பிள்ளைகளின் சவுக்கியம், பாலூட்டல்

கணக்கற்ற குழந்தைகள் பால்குடிகளாயிருக்கும் போதே நோய்ப்பட அல்லது இறந்து போக நேரிடுகின்றது. பெரும்பாலும் இதற்குக் காரணம் தாய்மார் தங்கள் தீனளவிற் தகுந்ததையும் தகாததையும் விகற்பமின்றிப் புசிப்பதும் தங்கள் தேகசுத்தத்தையும் சவுக்கி யத்தையும் போதிய அளவு கவனியாமல் விடுவதுமாம். '' கோபம் தாயின் பாலை நஞ்சாக்கி குழந்தைக்கு வலி வரப்பண் ணுமென்பது நன்றாய்த் தெரிந்தகாரியம் '' என்று டோன் என்னும் பெயர்பெற்ற வைத்தியர் கூறு கின்றார். கடுங்கோபத்தோடு பால் கொடுத்த சில மாதாக் கள் இரண்டொரு நாளைக்குள் தங்கள் அரிய குழந் தைகளைச் சாகக் கொடுத்தார்களென்றும் கேள்விப்பட் டிருக்கிறோம். ஆகையால், கோபந் தணிந்தபின் பாலூட் டுவதே புத்தியாகும். இவ்வித ஒழுங்கீனங்கள் அதிக மாயுள்ள சிலவிடங்களில் வருஷாவருஷம் பிறக்குங் குழந்தைகளில் அரைவாசிக்கு மேற்படப் பால்குடிக் கிற பருவத்திலேயே இறந்துபோவதை இன்றைக்கும் துக்கத்துடன் கண்டுவருகிறோம். ஆகையால், பால்வழி யாய்ப் பிள்ளைகளுக்கு விக்கினம் நேரக்கூடிய போசன பதார்த்தங்களையும் எவ்வித அசுத்தத்தையும் அசவுக் கியத்துக்குரிய எவையையும் மாதாக்கள் இயன்றளவு சாக்கிரதையாய் விலக்கிநடப்பார்களாக.

தாய் போதிய சுகமும் பெலனுமுடையவளாயி ருக்கும்போது தன் குழந்தைக்குத் தானாகப் பால் கொடாமல் மற்றோரைக் கொண்டு கொடுப்பிப்பது சுபாவ ஒழுங்குக்கு மாறான குற்றமென்று பெரியோர் போதிக்கிறார்கள். இவ்வித தவறு செய்யுந் தாயைப் பற்றி வேதாகமஞ் சொல்வதேதெனில், " குரூர மிரு கங்கள் முதலாய்த் தங்கள் மடியைக்காட்டித் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. ஆனால், நமது சனத்தின் குமாரத்தியோ வனாந்தரத்தின் தீக்குருவி யைப்போலக் குரூரமாயிருக்கிறாள். குழந்தையின் நாவு தாகமிகுதியால் அண்ணத்தி லொட்டிக்கொண்டிருக் கிறது '' (எரேமியாஸ் புலம்பல் 4, 3-4 ) வவோரின் என் னுந் தத்துவசாஸ்திரி தன் சீஷர்களில் ஒருவருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறதென்று கேள்விப் பட்டு அவருக்குச் சோபனஞ் சொல்ல அவருடைய வீட் டுக்குப் போனார். அங்கு சம்பாஷித்துக்கொண்டிருக்கையில் ''இப்போது பிறந்த குழந்தைக்குத் தாய் தானே பாலூட்டுவாள் '' என்றார். அதற்குப் பிள்ளையின் பேர்த் தியார் மாறுத்தரமாக அப்படிச் செய்வது தாய்க்குப் பெரும் அலுப்புத் தொல்லையுமாயிருக்கும். ஆகையால், பிள்ளைக்குப் பாலூட்ட நாங்கள் ஒரு கைத்தாயை ஒழுங்குபண்ணியிருக்கிறோம் என உடனே சாஸ்திரி அவளைத்தடுத்து "ஐயோ, அம்மா, உமதுமகள் தன் புத் திரனுக்குப் பூரண மாதாவாகவிருக்கும் மகிமையை அவ ளுக்கே விட்டுவிடும். ஏனெனில் தன் உதரத்தின் கனியைப்பெற்று அதை எட்டத்தில் விலக்கிவிடுகிறவள் அல்லது அது கண்ணுக்குத்தெரியாமல் உதரத்திலிருக் கையில் அதைத் தன் சொந்த இரத்தத்தைக்கொண்டு போஷித்தபின் அது பூமியிற் பிறந்து கண்ணுக்குத் தெரியும்போது தனக்கென்று சுபாவமுறையாற் கொ டுக்கப்பட்ட பாலைக்கேட் டழும்போது அதைக் கொ டாமல் விடுகிறவள் பாதித்தாயேயன்றி முழுத்தாயல் லவே " என்றார். இப்படி வஞ்சிக்கும் மாதாக்கள்மேல் பிள்ளைகளுக்குள்ள நேசமும் பற்றுதலும் வழக்கமாய்க் குறைவாம். பிள்ளைகள் மாதாக்களின் சுகம், நற்குணம் போக்கு, சாங்கம் உடையவர்களாகவும் அவர்கள்மேல் மெய்யான நேசம் நன்றியுடையவர்களாகவு மிருக்க வேண்டுமாகில் தாய்மார் சுபாவ ஒழுங்குப்படி தாங்க ளாகவே அவர்களுக்குப் பாலூட்டி வளர்க்கவேண்டும். என்றாலும் இத்தேசத்தில் பிற சீமையாரின் பழக்க வழக்கங்களிலுள்ள குறைநிறைகளைப் பகுத்தறியாமல் பேதமின்றிச் சகலத்தையும் பின்பற்றி நடக்க ஆசிக்கும் சுதேசிகளிற் சற்று நிலைவரமுள்ள சிலர் தங்கள் குழந் தைகளுக்குத் தாங்களாகப் பாலூட்டுவது தற்காலத் தங்களுக்கு மகிமைக் குறைவென்றெண்ணி அல்லது பிறரைக்கொண் டப்படிச் செய்விப்பது தங்களுக்கு ஏதோ பெருமையும் புகழுமென்றாற்போலத் தாங்கள் செய்யவேண்டிய கடமையான இவ் வலுவலைப் பிற ரைக்கொண்டு செய்விக்க அல்லது செயற்கைப்பாலைக் குழந்தைகளுக்குப் பருக்கிவளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். உள்ளபடி நோயாளிகளான அல்லது பாலற்ற தாய்மார் அப்படிச் செய்வது குற்றமல்ல. மற்றப்படி மாதாக்கள் தாங்களாகவே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலூட்டவேண்டும். அப்படிச் செய்வதே, உம்மைப் பெற்ற உதாமும் உமக்குப் பாலூட்டிய கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகள் '' (லூக். 11 27) என்று தேவ தாயாரைப்பற்றிக் கூறப்பட்டதுபோல், சகல மாதாக்களுக்கும் புகழும் பாக்கியமுமாயிருக்கும்."

ஒருகாலம் பிராஞ்சு தேசத்தை அரசாண்ட அர்ச். லூயிஸ் இராசா பிறந்தபோது அவர் மாதாவாகிய பிளாஞ்ச் இராக்கினி தானாகவே அவருக்குப் பாலூட்டி வந்தாள். ஒருமுறை அவள் வியாதியாயிருக்கையில் அரண்மனையிலிருந்த வேறோர் அம்மாள் அவ் இராச குழந்தைக்கு இப்பணிவிடையைச் செய்யவேண்டியிருந் தது. தாய் சுகப்பட்டபின் முன்போலப் பால் கொடுக் கிறதற்காக குழந்தையை யெடுக்க அது குடிக்கச் சம் மதியாமல் வெறுப்புக் காட்டிற்று. இதில் தாய் சமு சயப்பட்டு வேறு யாராவது தன் பிள்ளைக்குப் பால் கொடுத்தார்களோவென்று விசாரித்து இன்னாளென்று அறிந்தபோது அவளுக்கு உபசாரஞ் சொல்வதற்குப் பதிலாக அவளைக் கடுகடுப்பாய் ஏறிட்டுப்பார்த்து தன் விரலை அந்த இராச குழந்தையின் தொண்டைக்குள் விட்டு அது அவளிடங் குடித்த பாலைச் சந்திக்கச் செய் து '' தேவனாலும் சுபாவமுறையாலும் எனக்கரு ளப்பட்ட மாதா என்னும் மகிமையை என்னிடமிருந்து யாராவது பறிக்க விடுவேனோ '' என்றாள். (L' Abbe Noel vol. 5. p. 57) தற்காலத்திலும் விக்தோரியா என்னும் இஸ்பானிய இராக்கினி தன் பிள்ளைகளுக்குத் தானாகவே பால் கொடுத்து வளர்க்கிறாரென்று சிறிது காலத்துக்கு முன் பத்திரிகைகள் கூறின. எவ்வளவு பணம் பாக்கியமுள்ள மாதாக்களும் மேன்மையுடைய இவ்விராக்கினிகளைக் கண்டுபாவிப்பதே அவர்களுக்கு. மெய்யான பெருமையும் புகழுமாயிருக்கும்.