சிலுவையின் பாதை

சரிப்படுத்தப்பட முடியாத தவறுகள் உண்டு, சுமந்தாக வேண்டிய சிலுவைகள் இருக்கின்றன, தள்ளிவிட முடியாத கடமைகள் உண்டு, சிரசில் தரித்தாக வேண்டிய முள் முடிகளுமுண்டு.

ஆறுதல் கண்டடைய முடியாத துயரங்கள் உண்டு, சுகப்படுத்த முடியாத காயங்களுண்டு, மானிட இருதயத்தில் மிக ஆழமாய்ப் பதிந்து சிறிது முதலாய் வெளிப்படுத்த முடியாத துயரங்களும் இருக்கின்றன.

நம் சிலுவைகளை நாம் சுமந்து செல்வோமாக. அவற்றை நாம் தனியாக சுமந்து செல்வதில்லை. கிறிஸ்துநாதர் செய்திருப்பது போல் பூமியின் மிகக் கரடுமுரடான இடங்களிலும் நாம் நடந்து செல்வோமாக.

கசப்புநிறை நமது துயரங்களை அவரது திரு இருதயத்தில் ஆழப்புதைத்து விடுவோமாக. அவரது துயரங்களில் ஒரு பங்கு கிடைத்திருப்பது பெரும் மகிமை, பெரிய பாக்கியம் என்று நினைத்து மகிழ்வோமாக.

அவருக்குச் செய்யப்பட்ட தவறுகளை அவர் எவ்விதம் சகித்தார் எனச் சிந்திப்போம்; அவர் சுமந்து சென்ற சிலுவையை நினைப்போம்; அவர் செய்த அலுப்பு தரும் பிரயாணங்களை நாம் மறவோம்; அவர் சிரசில் தரித்திருந்த முள் முடியையும் மறவாதிருப் போமாக.

தமக்கென்று கிறிஸ்துநாதர் தெரிந்தெடுத்த வேதனையும் துயரமும் ஒருபோதும் தீமைகளாகா. ஆதலின் சிலுவையின் பாதையில் அவரை நாம் பின் செல்வோமாக, பரகதியின் இனிய இளைப்பாற்றிக்கு சிலுவையின் பாதை நம்மை அழைத்துச் செல்லும்.

நமது சுபாவமானது சிலுவையை நேசிப்பதில்லை. சிலுவையைக் கண்டதும் அது நடுங்குகிறது. யேசுக் கிறிஸ்துநாதர் இந்தத் தவறான மனநிலையைத் திருத்த விரும்பினார். தாம் சிலுவையின் நண்பன் என தம் வாழ்நாள் முழுவதுமே எண்பித்தார். அவர் அதை விடாது ஆசையுடன் தேடினார். (லூக். 12/50 ) 

பெரிய வெள்ளிக்கிழமை அதிகாலையில் அதை ஆசையுடன் அரவணைத்தார். அதை வாங்கித் தம் தோள் மீது வைத்துக் கல்வாரிக்கு அதைச் சுமந்து சென்றார். தம்மைச் சிலுவையுடன் சேர்த்து ஆணிகளால் அறையும்படி விட்டு விட்டார். சிலுவையின் கரங்களில் அவர் உயிர் விட்டார். சிலுவையை நேசித்ததாக இவ் விதம் சிறந்த விதமாக எண்பித்தார். நித்திய ஞானமாகிய யேசு சிலுவையை நேசித்தமையால் அது நம் நேசத்துக்கும் உரியதே. நாமும் அதை நேசிக்கவேண்டும். 

சிலுவைக்கு வந்தனை செலுத்திய யேசு, அதை அரும் பெரும் காரியங்களில் கருவியாக்கி, அதை மகிமைப் படுத்தினார். சிலுவையினால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பட்டது. கடவுளுடைய வரப்பிரசாதத்தை சிலுவையினாலேயே நாம் திரும்பப் பெற்றுக் கொண்டோம். பாவத்தினால் கடவுளுடைய விரோதிகளான நாம் சிலுவையினால் அவருடைய உற்ற நண்பர்களானோம், கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திவாரத்தையும், சகல புண்ணியங்களின் போத னையையும், இந்த உலகத்தில் நமது பேறுபலன்களுடையவும், மறு உலகத்தில் நித்தியத்துக்கும் நாம் அனுபவிக்க இருக்கும் மகிமையினுடையவும், அஸ்திவாரத்தையும் நாம் சிலுவையில் காண்கிறோம். 

பிதா நம் மீது கொண்டிருக்கும் நேசத்தை சிலுவை எண்பிக்கிறது; மோட்சத்துக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களது பிணையை, (உரோ. 8/17.) இவ்வளவு மகிமை பொருந்திய சிலுவையை நாம் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். சிலுவை நல்லது, அழகு வாய்ந் தது, மகிமை பொருந்தியது, விலையேறப்பெற்றது.

பாடுபட்ட சுரூபத்தை முத்தமிடுகையிலும் அதை அரவணைக்கையிலும் அதை நாம் மகிமைப்படுத்து கிறோம் என்பது உண்மையே. வாழ்க்கையில் நமக்கு வரும் நூற்றுக்கணக்கான சிறு சிறு துன்ப துயர வேதனைகளை இரட்சகரது சிலுவையின் சிறு துண்டு களாக மதித்து அவற்றைப் பொறுமையுடனும் நேசத்துடனும் ஏற்றுக் கொள்கையில் சிலுவையை நாம் இன்னும் அதிகமாக மகிமைப்படுத்துகிறோம். 

துன்பத்தைக் கண்டதும் பயந்து ஓடுவோமானால், சங்கடங்களின் மத்தியில் பொறுமையை இழந்து கோபங்கொள்வோமானால், இவ்வுலக இன்பங்களில் நாம் திருப்தியைத் தேடுவோமானால், நமது சொந்த வசதிகளைத் தேடுவதில் கண்ணுங் கருத்துமாயிருப் போமானால் இவற்றிலிருந்து காணக் கிடப்பதென்ன? சிலுவையை நாம் மதிப்பதில்லை; சிலுவை நம்மை விட்டு அகலுமானால் நமக்குச் சந்தோஷமாயிருக்கும் எனக் காண்பிக்கிறோம்.

கடைசிநாளில் சிலுவையானது உலகத்தை நடுத் தீர்க்க வரும். (மத். 24/30) அப்பொழுது சிலுவையின் நேசர்கள் இன்பத்துடனிருப்பார்கள், சிலுவையை நிந்தித்தவர்கள் நிர்ப்பாக்கியராயிருப்பர்.

சிலுவையை நாம் நேசியாது போனால் இவ்வுலகில் முதலாய் நாம் சந்தோஷத்துடனிருக்க முடியாது. ஏனெனில் இவ்வுலக வாழ்வினின்று சிலுவைகளை அகற்ற முடியாது. தேவசித்தத்துக்குப் பணிந்த மன துடன் சிலுவையை ஏற்று பொறுமையுடன் அதைச் சுமக்க வேண்டும். இவ்விதம் செய்யாது, சிலுவை வந்ததும் கோபப்பட்டு ஆத்திரத்துடன் துயரப்பட்டு முறையிடுவோமானால், சிலுவை அதிக பாரமானதாகிறது. 

சிலுவையினால் வரக்கூடிய கணக்கற்ற பேறுபலன்களை இழக்கிறோம், நிர்ப்பாக்கியர் போலாகிறோம். சிலுவையை நேசியாதவன் இன்பத்தின் மத்தியிலும் சந்தோஷமாயிருக்கமாட்டான். ஏனெனில் இவ்வுலகில் துன்பமும் இன்பமும்கலந்தே வருகின்றன. துன்பம் வந்ததும் அவன் துயரப்படுகிறான், அதிருப்தி கொள்கிறான், இருக்கிற சந்தோஷத்தையும் இழக்கிறான்.

நாம் இரட்சிக்கப்பட விரும்பினால், நம் வாழ்நாள் முழுதுமே நம்மை அடக்கி, ஆசாபாசங்களைக் கட்டுப் படுத்தி ஐம்புலன்களை அடக்கியாண்டு, சோதனைகளை எதிர்த்து நின்று, தீமையைக் கண்டு விலகி நடந்து, நன்மையைச் செய்து வர வேண்டும். நமக்கு விரோத மாக விடாது போராடினால் மாத்திரமே, இதை யெல்லாம் நாம் அடைய முடியும். சிலுவையை நாம் நேசியாது போவோமானால், இந்தத் துன்பங்களும் நமக்கு சலிப்பைத் தருகின்றன. 

நாம் துயரமும் வெறுப்பும் கொண்டு நிர்ப்பாக்கியராய் வாழ்கிறோம்: சிலுவையை நாம் நேசிக்க வேண்டும். துன்பங்களையெல்லாம் நமது சந்தோஷத்தின் காரணங்களாக நாம் மாற்றவேண்டும். யேசுக்கிறிஸ்து நாதருடைய சிலுவையில் பங்கு பற்றுவதும், அவர் பருகிய பாத்திரத்திலிருந்து பருகுவதும், பெரிய பாக்கியம் என நாம் மதிக்க வேண்டும். இதுவரை சிலுவையை மிகச் சொற்பமாக நேசித்தது பற்றி நாம் வெட்கப்பட்டு, இனி அதை நேசிக்கும் வரத்தை கடவுளிடம் இறைஞ்சிக் கேட்போமாக.