இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவை கோவிலில் காணிக்கையாக்குதல்.

1 பெப்ருவரி  1944.

 ஒரு எளிமையான வீட்டிலிருந்து சிலர் புறப்பட்டுப் போவதைக் காண்கிறேன்.  ஒரு மிக இளம் தாய் ஒரு வீட்டின் வெளிப்புறமாய் அமைந்த படிக்கட்டில், வெண்துகிலால் பொதியப்பட்ட ஒரு குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி கீழே இறங்கி வருகிறார்கள்.

அது நம் மாதா என்று அடையாளம் கண்டுபிடிக்கிறேன்.  அவர்கள் எப்போதும் ஒரே சீராகவே இருக்கிறார்கள்:  வெளிறி, இளம் பொன் நிறத்தில் காணப்படுகிறார்கள்.  சுறுசுறுப்பாகவும், கருணையோடும் நடந்துகொள்கிறார்கள்.  வெள்ளை உடையணிந்து, இளநீல மேல் வஸ்திரம் தரித்து, தலையில் வெண் துகில் முக்காடிட்டிருக்கிறார்கள்.  தன் பிள்ளையை வெகு கவனமாய் ஏந்தி வருகிறார்கள்.

படிக்கட்டின் அடியில் சூசையப்பர் ஒரு கோவேறு கழுதையுடன் நிற்கிறார்.  அவர் வெளிறிய பழுப்பு நிற ஆடையணிந்திருக்கிறார்.  அவருடைய ஆடையும் மேல் வஸ்திரமும் அதே நிறத்தில் உள்ளன.  மாதாவைப் பார்த்து அவர் புன்னகை செய்கிறார்.  மாதா கழுதையின் பக்கம் வந்ததும், அவர் அதன் கடிவாளத்தை இடது கையில் போட்டுக் கொண்டு அமைதியாக உறங்கும் திருப்பாலனை ஏந்திக் கொள்கிறார்.  அதனால் மாதா கழுதையின் மீது வசதியாக அமர்ந்து கொள்ள முடிகிறது.  பின் சேசுவை மாதாவிடம் திருப்பிக் கொடுக்கிறார்.  அவர்கள் புறப்படுகிறார்கள்.

சூசையப்பர் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாதாவின் பக்கமாய் நடந்து செல்கிறார்.  கழுதை இடறாமல் நேராகப் போகும்படி கவனிக்கிறார்.  மாதா தன் மடிமேல் சேசுவை வைத்திருக்கிறார்கள்.  அவருக்குக் குளிரடிக்காதபடி தன் மேல் வஸ்திர ஓரத்தை அவர் மேல் போர்த்துகிறார்கள்.  அவர்கள் பேசவில்லை.  புன்முறுவல்தான்.

சாலை மோசமாயிருக்கிறது.  அது வருடத்தின் காலநிலையால் வறட்சியாக்கப்பட்ட பிரதேசத்தின் வழியாக வளைந்து செல்கிறது.  ஒரு சில பயணிகளே இவர்களைச் சந்திக்கிறார்கள் அல்லது இவர்களைக் கடந்து செல்கிறார்கள்.

பின், சில வீடுகளையும் ஓர் ஊரைச் சுற்றிய மதில்களையும் நான் காண்கிறேன்.  அவர்கள் உள்ளே ஒரு கதவின் வழியாகப் போய், உடைந்தும் ஒழுங்கற்றும் காணப்படுகிற நடைபாதையில் நடக்கிறார்கள்.  நடை ஏறவில்லை. காரணம் கழுதையின் கால்கள் கல் பெயர்ந்த குழிகளுக்குள் சிக்கிக் கொள்வதால் அது ஓயாமல் குலுங்குகிறது.  அதனால் மாதாவுக்கும் பாலனுக்கும் தொந்தரவாயிருக்கிறது.

அந்த நடைபாதை சமதளமாயில்லை.  அது ஒரு ஏற்றம்.  ஆனால் மேடு அதிகமில்லை.  உயர்ந்த வீடுகள் நடுவே செல்லும் ஒடுங்கிய சாலை அது.  வீடுகளின் வாசல்கள் ஒடுக்கமாயிருக்கின்றன.  ஒரு சில ஜன்னல்களே தெருப்பக்கம் உள்ளன.  மேலே நீல வானம் பாளம் பாளமாய் வீடுகளின் மேல் தட்டுகளுக்கு நடுவே தெரிகின்றது.  தெருக்களில் நிறைய ஆட்களும் அதிக சந்தடியும் உள்ளது.  நடந்தும், கழுதை வாகனத்திலும் வருகிற ஜனங்களையும் பொதி மிருகங்களை நடத்தி வருகிறவர்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள்.  பாரமான பொதியேற்றிய ஒட்டக வரிசை ஒன்று வருகிறது.  அதைப் பின்பற்றி ஒரு கூட்டம் ஜனங்கள் வருகிறார்கள்.  அப்போது உரோமைச் சேவகர்களின் அணி ஒன்று குதிரைகளின் காலடிச் சத்தத்தோடும் ஆயுதங்களின் ஓசையோடும் கடந்து சென்று, ஒடுக்கமான கல் பாவிய தெருவை மறித்துக் கட்டப்பட்ட ஒரு மேல் வளைவைக் கடந்து செல்கிறது.

சூசையப்பர் இடது பக்கமாய், சற்று கூடுதல் அகலமான நல்ல பாதை வழியில் திரும்புகிறார்.  தெருவின் முடிவில், போர்க் காலத்தில் சேதப்பட்ட பட்டணத்தின் சுவர்களைக் காண்கிறேன்.  இவ்விடம் எனக்குப் பழக்கப்பட்டதுதான்.

அங்கே ஒரு கதவின் பக்கமாக வாகனக் கழுதைகளின் தொழுவம் ஒன்று உள்ளது.  அதை தொழுவம் என்கிறேன் ஏனென்றால் அது ஒரு சாய்வுக் கூரை - வைக்கோல் பரப்பப்பட்ட சாய்வுக் கூரை.  மிருகங்களைக் கட்ட வளையங்கள் பொருத்தப்பட்ட  கழைகளும் உள்ளன.  மாதா அங்கே கழுதையை விட்டு இறங்குகிறார்கள்.

அப்போது அங்கு வருகிற ஓர் ஆளிடம் சூசையப்பர் சில நாணயங்களைக் கொடுக்கிறார்.  கொஞ்சம் வைக்கோல் வாங்கி கழுதைக்குப் போட்டு ஒரு ஓரத்திலுள்ள கரடான ஒரு கிணற்று வாளியில் தண்ணீர் இறைத்து தண்ணீரும் காட்டுகிறார்.  பின் மாதாவும் சூசையப்பரும் தேவாலய அடைப்பிற்குள் செல்கிறார்கள்.

முதலில் அவர்கள், வியாபாரிகள் இருக்கிற வில்வளைவு நடைபாதைக்குப் போகிறார்கள்.  இவர்களைத்தான் பின்னால் சேசு விரட்டியடிப்பார்.  ஆட்டுக்குட்டிகள் விற்பவர்களும் புறா விற்பவர்களும் நாணய மாற்றுக்காரர்களும் அங்கே இருக்கிறார்கள்.  சூசையப்பர் இரண்டு வெள்ளைப் புறாக்களை வாங்குகிறார்.  நாணய மாற்றம் செய்யவில்லை.  அவரிடம் தேவையான நாணயங்கள் உள்ளன.

பின் அவர்கள் ஒரு பக்கமாக இருக்கிற எட்டுப் படிகள் கொண்ட வாசலுக்கு வருகிறார்கள்.  அநேகமாக எல்லா வாசல்களுக்கும் இப்படித்தான் உள்ளன.  காரணம் தேவாலயத்தின் மத்திய பாகம் சூழ இருக்கும் தளத்திலிருந்து உயர்ந்த மேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  அந்த வாசல் ஒரு பெரிய அறைக்குள் இருக்கிறது.  நம் பட்டணங்களின் வீடுகளில் இருப்பது போல்தான்.  ஆனால் இந்த அறை பெரிதாக இருக்கிறது.  அலங்காரமாகவும் உள்ளது.  அதிலே வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் பீடங்கள் போன்ற இரண்டு அமைப்புகள் உள்ளன.  இரு நீண்ட சதுர அமைப்புகள்.   அவை ஏன் அங்கு உள்ளன என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை.  அவற்றின் உட்பாகம் சில சென்டிமீட்டர்கள் குழிவாக்கப்பட்டு, குழிந்த பாத்திரம் போலிருக்கின்றன.

ஒரு குரு அவர்களிடம் வருகிறார்.  சூசையப்பர் கூப்பிட்டு வந்தாரா தாமாகவே வந்தாரா என்பது தெரியவில்லை.  மாதா அவ்விரண்டு சின்னப் புறாக்களையும் அவரிடம் கொடுக்கிறார்கள்.  அவற்றிற்கு நேரிடப் போவதை அறிந்ததால் நான் வேறு பக்கமாக பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன்.  அந்த மிகப் பெரிய வாசலின் அலங்காரங்களைக் கவனிக்கிறேன்.  மேல் விதானத்தையும் பார்க்கிறேன்.  குரு மாதா மீது தண்ணீர் தெளிப்பது பக்கவாட்டில் தெரிகிறது.  அது தண்ணீராகவே இருக்க வேண்டும்.  ஏனென்றால் அது மாதாவின் ஆடைமேல் கறை எதுவும் ஏற்படுத்தவில்லை.  குருவிடம் மாதா புறாக்களுடன் கொஞ்சம் காணிக்கைப் பணமும் கொடுத்தார்கள் என்பதைச் சொல்ல மறந்து விட்டேன்.  அவர்கள் குருவுடன் ஆலயத்திற்குட் செல்கிறார்கள்.

நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன்.  அது மிகவும் அலங்கரிக்கப்பட்ட இடமாயிருக்கிறது.  தூண்களிலும் சுவர்களிலும் உட்புறக் கூரையிலும் சம்மனசுக்களின் தலைகளும் குருத்துகளும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.  நூதன நீண்ட பலகணிகள் வழியாக வெளிச்சம் வருகிறது.  அவை ஒடுங்கியும் கண்ணாடி இல்லாமலும் சுவர்களுக்கு மூலைவாட்டமாகவும் அமைக்கப் பட்டுள்ளன.  மழைக்குப் பாதுகாப்பாக இந்த அமைப்பு என்று எண்ணுகிறேன்.

மரியா முன்னே செல்கிறார்கள்.  பின் நின்றுவிடுகிறார்கள்.  அவர்கள் நிற்குமிடத்திலிருந்து சில மீட்டர் தள்ளி மேலும் படிகள் ஏறுகின்றன.  அதன் உச்சியில் ஒரு பீடம் போன்ற அமைப்பு உள்ளது.  அதற்கப்பால் இன்னொரு அமைப்பு காணப்படுகிறது.

நான் தேவாலயத்தில் இருப்பதாக நினைத்தேன்.  ஆனால் அதற்கு மாறாக உண்மையான தேவாலய ஸ்தலத்தைச் சுற்றிய இடத்தில்தான் இருக்கிறேன்.  உண்மையான தேவாலய ஸ்தலம் என்பது, அதைக் கடந்து குருக்களைத் தவிர வேறு யாரும் போகக் கூடாத இடம்.  ஆகவே நான் தேவாலயம் என்று நினைத்தது தேவாலயத்தை மூன்று பக்கங்களிலும்  சூழ்ந்திருக்கிற அடைக்கப்பட்ட மூன்றில்களில் ஒன்றுதான்.  தேவாலயத்திற்குள் தான் திருப்பேழை வைக்கப்பட்டுள்ளது.  நான் சொல்வது தெளிவாக உள்ளதா என்று தெரியவில்லை.  நான் கட்டிட மேஸ்திரியோ எஞ்சினியரோ அல்ல.

சேசு பாலகன் விழித்துக் கொள்கிறார்.  தம் மாசற்ற விழிகளை குரு பக்கமாகத் திருப்புகிறார்.  சில நாள்களே ஆன சிசுவின் அதிசயிக்கும் பார்வை.  அவரை மாதா குருவிடம் கொடுக்கிறார்கள்.  குரு பாலகனை வாங்கி தேவாலயத்தை நோக்கி உயர்த்துகிறார்.  சேசுவின் கரங்கள் முழுவதும் நீண்டிருக்கின்றன.  படிகளின் உச்சியில் பீடம் போலுள்ள அமைப்பிற்கு எதிராக குரு நிற்கிறார்.  சடங்கு முடிந்தது.  குழந்தையைத் தாயிடம் திருப்பிக் கொடுத்து விட்டு குரு சென்றுவிடுகிறார்.

இதைப் பார்த்துக் கொண்டு ஒரு சிறு கூட்டம் நிற்கிறது.  அவர்கள் மத்தியிலிருந்து மூப்பால் குறுகி நடக்க சிரமப்படும் ஒருவர் கம்பு ஊன்றியபடி வருகிறார்.  அவருக்கு எண்பது வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.  அவர் மாதாவிடம் போய் ஒரு நிமிடம் திருப்பாலனைத் தம்மிடம் கொடுக்கும்படி கேட்கிறார்.  மாதா மகிழ்ச்சியோடு கொடுக்கிறார்கள்.

சிமியோனை நான் குருக்கள் வம்சத்தைச் சேர்ந்தவராகவே எப்போதும் நினைத்திருந்தேன்.   ஆனால் அவர் ஒரு சாதாரண விசுவாசி.  அவருடைய உடையிலிருந்தாவது அவ்வாறுதான்             கூற முடியும்.  அவர் சேசு பாலனை வாங்கி முத்த                  மிடுகிறார்.  பாலருந்தும் சிசுக்கள் சிரிப்பதுபோலவே சேசு      குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்.  வயோதிபரை          துருவிப் பார்ப்பதுபோல் காணப்படுகிறார். சிமியோன் ஒரே  சமயத்தில் அழுகையும் மகிழ்ச்சியும் கொள்ள, பிரகாசிக்கிற அவருடைய கண்ணீர், அவர் முகத்தின் திரைகள் வழியாக உருண்டு தாடியில் வழிந்தோடுகிறது.  சேசு பாலன் தம் சிறு கரங்களை அவற்றை நோக்கி நீட்டுகிறார்.  அவர் சேசுதான்.  ஆயினும் இன்னும் அவர் ஒரு சிசுவே.  அவருக்கு முன்பாக அசைகிற எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கிறது.  அதைப் பற்றிக் கொள்ளவும் அது என்னவென்று பார்க்கவும் அவர் ஆவல் கொள்கிறார்.  மாதாவும் சூசையப்பரும் மற்ற அனைவரும் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.  அவருடைய அழகை மற்றவர்கள் பாராட்டுகிறார்கள்.

அந்தப் புனித வயோதிகரின் வார்த்தைகளை நான் கேட்கிறேன்.  சூசையப்பரின் ஆச்சரியமான பார்வையை நான் காண்கிறேன்.  மிக ஆழ்ந்த விதமாய் நெகிழ்ந்துள்ள மாதாவின் பார்வையையும் அச்சிறு கூட்டத்தின் கண்ணோக்குகளையும் காண்கிறேன்.  அந்த மூப்பரின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், உருகுகிறார்கள், கொஞ்சம் புன்முறுவலும் கொள்கிறார்கள்.  அந்தக் கூட்டத்தில் யூத ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த தாடியுள்ள வஞ்சக மனமுள்ள சிலரும் இருக்கிறார்கள்.   அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து சிமியோனை ஏளன இரக்கப் பார்வை பார்க்கிறார்கள்.  அவரை அவர்கள் வயதின் கோளாறுடையவராகக் கருதியிருக்க வேண்டும்.

சிமியோன் துயரம் பற்றிக் குறிப்பிடும்போது மாதாவின் புன்னகை மறைகிறது.  மாதாவுக்குத் தெரியும்தான்.  ஆயினும் அந்த சொல் அவர்கள் ஆன்மாவை ஊடுருவுகிறது.   ஆறுதலுக்காக அவர்கள் சூசையப்பரின் அருகில் செல்கிறார்கள்.  சேசுவை ஆர்வமாய் அரவணைத்துக் கொள்கிறார்கள்.  பானுவேலின் குமாரத்தியாகிய அன்னாளுடைய வார்த்தைகளை தாகமுள்ள ஆன்மாவைப்போல் பருகுகிறார்கள்.  அன்னாள் ஒரு ஸ்திரீ என்பதினிமித்தம் மாதாவின் துயரங்களுக்கு இரக்கப்பட்டு, அந்தத் துயர நேரம் பரம பிதாவினால் இதமாக்கப்படும் என்று வாக்களிக்கிறாள்:  “ஸ்திரீயே!  தன் மக்களுக்கு ஒரு மீட்பரைக் கொடுத்த தேவன், உன்னுடைய கண்ணீர்களை ஆறுதல்படுத்த தம் தூதனை அனுப்பும் வல்லமை அற்றுப் போக மாட்டார்.   இஸ்ராயேலின் பேர் பெற்ற பெண்மணிகளுக்கு ஆண்டவரின் உதவி ஒருபோதும் இல்லாதிருந்ததில்லை.  நீயோ யூதித்தைவிடவும் ஜாயேலைவிடவும் பெரியவளாயிருக்கிறாய்.  துயரத்தின் புயலைத் தாங்கி நிற்பதற்கும் நம் தேவன் மிகப் புனித பொன்னாலான ஒரு இருதயத்தை உனக்கருள்வார்.  அதனால் நீ சிருஷ்டிப்பிலேயே மகா பெரிய பெண்மணியாக:   மாதாவாக  இருப்பாய்.  நீயோ பாலனே!  உம்முடைய அலுவலின் தருணத்தில் என்னை நினைவு கூர்ந்தருளும்” என்று கூறுகிறாள்.

காட்சி முடிகிறது.