இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எங்கள் ஜீவியமும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

“ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்” என்று அர்ச். சின்னப்பர் கூறினர். நாம் கிறீஸ்துநாதரின் மாம்சத்தின் மாம்சமும், அவருடைய எலும்பின் எலும்புமாக மாற வேண்டும் என்று வேறோர் இடத்தில் அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் சேசுநாதரைக் கண்டுபாவிப்பது மட்டும் போதாது, மாறாக அவரோடு ஒன்றாக வேண்டும் என்று அர்ச். சின்னப்பர் சொல்கிறார். சேசுவிடமிருந்து பிரிந்து, தங்கள் சித்தப்படி வாழ்வு நடத்த விரும்புகிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே நம் இரட்சகரின் புண்ணியங்களில் சிலவற்றைத் தங்கள் வாழ்வில் கண்டுபாவிக்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய ஜீவிய முறை ஒரு பெரும் சுய-ஏமாற்றுதலை உள்ளடக்கியுள்ளது. அதிலுள்ள பொய்யான கருத்து இதுதான்: அவர்கள் ஒரு தெய்வீக ஜீவியத்தை நடத்த விரும்புகிறார்கள். ஆனாலும், வெறும் மனிதப் பிறவி ஒன்று, தான் மட்டும் தனித்து நின்று இத்தகைய ஜீவியத்தை நடத்த முடியும் என்பது போல, அந்த ஜீவியத்தின் ஊற்றிடமிருந்து எப்போதும் பிரிந்திருக்கிறார்கள். இது பசாசின் தந்திரம் - மேலும், அது சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு, தங்களையே வழிதவறச் செய்துவிட்ட இந்த ஆத்துமங்கள் இந்தப் பரிதாபமான முடிவுக்கு வரச் செய்கிறது: கிறீஸ்துநாதருடைய ஜீவியத்தைக் கண்டுபாவிக்க முயற்சி செய்து, அதற்கு சாத்தியமேயில்லை என்று அவர்கள் கண்டுபிடிக்கும்போது, அவநம்பிக்கையோடு அவர்கள் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, “சாதாரண, அழிந்து போகிற மனிதர்களாகிய நாங்கள் அவ்வளவு தெய்வீகமாக வாழ முடியாது” என்று சொல்கிறார்கள். பசாசு விரும்பியது இதுதான். இப்போது ஆத்துமத்தின் மாபெரும் சாபமாகிய ஞான வெதுவெதுப்பின் வலைகளில் அவன் அவர்களைச் சிக்க வைத்திருக்கிறான்!

நாம் கிறீஸ்துநாதரோடு கொள்ளும் அந்நியோந்நியமான ஐக்கியத்தைப் பற்றி அர்ச். சின்னப்பர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். அவர் நம்மை ஒரு மனித சரீரத்தின் பல்வேறு உறுப்புகளோடு நம்மை ஒப்பிடுகிறார். இந்த சரீரம் கிறீஸ்துநாதரே. நாம் எல்லோரும் ஒருவர் மற்றவரோடு ஒன்றாக இணைந்து, உண்மையில் கிறீஸ்துநாதருடைய சரீரத்தை உருவாக்குகிறோம். கையானது அதனுள் பாய்கிற இரத்தத்திலிருந்து தன் உயிரைப் பெற்றுக்கொள்வது போல, நாம் நம் உயிரை அவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம். நீ ஒரு கரத்தை வெட்டிவிட்டால், அது இறந்து, அழுகிப் போகிறது. அவ்வாறே, நீ ஓர் ஆத்துமத்தை கிறீஸ்துநாதரிடமிருந்து வெட்டிவிட்டால், அதுவும் இறந்து தான் எங்கிருந்து வந்ததோ, அந்த தூசிக்கே, அதாவது சாதாரண மனித சுபாவ ஜீவியத்திற்கே, திரும்பிப் போகிறது. பிரிக்கப்பட்ட கை மனித உயிரை இழந்து போவதுபோல, அது தன் தெய்வீக ஜீவியத்தை இழந்து விட்டது.

இந்தக் காட்சியை இன்னும் பெரிதாக்குவோம். கிறீஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு மனித ஆளும் கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் ஒரு பாகமாகிறான். இந்த ஆள் “கிறீஸ்துவை அணிந்து கொள்கிறான்.” அந்த ஆளின் சுபாவத்திற்கு மேற்பட்ட ஜீவியத்தின் உயிரளிக்கும் இரத்தமாக இருப்பது தேவ வரப்பிரசாதம் ஆகும். நம் உடலில் உள்ள மனித செல்களின் இயற்கையான உயிர் நம் இருதயத்திலிருந்து வரும் இரத்தத்தைச் சார்ந்திருப்பது போல, இந்த வரப்பிரசாதம் சேசுவின் திரு இருதயத்திலிருந்து வருகிறது. இம்முறையில் நாம் அவரிடமிருந்து ஜீவிக்க வேண்டுமென்று நம் இரட்சகர் எதிர்பார்க்கிறார். ஏனென்றால், அவர் தம் பிதாவினால் ஜீவிப்பது போல, திவ்ய நன்மையில் நாம் அவரைப் பெற்றுக் கொள்ளும்போது, நாம் அவரால் ஜீவிக்கிறோம் என்று அவர் கூறினார். நாம் தேவ சுபாவத்திலேயே பங்குபெறுகிறோம் என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். கிறீஸ்துவில் வாழ்வதுதான் அதற்குரிய வழியாக இருக்கிறது. கிறீஸ்துநாதர் அநுச்சாரம், கடவுளின் தெய்வீகத்திற்கு உயர்த்தப்படுகிற மக்களைப் பற்றிப் பேசுகிறது. மனிதத் திட்டங்கள், ஆசைகள், சிந்தனைகள், நேசங்கள் ஆகியவை அகன்று, அவற்றின் இடங்கள் தெய்வீகத்தால் நிரப்பப்படும் அளவுக்கு ஓர் ஆத்துமம் நம் இரட்சகரோடு மிக அந்நியோந்நியமாக ஐக்கியமாகும்போது, உடலில் ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் பிற உணவுகள் தங்கள் தனிப்பட்ட குணங்களை இழந்து, மனித குணங்களை எடுத்துக் கொள்வது போன்ற அதே வகையான ஐக்கியம் அங்கு இருக்கிறது. ஆகவே, நாம் நமது முந்திய திட்டங்களையும், ஆசைகளையும், சிந்தனைகளையும், நாட்டங்களையும் கைவிட்டு, நம் இரட்சகருடைய இந்தக் காரியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரே ஒரு திட்டத்தைத்தான் கொண்டிருக்க வேண்டும் - நம் இரட்சகரின் தெய்வீக மகிமை; நம்மிடம் ஒரே ஒரு ஆசைதான் இருக்க வேண்டும் - ஆத்துமங்களை இரட்சிப்பது; ஏனென்றால் அதுவே அவர் மனிதரானதன் காரணமாக இருந்தது. எல்லாக் காரியங்களைப் பற்றியும் அவர் நினைப்பது போலவே நாமும் நினைக்க வேண்டும், அதாவது ஆத்துமங்களை இரட்சிக்க உதவுகிற காரியங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையாக - வெறும் ஒன்றுமில்லாமையாக நாம் நினைக்க வேண்டும். இறுதியாக, ஒரேயொரு நேசம் நம் இருத்தலுக்கு அனலூட்ட வேண்டும் - அது மகா பரிசுத்த தமத்திரித்துவத்தில் பற்றியெரிகிற அதே நேசம்தான் - அது மூன்று தெய்வீக ஆட்களின் மீதும் நாம் கொள்ளும் நேசமாக இருக்கிறது. அப்போது, நாம் கிறீஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புகளாக இருக்கிறோம் என்று உண்மையாகவே நாம் சொல்ல முடியும்.

நம் பிரதிக்கினை எப்படி இருக்க வேண்டும்? ஞான வெதுவெதுப்பின் பாடலைக் கொண்டு பசாசு நமக்குத் தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதற்கு அதை அனுமதிக்காமல் இருக்க வேண்டும். இந்த உயர்ந்த குறிக்கோளை அடையப் பாடுபடுவதை நிறுத்திவிட நாம் ஒருபோதும் துணியக் கூடாது. அதை நிறுத்திவிட்டு, இஷ்டம் போல இருக்கலாம் என்று நாம் நினைத்தால், நாம் இழக்கப்படுவோம். கடவுள் நமக்காக நிர்ணயித்திருக்கிற இந்தக் குறிக்கோளை நோக்கி நாம் தொடர்ந்து முன்னேறுவோமாக! என்றாவது ஒருநாள், குறைந்த பட்சம் மரண நாளிலாவது, “இப்போது நான் வாழ்கிறேன், ஆயினும் வாழ்வது நானல்ல, என்னில் கிறீஸ்துவே வாழ்கிறார். என்னில் எல்லாமே இறந்து விட்டது. கிறீஸ்துவே என்னில் முழுமையாக அரசாள்கிறார். அவரே நேசிக்கிறார், அவரே சிந்திக்கிறார், அவரே ஜெபிக்கிறார், அவரே ஆசைப்படுகிறார், அவரே இவை எல்லாவற்றையும் செய்கிறார். அவரே என் இருதயத்தின் எஜமானராகவும், அரசராகவும், கடவுளாகவும் இருக்கிறார்” என்று நம்மால் சொல்ல இயலும்படியாக, எதைக் கொண்டு நம்மையே இழந்து, கிறீஸ்துவாக மாறுகிறோமோ, அந்த தெய்வீக ஜீவியத்திற்காகத் தொடர்ந்து ஆசைப்படுங்கள், தொடர்ந்து ஜெபியுங்கள், தொடர்ந்து ஏக்கம் கொள்ளுங்கள். நம் ஆண்டவராகிய கிறீஸ்துநாதரில் இந்த ஜீவியத்தின் நிறைவுக்காக நாம் ஒருவர் ஒருவருக்காக ஜெபிப்போமாக. நம் ஜீவிய காலத்தின் போது, கிறீஸ்து நம் ஜீவியமாக எப்போதும் இருக்கிறார் என்றால், அவரே இறுதி நாளில் நம் உயிர்ப்பாகவும் இருப்பார்.


எங்கள் ஜீவியமும், உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!