இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறைவனின் பொறுமை

பிரான்ஸ் நாட்டுக் கவி ஒருவன் ஏராளமான கவிகள் அடங்கிய நூல் ஒன்று எழுதியுள்ளான். புத்தகம் நிறைய பயங்கரத்துக்குரிய தேவ தூஷணங்கள். அவைகளில் ஒன்றை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன். "ஒரு நாஸ்திகனின் மன்றாட்டு " என்பதே அதன் தலையங்கம்:

நான் ஒரு கோவிலினுள் நுழைந்தேன். அங்கு குளிர்ந்த தரைமீது நான் முழந்தாளிட்டு, கடவுளை நோக்கி பின்வருமாறு பிரார்த்தித்தேன்: நீ இருக்கிறாய் என்பதை நான் மறுக்கிறேன். பெருமை பொருந்திய என் சிரசை நான் ஒரு போதும், ஒரு போ துமே உனது நுகத்தடிக்குப் பணியச் செய்ய மாட் டேன். எனினும் நீ இருக்கிறாயா என்பது பற்றி நான் கடைசி பரிசோதனை ஒன்று செய்து பார்க்கப் போகிறேன். இதோ என்னைப் பார்; உன் வீட்டில் உனக்கு முன்பாக நான் முழந்தாளிட்டிருக்கிறேன். என்னைப் பார், எனக்கு ஓர் முடிவு கட்டி விடு. நீ உண்மையாகவே இருப்பாயானால், ஒரு இடி மின்னலை அனுப்பி என்னைச் சாகடிப்பாயாக. அப்படியானால் என் அவிசுவாசத்துக்காக நியாயமாகவே நான் தண் டிக்கப்பட்டதாகக் கருதுவேன். தண்டிக்கும் உன் பரலோக நெருப்பை நான் எதிர் பார்த்து நிற்கிறேன். உடனே அதை அனுப்பு. இடி மின்னல் என்னைத் தாக்குமானால், என் ஆன்மா இந்த உடலை விட்டுப் பிரிய தயாராகுகையில், “நீ உண்மையாகவே இருக்கி றாய், அதை மறுத்தது குற்றம்'' என என் கடைசி மூச்சுடன் நான் கூவுவேன்... ஆனால் இதோ பார், இன்னும் இடியையும் காணோம். பூரண சுகத்துடன் நான் எழுந்து உன் வீட்டை விட்டுப் போகிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீ உண்மை யாகவே இருப்பதில்லை.''

அந்த நிர்ப்பாக்கிய கவி இவ்விதம் தேவனைத் தூஷிக்கிறான். “ஆண்டவரே, இதையெல்லாம் பேசா மல் பொறுத்துக் கொண்டிருக்கிறீரா? உம் வசம் இடி மின்னல் இல்லையா? இத்துஷ்டனை அழித்து நாசமாக்கக் கூடிய பலமுள்ள கை இல்லையா?'' என நல்ல மனிதன் நடுக்கத்துடன் கேட்கிறான்.

பொறுமையில்லாத மனிதன் இவ்விதம் கூறலாம். ஆனால் கடவுளது எண்ணம் என்ன? மேலே சொல்லப்பட்ட பயங்கரத்துக்குரிய தேவ தூஷணங் களைக் கூறிய அந்தக் கவிக்கு என்ன நேர்ந்தது? நாம் அறியோம். இந்தத் தூஷண கக்கிய பின் அவன் உள்ளத்தில் நிகழ்ந்தவைகளும் நமக்குத் தெரியாது. அந்தக் கவி அல்ஜியர்ஸ் நகரிலுள்ள வெகு கண்டிப் பான ஒரு மௌன சபையிற் சேர்ந்து சந்நியாசியான தாக சில ஆண்டுகளுக்குப் பின் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் தன் பாவங் களுக்காக கடும் தபசு செய்து, கடவுள் தன் மீது காண்பித்த அளவு கடந்த பொறுமைக்காக நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறான்.

கடவுள் இத்தனை அதிசயத்துக்குரிய பொறுமை யுடனிராவிட்டால், அவன் அந்தத் தேவ தூஷ்ணங் களைக் கக்கும் போதே, இடி மின்னல் விழுந்து அவ னைச் சாகடித்திருக்கும். கடவுள் அவ்வளவு பொறுமையுள்ளவராயிராவிட்டால், வெகு நாட்க ளுக்கு முன்னரே அவன் பசாசின் கையில் அகப்பட் டிருப்பான். கடவுள் பொறுமையற்றவராயிருப்பின், அவனும் அவனைப் போன்ற அநேகரும், ஏன் நம்மில் முதலாய் அநேகர், பசாசின் வசப்பட்டிருப்போம். ஆனால் கடவுள் பொறுமையுள்ளவர், அளவற்ற பொறுமையுள்ளவர். இது நமக்கு பெரும் ஆறுதல், ஓர் எச்சரிப்பு.

கடவுள் எவ்வளவு பொறுமையுள்ளவர், அவரது பொறுமையிலிருந்து நாம் என்ன படிப்பினை அறிந்து கொள்ள வேண்டும் என பார்ப்போம்.

கடவுளது ஏவு தலால் எழுதப்பட்ட வேத புத்த கங்களைப் படித்துப் பார்த்தாலும் சரி, அவரது நெடு நாளைய பொறுமைக்கு சாட்சி பகரும் நிகழ்ச்சிகளைப் பற்றி நினைத்துப் பார்த்தாலும் சரி, அவரது அதி சயத்துக் குரிய பொறுமையைக் கண்டு நாம் பிரமிக் காதிருக்க முடியாது.

கடவுளது பொறுமையின் மேன்மையைப் பற்றி வேத புத்தகமானது பல இடங்களில் கூறுகிறது; "கிருபாகடாட்சமும் தயாபரமும் பொறுமையும் அத்தியந்த கிருபையும் சத்தியமும் பொருந்திய தேவன் ஆயிரம் சிருஷ்டிகளுக்கும் இரக்கம் புரிகிற வர்'' என மோயீசன் சொல்கிறார்: (யாத்தி. 346,7) “கர்த்தர் பொறுமையும் மிகுந்த கிருபையுமுள்ளவர். அக்கிரமத்தையும் பாதகங்களையும் மன்னிக்கிறவர்'' என மோயீசன் இன்னோரிடத்தில் சொல்கிறார் (எண். 34 | 8). “ஆண்டவர் உங்களுக்கு கிருபையளிக்கவே காத்திருக்கின்றார். உங்களுக்கு மன்னித்து அதனால் மகிமை பாராட்டிக் கொள்வார்'' என இசையாஸ் தீர்க்கத்தரிசி சொல்கிறார். (இசை. 30 | 18). "ஆண்ட வரே, நீர் சாந்தமுள்ள கடவுள், தயையுள்ளவர்; பொறுமையுள்ளவர், இரக்கமுடையவர், பாவங்களை சமிக்கிறவர் என நான் அறிவேன்'' என்று யோனாஸ் தீர்க்கத்தரிசி பிரார்த்திக்கிறார் (4|2.). ஒருவராகி லும் கெட்டுப் போகாமல் எல்லோருமே மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி கடவுள் உங்களைப் பற்றி பொறுத்துக்கொண்டிருக்கிறார்" என புனித இராயப் பர் கூறுகிறார் (2 இ.319).

மானிடராகிய நாம் பொறுமையற்று நடந்து கொள்கிறோம். ஏனெனில், நம் வசம் இருப்பது சொற்பக் காலம். வெகு சொற்ப ஒழிந்த நேரமே கொண்டிருக்கும் ஒருவனைப் பார். எப்பொழுதும் ஆத்திர அவசரம்; பொறுமை அவனிடம் கிடை யாது. ஆனால் கடவுள் பொறுமையுள்ளவர். ஏனெ னில், அவர் நித்தியர். நூறாயிரம் ஆண்டுகள் என நாம் சொல்வது கடவுளுக்கு முன் ஒரு வினாடியே.

கடவுள் நம்மிடம் இத்தனை பொறுமையுடன் நடந்து கொள்வது நம் பெரும் அதிர்ஷ்டமே. மானிட. ராகிய நம்மைப் போல் அவரும் பொறுமையற்றவரா யிருப்பாரானால் இதற்குள் என்ன நடந்திருக்கும் என் பதை யாரும் இலகுவில் யூகித்துக் கொள்ளலாம்.

ஒரு தாய் வருகிறாள். அழுது அழுது கண் கலங்கி சிவந்திருக்கிறது. "சுவாமி, என் மூத்த மகனால் எனக்கு பெரும் தொல்லையாயிருக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லையே. கடந்த பல ஆண்டுகளாக இதே உபத்திரவம் தான். ஓயாத கடனும், கடன் காரரின் உபத்திரவமும் தான். இனி கடன் வாங்க மாட்டேனென்று ஆயிரம் சத்தியம் பண்ணுகிறான். நான் கடன் தொகையைச் செலுத்துகிறேன். அடுத்த வாரத்தில் முன் போல் கடன் வாங்க ஆரம்பிக்கிறான். சுவாமி, இந்த சிலுவையை இனி மேலும் என்னால் தாங்க முடியாது'' என அவள் குருவானவரிடம் சொல்கிறாள்.

அந்தத் தாயிடம் யார் அனுதாபம் கொள்ளா திருக்க முடியும்? அவளது நிலை மிகப்பரிதாபமானது. நம்முடன் வசிப்பவர்களின் எண்ணற்ற குறைகளையும் குற்றங்களையும் பார்த்து பொறுமையாயிருப்பதென் றால் கடினமே. ஆனால், கடவுள் நம்முடன் வெகு பொறுமையுடனும் அதிசயிக்கத்தக்க சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்கிறார் என்பதை இந்த சந்தர்ப்பங்களில் நாம் நினைத்துக் கொள்வோமாக. இப்பொழுது இங்கு இருக்கிறோம். மறு வினாடியே அடுத்த பக்கம் போய் விடுகிறோம். கடிகாரத்தின் நூற்குண்டைப் போல நாம் நிலையற்றிருக்கிறோம். கடவுள் இதையெல்லாம் பொறுமையுடன் சகித்து வருகிறார். ஒரு நாள் நாம் கடவுள் பக்கமாய் நிற்கி றோம். மறுநாள் பாவத்துடன் சேர்ந்து நிற்கிறோம். ஒரு நாள் விசவாசத்துடன் இருக்கிறோம், மறுநாள் விசுவாசத்தைத் தளர விடுகிறோம். ஒரு நாள் மோட் சத்தை நோக்கி பறக்கிறோம்; மறுநாள் இறக்கைகள் கீழே சோர்ந்து விழுந்து விடுகின்றன. ஒரு நாள் கடவுளது உயர்ந்த சிம்மாசனத்தின் முன் நின்று பிரார்த்திக்கிறோம், மறுநாள் நாமே தெரிந்து கொண்ட பாவச் சகதியில் விழுந்து புரளுகிறோம்.

இவ்விதம் விழுந்த பின் துயரப்பட்டு, "இல்லை, இவ்விதம் நெடுநாள் நான் நடக்க முடியாது. நான் எழுந்து என் தகப்பனாரிடம் செல்வேன் என்று சொல்லுகிறோம். இனி நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் தீர்மானித்து திட்டம் வகுக்கிறோம். மறு வாரத்தில் முன் போல் தவறுகிறோம். விழுந்த இடத்திலேயே கிடக்கிறோம். சிலரது வாழ்க்கை என்னும் புத்தகங்களைத் திறந்து பார்த்தால் இவ்வித சம்பவங்களை அடிக்கடி வாசிக்கலாம். உண்மை யாகவே கடவுளது பொறுமையின் விசாலம் நம் அறி வுக்கு எட்டாதது.

நம்மைப் பற்றி நன்கு சிந்தித்துப் பார்ப்போமா னால், கடவுளது பொறுமையின் அதிசயத்துக்குரிய விசாலத்தைப் பற்றி சற்றாவது அறிய வருவோம். அந்தப் பொறுமையை வாழ்த்தி துதிப்போம்.

கடவுளது பொறுமையைப் பார்த்து அநேகர் கோபம் கொள்கின்றனர். கடவுளைத் தூஷித்த அந்தக் கவியை நாம் அந்த இடத்திலேயே சாகடித் திருப்போம். கோவிலுக்குள் நுழைந்து திவ்விய நற் கருணைப் பெட்டியைத் திறந்து, சற்பிரசாத அப்பங்களைக் காலால் மிதித்து அவசங்கைப்படுத்திய துஷ் டர்களை நாம் என்ன செய்திருப்போம்? கூடுமானால் பூமியே பிளக்கச் செய்து அப்படியே அவர்களை உடனே விழுங்கச் செய்திருப்போம்.

ஒரு முறை ஆண்டவராகிய பேசு சமாரியரின் ஒரு ஊரிற் பிரவேசித்தார். அந்த ஊரார் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர்களாகிய யாகப்ப ரும் அருளப்பரும் அதைக்கண்டு, 'ஆண்டவரே, வானத்தினின்று அக்கினி வந்து இவர்களைச் சுட்டெ ரிக்க நாங்கள் சொல்வது உமக்குச் சித்தமா?' என்று கேட்டார்கள். அவர் திரும்பி அவர்களைக் கடிந்து பேசி, 'நீங்கள் என்ன புத்தியுடையவர்களாக இருக்க வேண்டியது என்பதை அறியீர்கள். மனுமகன் ஆத்துமாக்களை சேதப்படுத்துவதற்கல்ல, ஆனால் இரட்சிப்பதற்கு வந்தார்' என்றார்.

கடவுள் ஆத்திரப்படுபவரல்ல, பாவி பாவம் செய்த வினாடியிலேயே அவனைச் சாகடிப்பதில்லை; இது நமது பாக்கியமே. கடவுள் பாவிக்காகவும் பாவி யுடைய உற்றார் உறவினர், சுற்றிலுமுள்ளவர்களுக் காகவும் உடனே தண்டனையை அனுப்பாதிருக்கிறார்.

கடவுள் இவ்வளவு பொறுமையுள்ளவராயிரா விடில் உலகத்துக்கு என்ன நேரிட்டிருக்கும்? வரி பிரிப்பவரான லேவி புனித மத்தேயு என்னும் அப் போஸ்தலராயிருக்க முடியுமா? பாவியான அந்தப் பெண் புனித மதலேன் என அழைக்கப்படமுடியுமா? கடவுளின் சபையை உபாதித்து உபத்திரவப்படுத் தின சவுல், அப்போஸ்தலரான புனித சின்னப்பராகி இருக்கக் கூடுமா? பாவியான அகுஸ்தீன் திருச்சபை யில் ஒரு பெரிய அர்ச்சியசிஷ்டராயிருப்பாரா? மற்ற வர்களைப்பற்றி மாத்திரம் நாம் ஏன் சிந்திக்க வேண் டும்? நம்மைப்பற்றியே பார்ப்போம். கடவுள் நம்மு டன் வெகுபொறுமையுடனிருக்கிறார்; அப்படியிராது. நாம் முதன் முறையாக சாவான பாவம் செய்த உடனே நம்மைத் தண்டித்திருந்தாரானால் நமக்கு என்ன நேரிட்டிருக்கும்? நம் ஆத்துமம் இப்பொழுது எங்கே இருக்கும்?

கடவுள் உடனே ஏன் தண்டிக்கவில்லை? அவர் உடனே தண்டியாது விட்டது பாவிகளுக்காக மட்டு மல்ல; ஆனால் பாவிக்கு வரும் தண்டனை குற்றமற்ற வர்கள் மீதும் விழா தபடி அவர் பொறுமையாய் இருக்கிறார். எந்தப் பாவியும் இவ்வுலகில் தனி மனித னாய் வசிப்பதில்லை. உற்றார் சுற்றத்தார் நண்பர் முத லியோருடன் வசிக்கிறான். நல்லவர்களும் கெட்டவர் களும் அதே வீட்டில் சேர்ந்து வசிக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் தீயோரும் தூயோரும் உண்டு. கெட்ட வர்களை கடவுள் உடனே தண்டிப்பாரானால் நல்லவர் களும் அத்தண்டனையால் பாதிக்கப்படுவர். ஆதலின் அறுவடை காலம் வரை அதாவது தீர்வை நாள் வரை அவர் காத்திருக்கிறார். "அவ்விரண்டையும் அறுப்புக் காலம் வரை விளைய விடுங்கள். அறுப்புக் காலத்திலோ அறுப்புக்காரரை நோக்கி, நீங்கள் முந்தி களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கும்படி கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்'' என்கிறார். (மத் 13/30) கடவுளது பொறுமை எத்தனை பெரிது, அள விட முடியாத அளவு பெரிது!

நமது குறைகளையும், தவறுகளையும் கடவுள் பொறுத்துக்கொண்டிருக்கிறபடியால், நாம் அதிலி ருந்து இரு முக்கியமான படிப்பினைகளை அறியலாம். அந்த இரண்டும் நமக்கு நல்ல எச்சரிப்புகளாக உதவு கின்றன.

முதலாவது, கடவுள் பொறுமையாயிருக்கிறாரா தலின் நாமும் பொறுமையுடனிருக்க வேண்டும். நம் முடனும், நம் அயலாருடனும், வாழ்க்கையுடனும் நாம் பொறுமையாயிருக்கவேண்டும்.

நம்முடன் நாம் பொறுமையாயிருக்க வேண்டும் என்பதைக் கேட்டு நீ ஆச்சரியப்படலாம். சிலர் தங் கள் மீது வெகு ஆத்திரம் கொள்கிறார்கள், பொறுமை யின்றி இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா? நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? நித்திய வாழ்வுக்கு நம்மைத் தயாரித்து கடவுளை அதிகமதிகமாய் நாம் ஒத்திருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த உலகில் நமக்குள்ள அனைத்தையும், வாழ்க்கை யின் சகல சந்தர்ப்பங்களையும், நம்மைச் சுற்றிலுமி ருப்பவை, கலியாணம், பிள்ளைகள், பழக்கமானவர் கள், நம் அலுவல், போராட்டங்கள், தோல்விகள் இவை யாவும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என மதித்து நீடித்த பொறுமையுடன், வாழ்வின் நோக் கத்தைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் நாம் கட வுளை ஒத்திருக்கிறோம். நம்மைக் கீழ்நோக்கி இழுக் கும் பாவ நாட்டங்களுக்கு விரோதமாக போர் தொடுக்கவேண்டும்; கோபத்துடனல்ல, மனக்கசப்பு டனல்ல, நம் உள்ளத்தை உபாதித்துக்கு கொண்டல்ல ஆனால் விடாப் பொறுமையுடன் போராடவேண்டும். நாம் செல்லுமிடமெல்லாம் பாவம் நமக்காகக் காத்தி ருக்கிறதா? பல காரியங்கள் நமக்கு தொந்தரவு கொடுக்கின்றனவா? அவைகளைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். இந்த அலைகள் நம் மன அமைதியைக் குலைக்கமாட்டா. நம்முடன் பொறுமையாயிருப் போம்.

நம் விசுவாசம் பலமுள்ளது. எனினும் திடீரென பலவித பயம் விளைவிக்கும் சந்தேகங்கள் வருகின்றன. யாவராலும் கைவிடப்பட்டதாக உள்ளத்தில் உணர் கிறோம்; பயங்கரத்துக்குரிய அசுத்த உருவங்கள் நம் நினைவின் கண்முன் தோன்றுகின்றன. அவை எங்கி ருந்து வருமோ தெரியாது. நாம் நம்முடன் பொறு மையுள்ளவர்களாயிருப்போமானால், சந்தேகங்களின் மத்தியில் விசுவாசப் பிரமாணத்தை அமைதியாக, நிறுத்தி, பொருள் கண்டுபிடித்து சொல்வோமாக. அசுத்த உருவங்களிலிருந்து நம் நினைவுகளை வேறு ஏதாவது ஒரு பொருளின் பக்கமாய்த் திருப்புவோம். ஆனால் நம் பொறுமையின்றி இருப்போமானால் நடு நடுங்கி பயப்படுகிறோம். நம்மையே கவலையுடன் துன்புறுத்திக்கொள்கிறோம்.

முக்கியமாக, நோய் நேரத்தில் நாம் நம்முடன் பொறுமையாயிருக்க வேண்டும். நோயில் பொறுமை யாயிருக்கச் சொல்வது எளிது, பொறுமையாயிருப் பது கடினம். எனினும் இதை நன்கு அறிந்திருக்க வேண்டும். நோயில் பொறுமை நம்மை விட்டுச் செல்கிறது. பொறுமையின்மை ஒருவரையும் குணப் படுத்தியதில்லை. பொறுமை குணப்படுத்தியிருக்கி றது. பொறுமையானது உள்ளத்தில் அமைதியை யும், நம்பிக்கையையும் விளைவிக்கிறது, இந்த அமை தியும் நம்பிக்கையும் உடலுக்கு சுகத்தைத் தரலாம்.

கடின நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, தக்கவிதமாக திவ்விய நற் கருணை உட்கொண்டு, கடைசி தேவதிரவிய அனு மானங்களைக் குறையறப் பெறுவார்களானால், அவர் களுக்கு ஏற்படும் ஆறுதலும் அமைதியும் ஆச்சரியத் துக்குரியது.

நம் அயலாருடன் நாம் பொறுமையுடனிருக்க வேண்டும். இக்காலத்தில் அநேகர் இதை சரிவர உணர்வதில்லை. 'கோழையே பொறுமையாயிருப் பான் பலவீனர்தான் பொறுமையை கடைப் பிடிப் பார்கள்' என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையல்ல; உண்மை அதற்கு நேர் விரோதமானது. தன் விரோதியுடன் பொறுமையா யிருக்கக் கூடியவன் தன் விரோதியை விட பலவானா கிறான். தன் கணவனது பல குறைகளுடன் பொறு மையாயிருக்கும் மனைவி தன் கணவனை விட பலமுள்ளவள். அவள் ஒரு போதும் முற்றிலும் மகிழ்ச்சி யின் றியிருக்க முடியாது. தன் மகனது மூடத்தனத் தையும் அசட்டுச் செய்கைகளையும் பொறுக்கக் கூடிய தகப்பன் அவனால் வெகு துன்புறமாட்டான். எல்லோருக்கும் இன்று பொறுமை அவசியம். முத லாளிகள் தங்களிடம் வேலை செய்பவர்களுடன் பொறுமையாயிருக்க வேண்டும். ரெயில் வண்டியில் நெருக்கிக் கொண்டு ஏறுகிற பிரயாணிகளிடம் பொறுமை வேண்டும். பட்டாளத்துக்கான வீரர் களைப் பழக்குகிறவர்களிடம் பொறுமை அவசியம். பள்ளிக்கூட ஆசிரியர்கள், தம்பதிகள், சலிப்புற்ற பெற்றோர் முதலிய எல்லோரும் பொறுமையாயிருக்க வேண்டும். “ஆண்டவர் அந்தகாரங்களின் மறை வான காரியங்கள் மேல் ஒளி வீசி இருதயங்களின் எண்ணங்களை வெளியாக்குவார்; அதுவரை நீங்கள் தீர்ப்புச் சொல்லாதீர்கள்.” (1கொரி. 4 | 5),

நம் அயலாருடன் மாத்திரமல்ல, வாழ்க்கையின் நிகழ்ச்சிகளிலும் நாம் பொறுமையாயிருக்க வேண் டும். காலையில் விதைக்கிறவன் அதே நாள் மாலை யில் விளைவு பெற முடியாது. ஒரு மலையில் ஏறுகிற வன் ஒரு நிமிடத்தில் உச்சியிற் சேர்ந்து விடலாம் என நினைக்கக் கூடாது. வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சங்கடங்களில் நம்மிடம் பொறுமை வேண்டும்.

சுற்றுப் பிரயாணம் செய்துவரும் ஒருவன் உயர்ந்த மலை ஒன்றில் ஏறி உச்சியை அடைகிறான். உச்சியிலிருந்து தன்னைச் சுற்றிலும் நோக்குகிறான். கடவுளது சிருஷ்டிப்பின் மகத்துவம் அவனுக்கு அப் பொழுது நன்கு புலப்படுகிறது. அழகிய காட்சிகளைப் பார்த்து அப்படியே பிரமித்து நிற்கிறான். அவன் உள்ளத்தில் இத்தனை மகிழ்ச்சி இதற்கு முன் எப் பொழுதாவது ஏற்பட்டதில்லை. அவன் கண் முன் அப்பொழுது அழகுற காட்சியளிக்கும் காடுகள், சரி வுகள், பள்ளத்தாக்குகள் பாறைகள், ஓடைகள் யாவும் அவன் மலையேறி வந்த சமயத்தில் பெரும் விக்கினங்களாயிருந்தன. வெகு பொறுமையுடன் அவைகளை அவன் கடக்க வேண்டியிருந்தது.

இதேபோல் நாமும் ஒரு நாள் நித்திய மோட்சம் என்னும் மலை உச்சியிலிருந்து நம் இவ்வுலக வாழ்க் கையைப்பற்றி சிந்திப்போம். வாழ்க்கையின் கசப்பு கள், இடையூறு இடைஞ்சல்கள், பிரதிகூலங்கள், கடவுளுக்கு நாம் காண்பித்த பிரமாணிக்கம், பொறுமை, யாவும் ஒன்று சேர்ந்து நித்திய கிரீ டத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்தன என்று அறி வோம்.

கடவுள் பொறுமையுள்ளவர்; ஆனால் எச்சரிக்கை யாய் நடந்துகொள். அவர் பொறுமையுள்ளவர் என்று அவரைப் பழியாதே.

எத்தனையோ பேர் அவரைப் பழிக்கிறார்கள்! மிகக் கொடிய துஷ்டனிடம் கடவுள் காண்பிக்கும் பொறுமையைக் கண்டுபிடிப்பது நமக்குக் கடினமா யிருக்கிறது. அவரது பொறுமையைப் பார்க்கும் நாம் அவரது வல்லமை, நீதி, தூய்மை இவற்றை ஒருவிதத்தில் மறந்து போகிறோம். கடவுளது பொறு மையைப் பழித்து, தொடர்ந்து பாவஞ்செய்யத் தைரி யம் கொள்ளுகிறவனுக்கு ஐயோ கேடு. பயங்கரத் துக்குரிய தண்டனை அவனுக்காகக் காத்திருக்கிறது. வேத புத்தகம் இந்த உண்மையைப்பற்றி தெளிவா கக் கூறுகிறது; “பொறுக்கப்பட்ட பாவத்தைப்பற்றி அச்சமற்றிராதே; பாவத்தின் மேற் பாவம் கட்டிக் கொள்ளாதே. ஆண்டவரது தயாளம் பெரிது, என் எண்ணற்ற பாவங்களின் மேல் இரங்குவார் என்று சொல்லாதே. மனந்திரும்பி ஆண்டவரிடம் சேரத் தாமதியாதே; நாளுக்கு நாள் தாமதம் செய்யாதே ''

(சர்வப். 5)

கடவுளது இரக்கத்தைப் பழிக்கிற பாவி இந்த உலகிலேயே தண்டிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். உண்மையாகவே கடவுள் இரக்கமுள்ளவர், பொறு மையுள்ளவர்; ஆனால் அவர் நீதியுள்ள வரும் கூட என் பதையும் மறந்துபோகக்கூடாது. இந்த உலகிலேயே பாவியின் மேல் கடவுளது நீதியாக்கினை விழுந்ததற்கு வரலாறு சாட்சி கூறுகிறது. “கடவுளது ஆலைகள் மெதுவாக அரைக்கின்றன. ஆனால் தூளாகும்படி அரைக்கின்றன" என்னும் சொற்களை உலக வரலாற் றின் முன்னுரையாகக் கூறலாம்.

ஏரோது என்னும் அரசன் மிகக்கொடியவன். மானிட இரத்தத்தை ஈவு இரக்கமின்றி சிந்தி கணக் கற்ற பேர்களைக் கொன்றவன். மானிட இரத்தத்தில் தான் நடந்து செல்லக்கூடிய அளவு அத்தனை இரத் தப் பழிக்கு ஆளானவன். கடைசியாக அவனுக்கு ஒரு கொடிய நோய் கண்டது. அது எத்துணை பயங் கரமானதென்றால் அதைப் போன்ற வியாதியை உல கம் பார்த்ததில்லை என்கிறார்கள்.

வோல்ட்டேர் கிறிஸ்தவ மதத்தின் மிகக்கொடிய சத்துருக்களில் ஒருவன். தலெம்பேர் என்பவன் அவ னுடைய நண்பன். 1758-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 25-ம் நாளன்று வோல்ட்டேர் தன் நண்பனுக்கு எழு தினான் : "இன்றிலிருந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் கடவுள் நாசமாவார்'' என அதில் எழுதியிருந் தான். சரியாக இருபது ஆண்டுகளுக்குப்பின், அதா வது 1778ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 25ம் நாளன்று வைத்தியர் வோல்ட்டேரை பரிசோதித்துப் பார்த்து விட்டு, அவன் பிழைக்கமாட்டான் என்றார். உடனே கத்தோலிக்க குரு ஒருவரை வரவழைக்கும்படி | வோல்ட்டேர் சொன்னான். ஆனால் கத்தோலிக்க மத விரோதிகளான அவனுடைய சிநேகிதர்கள் முடியா தென மறுத்தார்கள். “பாவசங்கீர்த்தனம் கேட்கக் கூடிய ஒரு குருவானவரைக் கூட்டி வாருங்கள்'' என வோல்ட்டேர் கெஞ்சினான். சிநேகிதர்கள் அசைய வில்லை. இரத்தத்தையே உறையச்செய்யும் ஒரு கூக் குரலிட்டு வோல்ட்டேர் அவலமாய்ச் செத்தான். இருபது ஆண்டுகளுக்குப் பின் “நாசம்'' வந்தது. நாசமாக்கப்பட்டது யார்? நல்ல கடவுளா?

பிரஞ்ச் புரட்சியை முன்னின்று நடத்தியவர்க ளில் ஷோமெத் ஒருவன். ஒரு முறை அவன் தன் சொற்பொழிவின் போது “கடவுளே, நீ இருக்கிறாய் என எண்பித்து இடியை அனுப்பி என்னைச் சாகடி'' என்றான். இடி விழவில்லை. ஆனால் சில நாட்களுக் குப் பிறகு கொலையாளியின் வாளினால் வெட்டப் பட்டு அவனது சிரசு கீழே விழுந்தது.

கடவுளது திருச்சபையை நசுக்கும்படி பல ஆண் டுகளாக முயன்றவன் நெப்போலியன். கடைசியாக செயின்ட் ஹெலேனா என்ற தீவில் அவனே நசுக்கப் பட்டான்.

"பழமையான கடவுள் செத்துப்போனான். நாம் அவனைக் கொன்று போட்டோம்' எனக் கூறியவன் நியெடஷ். பைத்தியம் பிடித்து அவன் செத்தான்.

கடவுள் உண்மையாகவே பொறுமையுள்ளவர். ஆனால் அவர் நீதியுள்ளவரும் கூட. கடைசியில் ஒவ் வொருவருக்கும் நீதியின்படி உரியதை வழங்குகிறார். கடவுள் பொறுமையுள்ளவர். ஏனெனில் அக்கிரமி யுடைய மரணத்தை அவர் தேடுகிறதில்லை. அவன் தன் துர்வழியை விட்டு திரும்பி பிழைக்கவேண்டும் என விரும்புகிறார். (எசெக். 33. 11.) கடவுள் பொறு மையுள்ளவர்; அவர் பொறுமையுள்ளவராயிராவிட் டால் நமக்கு இதற்குள் என்ன நேர்ந்திருக்கும்? ஒவ் வொருவனுக்கும் உரியதை எப்படியாவது ஒரு நாள் அவர் கொடுத்து விடுகிறார். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய சம்பளத்தை கடவுள் கொடுப்பதில்லை. ஆனால் கணக்கு எழுதி வைத்திருக்கிறார். ஒரு நாள் வரும், அன்று ஒவ்வொருவனுக்கும் உரிய சம்பளத் தைக் கொடுப்பார்.

பாவியை கடவுள் தண்டிப்பார் என நாம் எதிர்ப் பார்க்கையில் கடவுள் ஏன் பேசாமல் இருக்கிறார்? மனிதன் வசம் இருப்பது சொற்பக் காலம். ஆதலின் ஆத்திரப்படுகிறான். கடவுளோ, அவர் நித்தியர் இரக்கமுள்ளவர், அக்கிரமி மனந்திரும்ப நேரம் கொடுக்கிறார். குற்றவாளிகளுடன் குற்றமற்றவர் களும் தண்டிக்கப்பட அவர் விரும்புவதில்லை; மானி டனுக்கு அவர் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவனை வற்புறுத்த அவர் விரும்பவில்லை.

அந்தக் கேள்விக்கு இவை ஒரு பதில் தருகின் றன. முழுப்பதில் கொடுப்பதில்லை. கடவுளது பொறுமையைப் பற்றிய அனைத்தையும் நாம் கண்டு பிடிப்பதில்லை. கடவுளே வாய் திறந்து பேசும் நாள் வரும். அன்று நாம் எல்லாவற்றையும் கண்டுணர் வோம். கடைசி வார்த்தை அவருடையதே. அது எப்பொழுது வரும்? நாம் இறந்ததும் அவருக்கு முன் நிற்போம். அப்பொழுது அவர் பேச ஆரம்பிப்பார். அப்பொழுது அவர் பொறுமையின் தேவனல்ல. நீதியின் கடவுள் பேசத் தொடங்குவார். “உன் வாழ்க்கையின் பயனை நீ இப்பொழுது அறிவாய்'' என அவர் கூறுவார்.

ஆத்திரப்படுவோரே, பொறுத்திருங்கள், சற்று பொறுத்திருங்கள். கடைசி வார்த்தை எப்பொழுதும் கடவுளுடையதே. நோவே அந்தப் பேழையைக் கட்டி முடிக்க பல ஆண்டுகள் பிடித்தன. அந்தக் கால மெல்லாம் மக்கள் மனந்திரும்ப வேண்டுமென அவர் பிரசங்கித்தார். தேசம் பாழாக்கப்படுமென்று, அது பாழாவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே ஜெரேமி யாஸ் அறிவித்தார். கனி கொடாத ஒரு அத்திமரத் தின் சொந்தக்காரன் அதை வெட்டுவதற்கு முன் பல ஆண்டுகளாக அது கனி கொடுக்கும், கனி கொடுக்கும் என காத்திருந்ததாக ஆண்டவர் ஒரு உவமையிற் சொல்கிறார். ஆதலின் கடவுள் சம்பளம் கொடுக்கிற நாள் வரும் போது, கடைசி முறையாக அவர் பேசும் போது, தன்னைப் பற்றிய கடவுளது தீர்ப்பு அநீதி யானது என எவனாவது சொல்ல மாட்டான்.

கடவுளின் பொறுமையைப் பழித்து, கடைசி நேரத்தில் அவரிடம் திரும்பிப் போய்க் கொள்ளலாம் என்று சொல்லி தங்கள் மனந்திரும்புதலை ஒத்தி வைப்பவர்கள் அறிவற்றவர்களே. “கடவுள் என்னை எப்படியாவது மன்னிப்பார்; அது அவரது வேலை" என ஜெர்மானிய கவியான ஹேய்ன் என்பவன் கேலி யாகக் கூறினான். மக்கள் இவ்வித தேவ தூஷணம் சொல்லத் துணிவதில்லை. ஆனால் அவ்விதம் சொல் வதற்கொப்ப வாழ்கிறார்கள். கடவுள் பொறுமையுட னிருப்பதால் அவரது அவரது பொறுமையைப் பழிக்கிறார்கள். திடீரென சாவு வருகிறது; சகலரை யும் நடுத்தீர்க்கும் அவர் கையில், அவர்கள் பாவம் நிறைந்த ஆத்துமத்துடன் அகப்படுகின்றனர்.

ஆம், கடவுள் பொறுமையுள்ளவர்; ஆனால் அவர் பொறுமையைப் பழிப்பவர்களின் முடிவு பயங்கர மாயிருக்கும். அவரது பொறுமையைப் பழிப்பவர் கள் யார்? தங்கள் தவறான வாழ்க்கைக்கு மரண நேரத்தில் பரிகாரம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறவர்களே இவ்விதம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு முடிவு திடீரென வராது என்று யார் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்? பாவ வாழ்க்கைக்குப் பரிகாரம் செய்ய நேரம் கிடைக்கும் என்றும், யாரா வது அவர்களுக்காக ஒரு குருவானவரைக் கூட்டி வருவாரென்றும் திண்ணமாய் உறுதி கூறக் கூடிய வன் யார்? அவர்களது துயரம் உண்மையானதா யிருக்குமா?

நான் வாலிபன்; பிரியம் போல் நடக்கிறேன் நான் எண்பது வயதுக் கிழவனாகும் போது பக்தி மானாய் நடக்கத் தொடங்குவேன். முக்கியமாய் வேண்டியது என்ன? சாகிறதற்கு முன் எவ்வளவு பாவாக்கிரமியாயிருந்த போதிலும், சாகுமுன் மனஸ் தாபப்பட்டால் அவன் இரட்சிக்கப்படுவான் என திருச்சபை போதிக்கிறது.

திருச்சபை இவ்விதம் சொல்கிறது என்கிறார் களே, இது உண்மைதானா? ஆம், திருச்சபை இவ் விதம் கற்பிக்கிறது. கடவுள் மிகு இரக்கமுள்ளவர், அதிசயத்துக்குரிய இரக்கமுள்ளவர், மனஸ்தாப இருதயத்துடன் ஒருவன் கடைசி நேரத்தில் முதலாய் அவரிடம் திரும்புவானானால், சிலுவையில் தொங்கிய இரட்சகரிடம் தன் தீய வாழ்க்கையின் இறுதியில் திரும்பிய நல்ல கள்ளனை கிறிஸ்துநாதர் மன்னித்தது போல, கடவுள் அவனை மன்னிப்பார் என திருச்சபை போதிக்கிறது.

ஆம், நம் நல்ல கடவுள் மிகு இரக்கமுள்ளவர். ஆனால் இதைத் குறித்து, பயமின்றி பாவம் செய்து கொண்டு போகிறவர்கள் அறிவற்றவர்கள். நம் வாழ்க்கை எவ்வளவு பாவமானதாயிருந்தபோதிலும், கடைசி நேரத்தில் நாம் மனந்திரும்பக்கூடுமானால் நாம் இரட்சிக்கப்படுவது நிச்சயம். நாம் மனந்திரும்பு வோமா என்பது தான் கேள்வி. முழு அறிவுடன் பாவ வாழ்க்கை நடத்தி வருகிறவன் கடைசி நேரத் தில் மனந் திரும்புவான் என்பது சந்தேகம்.

"என் வாழ்நாளெல்லாம் நான் நேர்மையுடனும் நல்லவனாகவும் நடந்து வருகிறேன். கடைசி நேரத் தில் தற்செயலாக ஒரு சாவான பாவம் செய்து விடுகி றேன்; நரகத்துக்கு தீர்ப்பிடப்படுகிறேன். இது நியாயமா?" என என்னிடம் கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் இதுவே.

“உன் வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு நீ ஒரு மாணிக்கமாயிருந்தால் கடைசிநேரத்தில், நீ ஒரு சாவான பாவம் செய்து நரகத்துக்குக் தீர்ப்பிடப் படுவாய் என்பது முடியாத காரியம்.''

மனஸ்தாப இருதயத்துடன் கடைசி நேரத்தில் கடவுளிடம் திரும்பும் பாவியை நல்ல கடவுள் மன் னிக்கிறார் என்பது உண்மைபே. ஆனால் தன் வாழ் நாளெல்லாம் பாவத்துக்கு மேல் பாவம் செய்து, உணவைப்போல் பாவத்தை உட்கொண்டு, பாவச் சகதியில் முழு அறிவுடன் புரண்டு வருகிறவன், இப் பேர்க்கொத்த பாவி, கடைசி நேரத்தில், சாவின் கொடிய வேதனைகளின் போது, தன் உள்ளத்தில் பாவத்துக்காக உண்மையான மனஸ்தாபம் கொள் வது வெகு அபூர்வம்.

நான் குருப்பட்டம் பெற்று பல ஆண்டுகளாகின் றன. உலக யுத்தத்தில் பல முன்னணிகளில் நின் றிருக்கிறேன். சாகுந் தறுவாயிலிருந்த நூற்றுக்கணக் கான வீரரண்டை நின்றிருக்கிறேன். கடைசி நேரத் தில் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பிக் கொள்ளலாம் என்று சொல்லி காலத்தைக் கடத்தியவர்களின் முடிவை நான் நினைத்துப்பார்க்கையில், என் உள்ளத் தில் தாங்கொணாத் துயரம் உண்டாகிறது.

நம் மனந்திரும்புதலுக்காக நேசத்துடன் காத் திருக்கும் கடவுளது பொறுமையை நாம் பழியாதிருப் போமானால் நாம் பாக்கியவான்கள். "நீ அவரது தயாளம், பொறுமை, நீண்ட சகிப்பு முதலியவற்றின் ஏராளமான தாட்சணியத்தைப் புறக்கணித்து வரு கின்றாயோ? சர்வேசுரனின் தயவு உன்னை பச்சாத் தாபத்துக்கு இழுப்பதை நீ அறியாதிருக்கின் றனையோ? இதோ உன் இருதயத்தின் கடுமையாலும் உன் மூர்க்கத்தனத்தினாலும், சர்வேசுரனுடைய நீதி யுள்ள கோபாக்கிரகத்துக்கும் நடுத்தீர்ப்புப் பிரகடத்திற்குமுரிய நாளுக்காக நீ அவருடைய கோபத்தை நிரம்பச் சேகரஞ் செய்கின்றனை'' என்னும் புனித சின்னப்பரது சொற்களை நாம் மறந்து போகலாகாது (உரோ . 2 / 45.) கடவுளது பொறுமையையும் அதன் முடிவையும் பற்றி இரட்சகர் ஒருமுறை வெகு தெளிவான ஒரு உவமை சொல்லியிருக்கிறார்; ஒருவன் தன் திராட் சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டு வைத் திருந்தான். அதில் அவன் கனியைத் தேடி வந்தும், அகப்படவில்லை. ஆகையால் அவன் தோட்டக்காரனை நோக்கி 'இதோ, மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் நான் கனிகளைத் தேடிவருகிறேன். ஒன்றுங் காணவில்லை. ஆகையால் இதை வெட்டிப்போடு, ஏன் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?'' என்றான். 'ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும், அதற்குள்ளாக நான் இதைச் சுற்றிலும் வெட்டி எருப்போடுகிறேன். கனி கொடுத்தால் சரி; கொடா விட்டால் இதை வெட்டிப்போடலாம்' என தோட் டக்காரன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

தோட்டத்தின் சொந்தக்காரன் அந்த அத்தி மரம் கனி கொடுக்கும் என மூன்று ஆண்டு வீணாகக் காத்திருந்தபின், இன்னும் ஓர் ஆண்டு அது நிறகும் படி விட்டு விடுகிறான். நாம் கனிகொடுப்போமென்று நம் கடவுள் பத்து இருபது முப்பது ஆண்டுகளாக பொறுமையுடன் காத்திருக்கிறார்; ஆனால் இன்னும் ஓர் ஆண்டு அவர் பொறுமையுடனிருப்பார் என்று ஒருவராலும் உறுதியாய்ச் சொல்லமுடியாது; இன்று அவரது பொறுமை நீடிக்கிறது; நம் கடந்த காலம் எப்பேர்ப்பட்டதாயிருந்தபோதிலும் இப்பொழுதா வது மனஸ்தாபப்பட்டு திரும்பலாம். எல்லாம் முடித்து பிந்திப்போய்விட்டது என்று சொல்ல முடி யாது. இவ்வுலக வாழ்வில் 'இப்பொழுது பயனில்லை, பிந்திப்போய்விட்டது' என நாம் அநேக சமயங்களில் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் இரக்கம் நிறை கடவுள், சிலுவையில் அறையப்பட்ட பாவியின் மனஸ் தாபக் குரலுக்குச் செவிசாய்த்து அவனை ஏற்றுக் கொண்டார். ஆதலின் நீயும் மனந்திரும்பினால் அவர் உன்னை ஏற்று நித்திய வாழ்வுக்கு இட்டுச் செல்வார்.

நல்ல கள்ளனது மனஸ்தாபம் நமக்கு ஒரு பெரும் ஆறு தல்; ஆனால் அதை நினைத்து நாம் பாவத்தைத் தொடர்ந்து செய்யத் துணியக் கூடாது. ஒருவரும் அவநம்பிக்கைப் படாதபடி வேத புத்தகமானது கடைசி நேரத்தில் மனந்திரும்பிய ஒரு பாவியைப் பற்றி சொல்கிறது; ஆனால் நாம் மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்ளாதபடி ஒரே ஒரு பாவியைப் பற்றி மாத்திரமே அது சொல்கிறது. நித்திய வாழ்வு பெறு வது பற்றி கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ள லாம் என்று சொல்கிறவன் பெரும் பைத்தியக்காரன், ஒவ்வொரு நாளையும் வாழ்வின் கடைசி நாளாக மதித்து ஒழுகுகிறவன் பெரிய புத்திசாலி.

நல்ல மரணம் என்னும் வரம் கிடைக்கும்படி ஒவ்வொரு நாளும் கடவுளைப் பிரார்த்திப்பது நல்ல கிறிஸ்தவ வழக்கம். சாவான பாவத்துடன் நாம் சாகவிடாதபடி இரக்கமுள்ள கடவுளைப் பார்த்து நாம் ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்போமாக. கடைசி நேரத்தில், நாம் மரணப் படுக்கையில் இருக் கையில் நல்ல கடவுள் ஒரு பட்சமுள்ள குருவானவரை அனுப்புவாராக. கிறிஸ்துநாதருடைய நேச இருத யத்தை அவர் தம்முடன் கொண்டு வந்து, கிறிஸ்து நாதருடைய திருச் சரீரத்தை நம் நாக்கில் வைத்து, நீர் நிறைந்த நம் கண்களை பாடுபட்ட சுரூபத்தின் பக்கமாய், சிலுவையில் தொங்கும் யேசுவின் பக்க மாய், கடைசி முறையாக நாம் உயர்த்தும்படி செய் வாராக.

“நேச ஆண்டவரே, நித்திய ஞானமாகிய நீர், இவ்வுலகில் நான் செய்ய வேண்டியது என்ன என்று அறிவித்ததை நான் செய்ய முயன்று வந்திருக்கிறேன். இதோ நான் நம்பிக்கையுடன் உமது திருச்சமூகத் துக்கு வருகிறேன், என்னை ஏற்றுக் கொள்வீராக'' என நான் சிலுவையில் உம்மைப் பார்த்துச் சொல் லும் வரம் தாரும் - ஆமென்.