இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயிக்கு ஜெபம்

68. நித்திய பிதாவின் அன்புக்குரிய குமாரத்தியாகிய மரியாயே வாழ்க! 

சுதனின் ஆச்சரியத்துக்குரிய தாயாகிய மரியாயே வாழ்க! 

பரிசுத்த ஆவியின் மிகப் பிரமாணிக்கமுள்ள மணவாளியாகிய மரியாயே வாழ்க! 

என் அருமைத் தாயும், என் தலைவியும், என் வல்லமையுள்ள அரசியுமாகிய மரியாயே வாழ்க! 

என் மகிழ்வே ! என் மகிமையே! என் இருதயமே! என் ஆத்துமமே வாழ்க! 

ஆனால் நான் இன்னும் போதிய அளவு உங்களுடைய வனாயில்லை. ஆதலால் மீண்டும் என்னை முழுவதும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கோ மற்றவர் களுக்கோ எதையும் நான் ஒதுக்கி வைக்கவில்லை.

உங்களுக்குச் சொந்தமாயில்லாத யாதொன்றையும் நீங்கள் என்னிடத்தில் கண்டால் இந்தக் கணத்திலேயே அதை எடுத்துக் கொண்டு என்னிடத்திலுள்ள சகலத்திற் கும் தாங்களே எஜமானியாக இருந்து கொள்ளுங்கள். என்னிடத்தில் கடவுளுக்குப் பிரியமற்ற எல்லாவற்றையும் அழித்து விடுங்கள். அதை வேருடன் பிடுங்கி இல்லாமல் செய்துவிடுங்கள். உங்களுக்கு நல்லதெனத் தெரிகிற எல்லாவற்றையும் என்னில் வைத்து அதை விருத்தி செய்து என்னிடம் வளரச் செய்யுங்கள்.

உங்கள் விசுவாசத்தின ஒளி என் மன இருளை நீக்குவதாக.

உங்கள் ஆழ்ந்த தாழ்ச்சி என் ஆங்காரத்தை அகற்றி, அதற்குப் பதிலாக அங்கே இருப்பதாக.

உங்கள் உந்ந்த காட்சி ஜெபம், அலைகிற என் ரூபிகரத் தின் பராக்குகளுக்கு ஒரு முடிவைக் கொணர்வதாக.

உங்கள இடையறா கடவுள் தரிசனம் என் ஞாபகத்தை அவருடைய பிரசன்னத்தால் நிரப்புவதாக.

உங்கள் இருதயத்தின் எரியும் சிநேகம் என் இருதயத் தின் வெதுவெதுப்பை அவை பற்றச் செய்வதாக.

உங்கள் புண்ணியங்கள் என் பாவங்களின் இடத்தில் வருவனவாக.

உங்கள் பேறுபலன்கள் கடவுள் முன்னால் என் செல்வமாகவும் ஆபரணமாகவும் ஆவனவாக.

இறுதியாய் மிகுந்த நேச அருமையுள்ள தாயே! கூடுமானால், சேசுவையும் அவருடைய தேவ திருச் சித்தத்தையும் அறிய உங்கள் விருப்பம் தவிர வேறு எதுவும் எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.

ஆண்டவரை வாழ்த்தி மகிமைப்படுத்த உங்கள் ஆன்மாவைத் தவிர வேறு ஆன்மா எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.

கடவுளைப் பரிசுத்தமாயும், ஆர்வத்தோடும் உங்களைப் போல் நேசிக்க உங்கள் இருதயத்தைத் தவிர வேறு இருதயம் எனக்கு இல்லாதிருக்கச் செய்யுங்கள்.

69. காட்சிகளையும், வெளிப்படுத்தல்களையும் உங்களிடம் நான் கேட்கவில்லை. உணரக் கூடிய பக்தியையும் ஞான இன்பங்களையும் மன்றாடவில்லை.

கடவுளை எந்த இருளின் நிழலுமின்றி தெளிவாய்க் காண்பது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.

கசப்பில்லாத முழு மகிழ்ச்சியை அவரிடத்தில் கொள்வது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.

மோட்சத்தில், உங்கள் குமாரனுடைய வலதுபாரிசத் தில் தாழ்வில்லாமல் மகிமையாய் வெற்றியுடன் திகழ்வதும் சம்மனசுக்கள் மேலும் மனிதர்கள் மேலும் பசாசுக்கள் மேலும் எல்லா வல்லமையும் கொண்டிருப்பதும் உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.

கடவுளுடைய கொடைகளை ஒன்று பாக்கியில்லாமல் சுதந்திரமாய் எடுத்து வழங்குவது உங்களுக்குரிய சலுகையாயிருக்கிறது.

ஓ பரிசுத்த மரியாயே! ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள மிக நல்ல பாகம் இதுவாக இருக்கின்றது. அது ஒருபோதும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. ஆதலால் நான் மிகவே அக்களிக்கிறேன்.

இங்கே இவ்வுலகில் என் பாகமாக, உங்களுடைய பாகத் தில் பங்கு கொண்டிருக்கவே நான் விரும்புகிறேன் : நான், காணாமலும், சுவைக்காமலும் அப்படியே விசுவாசித்துக் கொள்ள வேண்டும்;

மனித ஆறுதலின்றி மகிழ்ச்சியோடு துன்பப்பட வேண்டும்;

இளைப்பாற்றியின்றி தினமும் எனக்குத்தானே மரிக்க வேண்டும்;

சுயநலமின்றி சாகும் வரையிலும் உங்கள் அடிமைகளுள் ஈனம் மிக்கவனாய் ஆர்வமுடன் உங்களுக்காக உழைக்க வேண்டும்.

எனக்காக நீங்கள் இரக்கத்துடன் பெற்றுத் தர நான் மன்றாடும் ஒரே வரப்பிரசாதம் எதுவென்றால், என் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நீங்கள் இவ்வுலகில் செய்து வந்தது போல்,

ஆமென் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், நீங்கள் மோட்சத்தில் இப்பொழுது செய்வது போல,

ஆமென் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், நீங்கள் என் ஆன்மாவில் செய்கிற அனைத்திற்கும்

ஆமென் அப்படியே ஆகட்டும் என்று கூறவும் செய்தருள வேண்டும் என்பதே.

இதனால் என்னில் காலத்திலும், நித்தியத்திலும் நீங்களே முழுமையாக சேசு கிறீஸ்துவை மகிமைப் படுத்துவீர்களாக. 

ஆமென்.