்சத்தில் நான் ஏறுவதுமில்லை. என் கண்களுக்கு நித்திரையையும் என் இமைகளுக்கு உறக்கத்தையும் நான் கொடுப்பதில்லை.
ஆண்டவரே உமது பரிசுத்தம் விளங்கும் பேழையுடன் உமது இளைப்பாற்றி ஸ்தலத்தில் எழுந்தருளும். (இதை மாதா பொருள் உணர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தி அழுகிறார்கள்.)
உமது ஆசாரியர்கள் நீதியைத் தரித்துக் கொள்ளட்டும்.
உமது பரிசுத்தவான் அகமகிழட்டும்.
உமது தாசனாகிய தாவீதினிமித்தம் உமது அபிஷேகருடைய முகத்தை எங்களுக்கு மறுக்காதேயும். ஆண்டவர் தாவீதுக்கு உண்மையான ஆணையிட்டார். அதற்குப் பிரமாணிக்கமா யிருப்பார்.
உனது கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தில் வைப்போம்...
ஏனென்றால் ஆண்டவர் சீயோனைத் தெரிந்து கொண்டார்...
அவ்விடத்தில் தாவீதின் வல்லமையை ஓங்கப் பண்ணுவோம். நமது அபிஷேகருக்கு ஒரு தீபத்தை ஆயத்தம் பண்ணினோம்.
“தந்தையே! என்னுடையவும் என் தாயுடையவும் நன்றியை உங்களுக்குச் செலுத்துகிறேன். எனக்கு நீங்கள் நீதியுள்ள தந்தையாயிருந்தீர்கள். நித்திய பிதா உங்களை தமது கிறீஸ்துவுக்கும் தமது பேழைக்கும் காவலனாகத் தெரிந்துகொண்டார். அவருக்காக ஆயத்தமாக்கப்பட்ட தீபம் நீங்கள். பரிசுத்த உதரத்தின் கனியின்மீது நீங்கள் நேசமுள்ள இருதயத்துடன் இருந்தீர்கள். தந்தையே சமாதானத்தில் செல்லுங்கள். உங்கள் கைம்பெண் உதவியற்றுப் போக மாட்டார்கள். அவர்கள் தனிமைப்படாதிருக்க கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். நான் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் இளைப்பாற்றிக்கு சமாதானத்துடன் செல்லுங்கள்.”
மாதா தன் முகத்தை, சூசையப்பரை மூடியிருக்கிற போர்வைகள்மீது (அவை மேல்வஸ்திரங்கள் போலிருக்கின்றன) கவிழ்த்தியபடி அழுகிறார்கள். அவருடைய உடல் குளிர்ந்து கொண்டு வருகிறது. அவரைத் தேற்ற சேசு துரிதப்படுகிறார். ஏனென்றால் மூச்சுவிட அவர் கஷ்டப்படுவதுடன் அவருடைய கண்கள் மறுபடியும் மங்குகின்றன.
(சங். 111.) “சர்வேசுரனுக்குப் பயப்படுகிறவனும் அவருடைய கற்பனைகளை விரும்புகிறவனும் பாக்கியவான்...
அவனுடைய நீதித்தன்மை சதாகாலமும் நிற்கும். அவனுடைய வல்லபம் மகிமையோடு உயர்த்தப்படும்...”
“தந்தையே! உங்களுக்கு அந்த மகிமை கிடைக்கும். உங்களுக்கு முன் சென்றுள்ள பிதாப்பிதாக்களோடு உங்களையும் நான் கூட்டிச் செல்ல சீக்கிரம் வருவேன். உங்களுக்காகக் காத்திருக்கிற மகிமைக்கு உங்களைக் கொண்டு செல்வேன். என் வார்த்தையில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியடைவதாக!”
(சங். 90. )“உந்நதருடைய அடைக்கலத்தில் இருப்பவன் பரமண்டலத்தின் தேவனுடைய ஆதரவில் நிலைகொள்வான்.”
“தந்தாய்! நீங்கள் அங்கே வாழ்கிறீர்கள்.”
“அவர் வேடர்களுடைய கண்ணியினின்றும் இடிசொல் லினின்றும் என்னை மீட்டார்.
அவர் தம் புஜங்களால் உனக்கு நிழலிடுவார். அவருடைய சிறகுகளின் அடைக்கலத்தில் நீ இருப்பாய்.
அவருடைய வாக்கின் சத்தியம் கேடயம்போல் உன்னைச் சூழ்ந்துகொள்ளும். இரவின் பயங்கரங்களுக்கு நீ அஞ்சா திருப்பாய்...
உனக்குப் பொல்லாங்கு நேரிடாது... ஏனெனில் உன் சகல வழிகளிலும் உன்னைக் காக்கும்படி தமது தூதர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
உன் பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்.
விஷ நாகத்தின் மேலும் சர்ப்பத்தின் மேலும் நீ நடப்பாய். சிங்கக்குட்டியையும் பறவை நாகத்தையும் நீ மிதிப்பாய்...”
“நீங்கள் ஆண்டவர்பேரிலே நம்பிக்கை வைத்தபடியினாலே, என் தந்தையே! அவர் உங்களை விடுவிப்பதாகவும் காப்பதாகவும் உங்களுக்குக் கூறுகிறார்.
நீங்கள் உங்கள் குரலை ஆண்டவரிடம் எழுப்பியதால் அவர் அதைக் கேட்பார். உங்கள் கடைசி துன்பத்தில் அவர் உங்களுடன் இருப்பார். இந்த வாழ்வுக்குப் பின் அவர் உங்களை மகிமைப்படுத்துவார். இப்பொழுதே தமது இரட்சண்யத்தை அவர் உங்களுக்குக் காண்பிக்கிறார். இப்பொழுது உங்களைத் தேற்றுகிற இரட்சகரின் முகாந்திரமாக உங்களை மறு உலக வாழ்வில் நுழைய வைப்பார். இந்த இரட்சகர், நான் திரும்பவும் சொல்லுகிறேன், அவர் சீக்கிரமாக வந்து உங்களைத் தன் தெய்வீக அரவணைப்பில் கொண்டு, எல்லாப் பிதாப்பிதாக்களுடைய வரிசையில் முதன்மையாகக் கொண்டு செல்வார். அங்கே என் ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையாக இருந்த கடவுளின் நீதிமானுக்கென இல்லிடம் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
தந்தையே, எனக்கு முன்பாக நீங்கள் போய், பிதாப் பிதாக்களிடம் இரட்சகர் உலகத்தில் இருக்கிறார், மோட்ச இராச்சியம் விரைவில் அவர்களுக்குத் திறக்கப்படும் என்று அறிவியுங்கள். தந்தையே செல்லுங்கள்! என்னுடைய ஆசீர்வாதம் உங்களுடன் வரக்கடவது.”
சூசையப்பரின் இருதயத்தை எட்டும்படி சேசு தம் குரலை உயர்த்துகிறார். அவர் மரண பனி மூட்டத்திற்குள் மூழ்குகிறார். அவருடைய இறுதி நேரம் அடுத்து விட்டது. அவர் கஷ்டத்துடன் குறுமூச்சு விடுகிறார். மாதா அவரைப் பரிவோடு சீராட்ட, சேசு கட்டில் ஓரத்தில் அமர்ந்து சூசையப்பருடன் நெருங்கி அவரை அரவணைத்துக் கொள்ள, அவர் சமாதானத்துடன் மரிக்கிறார்.
அங்கே கம்பீரமான அமைதி நிலவுகிறது. அந்தக் கடைசி நேரத்தில், மாதா இருதயம் உடைந்தவர்களாய் சேசுவின் பக்கத்திற்குச் செல்கிறார்கள். சேசுவும் தம் தாயை அரவணைத்துக் கொள்கிறார்.
சேசு கூறுகிறார்:
வேதனையால் வாதிக்கப்படுகிற எல்லா மனைவிகளும் கைம்பெண் நிலையிலிருந்த மரியாயைக் கண்டுபாவிக்கும்படி புத்தி சொல்கிறேன்: சேசுவுடன் ஒன்றித்திருங்கள்.
மரியாயின் இருதயம் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்று எண்ணுகிறவர்கள் தவறாக எண்ணுகிறார்கள். என்னுடைய தாய் வேதனைப்பட்டார்கள். அது அறியப்படட்டும். அவர்கள் ஒரு புனிதமான முறையில் வேதனைப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களிடம் எல்லாமே புனிதமாக இருந்தன. ஆனால் அவர்கள் கடுமையாக வேதனைப்பட்டார்கள்.
அர்ச். சூசையப்பர் மரியாயின் சரீரத்திற்கில்லாமல் ஆத்தும மணாளனாக இருந்தபடியால் அவரை அவர்கள் ஆழ்ந்த விதமாய் நேசிக்கவில்லை என்று எண்ணுகிறவர்களும் தவறாக எண்ணுகிறார்கள். மாதா அவரை ஆழ்ந்து நேசித்து முப்பது ஆண்டுகளை அவருக்காக பிரமாணிக்கத்துடன் செலவிட்டார்கள். அர்ச். சூசையப்பர் அவர்களின் தந்தையாகவும் மணாளனாகவும் சகோதரராகவும் நண்பராகவும் பாதுகாப்பாளராகவும் இருந்தார்.
தான் படர்ந்திருந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்ட திராட்சைக் கொடிபோல் மாதா இப்பொழுது தனியாயிருப்பதை உணர்ந்தார்கள். மின்னல், இடி அவர்களுடைய வீட்டைத் தாக்கியதுபோல் அவர்களுக்கு இருந்தது. அது இரண்டாக வெடித்து நின்றது. முன்பு அது ஒரு முழுமையாயிருந்தது. அதன் அங்கமாயிருந்தவர்கள் ஒருவரையயாருவர் தாங்கிக் கொண்டார்கள். இப்பொழுது முக்கியமான சுவர் போய்விட்டது. அதுவே அக்குடும்பத்திற்கு முதல் அடி. மாதாவின் அருமை சேசு விரைவிலேயே அவர்களை விட்டுப் பிரிந்து செல்வார் என்பதன் அடையாளமாக அது இருந்தது.
மாதாவை ஒரு மணவாளியாகவும் ஒரு தாயாகவும் இருக்கும்படி கேட்ட பரம பிதாவின் சித்தம் இப்பொழுது விதவை நிலையையும் தன் மகனிடமிருந்து பிரிதலையும் அவர்கள்மீது சுமத்துகிறது. ஆனால் மாமரி கண்ணீர் வடித்துக்கொண்டே தன் மிக உந்நதமான வார்த்தை ஒன்றைக் கூறுகிறார்கள்: “ஆகட்டும் ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்கிறார்கள்.
அந்த நேரத்தில் தனக்குப் போதிய திடம் கிடைக்கும் படியாக மாதா என் பக்கத்தில் வந்தார்கள். அவர்கள் வாழ்வின் மிக முக்கிய தருணங்களிலெல்லாம் கடவுளுடன் எப்போதும் இணைந்தே இருந்தார்கள்; தேவாலயத்தில் அவர்கள் திருமணம் செய்ய கேட்கப்பட்டபோது ; நாசரேத்தில் சேசுவின் தாயாகும்படி அழைக்கப்பட்டபோது; மீண்டும் நாசரேத்தில் ஒரு விதவையாக கண்ணீர் சிந்தியபோது; நாசரேத்தில் தன் குமாரனைவிட்டு கொடுமையான பிரிவை அடைந்தபோது; கல்வாரியில் நான் சாவதைக் கண்ட கொடூரத்தில்.
அழுகிறவர்களே, கற்றுக் கொள்ளுங்கள். மரிக்கிறவர்களே கற்றுக் கொள்ளுங்கள். மரிப்பதற்காக வாழ்கிறவர்களே கற்றுக் கொள்ளுங்கள். நான் அர்ச். சூசையப்பருக்குச் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கும் சொல்ல தகுதிபெற முயலுங்கள். மரணப் போராட்டத்தில் அவை உங்களின் சமாதானமாக இருக்கும். மரிக்கிறவர்களே, சேசு உங்கள் அருகில் இருந்து உங்களைத் தேற்ற தகுதி பெறுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்குத் தகுதி பெறாவிட்டாலும், துணிவோடு உங்கள் அருகில் வரும்படி என்னைக் கூப்பிடுங்கள். நான் வருவேன். என் கரங்கள் நிறைய வரப்பிரசாதங்களுடனும் ஆறுதலுடனும், என் இருதயம் நிறைய மன்னிப்புடனும் சிநேகத்துடனும், என் உதடுகளில் மன்னிக்கிறதும் ஊக்கமளிக்கிறதுமான வார்த்தைகளுடனும் வருவேன்.
என் கரங்களுக்கிடையில் உங்கள் மரணம் ஏற்பட்டால், சாவு தன் கசப்பை இழந்துவிடும். என்னை நம்புங்கள்: மரணத்தை என்னால் ரத்துச் செய்ய இயலாது. ஆனால் என்னை நம்பிக் கொண்டு மரிக்கிறவர்களுக்கு அதை இனிமையாக்க என்னால் முடியும்.
கிறீஸ்து சிலுவையிலே உங்கள் அனைவரின் சார்பிலும்: “பிதாவே உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்படைக்கிறேன்” என்று சொன்னார். இதை அவர் தம் அவஸ்தையில் கூறினார் - உங்கள் அவஸ்தைகளை நினைத்துக்கொண்டு, உங்கள் பயங்கரங்களை, உங்கள் தவறுகளை, உங்கள் அச்சங்களை, மன்னிப்படைய உங்கள் ஆசையை நினைத்துக் கொண்டு அப்படிச் சொன்னார். ஈட்டியால் அவருடைய இருதயம் குத்தப்படுவதற்கு முன், மிகுதியான கொடுமையால் துளைக்கப்பட்ட இருதயத்தோடு அதைச் சொன்னார். அந்த வேதனை உடல் வேதனையாக இருந்ததைவிட உள்ளத்தின் வேதனையாக இருந்தது. அது ஏனென்றால் அவரை நினைத்துக்கொண்டு சாகிறவர்களின் அவஸ்தைகள் ஆண்டவரால் தணிக்கப்படும்படியாகவும், அவர்களின் ஆத்துமங்கள் மரணத்திலிருந்து நித்திய வாழ்விற்கும், துயரத்திலிருந்து மகிழ்ச்சிக்கும் நித்தியமாய் கடந்து செல்லும்படியாகவுமே.
சின்ன அருள், உன் இன்றைய பாடம் இதுவே. நல்லவளாயிரு. பயப்படாதே. என் வார்த்தையின் வழியாகவும் தியானக் காட்சியின் வழியாகவும் என்னுடைய சமாதானம் உனக்குள் எப்போதும் பாயும். வா. நீதான் சூசையப்பர் என்றும் சேசுவின் மார்புதான் உனக்கு மெத்தை என்றும் மாமரி அன்னை உன் தாதி என்றும் நினை. எங்கள் இருவர் நடுவிலும் நீ இளைப்பாறு - ஒரு குழந்தை தன் தொட்டிலில் இளைப்பாறுவதுபோல.”