நம்மீது கொண்ட நேசத்திற்காக நித்திய ஞானமானவர் தாம் அனுபவிக்கும்படி தேர்ந்து கொண்ட நம்ப இயலாத துயரங்களின் சுருக்கம்!

ஞானமானவரை நேசிப்பதற்கான அனைத்திலும் மேலான காரணம்

154. அவதரித்த ஞானமானவராகிய சேசுக்கிறீஸ்துநாதரை நேசிக்கும்படி நம்மை வற்புறுத்தும் எல்லாக் காரணங்களிலும் அதிக பலமானதாக நான் கருதுவது, நம்மீது தாம் கொண்ட அன்பை எண்பிக்கும்படி அவர் தேர்ந்து கொண்ட துன்பங்கள் தான்.

"மற்ற எல்லாக் காரணங்களையும் விஞ்சி நிற்கும் ஒரு காரணம் உள்ளது. அதுவே மிக முக்கியமானது என்று நான் உணர்கிறேன். அதுவே சேசுநாதரை நேசிக்கும்படி என்னை வற்புறுத்துகிறது. 

பிரியமுள்ள சேசுவே, எங்கள் பொருட்டு நீர் பருகிய கசப்பான பாத்திரமும், எங்களுக்காக நீர் செய்த மாபெரும் இரட்சணிய அலுவலுமே உம்மை எங்களுக்கு மிகவும் நேசிக்கப்படத் தக்கவராக ஆக்குகிறது. 

உண்மையில் இந்த உன்னத ஆசீர்வாதமும், உமது அன்பின் இந்த ஒப்பற்ற சாட்சியமும் உமது அன்பிற்குப் பிரதியன்பு காட்ட எங்களைத் தூண்டுகிறது. 

இந்தக் காரணம் அதிகமாக எங்களை ஈர்க்கிறது, அது மிக நீதியான கடமைகளை எங்கள் மீது சுமத்துகிறது. மிக அதிகமாக எங்களை வற்புறுத்துகிறது, அதிகத் தீவிரமாக எங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். 

அவர் இந்தக் காரணத்தைப் பின்வரும் ஒரு சில வார்த்தைகளில் தருகிறார். "நம் பிரியமுள்ள இரட்சகர் எங்கள் இரட்சணியத்தை நிறைவேற்றும்படி மிக அதிகமாக உழைத்தும், அதிகமாகத் துன்பப்பட்டும் இருக்கிறார். எவ்வளவு கடுமையான வேதனை யையும், கடும் துன்பத்தையும் அவர்தாங்கியிருக்கிறார்!"