இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் மனிதனின் காவியம் - முகவுரை

1. ஆதியில் வார்த்தையிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனிடத்தில் இருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார்.

2. அவர் ஆதியிலே சர்வேசுரனிடத்தில் இருந்தார்.

3. அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாக்கப்பட்ட தொழிய, உண்டாக்கப்பட்டவைகளில் எதுவும் அவராலேயன்றி உண்டாக்கப்படவில்லை.

4. அவருக்குள் சீவன் இருந்தது. அந்தச் சீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

5. அந்த ஒளி இருளில் பிரகாசிக்கிறது. ஆயினும் இருளானது அதை ஒப்புக் கொள்ளவில்லை.

6. சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தார். அவருக்கு அருளப்பர் என்று பேர்.

7. அவர் தமது வழியாய்ச் சகலரும் விசுவசிக்கும் பொருட்டு, ஒளியைக் குறித்துச் சாட்சியம் சொல்லுவதற்கு சாட்சியாக வந்தார்.

8. அவர் அந்த ஒளியல்ல. ஆனால் அந்த ஒளியைக் குறித்துச் சாட்சியம் சொல்ல வந்தவராமே .

9. (வார்த்தையாகிய அவர்) இவ்வுலகத்திலே வருகிற எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாய் இருந்தார்.

10. அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாக்கப்பட்டது. ஆகிலும் உலகம் அவரை அறிந்து கொள்ளவில்லை.

11. அவர் தமது ஆதீனத்தில் வந்தார். அவருடையவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

12. யார் யார் அவரை ஏற்றுக் கொண்டு, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் ஆனார்களோ, அவர்கள் தேவ புத்திரர் ஆகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்.

13. அவர்கள் இரத்தத்தினாலுமல்ல, மாம்ச இச்சையினாலுமல்ல, புருஷனுடைய சித்தத்தினாலுமல்ல, ஆனால் சர்வேசுரனாலே பிறந்தவர்கள்.

14. வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும், சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகிமைக்கு நிகராயிருந்தது.

15. அருளப்பர் அவரைக் குறித்து சாட்சியம் சொல்லி : "எனக்குப் பின் வருகிறவர், எனக்கு முன் இருந்தவர். ஆகையால் என்னிலும் மேன்மை உள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான்” என்று கூவிச் சொல்கிறார்.

16. நாம் எல்லோரும் அவருடைய சம்பூரணத்திலிருந்து அருளுக்கு மேல் அருளைப் பெற்றுக் கொண்டோம்.

17. எப்படியெனில் மோயீசனால் வேதப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அருளும் சத்தியமும் சேசு கிறீஸ்து நாதரால் உண்டாயிற்று.

18. சர்வேசுரனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஏக சுதனே அவரை வெளிப்படுத்தினார்.