வாக்களிக்கப்பட்ட இரட்சகர் பற்றிய தீர்க்கதரிசனங்கள்:

ஏறக்குறைய கி.மு. 800-ல் இருந்து கி.மு.400 வரை, 400 வருடங்களாக, இஸ்ராயேலரின் ஆயர் களாகவும், ஞான ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள் தீர்க்கதரிசிகள் எனப்பட்டார்கள். இவர்கள் கிறீஸ்துவின் வருகை பற்றி எழுதியவையெல்லாம் சேசுநாதர் பிறப்பிற்கு நானூறு வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டவை. ஆதலால் யூதர்கள் அனைவரும் அவற்றை அறிந்திருந்தார்கள்.

இனி, கிறீஸ்துநாதரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், அவை சேசுநாதரிடத்தில் நிறைவேறின விதம் பற்றியும் சற்று ஆராய்வோம்.

* வரவிருக்கும் இரட்சகர் , பாபிலோன் அடிமைத்தனத்தினின்று யூதர்கள் மீட்கப்பட்டபின் 490 வருடங்களுக்குப் பிறகு உதிப்பார் என்று தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார் (தானி. 9:24).

* யூதாவின் அரசுரிமை பறிக்கப்பட்டபின்பே அவர் வந்தருள்வார் என்று ஆதியாகமம் சொல்கிறது (ஆதி. 49:10).

* ஒரு கன்னிகை கற்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள். அவரது நாமம் "ஆண்டவர் நம்மோடு" என்று அர்த்தம் கொள்ளும் எம்மானுவேல் என்பதாம் என்று இசையாஸ் தீர்க்கதரிசி அறிவித்தார் (இசை 7:14).

* இந்த மகன் தாவீதின் கோத்திரத்தில் தோன்றுவார் என்று ஜெரேமியாஸ் தீர்க்கதரிசி கூறுகிறார் (எரே. 23:5).

* அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பது மிக்கேயாஸின் கூற்று (மிக். 5: 2). 

* அவர் சேசு என்ற பெயர் பெறுவார் என்று அபாக்கூக் ஆகமம் கூறுகிறது (அபாக் 3:18).

* அவருக்குத் தார்சீஸ் நாட்டு மன்னர்கள் காணிக்கை செலுத்த வருவார்கள் என்பது தாவீதரசரின் சங்கீத வாசகம் (சங்.71:10).

* அவரால் குருடர் பார்வை அடைவார்கள், செவிடர் கேட்பார்கள்; இருதய மனஸ்தாபமுள்ளவர்கள் ஆன்ம குணமடைவார்கள் என்று இசையாஸ் அறிவிக்கிறார் (இசை. 35:5; 66:2).

* அவர் ஒரு கோவேறு கழுதையின் மீது ஏறி ஜெருசலேம் பட்டணத்திற்குள் பிரவேசிப்பார் என்பது சக்கரியாஸின் சான்று (சக்கரி. 9:9).

* அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விற்கப்படுவார் என்று அதே தீர்க்கதரிசி விவரிக்கிறார் (சக்கரி. 11:12). 

* மற்றவர்களால் ஏசவும் துப்பவும்படுவார் (இசை. 50:6), 

* காடியும் புளித்த ரசமும் கொடுக்கப்படுவார் (சங். 68:22). 

* அவரது கால்களும் கைகளும் துளைக்கப்படும். அவரது ஆடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்; அங்கியை முன்னிட்டு சீட்டுப் போடப்படும் (சங். 21:17).

* ஆயினும் உயிரற்ற அவருடைய திருச்சரீரம் அழிந்து போகாது (சங்.15:10). 

* அவருடைய எலும்புகள் முறிக்கப்படாது (யாத்.12:46; எண்.9:12; சங்.33:20).

* அவர் பரலோகத்திற்கு ஆரோகணமாவார் (சங். 67:19). 

* அவருடைய கல்லறை மகத்துவம் மிகுந்ததாய் இருக்கும் (இசை. 11:10).

* அவர் தமது வரப்பிரசாதத்தை எல்லா மாம்சத்தின் மீதும் பொழிவார் (யோவேல் 2:28). 

* அவர் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பார். அதற்கு அழிவே இராது (தானி. 2:44).

* ஆனால் இஸ்ராயேல் மக்களோ அரசனும் ஆண்டகையும் இல்லாது, பலிகளும், பீடங்களும் காணாது தத்தளிக்கும் (ஓசே. 3:4).

எல்லாம் நிறைவேறின. 

இந்தத் தீர்க்கதரிசனங்களும், மற்றவையும் சேசுநாதரிடம் நிறைவேறின என்பதை உலகம் அறியும். அவரது பிறப்பும், பாடுகளும், மரணமும், உயிர்ப்பும், பரலோக ஆரோகணமும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதி வைக்கப்பட்டதை சரித்திர வாயிலாய் அறியலாம். இவை அனைத்தும் அவர் ஒருவரிடமே நிறைவேறிய உண்மையும் அனைவரும் தெளிவாக அறிந்ததுதான்.

ஆதலால், மகா பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தின் கனியாக உதித்த கருணை வள்ளலாகிய சேசுநாதர்தான் ஆதிகாலம் முதல் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட உலக இரட்சகர் ஆவார் என்பதை நாம் கண்டுணர்ந்து, அவரது காலடிகளில் விழுந்து, இரட்சணியப் பாதையில் நாமும் செல்வதாக அவருக்கு வாக்குறுதி அளிப்போம்.