இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சபையின் செழிப்பான வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி எதிர்க்கப்பட வேண்டிய தீமைகள்!

நான் அந்தப் பிரபலமான மனிதருடன் இப்போது தனியாக இருந்தேன். “வாரும்” என்றார் அவர் துரிதமாக: “வாரும்; அனைத் திலும் அதிக முக்கியமான காரியத்தை நான் இன்னும் உமக்குக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து நீர் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தொலைவில் அந்த வண்டியை உம்மால் காண முடிகிறதா?”

“ஆம், காண்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.

“அது என்னவென்று உமக்குத் தெரியுமா?” என்று அவர் கேட்டார்.

“மன்னியும், அது என்னால் நன்றாகப் பார்க்க முடிய வில்லை .”

“அதை நன்றாகப் பார்க்க நீர் விரும்பினால், இன்னும் அருகில் செல்லும். அந்த அறிவிப்புப் பலகையை நீர் காண்கிறீரா? அருகில் சென்று அதை நுணுக்கமாக அவதானியும். அதன்மீது அதன் மரபுச்சின்னம் முத்திரையாகப் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, நீர் அதை அறிந்து கொள்ள முடியும்.”

நான் இன்னும் அருகில் சென்று பார்த்தபோது, அந்த அறிவிப்புப் பலகையில் நான்கு பெரிய ஆணிகளின் சித்திரத்தை மட்டுமே என்னால் காண முடிந்தது. நான் என் வழிகாட்டியிடம் திரும்பி, “நீர் இதை எனக்கு விளக்கிச் சொல்லாவிட்டால், என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது” என்றேன். இதைக் கேட்டதும், அவர் பதிலுக்கு:

“அந்த நான்கு ஆணிகளையும் நீர் பார்க்கவில்லையா? அவற்றைக் கூர்ந்து பாரும். அவைதான் நம் திவ்விய இரட்சகரைத் துளைத்தவையும், கொடூரமாக வாதித்தவையுமான நான்கு ஆணிகள் ஆகும்.”

“அதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று நான் ஆவலோடு கேட்டேன். அதன்பேரில் அவர் தொடர்ந்து இப்படிச் கூறினார்:

"துறவற சபைகளை வாதிக்கும் நான்கு ஆணிகள் அவைதான். இந்த நான்கு ஆணிகளையும் தவிர்த்து விடுவதில் நீர் வெற்றி பெறுவீர் என்றால், அதாவது உம் சபை அவற்றால் வாதிக்கப்படாமல் இருக்குமானால், அவற்றைக் கவனமாக விலக்குவது எப்படியென்று உமக்குத் தெரியும் என்றால், அப்போது எல்லாம் நன்றாக நடக்கும், நீர்பாதுகாப்பாயிருப்பீர் என்பதில் உறுதியாயிரும்.”

“ஆனால் இன்னும் நான் முன்பு போலவே மூடனாகத்தான் இருக்கிறேன். இந்த ஆணிகள் எவற்றைக் குறிக்கின்றன?”

“தன் சின்னமாக நான்கு ஆணிகளைக் கொண்டுள்ள இந்த வண்டியை நன்றாக ஆராய்ந்து பார்ப்பீர் என்றால், அது உமக்கு நன்றாகப் புரிந்து விடும். மேலும் அந்த வண்டியில் நான்கு பிரிவுகள் உள்ளன, ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட ஆணியோடு தொடர் புள்ளது என்பதையும் கவனியும்.”

“இந்தப் பிரிவுகள் எதைக் குறிக்கின்றன” என்று நான் கேட்டேன்.

“அருகில் வந்து இந்த முதலாவது பிரிவைப் பாரும்.”

நான் நெருங்கிச் சென்று, அறிவிப்புப் பலகையின்மீது எழுதி யிருந்ததை வாசித்தேன்: “குவோரும் தேயுஸ் வெந்த்தெர் எஸ்த் - வயிறையே தங்கள் கடவுளாகக் கொண்டவர்கள்.” “இப்போது எனக்குக் கொஞ்சம் புரியத் தொடங்குகிறது” என்று நான் சொன்னேன்.

என் வழிகாட்டி அப்போது எனக்குக் காரியங்களை விளக்கத் தொடங்கினார்: “பல துறவற சபைகளைச் சித்திரவதை செய்வதும், அழிப்பதுமான முதல் ஆணி இதுதான். நீர் விழிப்பாயிருக்கவில்லை என்றால், இது உம் சபையிலும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இந்த எதிரியைத் திடமாக எதிர்த்துப் போராடும், அப்போது உம் விஷயத்தில் காரியங்கள் நன்றாக நடக்கும் என்பதில் நீர் உறுதியா யிருக்கலாம்.” |

நாங்கள் வண்டியிலிருந்த இரண்டாவது அறையை நோக்கி நகர்ந்தோம். இரண்டாவது ஆணிக்கு மேலாக நான் இந்த வார்த்தை களை வாசித்தேன்: “குவேருந்த் குவே சுவா சுந்த் நோன் குவே யேசு க்றீஸ்தி - இயேசுக்கிறிஸ்துவின் காரியங்களையன்றி, தங்கள் சொந்தக் காரியங்களையே அவர்கள் தேடுகிறார்கள்.” “எல்லா உலக சுகங் களும் நிறைந்த ஒரு இலகுவான வாழ்வைத் தேடுபவர்களும், இயேசுக் கிறீஸ்துவின் ஒரு பாகமாக, அவர்கள் உண்மையில் தாங்கள் எதற்காக உழைக்க வேண்டுமோ, அந்த சபைக்குத் தீங்கு பயக்கும் விதமாக, தங்கள் சொந்த நன்மைக்கோ, தங்கள் பெற்றோரின் நன்மைக்கோ உழைப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். கவனம்! இந்த வாதையைத் தூரமாக வைத்துக் கொள்வதன் மூலம், சபையின் வளர்ச்சியை நீர் காண்பீர்.”

அதன்பின் நாங்கள் மூன்றாவது பிரிவை நோக்கித் திரும்பி னோம். மூன்றாவது ஆணியின் கீழ், “ஆஸ்பிதிஸ் லிங்குவா ஏயோரும் - அவர்களுடைய நாவு ஒரு விரியன் பாம்பினுடையது” என்ற வாசகத்தை நான் வாசித்தேன். அந்தப் பிரபல மனிதர் அமைதியாக விளக்கினார்: “முறுமுறுப்பவர்களும், கோள் சொல்பவர்களும் மரணத்தை விளைவிக்கிற ஓர் ஆணியைக் கொண்டு சபையைத் துளைக்கிறார்கள். சரியோ, தவறோ, தங்கள் விமர்சனத்திற்கு வடிகால் தேடும் வரையில், அவர்கள் அமைதியடைவதில்லை.”

“கூபிக்குலும் ஓத்ஸியோத்தாத்திஸ் - சோம்பலின் அறை” என்பதுதான் நான் நான்காவது அறையின்மீது வாசித்த வாசகமாகும். அந்த மர்மமான மனிதர் தமது எச்சரிப்பைத் தொடர்ந்தார்: “இங்கே சோம்பித் திரிபவர்களை ஒரு பெரும் எண்ணிக்கையில் நாம் சந்திக்கிறோம். சோம்பலின் பசாசு ஒரு துறவற சபையில் காலூன்ற இடத்தைக் கண்டுபிடிக்கும்போது, அந்த சபை முழு அழிவின் விளிம்பில் இருக்கிறது. ஆனால், நீங்கள் கடுமையாகவும், மிக அதிகமாகவும் உழைக்கும் வரையிலும், இத்தகைய ஆபத்து எதுவும் உங்களுக்கு நேரிடாது. இப்போது இந்த வண்டியில் உள்ள மற்றொரு காரியத்தையும் குறித்துக் கொள்ளும். இது மிக அடிக்கடி கவனிக்கப் படாமல் போகிறது. இதன்மீது நீர் விசேஷ கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த இடைவெளியைப் பார்த்தீரா? அது வண்டியின் எந்த அறையின் பாகமாகவும் இல்லை, ஆனாலும் அது மையத்தில் இருந்து, எல்லா அறைகளையும் நோக்கி நீள்கிறது.” |

“ஆம், அதை நான் காண்கிறேன்” என்று நான் பதிலளித்தேன், “ஆனால் அதில் காய்ந்த இலைகளின் துண்டுகளையும், உயரமான களைகளையும், பல்வேறு நீளங்களைக் கொண்ட சிக்கலான புல்லையும் தவிர வேறொன்றும் இல்லையே.”

“நல்லது, நான் உமக்குச் சுட்டிக்காட்ட விரும்பியதும் துல்லியமாக இதைத்தான்” என்றார் அவர்.

“ஆனால் இது எப்படி எனக்குப் பயனுள்ளதாக இருக்கப் போகிறது?” என்று நான் ஆவலோடு கேட்டேன்.

“இங்கே மறைந்திருக்கிற இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசியும்.”

எனக்குக் கட்டளையிடப்பட்டபடியே நானும் செய்தேன். “லாத்தெத் ஆங்குயிஸ் இன் ஹெர்பா - புல்லில் ஒரு பாம்பு ஒளிந் திருக்கிறது.” |

நான் வினோதப் பிரியத்தோடு, “இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டேன். அவர் விளக்கினார்: “எச்சரிக்கையாயிரும், ஏனெனினல் தங்களை மறைத்துக் கொள்ள முயலும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் பேசுவதே இல்லை; இவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் தங்கள் இருதயங்களை ஒருபோதும் திறந்து காட்டவே மாட்டார்கள். எச்சரிக்கையாயிரும்! லாத்தெத் ஆங்குயிஸ் இன் ஹெர்பா. அவர்கள் சபைக்கு ஒரு கசையாக, ஒரு நிஜமான தண்டனையாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் தங்கள் குற்றங்களை வெளிப்படுத்தும்போது, அவர்கள் திருத்தப்பட ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது; ஆனால் இவர்கள் முற்றிலுமாக மறைந் திருக்கிறார்கள். யாருமே இதைக் கவனிப்பதில்லை. ஆனால் தீமை வலிமை பெறத் தொடங்குகிறது, விஷம் இந்தப் பரிதாபத்திற்குரிய வர்களின் இருதயங்களில் அதிகரிக்கிறது. அவற்றை நாம் அறியவேயில்லை என்றால், அதனால் விளையும் நாசம் ஏற்கனவே சீர்செய்யப்பட முடியாத அளவுக்கு எல்லாமே தாமதமாகி விடும். .. சபையிலிருந்து நீர் விலக்கியே வைத்திருக்க வேண்டிய காரியங் களோடு பரிச்சயம் செய்து கொள்ளும். நீர் கேட்ட எல்லாக் காரியங்களின் மீதும் உம் மனதை இருத்தி வைத்துக் கொள்ளும்; இந்த எல்லாக் காரியங்களையும் திரும்பத் திரும்ப விளக்கிச் சொல்லும் கடமையில் உம்மைப் பின்செல்வோரையும் உம்மோடு சேர்த்துக் கொள்ளும். இந்த அறிவுரையை நீர் பின்பற்றுவீர் என்றால், உம் சபையின் எதிர்காலம் குறித்து நீர் கவலை கொள்ளத் தேவை யில்லை. ஏனெனில் நாளுக்கு நாள் எல்லாமே அதிக நன்றாக நடக்கும்.”

அப்போது நான் எதையாவது மறந்து விடாதபடி சில குறிப்புகள் எடுத்துக்கொள்ள என்னை அனுமதிக்கும்படி நான் அவரிடம் கேட்டேன். அவரோ சற்று முரட்டுத்தனமாக, “நீர் அப்படிச் செய்ய முயற்சி செய்யலாம். ஆனால் உமக்குப் போதிய நேரம் இருக்காதென்று நான் அஞ்சுகிறேன். இப்போது, விழிப்பா யிரும்!” என்றார்.

நான் எழுத ஆயத்தம் செய்தபோது, தொலைவில் ஒரு குழப்ப மான இரைச்சலைக் கேட்டேன். அது வேகமாக என்னை நெருங்கி வந்தது. அந்த வயல் முழுவதும் அதிர்வால் நடுங்குவது போலத் தோன்றியது. புதிதாக எதுவும் நடந்து கொண்டிருக்கிறதா என்று அறியும் கவலையோடு, நான் திரும்பியபோது, சற்றுநேரத்திற்கு முன் தான் என்னை விட்டுப் புறப்பட்டுச் சென்ற என் சிறுவர்கள் அச்சத்தோடு திரும்பி வருவதை நான் கண்டேன்; அவருக்குப் பின்னால் மிக அருகில் அந்தக் கர்ஜிக்கிற எருது இருந்தது! இரண்டாவது தடவையாக அந்த எருதின் காட்சி எந்த அளவுக்கு என்னை அச்சப்படுத்தியது என்றால், ஒரு திடுக்கிடலோடு நான் விழித்துக் கொண்டேன்.

நாம் தியானத்தை முடித்துப் பிரிந்து செல்லும் நாளுக்கு முந்தின நாளை இந்தக் கனவை உங்களுக்கு விவரித்துக் கூற நான் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில், உழைப்பு மற்றும் மட்டுமிதம் என்னும் நம் விருதுவாக்கின்படி வாழ நாம் பிரதிக்கினை செய்வோம் என்றால், இந்த தியானம் மகிழ்ச்சியான முறையில் முடிவடையும் என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். துறவற சபைகளின் அழிவாக இருக்கிற போஜனப் பிரியம், உலக சுகங்களைத் தேடுதல், முறுமுறுத்தல், சோம்பல் என்னும் நான்கு பெரிய ஆணிகளைத் தவிர்ப்பதற்கு நாம் நம் பலத்தையெல்லாம் கொண்டு உழைப்போம். எப்போதும் உங்கள் மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகவும், படிகத் தெளிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள். இதையே நம் வாழ்வின் விதியாகக் கொண்டு நாம் முதலில் நம் ஆன்மாக்களுக்கும், அதன்பின் தேவ பராமரிப்பு நம்மிடம் அனுப்புகிறவர்களின் ஆன்மாக்களுக்கும் ஒரு நல்ல உலகத்தை நாம் உருவாக்குவோம்!”

டொன் போஸ்கோ இந்தக் கனவுக்கு ஒரு பிற்சேர்க்கையை விவரிப்பதன் மூலம் மட்டுமிதத்தைப் பற்றிப் பிற்பாடு விரிவாக விளக்க வேண்டுமென்று முதலில் திட்டமிட்டிருந்தார். அதன்பின் தாம் பேசும்போது அதையே வாக்களிக்கவும் செய்தார். ஆனால் தம் உரையின் இரண்டாவது பாகத்தை அவர் தொடங்கியபோது, அது அவருக்கு முழுவதுமாக மறந்து போயிருக்க வேண்டும். அந்தக் கோபவெறி கொண்ட எருதின் தோற்றத்தில் மிக முரட்டுத்தனமாக எழுப்பப்பட்ட அவர், இதைப் பற்றி இன்னும் அதிகமாக ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் மீண்டும் உறக்கத்தில் விழுந்த போது, அவருடைய இந்த விருப்பம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கனவின் மீதமுள்ள பாகத்தை டொன் போஸ்கோ ஷியேரியில் வைத்து விவரித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த டொன் பெர்ட்டோ இதன் ஒரு நகலை டொன் லமாய்னுக்கு அனுப்பினார்.

மட்டுமிதம் மற்றும் மட்டுமிதமின்மை ஆகியவற்றின் விளைவுகளைக் காண நான் ஆவலாயிருந்தேன். என் மனதில் இந்த எண்ணமே மேலோங்கியிருக்க, நான் படுக்கைக்குச் சென்றேன். நான் உறக்கத்தில் விழுந்த மாத்திரத்தில் அதே பிரசித்தமான மனிதர் தோன்றி, மட்டுமிதத்தின் விளைவுகளைக் காணும்படி தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு என்னை அழைத்தார். ஓர் இன்பமான தோட்டத்திற்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே எல்லா வகையான மலர்களும் நிறைந்திருந்தன. அது ஒரு மிக ரம்மிய மான காட்சியாக இருந்தது. பிறர்சிநேகத்தின் அடையாளமான மிக அழகிய ரோஜாக்கள் அங்கே ஏராளமாகக் காணப்பட்டன. கார்னேஷன் மலர்கள், மல்லிகைகள், லீலிக்கள், வயலெட்கள், பசுமை மாறா மலர்கள், சூரியகாந்திப் பூக்கள், இன்னும் எண்ணற்ற வகையான மலர்கள் அங்கே ஏராளமாகப் பூத்துக் குலுங்கின. அவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு புண்ணியத்தைக் குறிப்பனவாக இருந்தன.

“கவனமாயிரும்!” என்று கத்தினார் என் வழிகாட்டி. ஏறக் குறைய அந்த வினாடியே அந்தத் தோட்டம் மறைந்தது. அதைத் தொடர்ந்து ஓர் ஆழ்ந்த இரைச்சல் சப்தம் கேட்டது.

“இதெல்லாம் என்ன? இந்த இரைச்சல் எங்கிருந்து வருகிறது?” என்று நான் கேட்டேன்.

“பின்னால் திரும்பிப் பார்த்து நீரே தெரிந்து கொள்ளும்.”

நான் துரிதமாகக் கீழ்ப்படிந்தேன். அப்போது, இதோ! என்ன ஒரு விசித்திரமான காட்சி! நான் பெட்டி வடிவத்திலான ஒரு பெரிய வண்டியைக் கண்டேன். அதை மிகப் பெரிய உருவமுள்ள ஒரு பன்றியும், ஒரு தேரையும் இழுத்து வந்தன. “பக்கத்தில் போய், உள்ளே பார்” என்று அவர்கட்டளையிட்டார்.

நான் முன்னே போய் அந்த வண்டியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று நெருக்கமாக ஆராய்ந்தேன். அது வண்டியின் மேல்புறம் வரைக்கும்: காகங்கள், பாம்புகள், தேள்கள், கொண்டைப் பல்லிகள், நத்தைகள், வௌவால்கள், முதலைகள், பெரிய தீப்பல்லிகள் போன்ற மிக அருவருப்பான விலங்குகளால் நிறைந்திருந்தது. அவை எல்லாமே கோழை படிந்தவையாகவும், குமட்டல் வருவிப்பவையாகவும் இருந்தன. அத்தகைய ஒரு காட்சியை என்னால் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடிய வில்லை . அந்த விலங்குகளிடமிருந்து எழுந்த குமட்டல் தரும் நாற்றம் அங்கிருந்து விலகுமாறு என்னை வற்புறுத்தியது. இப்படித் திடீரென்று திரும்பியது, நான் ஒரு திடுக்கிடலோடு விழித்தெழச் செய்தது. ஆனால் விழித்தபின்னும் நீண்ட நேரத்திற்கு என் நாசித் துவாரங்களில் அந்தத் துர்நாற்றம் இருந்து கொண்டேயிருந்தது. அந்த பயங்கரமான காட்சியால் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பு, மீதமுள்ள இரவு முழுவதும் என்னை உறங்க விடாமல் செய்யப் போதுமானதாயிருந்தது.

குறிப்பு: அந்த “இன்பமான தோட்டத்தின்” மலர்கள் மட்டுமிதமாகிய நாற்றங்காலில் மலர்ந்திருக்கும் புண்ணியங்களுக்கு அடையாளமாக இருக்கின்றன. வண்டியில் இருந்த அருவருப்பான மிருகங்கள் மட்டுமிதமின்மையிலிருந்து கிளம்பும் தீச்செயல்களைக் குறிக்கின்றன.