இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பெற்றோரின் மேன்மையும் அதிகாரமும்

அருமையான பெற்றோரே! சருவேசுரன் உங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் அருளியபோது உங்களை அவர் எவ்வளவு மேன்மைப்படுத்தியிருக்கிறார் என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உள்ளபடி பார்த்தால் பிதா மாதா என்னும் பட்டங்களே உலகத்தில் வழங்குகிற சகல பட்டங்களிலும் மேலானவைகள். பிதா என்னும் பெயர் விசேஷமாய் நம்மைப் படைத்தவருக்கு உரியது. அவரே பரலோகத்தையும் பூலோகத்தையும் உண்டாக்கிக் காத்துக்கொண்டு வருகிற ஆதிகாரணராயும் பரிபாலனராயுமிருக்கிறபடியால், அவர் மாத்திரம் பூரணமான அர்த்தத்தின்படி பிதாவாயிருக்கிறார். ஆகையினாலேதான் சருவேசுரனுக்குரிய பிதாத்தன்மையிலிருந்து பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள பிதாத்தன்மையெல்லாம் உண்டாகின்றது என்று அர்ச். சின்னப்பரும் வசனித்தார். (எபேசி. 3; 15.)

தேவ திரித்துவத்தின் முதலாம் ஆளாகியவரே பிதா என்று அழைக்கப்படுகிறார். இப்பெயர் அவருக்கு இன்பமும் ஏற்றதுமானதால் அல்லவோ அவருடைய ஏக குமாரனாகிய யேசுநாதர் தாம் உண்டாக்கிய பரமண்டல மந்திரத்தில் அவரைப் "பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே" என்று நாமெல்லாரும் அழைக்கவேண்டுமென்று எமக்குக் கற்பித்திருக்கிறார். பின்னும் சருவேசுரன் மாத்திரம் சரியான அர்த்தத்தின்படி பிதா என்று சொல்லப்படத்தக்கவர் என்பதைக் காட்டும் பொருட்டு ''பரமண்டலங்களில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்" என்றும் வசனித்தருளினார். (அர்ச். மத். 23; 9.)

இயல்வேத காலத்தில் விசேஷ தேவாசீர்வாதம் பெற்றுப் பெருஞ் செல்வாக்குடையவர்களாய் இலங்கிய ஆபிரகாம் யாக்கோபு முதலாம் மகாத்துமாக்கள் இன்றைக்கும் பிதாக்களென்றும் அதிபிதாக்களென்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் பூர்வகாலத்தில் ரோமை இராச்சியத்திலே சட்டங்களை உண்டாக்குவோராயிருந்த வயோதிகப் பிரபுக்களுக்கும் பிதாக்களென்னும் பேர் வழங்கிவந்தது. இவ்விதமாகத்தான் திருச்சபையிலே அப்போஸ்தொலிக்க பாரம்பரியத்தை எழுதிவைத்தவர்களும், அவ் அப்போஸ்தலர்களுக்குப் பின் திருச்சபைக்கு அஸ்திவாரங்களாய்ப் பிரகாசித்தவர்களுமான வேதபாரகர்கள் பிதாக்களென்று அழைக்கப்படுகிறார்கள்.

புத்திர பாக்கியம் பெற்ற ஆடவர்களே! நீங்களும் பிதாக்களென்று அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு எளியவர்களாயிருந்தாலும், எவ்வளவு கீழான நிலை பரத்திலிருக்கிறவர்களாயிருந்தாலும் உங்கள் ஒவ்வொருவரையும் சருவேசுரன் இத்தனை மேலான பேருக்கும் நிலைமைக்கும் அழைத்திருப்பது உங்களுக்குப் பெரும் மேன்மை அல்லவா?

பிதாவின் மகிமைபோலவே மாதாவின் மகிமையும் பெரிதாயிருக்கிறது.

உலக இரட்சகர் பூமியில் உதித்தபோது தமது திரு மாதா மூலமாய் மாதாக்களின் ஸ்திதியையும் மேன்மைப் படுத்தியிருக்கிறார். " அத்தாயை அவர் மாசில்லாமல் உற்பவித்துப் பிறக்கப்பண்ணினதுமன்றி, அவவைப் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாய் ஏற்படுத்தி மனுமக்கள் அனைவருக்கும் மாதாவும் தலைவியுமாக்கி, தாமும் இவ்வுலகில் இருக்கையில் முப்பது வயதுமட்டும் அவவுக்கு அமைந்து அவவை நேசித்துக் கனம்பண்ணி வந்தாரல்லவா? கானாவூரின் கலியாண வீட்டிலே தம்முடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றித் தமது முதற்புதுமையைச் செய்ததினாலே அவவைப் பிரசித்தமாய் மகிமைப்படுத்தினாரல்லவா?

வேதாகமத்தின்படி ''தன் தாயைச் சங்கிக்கிறவன் திரவியத்தைச் சேகரித்து வைக்கிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான்'' (சர்வபிரசங்கி 3; 5.) :

அறிவுள்ளவர்கள் எக்காலத்திலும் மாதாக்களின் அந்தஸ்தைக் கனம்பண்ணி வந்திருக்கிறார்கள்.

தேவனிடத்தில் விசேஷ ஞானம் பெற்றவரான சலமோனின் அன்னையாகிய பெத்சபி ஒரு அலுவல் நிமித்தம் அவரிடம் போனபோது அவர் தம் சிம்மாசனத்தை விட்டெழுந்து தண்டனிட்டு அவளைத் தன் வலப்பக்கத்தில் வேறோர் சிங்காசனத்தில் உட்காரச்செய்ததுமன்றி அவள் தான் ஓர் உபகாரத்தைக் கேட்க வந்தேனென்ற போது ''தாயே கேளும் நீர் கேட்பதை நான் மறுப்பது சரியல்ல'' என்று வசனித்தார். (3 ம் அர. 2-ம் அ தி.)

''சருவேசுரனுக்குப் பயப்படுகிறவன் தன் பெற்றோரைச் சங்கித்து அவர்களை மதித்துத் தன்னை உலசித்துக்குக் கொண்டுவந்த குடும்ப பதிகளாக அவர்களை மதித்து அவர்களுக்குப்பணி செய்வான்” (சர்வபிர. 3; 8.) என்னும் தேவவாக்குப்படி, தேவன்மேல் உண்மையான பய பத்தி உள்ளோராய் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் பெற்றோரைப்பார்க்கிலும் தாங்கள் எவ்வளவு மேற்பட்டிருந்தாலும் அவர்களுக்குரிய சன்மானத்தை அவர்கள் பெற வேண்டியவர்கள் என்றதை ஒருபோதும் மறவாமல் அவர்களை எக்காலமும் கனம்பண்ணிவருவார்கள்."