6 ஜூன் 1944.
“ஆண்டவர் தம் சமாதானத்தை உனக்குக் கொண்டு தர வருவார்” என்று உன்னிடம் நான் வாக்களித்தேன். கர்த்தர் பிறந்த நாளில் நீ அனுபவித்த சமாதானம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ என் திருக்குழந்தையுடன் என்னைக் கண்டாயே! அது உன்னுடைய சமாதான காலம். இப்போது உன் வேதனையின் நேரம். ஆனால் இப்பொழுது உனக்குப் புரிகிறது, வேதனையின் வழியாகவே நாம் சமாதானத்தை அடைகிறோம்; நமக்கும் நம் அயலாருக்கும் எல்லா வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்கிறோம். சேசு - மனிதன் தம்முடைய மிகப் பெரும் பாடுகளாகிய துன்பங்களுக்குப் பிறகு சேசு - கடவுள் ஆனார். அவர் மீண்டும் சமாதானம் ஆனார். தாம் வந்த மோட்சத்திலுள்ள சமாதானம். எங்கிருந்து தமது சமாதானத்தை, உலகத்தில் தம்மை நேசிப்பவர்கள் மீது பொழிகிறாரோ, அங்குள்ள சமாதானம். ஆனால் உலகத்தின் சமாதானமாயிருக்கிற அவருக்கு, தமது பாடுகளின் வேளையில் அந்த சமாதானம் எடுபட்டுப் போயிற்று. அது அவரிடம் இருந்திருக்குமானால் அவர் வேதனைப்பட்டிருக்க மாட்டார். அவரோ கடைசி வரையிலும், மிகக் குரூரமான முறையில் வேதனைப்பட வேண்டியிருந்தது.
மேரி, என்னுடைய தெய்வீகமான தாய்மையைக் கொண்டு நான் ஸ்திரீயை மீட்டேன். ஆனால் அது ஸ்திரீயின் இரட்சிப்பின் தொடக்கமே ஆகும். என் கன்னிமை வார்த்தைப்பாட்டிற்கு ஏற்ப நான் மனித விவாகத்தை மறுத்ததில் எல்லா இச்சையான திருப்திகளையும் நான் ஒதுக்கித் தள்ளினேன். அவ்விதமாய் சர்வேசுரனிடமிருந்து வரப்பிரசாதத்திற்குப் பாத்திரமானேன்.
ஆயினும் அது இன்னும் போதுமானதாயிருக்கவில்லை. ஏனென்றால் ஏவாளின் பாவம் நான்கு கிளைகளுள்ள மரமாயிருந்தது: ஆங்காரம், பேராசை, போசனப்பிரியம், இச்சை. அந்த மரத்தின் வேர்கள் துளிர்க்காமலிருப்பதற்கு அந்த நான்குமே வெட்டப்பட வேண்டியிருந்தன.
என்னையே ஆழ்ந்த விதமாக நான் தாழ்த்தியதால் ஆங்காரத்தை வென்றேன்:
எல்லார் முன்பாகவும் என்னைக் கீழாக்கினேன். கடவுளுக்கு முன்பாக நான் கொண்டிருந்த தாழ்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. அந்தத் தாழ்ச்சியை எல்லா சிருஷ்டிகளும் உந்நதரின் முன்பாகக் கொண்டிருப்பது அவருக்கு உரியதாகும். அவருடைய தேவ வார்த்தையானவரே அதைக் கொண்டிருந்தார். ஒரு ஸ்திரீயாகிய நான் அதைக் கொண்டிருப்பது அவசியமாயிருந்தது. ஆனால் நான் என்னை எவ்வகையிலும் தற்காத்துக் கொள்ளாமல் மனிதர்களிடமிருந்து அனுபவிக்க வேண்டியிருந்த தாழ்மையை நீ எப்பொழுதாவது எண்ணியதுண்டா?
நீதிமானாகிய சூசையப்பர் முதலாய் என்னைத் தன் உள்ளத்தில் குற்றஞ்சாட்டினார். நீதிமான்களல்லாத மற்றவர்கள் என் நிலைமையைப் பற்றி இளப்பமாய்ப் பேசும் குற்றத்தைச் செய்தார்கள். அவர்களுடைய வார்த்தையின் ஓசை என்னுடைய மனிதத்தன்மைக்கு எதிராக கசந்த அலையாக வந்து மோதியது. சேசுவுடையவும் மனுக்குலத்தினுடையவும் தாயாக நான் என் வாழ்வில் படவேண்டியிருந்த அளவில்லா தாழ்மைகளின் தொடக்கமாகவே அது இருந்தது.
வறுமையால் நேரிட்ட சிறுமைகள், அகதியாயிருந்ததின் சிறுமைகள், சேசு இளைஞராயிருந்தபோது அவர் மட்டில் நான் நடந்து கொண்ட முறை பற்றி என்னை ஒரு கோழைப் பெண்ணாகத் தீர்மானித்து உண்மையைக் கண்டுபிடிக்காமல் என்னைக் குற்றஞ் சாட்டிய உறவினர்கள் நண்பர்களால் நேரிட்ட குறைச்சல்கள், அவருடைய மூன்று வருட பகிரங்க வாழ்வில் எனக்கு ஏற்பட்ட தாழ்மைகள், கல்வாரியின் வேளையில் ஏற்பட்ட குரூரமான தாழ்வுகள், என் குமாரன் இறந்தபோது அவருக்கு ஒரு நிலம் வாங்க முடியாததாலும், அவருடைய அடக்கத்திற்கு வாசனைத் திரவியங்கள் வாங்க முடியாததாலும் எனக்கு ஏற்பட்ட தாழ்மைகள்.
என் குமாரனை காலம் வருமுன்பே நான் தியாகம் செய்ததால் ஆதிப்பெற்றோரின் பேராசையை வென்றேன்:
எந்த ஒரு தாயும் வலுவந்தப்படுத்தினால் அல்லாது தன் பிள்ளையை விட்டு விடமாட்டாள். தன் மகனை தாய்நாட்டிற்காகவோ அல்லது அவனுடைய மனைவிக்காகவோ, ஏன், கடவுளுக்காகக் கூட தியாகம் செய்யும்படி கேட்டால், ஒரு தாயின் உள்ளம் அந்தப் பிரிவுக்கு எதிராகப் போராடவே செய்யும். அது இயற்கை. ஒரு குமாரன் நம் உதரத்திற்குள்ளே வளருகிறான். அவனுடன் தாய்மாரைப் பிணைக்கிற பிணைப்பு, ஒருபோதும் முற்றிலுமாக வெட்டப்பட முடியாது. தொப்புள் கொடி வெட்டப்பட்டாலும், வெட்டப்படாத ஒரு நரம்பு எப்போதும் இருக்கவே செய்யும். அது தாயின் இருதயத்திலிருந்து புறப்பட்டு மகனின் இருதயத்துடன் ஒட்ட வைக்கப்படுகிறது. அது சதை நரம்பைவிட அதிக உயிரான, உணர்ச்சியுள்ள ஓர் ஆத்மீக நரம்பு. தேவ சிநேகத்தினாலோ, ஒரு சிருஷ்டியாலோ அல்லது தாய்நாட்டுப் பற்றினாலோ அம்மகன் தன்னிடமிருந்து எடுக்கப்படும்போது, அந்நரம்பு மிகவும் அதிகமான கூர்மையுள்ள வேதனையோடு இழுக்கப்படுவதை தாய் உணருகிறாள். மரணம் வந்து அம்மகனை அவளிடமிருந்து பிரிக்குமானால் அந்த நரம்பு தாயின் இருதயத்தைக் கிழித்து தானும் அறுபடுகிறது.
நானோ, என் குமாரன் எனக்குக் கொடுக்கப்பட்ட அந்த நேரத்திலிருந்தே அவரை நான் விட்டுக் கொடுத்தேன். அவரை நான் கடவுளுக்குக் கொடுத்தேன். அவரை நான் உங்களுக்குக் கொடுத்தேன். கடவுளுடைய கனியை ஏவாள் திருடியதற்குப் பரிகாரமாக என் உதரத்தின் கனியை நானே எனக்கு இழக்கச் செய்தேன்.
நான் எதை அறிய வேண்டுமென்று ஆண்டவர் விரும்பினாரோ அதை மட்டும் அறிய நான் சம்மதித்ததினால், அறிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தையும், அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையையும் நான் தோற்கடித்தேன்: எப்படியெனில் எனக்குச் சொல்லப்பட்டதை விட கூடுதலாக அறிந்து கொள்ள நான் முயலவில்லை. அவரிடம் கேட்கவுமில்லை, கேள்வி எழுப்பாமல் நான் விசுவசித்தேன். உடன் ஒட்டிய சொந்த அனுபவித்தலின் மகிழ்ச்சியையும் நான் வென்றேன். ஏனென்றால் எந்த புலன் மகிழ்ச்சியையும் நான் எனக்கு மறுத்தேன். சாத்தானையும் சாத்தானின் கருவியாகிய மாமிசத்தையும் என் குதிங்காலுக்கடியில் மிதித்து, மோட்சத்தை நோக்கிச் செல்வதில் அவற்றை ஒரு ஏறுபடியாக ஆக்கிக் கொண்டேன். மோட்சம்! அதுவே என் நோக்கம். சர்வேசுரன் இருந்த இடம். என் ஒரே பசி அதுதான். அது உண்டிப் பிரியமல்ல. தம்மை நாம் விரும்பித் தேட வேண்டும் என்று விரும்புகிற சர்வேசுரனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தேவை அது.
இச்சையை நான் தோற்கடித்தேன்: பேராசை ஆகும் அளவிற்கு வளர்க்கப்படுகிற உண்டிப் பிரியமே இச்சை. ஏனென்றால், கட்டுப்படுத்தப்படாத எந்த தீமையும் அதை விட பெரிய தீமைக்கு இட்டுச் செல்கிறது. ஏற்கெனவே தவறானதாக இருந்த ஏவாளின் உண்டிப்பிரியமே அவளை இச்சைக்கு இழுத்துச் சென்றது. தானே தன் சுகத்தை அனுபவிப்பது அவளுக்குப் போதுமாயில்லை. அவள் தன் குற்றத்தை ஒரு நுண்ணிய உச்ச அளவிற்குக் கொண்டு செல்ல விரும்பினாள். அவ்வாறு அவள் இச்சைக்கு அறிமுகமானாள். அப்படியே தன் துணைவனுக்கும் இச்சையின் எஜமானி ஆனாள். நான் இதை மாற்றியமைத்தேன். கீழிறங்குவதை விட்டு எப்பொழுதும் மேலெழுந்து சென்றேன். மற்றவர்கள் கீழிறங்கக் காரணமாயிராமல் அவர்களை எப்பொழுதும் மோட்சத்தை நோக்கிக் கவர்ந்திழுத்தேன். நேர்மையுள்ளவரான என் துணைவரை ஒரு சம்மனசாக்கினேன்.
இப்பொழுது கடவுளையும் அவருடன் அவருடைய அளவற்ற திரவியத்தையும் நான் கொண்டிருந்ததால், அதைத் துறந்துவிட துரிதப்பட்டேன்: “இதோ நான்! உம்முடைய சித்தம் அவருக்காகவும் அவராலும் நடைபெறக்கடவது” என்று சொன்னேன். தன் சரீரத்தை மட்டுமல்ல, தன் பாசங்களையும் தன் நினைவுகளையும் ஒறுக்கிறவன் கற்புடையவனாயிருக்கிறான். தன் மாமிசத்திலும், இருதயத்திலும், மனதிலும் கற்பிழந்து போன ஒருத்தியை ரத்துச் செய்வதற்காக நான் கற்புள்ள ஒருத்தியாக இருக்க வேண்டியிருந்தது. என் குமாரன் மோட்சத்தில் கடவுளுக்கு மட்டும் சொந்தமாயிருந்ததுபோல் பூமியில் எனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த போதிலும், “அவர் என்னுடையவர். அவர் எனக்கு வேண்டும்” என்று சொல்லிக் கூட நான் என் கட்டுப்பாட்டை ஒருபோதும் இழக்கவில்லை.
இவையெல்லாம் கூட ஏவாளால் இழக்கப்பட்ட சமாதானத்தை பெண்ணினம் மீண்டும் பெறுவதற்குப் போதுமாயில்லை. அதை நான் சிலுவையினடியில் உங்களுக்குப் பெற்றுத் தந்தேன்: நீ பிறக்கக் கண்ட அவரை அங்கே நான் மரிக்கக் கண்ட சமயத்தில்; அங்கே மரிக்கும் என் குமாரனுடைய கூக்குரலால் என் குடல்களெல்லாம் கிழித்தெறியப்படுவதை நான் உணர்ந்தபோது, என் பெண்ணியல்பெல்லாம் அற்றுப் போயிற்று. அப்போது நான் மாம்சமாயில்லை, சம்மனசாக இருந்தேன். பரிசுத்த ஆவியின் கன்னி மணவாளியாகிய மரியா அந்நேரம் மரணமடைந்தாள். வரப்பிரசாதத்தின் மாதா உயிருடன் இருந்தாள். தன் வாதனைகளினால் தான் உற்பத்தி செய்த வரப்பிரசாதங்களை உங்களுக்கு அளித்தாள். பெண்ணாயிருந்தவள், கர்த்தர் பிறந்த இரவில் மீண்டும் மனுஷியாக என்னால் அர்ச்சிக்கப்பட்டாள். மோட்சத்தின் சிருஷ்டியாகும் சாதனத்தை சிலுவையினடியில் பெற்றுக் கொண்டாள்.
எல்லா திருப்திகளையும், பரிசுத்தமான திருப்திகளையும் முதலாய் ஏற்றுக் கொள்ளாதிருந்து, இவைகளை உங்களுக்கு நான் ஈட்டிக் கொடுத்தேன். நீங்கள் ஏவாளால் பெண்ணாக்கப் பட்டிருந்தீர்கள். விலங்குகளின் பெண் இனங்களுக்கு மேலாக நீங்கள் இல்லை. அப்படிப்பட்ட உங்களை, கடவுளின் அர்ச்சிஷ்டவர்களாக நான் மாற்றினேன் - உங்கள் விருப்பமே அதற்குத் தேவையாக உள்ளது. உங்களுக்காக நான் மேலேறிச் சென்றேன். சூசையப்பருக்கு நான் செய்தது போலவே உங்களையும் மேலே உயர்த்தினேன். கல்வாரியின் பாறைதான் என் ஒலிவ மலையாயிருந்தது. அங்கிருந்தே நான், மீண்டும் அர்ச்சிக்கப்பட்ட ஸ்திரீயின் ஆத்துமத்தை என்னுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்துடன் மோட்சத்திற்குக் கொண்டு செல்வதற்காக மேலே தாவினேன். ஏனென்றால், என் சரீரம் வார்த்தையானவரைத் தாங்கியிருந்து, என்னிடத்தில் ஏவாளின் சிறு அடையாளம் முதலாய் இல்லாமல் அழித்திருந்தது. நான்கு விஷக் கிளைகளையுடைய மரத்தின் கடைசி வேரையும் அது அழித்துவிட்டது. ஆசாபாசத்தில் ஊன்றியிருந்த அந்த வேர் மனுக்குலத்தை இழுத்து வீழ்த்தி விட்டிருந்தது. அது உங்கள் குடல்களை கடித்துக் கொண்டேயிருக்கும் - கால முடிவு வரையிலும், கடைசி ஸ்திரீ இருக்கும் வரையிலும். நான் இப்பொழுது பிரகாசிக்கிற அன்பின் கதிரிலிருந்து உங்களை அழைக்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒளடதத்தை உங்களுக்குக் காண்பிக்கிறேன் - அதுவே என் ஆண்டவரின் வரப்பிரசாதமும் என் குமாரனின் இரத்தமுமாம்.
மேரி, என் குரலே, சேசுவின் இந்த வைகறை ஒளியில் உன் ஆன்மாவை இளைப்பாறச் செய். அதிலே உனக்கு நீக்கப்படாத சிலுவையறைதல்களுக்கு பலம் தேடிக் கொள். ஏனென்றால் நீ இங்கு வர நாங்கள் ஆசிக்கிறோம். இங்கு வேதனையின் வழியாகவே யாரும் வரமுடியும். ஒருவன் எவ்வளவிற்கு உயரமாக வருவானோ, அவ்வளவிற்கு அவன் உலகிற்கு வரப்பிரசாதம் பெறும்படியாக வேதனைப்பட்டிருப்பான்.
சமாதானமாய்ப் போ. நான் உன்னுடன் இருக்கிறேன்.