பாவசங்கீர்த்தனம் தப்பாமல் குணப்படுத்தும் மருந்து

நல்ல கத்தோலிக்கர்கள் இதில் சாக்குப்போக்குச் சொல்ல இடமில்லை. அவர்களுக்கு சேசுக்கிறீஸ்துநாதரே தந்த தெய்வீக மருந்து இருக்கிறது. சரீரப் பாவங்களால் விளைவிக்கப்படும் பெரும் அழிவை மற்ற யாரையும் விட அவர் மிகத் தெளிவாகக் கண்டார். தமது இரக்கம் மற்றும் நேசத்தின் பூரணத்துவத்தில், அவர் அந்த எல்லாப் பாவங் களுக்குமான முழுப் பயனுள்ள மருந்தை நமக்குத் தந்தார்.

பாவசங்கீர்த்தனத்தால் எல்லாப் பாவங்களையும் குணப்படுத்த முடியும். ஆனாலும் அசுத்த பாவங்களை அழிப்பதிலும், கெட்டுப்போன பலவீன சுபாவத்தைக் குணமாக்குவதிலும், மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது, அவன் கொண்டிருந்த பலத்தையும், பரிசுத்தத்தையும் அவனுக்குத் திருப்பித் தருவதிலும் அது ஒரு மிக விசேஷ மான வல்லமையைக் கொண்டுள்ளது.

பாவசங்கீர்த்தனம் பாவங்களை மன்னிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக, அதைக் குணப்படுத்தவும், ஆன்மாவின் வேர்களிலிருந்து அதை இழுத்து அகற்றவுமே தரப்பட்டுள்ளது என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அனுபவமுள்ள குருக்கள் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இதைக் காண்கிறார்கள். மிகவும் கைவிடப் பட்டவனாயிருக்கிற பாவி அவர்களிடம் வரட்டும்; அசுத்தப் பாவத்தில் மூழ்கியவர்களும், பாவசோதனை களால் சூழப்பட்டுள்ளவர்களுமாகிய ஆணும், பெண்ணும் அவர்களிடம் வரட்டும். பரிதாபத்திற்குரிய இந்தப் பலவீனர்கள் அடிக்கடி குருவானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வருவார்கள் என்றால், அவர்கள் முற்றிலுமாகப் புதுப் பிறப்படைந்து விட்டதை அவர் விரைவில் கண்டு திருப்தியடைவார்.

ஆகவே, அடிக்கடியும், குறிப்பாக ஒவ்வொரு வாரமும் பாவசங்கீர்த்தனம் செய்வது, பாவத்திற்கெதிரான ஒரு மாபெரும் தடைச்சுவராக இருக்கிறது!

குருக்கள் தங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வருகிற இளம் பருவத்தினரிடமும், முதியவர்களிடமும், வாராந்திரப் பாவசங்கீர்த்தனத்தின் அவசியத்தைப் பற்றி எவ்வளவு வற்புறுத்தினாலும் அது தகுதியானதே.

தாய் தந்தையரும், எல்லா வகையான ஆசிரியர் களும், குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யும் வழக்கத்தை அவர்களிடம் உருவாக்க தங்கள் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

பல கத்தோலிக்க மருத்துவர்கள் இந்த தேவத் திரவிய அனுமானத்தின் நல்விளைவுகளைப் பற்றி மிகப் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதைத் தங்கள் நோயாளிகளிடமும், நண்பர்களிடமும் இதைப் பரிந்துரைக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் இப்படியே செய்ய அறியாதிருப்பது பரிதாபத்திற்குரியது.

இந்த நூலின் ஆசிரியர் அநேக அனுபவமிக்க பாவசங்கீர்த்தன குருக்களிடம் பேசியிருக்கிறார். அடிக்கடி செய்யப்படும் பாவசங்கீர்த்தனத்திடம் தோற்றுப் போய் விலகியோடாத மிகக் கடுமையான, மிகவும் ஆழமாக வேரோடியிருக்கிற, மிகவும் தீமையான பாவம் எதுவு மில்லை என்று அவர்கள் எல்லோரும், எந்த விதிவிலக்கு மின்றி ஒப்புக்கொள்கிறார்கள். பாவசங்கீர்த்தனம் செய்பவர்கள் அதன்பின் திவ்விய நன்மையில் சர்வேசுர னையே பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், வெற்றி கொள்ளப்பட முடியாத பாவம் எதுவுமேயில்லை என்பது இன்னும் அதிகமாக உறுதியாகிறது.