கடவுள் நீதி செலுத்தும் விதம்

இப்போது பரலோகத்தின் மாபெரும் சர்வேசுரன், பாவிகளும், கலகக்காரர்களுமாகிய தமது சிருஷ்டிகளின் மீது நீதி செலுத்தும் விதத்தைப் பார்ப்போம்.

அவர் குற்றமுள்ளவனை அவனுடைய மனச் சான்றின் குரலைக் கொண்டு இரகசியமாகத் தனியே அழைக்கிறார். இந்தக் குரலை அந்தப் பாவியைத் தவிர வேறு யாரும் கேட்க முடியாது. அதனால் அவனுடைய குற்றத்தைக் கடவுளைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.

பாவியை யாரும் குற்றம் சாட்டாத ஒரு மறைவான இடத்திற்கு அவர் அழைத்துச் செல்கிறார். அவனுக்கு எதிராக சாட்சியம் கூற எந்த சாட்சியும் அழைக்கப் படுவதில்லை. அவனுடைய ஆன்மா குற்றத்தால் கருத்துப் போயிருக்கலாம். அவன் தன்னை சிருஷ்டித்தவரை நிந்தை அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம். கொடிய பாவ முட்களால் அவருடைய திரு இருதயத்தைக் குத்தித் துளைத்துப் புண்ணாக்கியிருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் யாரும் அவனை இகழ்ந்து, பரிகசிக்கப் போவ தில்லை. அவன் ஒரு நேசமுள்ள தந்தையின் பாதங்களில் முழந்தாளிடுகிறான். அவர் அவனிடம் தண்டனையைப் பற்றியல்லாமல், மன்னிப்பைப் பற்றிப் பேசுகிறார். கடவுளின் நீதியையல்ல, மாறாக அவருடைய இரக்கத்தை அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இறுதியாக, கடவுளின் முழுமையான மன்னிப்பைப் பற்றி அவனுக்கு உறுதி தருகிறார்.

மரண தண்டனை என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை; வழக்கு விசாரணை, நீண்ட கால சிறைவாசம் என்ற அச்சுறுத்தலும் இல்லை, நிரந்தர அவமானத்தைப் பற்றிய பயமும் இல்லை.

அவன் தானே முன்வந்து தன் பாவங்களை சங்கீர்த் தனம் செய்கிறான்; அவன் சொல்வது நம்பப்படுகிறது, அவனுடைய வார்த்தைகளிலுள்ள உண்மை பற்றி பாவ சங்கீர்த்தனத் தொட்டி என்னும் நீதியாசனத்தில் அமர்ந்துள்ள கடவுளின் பிரதிநிதி எந்த சந்தேகமும் கொள்வதில்லை. அந்த தேவ ஊழியர் அவனுடைய ஆத்துமத்தை ஆறுத லாலும், அவனுடைய இருதயத்தை சமாதானத்தாலும், அவனுடைய சித்தத்தை பலத்தாலும் நிரப்புகிறார். பாவத்தால் கறைப்படுத்தப்பட்டு, இழிநிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ள அந்தப் பாவமுள்ள ஆத்துமத்தின்மீது சேசுவின் விலைமதியாத திரு இரத்தத்தை அவர் பொழியச் செய்கிறார். அந்த திவ்விய இரத்தம், அந்த ஆத்துமத்தின் பாவக் கறைகளைக் கழுவிப் போக்கி, குற்றவாளியான அந்த மனிதனை, சம்மனசுக்களும் காண விருப்பம் கொள்ளும் ஒரு காட்சியாக மாற்றுகிறது.

ஒரு சிறு அபராதம் விதிக்கப்படுகிறது. மன்னிக்கப் பட்ட அந்தப் பாவி அதை மகிழ்ச்சியோடு நிறைவேற்று கிறான். மிகுந்த மதிப்புள்ள அறிவுரை அவனுக்குத் தரப் படுகிறது. அதை அவன் பிரமாணிக்கத்தோடு நடைமுறைப் படுத்துகிறான். அவ்வப்போது அவன் பாவசங்கீர்த்தனத் தொட்டிக்குத் திரும்பி வந்து, புதிதான ஆறுதலும், புதிதான பலமும், புதிய வரப்பிரசாதங்களும் பெற்றுச் செல்கிறான்.

பண விரயமில்லை, அபராதங்கள் இல்லை, செலவுகள் இல்லை!

குற்றமுள்ளவன் மனஸ்தாபமுள்ளவனாக மேல் நோக்கி எழுகிறான். கடவுளின் நேசம் அவனுடைய துயரத்தை இனிமையுள்ளதாக்குகிறது, கடவுளின் இரக்கம் நன்றியறிதலால் அவனை நிரப்புகிறது, கடவுளின் வரப்பிரசாதம் இனி பாவம் செய்யாதிருக்க அவனுக்கு பலம் தருகிறது. “உங்கள் பாவங்கள் செந்தூரம் போலச் சிவந்திருந் தாலும், உறைபனியைப் போல வெண்மையாக்கப்படும்'' (இசை. 1:18) என்ற கடவுளின் வாக்குத்தத்தம் இங்கே உண்மையாகவே நிறைவேறுகிறது.

ஆனால் “கடவுள் பரிகசிக்கப்படக் கூடியவர் அல்ல.''

ஆம், சர்வ வல்லபர் வழிதவறிப் போன, பாவிகளான தமது பிள்ளைகளிடம் அளவற்ற பொறுமையுள்ளவரா யிருக்கிறார். அவர்கள் பலவீனர்கள். அவர் அவர்களுடைய பலவீனங்களை முழுமையாக அறிந்திருக்கிறார். எத்தகைய பலத்தை, எத்தகைய வரப்பிரசாதத்தை அவர் அவர்களுக்குத் தருகிறார் என்றால், அவர்கள் எப்பேர்ப்பட்ட பாவத்தைச் செய்திருந்தாலும், அதை அவர்கள் முழுமையாகவும், பூரணமாகவும் ஒப்புக்கொண்டு, சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அவர்கள் குருடராயிருக்கிறார்களா? அவர்களுடைய ஆன்மாவின்மீது அவர் ஒளியை வீசுகிறார். தங்கள் நன்றியற்றதனத்தையும், பாவத்தின் அகோரத்தையும் அவர்கள் காணும்படி செய்கிறார். இவ்வளவிற்கும் அந்தப் பாவங்கள் அவர்கள் அறியாமல் செய்தவை அல்ல.

அவர்கள் ஆர்வமின்றியும், அசட்டைத்தனமாகவும், அலட்சியமாகவும் இருக்கிறார்களா? அவர் மற்றவர்களின் மரணங்களையும், அவர்களுக்கு வரும் தண்டனைகளையும் அவர்கள் காண அனுமதிப்பதன் மூலம் அவர்களுடைய வெதுவெதுப்பான நிலையிலிருந்து வெளியே வர உதவு கிறார்.

அவர்கள் வியாபாரத்திலும், உலக இன்பங்களிலும் மூழ்கியிருக்கிறார்களா?

அவர் மனசாட்சியின் குரலைக் கொண்டு அவர் களை இடைவிடாமல் அழைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்கள் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருந்தால், அவர் களுக்கு வரப் போகிற ஆபத்துக்களை அவர்களுக்குக் காட்டு கிறார். தன் சின்ன மகன் நல்ல பிள்ளையாயிருந்தால், பொம்மைகளும், சாக்லேட்டும் தருவதாக வாக்களிக்கிற ஒரு தந்தைக்கு மேலாக, தம்முடைய குழந்தைகள் நல்ல பிள்ளைகளாயிருந்தால் அவர்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாத அற்புதமான வெகுமானங்களைத் தருவதாக கடவுள் வாக்களிக்கிறார்.

அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் கேட்கிறார்? கடினமான எதையுமல்ல. அவர் தருகிற வரப் பிரசாதங்களையும், உதவிகளையும் அவர்கள் பயன்படுத்து வார்கள் என்றால், அவர் கேட்பதைச் செய்வது அவர்களுக்கு எந்த விதத்திலும் சிரமமானதாகவே இருக்கப் போவ தில்லை.

இந்த உதவிகள் என்னவென்றால், முதலாவதாக, ஜெபத்தின் மூலம் அவரிடம் உதவி கேட்பதாகும். பதிலுக்கு, அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவதாக அவர் வாக்களிக்கிறார். இதை விட அதிக எளிதானது என்ன இருக்கிறது?

இரண்டாவதாக, அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, தமது விலைமதியாத திரு இரத்தத்தைத் தங்கள் ஆன்மாக்களின் மீது பெற்றுக்கொள்ளும்படி அவர் அவர்களுக்கு ஆலோசனை தருகிறார். அப்போது எல்லாக் கஷ்டங்களின்மீதும் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

மூன்றாவதாக, நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணையில் தம்மை உட்கொள்ளும்படி அவர் அவர்களை அழைக்கிறார். இதைச் செய்யும்போது, எல்லா விதமான வரப்பிரசாதங்களாலும் அவர் அவர்களுடைய ஆன்மாக்களை நிரப்புகிறார்.

அளவற்ற இனிமையும், இரக்கமும், அன்புமுள்ள பரிசுத்த தேவனைத் தங்கள் ஆத்துமங்களுக்குள் வரவேற்பதை விட அதிக இன்பமானது வேறு என்ன இருக்க முடியும்? அவர்களிடம் வேறு எதை அவர் கேட்கிறார்?

கடவுளின் இந்த அளவற்ற பொறுமை, வாழ்வின் கடைசி நொடி வரைக்கும் நிலைத்திருக்கிறது. அவருடைய நன்மைத்தனம் நிந்தித்துத் தள்ளப்பட்டு, அவருடைய இரக்கம் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டு, அவருடைய நேசத்திற்குப் பதில் நேசம் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்வின் கடைசி நிமிடம் வரைக்கும் அவருக்குத் துரோகம் செய்யும்போதுதான், அவருடைய நீதி அவர்கள் மீது செலுத்தப்படுகிறது. கடவுள் தமது சாராம் சத்தில் நீதிபரராயிருக்கிறார். பாவமோ தன் சாராம்சத்தில் தீயதாகவும், தண்டிக்கப்பட வேண்டியதாகவும் இருக் கிறது. ஆனால் தண்டிப்பதற்கு முன்பாக, கடவுள் தம் இரக்கத்தை முழுவதுமாக அவர்கள் மீது செலவழிக்கிறார். தமது நீதியைப் பயன்படுத்துவதை முடிந்த வரையில் தவிர்த்து விடுவதே எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ஏக்கமுள்ள விருப்பமாக இருக்கிறது. “ஆண்டவர் எல்லோருக்கும் தயையுள்ளவராயிருக்கிறார்; அவருடைய இரக்கம் அவருடைய சகல சிருஷ்டிகளின் மேலும் இருக்கிறது'' (சங்.144:9). ஆனால் பாவத்தை விட்டுவிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவனுக்கு அவரால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய அவருடைய நீதி அவரை அனுமதிக்கும்?

ஆக, நம் சொந்த சுயாதீன சித்தத்தின்படி நாம் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்கிறோம், தொடர்ந்து கலகம் செய்து கொண்டே இருக்கிறோம் என்றால், இறுதியில் அவருடைய நீதியின் இடி முழக்கங்களைத்தான் நம் தலைமீது நாம் கொண்டு வருவோம். அவருடைய நீதி பிடிவாதமான பாவத்தைத் தண்டித்தே தீர வேண்டியதா யிருக்கிறது. இறுதி வரை பாவியாயிருந்து, தம் மன்னிப்பைப் பெற விரும்பாமல் மரிக்கிற தமது தறுதலைப் பிள்ளையை மிகுந்த வேதனையோடுதான் அவர் தண்டிக் கிறார்!

தங்கள் வாழ்நாளின்போது பாவசங்கீர்த்தனத்தை எள்ளி நகையாடுபவர்கள், மரணம் நெருங்கி வரும்போது தங்கள் மனங்களை மாற்றிக் கொண்டு, மிக அநேக ஆண்டு களாகத் தாங்கள் புறக்கணித்து வந்திருந்த ஆறுதலை வீணாகத் தேடுகிறார்கள்.

ஆலம்பர்ட் என்பவன் தனது மரணப்படுக்கையில் கடவுளோடு ஒப்புரவாகத் தேடினான். ஆனால் கான்டோர்ஸே என்னும் அவனுடைய போலியான நண்பன், மரித்துக் கொண்டிருந்த அந்த மனிதனை குருவானவர் நெருங்கி விடாதபடி பார்த்துக் கொண்டான். இதனால் அவன் கசப்பான மனவுறுத்தலுக்கும், கொடூர மான அச்சங்களுக்கும் இரையானவனாக, அவலமாய்ச் செத்தான்.

திதோரோ என்பவன் மனஸ்தாபத்தின் அடை யாளங்களைக் காட்டினான், ஒரு சில தடவைகள் ஒரு குருவோடு பேசவும் செய்தான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனுடைய மாற்றத்தைக் கண்டு எச்சரிக்கை யடைந்தார்கள். அவன் மனந்திரும்பினால், தங்கள் தத்துவக் கொள்கை மற்றவர்களால் ஏளனம் செய்யப்படும் என்று பயந்தார்கள். எனவே குருவானவர் வந்து அவனை சந்திக்க முடியாத நாட்டுப்புறத்திற்கு அவனை அவசரமாக எடுத்துச் சென்று விட்டனர்.

வோல்ட்டேர் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில், பாவசங்கீர்த்தனத்தின் ஆறுதலைத் தேடினான். ஆனால், இங்கும் அவனுடைய கொடிய, எதிர்மறை சிந்தனையுள்ள நண்பர்கள் இந்த உன்னதமான ஆறுதல் அவனுக்குக் கிடைத்து விடாதபடி பார்த்துக் கொண்டனர். அவன் அவநம்பிக்கையில் இறந்தான் என்று சொல்லப் படுகிறது. அவனுடைய வாழ்நாட்களில் பரிசுத்த வேதத் தைத் தாக்குவதே அவனுடைய வேலையாக இருந்தது. ஆனால் “சர்வேசுரன் நகைக்கப்படுபவர் அல்ல'' (கலாத்.6:7) என்பதை அவன் அறிய வந்தபோது, ஏற்கெனவே மிகவும் தாமதமாகி விட்டிருந்தது.

நல்ல சர்வேசுரன் உண்மையாகவே கடுமை யானவரா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை நாம் நம் வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.