பாவம்

கடவுளை விட்டு விலகி, சிருஷ்டிகளின் பக்க மாய்த் திரும்புவதே பாவம். போதுமான அறிவோ டும், முழுமனச் சம்மதத்துடனும் கடவுளுடைய சட்டத்தைக் கனமான காரியத்தில் மீறுவது சாவான பாவம். இதை ஆத்துமத்தின் சாவு என்கிறோம்.

ஆத்துமம் அழியாது, அது ஒரு போதும் சாகாது என நான் அறிவேன். ஆத்துமம் சாகிறது என்று சொல்லும்போது, பாவத்தினால் அது செத்த தற்குச் சமானமாகிறது என்பது பொருள், அந்த நிலையில் ஆத்துமம் உடலை விட்டுப் பிரியுமானால், அது நித்தியத்துக்கும் நரகத்தில் கிடக்கும். இது இரண்டாவது சாவு, அதிகக் கொடிய சாவு.

மனிதனின் மிகச்சிறந்த பகுதியாகிய ஆத்து மத்தை சாவான பாவமானது எவ்விதம் சாகடிக் கிறது எனச் சற்று சிந்திக்கப் போகிறேன். செத்த வன் அசையச் சக்தியற்றுக் கிடக்கிறான். சாவான பாவத்துடன் இருக்கும் ஆத்துமம் மோட்சத்திலி ருந்து எவ்வித உதவியும் பெற உரிமையற்றது. பேறு பலன்களை அது சம்பாதிக்க முடியாது. செத்தவன் உணர்ச்சியற்றிருக்கிறான். பாவியின் ஆத்தும மானது வரப்பிரசாத அலுவல்களின் உணர்சசியின் றிக்கிடக்கிறது. செத்தவன் வளையாது நேரே கிடக் கிறான். கடவுளது சட்டத்துக்குக் கீழ்ப்படிய பாவி மறுக்கிறான். செத்தவனைப் பார்க்கப் பயங்கரமாயி ருக்கிறது. ஆத்துமத்தின், சுபாவத்துக்கு மேலான அழகை சாவான பாவமானது அகற்றி அதைக் கோரப்படுத்துகிறது. ஆத்துமத்தின் சுபாவத்துக்கு மேலான உயிரான தேவ இஷ்டப்பிரசாதத்தை அது கொல்கிறது. செத்தவன் எல்லாவற்றையும் விட்டுச் செல்கிறான். நற்கிரியைகளாலும், ஜெபம் முதலிய பக்தி முயற்சிகளாலும், தவமுயற்சிகளாலும் ஆத்து மம் சம்பாதித்துள்ள பேறு பலன்களையும், தேவதிர விய அனுமானங்களால் பெற்றுக்கொண்ட வரப்பிர சாதங்களையும், பேறு பலன்களையும், சாவான பாவ மானது ஆத்துமத்தினின்று அகற்றுகிறது.

இது மிகக் கொடிய சாவு. இவ்விதம் சாக நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். இது எவ்விதம் நேரி டுகிறது? முதலாவது நோய் வருகிறது; அதாவது, பாவசோதனை வருகிறது; அதற்கு இணங்குகிறேன். இது பாவத்தின் தொடக்கம். பின் சாவு வருகிறது. அதாவது முழு அறிவோடும், முழுச் சம்மதத்துடனும் ஆத்துமம் ''நான் விரும்புகிறேன்'' என்கிறது. உடனே சாவான பாவம் உண்டாகிறது. ஆத்துமம் சாகிறது. ஆத்துமத்தின் உயிர் போகிறது. அழகு மறைகிறது. அதன் நலன்களும் போகின்றன. புத்தி மங்குகிறது. மனது பலவீனமாகிறது. ஆத்துமத்தின் தத்துவங்கள் பலங்குன்றுகின்றன. அடிக்கடி பாவத் தில் விழுவதால், ஆத்துமத்தின் நிலை அதிக பரிதாபத் துக்குரியதாகிறது. புதிய பாவங்கள் சேர்கின்றன. அத்துடன் ஆத்துமத்தின் கல்லறையாகிய பாவப் பழக்கம் வந்து விடுகிறது. தொடக்கத்தில் பாவத்தின் தரை மெதுவாயிருக்கிறது. நாளடைவில் அது கடின மாகிறது. பாவத்தின் கல்லறைக்குப்பின் நரகம் என் னும் கல்லறை.

இதை நினைத்துப் பார்க்கப் பயங்கரமாயிருக் கிறது. எப்பொழுதாவது நான் சாவான பாவத்தில் விழுந்தால், உடனே எழுந்திருப்பேன். பாவம் செய்த தற்காக நான் துக்கித்து பாவத்தைப் பகைப்பேன். நயீம் நகரத்து விதவையின் மகனைப்போல் நான் எழுந்தபின் பேசத் தொடங்குவேன். உடனே உத்தம மனஸ்தாப முயற்சிகள் செய்வேன். கூடிய சீக்கிரம் பாவசங்கீர்த்தனம் செய்வேன். துயரத்துடன் என் பாவங்களைக் குருவிடம் வெளியிட்டு, பாவப் பொறுத் தல் ஆசீர்வாதம் பெற்று, அபராதத்தைத் தீர்த்ததும் நான் மன அமைதி பெறுவேன். நயீம் நகரத்தில் இறந்த விதவையின் மகனுக்கு உயிரளித்து அவனு டைய தாயிடம் அவனைக் கையளித்தது போலிருக் கும் அந்தக் காட்சி. வீட்டை விட்டுச்சென்ற ஊதாரிப் பிள்ளை திரும்பிவந்து மன்னிப்புக் கேட்டுப் பெற்று, அழகிய உடை தரிப்பிக்கப்பட்டு, தந்தையின் இல்லத் தில் சிறந்த விருந்து உண்டது போலிருக்கும் இந்தக் காட்சி.

நான் திரும்ப சாவான பாவம் செய்யாதபடி, இதுவரை நான் சாவான பாவத்தில் விழாதிருந்தால், ஒருபோதுமே அதில் விழாதபடி, சாவான பாவத்தி னால் ஆத்துமத்தில் ஏற்படும் கொடிய மாற்றத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பேன். சற்று முன் அந்த ஆத் துமம் தேவ இஷ்டப்பிரசாதத்துடன் இருந்தது. அது கடவுளுடைய குழந்தை; கிறிஸ்துநாதருடைய பத்தினி; பரிசுத்த ஆவியின் ஆலயம்; சம்மனசுக் களின் உறவினன்; பரலோகத்துக்குச் சுதந்தரவாளி; பாவம் செய்யப்பட்டதும் மாற்றம் உண்டாகிறது. என்ன பயங்கரம்! ஒரு வினாடியில் அது அனைத்தை யும் இழக்கிறது. அதன் பழைய மகிமைகளை அது பறிகொடுக்கிறது. கடவுள், அர்ச்சியசிஷ்டர்கள், சகல சிருஷ்டிகள் இவர்கள் முன்னிலையில் அது அரோசிகத்துக்குரியதாகிறது. பசாசின் அடிமையா கிறது. உயிருள்ள நரகமாகிறது. புனித பெர் நார்து சொல்வது போல், “மிக உயர்ந்த இடத்திலிருந்து மிகத் தாழ்ந்த இடத்துக்கு, சிம்மாசனத்திலிருந்து சிறைக்கு, மோட்சத்திலிருந்து நரகத்துக்குக் குதிப் பதே பாவம்.''

பாவத்தைக்கண்டு அர்ச்சியசிஷ்டர்கள் அச்ச நடுக்கம் கொண்டதன் காரணத்தை இப்பொழுது நான் கண்டுபிடிக்கிறேன். பாவம் கட்டிக்கொள்ளப் பட்ட ஓர் இடத்தின் பக்கமாய்ப் போகையில் ரோமை புனித பிரான் செஸ் என்பவள் மயக்கமுற்றாள். பசி ரங்க பாவி ஒருவன் வசித்த தெருவழியாய் நடந்ததற் காக ஒய்னி புனித மரியம்மாள் தன் பாதங்களில் சூடு போட்டுக் கொண்டாள். கொடிய ஒரு பாவச் தோத னையை எதிர்த்துநிற்கும்படி புனித தேவ அருளப்பர் தன் நகங்களுக்கடியில் கூரிய முட்களை இறக்கினார். வேறு சிலர் தங்கள் விரல்களை எரித்தனர். சிலர் பற் களால் நாவைத் துண்டித்து, தங்களைக் கெடுக்கவந்த வர்கள் மீது துப்பினார்கள்- ''என்ன நேரிட்டாலும் பாவம் உதவாது'' என்பதே அவர்களது விருதுவாக் கியம்.

நான் சாவான பாவம் செய்திருக்கிறேனா? அந்தச் சமயங்களிளெல்லாம் நீதியுள்ள கடவுள் என்னை நரகத் தில் தள்ளியிருக்கலாம். அவ்விதம் தள்ளாதிருப்பது அவரது அளவற்ற இரக்கத்தினாலேயே. “ஆண்ட வரே, நீர் ஆயிரம் முறை என்னை நரகத்தில் விழத் தாட்டியிருக்கலாம்'' என புனித அகுஸ் தீன் அழுது கொண்டு கூறினார். “மனிதன் பயப்படக் கற்றுக் கொள்ளும்படி சம்மனசுக்கள் மோட்சத்திலிருந்து தள்ளப்பட்டிருந்தனர். அகங்காரத்தின் நாற்றத்தி னால் தங்கப் பாத்திரங்கள் உடைக்கப்பட்டால், பித் தளைப் பாத்திரங்களின் கதி என்ன?" என்று சொல் கையில் புனித கிரகோரியார் தாரை தாரையாய்க் கண்ணீ ர் வடிப்பார். ஓ என் சர்வேசுரா, என் புத் திக்குப் பிரகாசத்தைத் தருவீராக. துஷ்டர்களின் பாதை அந்தகாரம் நிறைந்தது: விழுகிற இடத்தை அறியாமல் அவர்கள் விழுகிறார்கள் என்பதை நான் கண்டுபிடிக்கச் செய்தருளும். பாவத்தை பயங்கரத் துக்குரிய விதமாய் எச்சரித்த நேசமிகு இரட்சகரே! பாவி பிறரைப் பாவத்துக்கு இழுக்கையில் அவனது தோஷம் அதிகரிக்கிறது என்பதை நான் நினைவில் வைத்திருக்த உதவி புரியும். என் பாவங்களை நீர் உம் திரு உடலில் சுமந்தமையால், நேச யேசுவே, நித்திய பிதா உம்மை ஒரு மகனை நடத்துவதுபோல் நடத் தாது ஓர் அடிமையைப்போல் நடத்தினார். அதனா லேயே “என் சர்வேசுரா, என் சர்வேசுரா, ஏன் என் னைக் கைவிட்டீர்?” என்று சிலுவையில் தொங்குகை யில் நீர் கூவினீர். பாவத்தின் பயங்கரத்தைக் காண் பிக்க இதற்குமேல் என்ன வேண்டும்? அதை நான் வெறுத்துப் பகைக்க உதவி புரிவீராக,

பாவிகளுக்கு கடவுள் ஒவ்வொருநாளும் விதிக்கும் தண்டனையை நான் பார்த்து வருகிறேன். அப்படி யிருந்தும், “ஆசாபாசத்துக்கு இடங்கொடுத்து பாவம் செய்தால் என்ன கெட்டுப்போகிறது?'' என நான் சொல்லாதபடி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மறைந்து போகும் ஒரு வினாடி இன்பத்தை மாத்திரம் நான் பாவத்தில் பார்ப்பேனா னால் நான் மீனுக்குச் சமானமாவேன். அது ஒரு சிறு மகிழ்ச்சிக்காக தன் சாவையே தேடிக்கொள்கிறது.

தானியேல் தீர்க்கதரிசியின் ஆகமத்தில் அபகூக் என்பவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதை நான் சிந் தித்துப் பார்க்கப் போகிறேன். ஒரு தேவ தூதன் அபகூக்கின் தலை ரோமத்தைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய், ஒரு சிங்கக் குகையருகே நிறுத்தி னார். அபகூக் ஒரு கத்தியை எடுத்து தன்னைத் தூக்கிச் சென்ற சம்மனசுடைய கையை வெட்டினார் என வைத்துக் கொள்வோம். அவ்விதம் அவர் செய் வாரானால் அது பெரும் அறிவின்மையாகும், நன்றி கெட்டதனமாகும். பாவியும் கடவுளை இவ்விதமே நடத்துகிறான். பாவி தன் பாவத்தால் நரக வாசலரு கில் நிற்கிறான் என்றாலும் கடவுள் அவனைத் தாங்கி நடத்துகிறார். தன்னைக் காப்பாற்றும் கரத்தை, பாவி மிருகத்தனமாய்த் தாக்குகிறான். இது உண் மையே. கடவுளது வரத்தினாலன்றி நான் அசைய முடியாது, ஒன்றும் செய்யமுடியாது. எல்லாவற்றிற் கும் ஆதி காரணர் அவரே. அவர் தந்த பொருட்களை அவருக்கு விரோதமாகப் பயன்படுத்துவது பெரும் நன்றியற்றதனமாகும்.

1392-ம் ஆண்டில் ஒருவன் சூதாடிக்கொண்டிருத் தான். திரும்பத் திரும்ப அவன் தோல்வியடைந்து கொண்டே போனமையால் அவனுக்குக் கோபம் வந்தது. இன்னொரு முறை அவன் தோல்வியுற்றால் கிறிஸ்துநாதரைத் தன் வாளால் தாக்குவதாக அவன் சத்தியம் செய்து சபதம் கூறினான். அடுத்த முறை யும் அவன் தோற்றான். உடனே அவன் தன் இடை யிலிருந்த வாளை உருவி வானத்தை நோக்கி அதைச் சுழற்றி, “கிறிஸ்துவே. நான் சொல்வதைக் கேள்; உன்னை நான் சும்மாவிடப் போவதில்லை. இந்த வாளை உன் விலாவிற் செலுத்துவேன்'' எனக் கத்தி தேவ தூஷணம் சொன்னான். ஒரு வினாடி அந்த அறையில் எங்கும் அமைதி நிலவியது. அவன் சொன்ன பயங் கர வார்த்தைகளைக் கேட்ட தோழர்களின் முகங்கனி வெளுத்தன. திடீரென வானத்திலிருந்து சில இரத் தத்துளிகள் மேஜை மீது சிலுவை வடிவமாக விழுந் தன. உடனே அந்த நிர்ப்பாக்கியனது கால்களுக் கடியில் பூமி திறக்க, இரு பசாசுக்கள் தோன்றி அவனை ஆத்தும சரீரத்தோடு நரகத்துக்கு இழுத்துக் சென்றன. சாவான பாவம் செய்கிறவன் கடவுளுக் கும் அவருடைய கிறிஸ்து நாதருக்கும் விரோதமாகத் தன் கையை ஓங்குகிறான்.

உலகில் ஒரே ஒரு காரியமே உண்மையான தீமை. ஒரே ஒரு காரியமே தன்னில் தீமை. அது பாவமே. அது கடவுளுக்கு விரோதமான குற்றமாயிருப்பதால், அது தீமையாகிறது. நோவு, தரித்திரம், யுத்தம், பஞ்சம், வெள்ளம், கொள்ளை நோய், சாவு முதலியவை யாவும் தீமைகளல்ல.

பாவம் எவ்வளவு கொடிய தீமை என நான் உணரவேண்டுமானால், பாவத்தின் விளைவுகளைப் பற்றி நான் சிந்திக்கவேண்டும். ஒரு பிரசங்கியார் சொல்வதுபோல், நான் பெரியதொரு அக்கிரமத்தைக் கட்டிக்கொண்டதாக நான் உருபிகரித்துக்கொள்ள வேண்டும். போலீசார் என்னைத் தேடியலைகின்றனர். ஊதாரிப்பிள்ளை பன்றிகளின் மத்தியில் இருந்தது போல், நான் பயத்துடனும், வெட்கத்துடனும், கலக் கத்துடனும் காட்டில் ஒளிந்திருக்கிறேன். அங்கு நான் தரையில் படுத்துப் பதுங்கிக் கிடக்கையில் நான் மூன்றுகாட்சிகளைக் காண்கிறேன். முதற் காட்சி யில் இலட்சக்கணக்கான சம்மனசுகள். அழகாக  அவர்கள் இருக்கின்றனர். பிரகாசத்துடன் காணப் படுகின்றனர். பிரபுக்களைப்போல் இருக்கிறார்கள். கடவுள் அவர்களுக்குக் கொடுக்கும் உத்தரவு என் செவியில் விழுகிறது. சம்மனசுகளிலெல்லாம் மிக்க அழகுவாய்ந்தவனான லூஸிபேர் தன்னுடன் வேறு அநேகரைச் சேர்த்துக்கொண்டு கடவுளுக்கு விரோ தமாய்க் குழப்பம் செய்கிறான். மிக்கேல் சம்மனசு கடவுள் பக்கமாய் நின்று யுத்தம் புரிந்து லூஸிபேரை யும், அவனுடைய தோழர்களையும் நரக பாதாளத்தில் தள்ளுகிறார். இது ஒரே ஒரு பாவத்தின் விளைவு. இரண்டாவது வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப் படவில்லை. தரையிற பதுங்கிக் கிடக்கும் நான் மார் பில் பிழை தட்டிக்கொண்டு, “சர்வேசுரா, ஒரே ஒரு பாவத்துக்கு இவ்வளவு தண்டனையா? நானோ கணக் கற்ற பாவங்களைச் செய்திருக்கிறேனே!'' என்கிறேன்.

இரண்டாவது காட்சியில் ஆதாமும் ஏவாளும் சிங்காரத் தோப்பில் இருப்பதை நான் பார்க்கிறேன். கடவுள் அவர்களுக்குக் கொடுத்த உத்தரவு என் செவி களில் விழுகிறது. அவர்கள் கீழ்ப்படியாது போகிறார் கள். அதன் விளைவுகளை நான் பார்க்கிறேன். சாவு உலகில் நுழைந்தது. சாவுடன் சகல தீமைகளும் வந்து, முடிவுவரை நீடித்திருக்கின்றன. என்ன பரி தாபம்! அகங்காரம் என்னும் ஒரே குற்றம். அதனால் கீழ்ப்படியாமை. காட்டில் பதுங்கியிருக்கும் நான் திரும்பவும் மார்பில் பிழைதட்டிக்கொண்டு ''ஒரே ஒரு பாவத்தினால் இத்தனை துன்பங்கள்! நானோ எத் தனையோ பாவங்களைச் செய்திருக்கிறேன் ''சர்வே சுரா! பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்'' என்கி றேன்.

பின் மூன்றாவது காட்சி. உத்தம கத்தோலிக்க குடும்பத்தில் வளரும் ஒரு கத்தோலிக்க வாலிபனை நான் பார்க்கிறேன். சிறு பிராயத்தில் அவன் பக்தி யுள்ளவன், வாலிபத்தில் அவ்வளவு பக்தியுள்ளவ னல்ல. எல்லோரும் அவனை விரும்புகிறார்கள். பாவ சோதனைகள் வருகின்றன. சோதனைகளுடன் விளை யாடுகிறான். சாவான பாவம் செய்கிறான். பாவ சங்கீர்த்தனத்தில் அதைச் சொல்ல வெட்கமாயிருக் கிறது. இராயப்பரைப் போலல்ல. ஆனால் யூதாஸைப் போல் வெட்கப்பட்டு, பாவத்தை மறைக்கிறான். சாவு வருகிறது, மனஸ்தாபப்படாமல் செத்து நரகத்தில் புதைக்கப்படுகிறான். அவன் பெரிய முட்டாள். நித்திய கேட்டுக்குள்ளானான். திரும்பவும் நான் மார்பில் பிழைதட்டிக்கொண்டு, நான் பாவி என அங்கீகரித்து “சர்வேசுரா, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்'' என்கிறேன்.

இவை யாவும் பயங்கரமான உண்மைகள். சாவான பாவம் செய்தவன் துக்கிக்காவிட்டால் கட வுள் இவ்விதம் தண்டிக்கிறார். மதலேனாளையும் மனஸ் தாபப்பட்ட கள்ளனையும் மன்னித்த கடவுள் இவ்வி தம் தண்டிக்கிறார். பாவத்தின் தோஷத்தைக்கண்டு பிடிப்பவன் யார்? அது பெரும் தீமை என்று கண்டு பிடிக்க இந்த மூன்று காட்சிகளும் எனக்கு உதவியா யிருக்கின்றன. பாடுபட்ட சுரூபத்தை நான் உற்று நோக்குகிறேன். கடவுளுக்கு என் மேல் இருக்கும் அன்பை அது சிறந்த விதமாய் எடுத்துக் காட்டு கிறது. என்னைப் பாவத்தினின்று மீட்கும்படி கடவுள் இவ்வளவு செய்ய வேண்டியிருந்தது. பாவம் எப் பேர்ப்பட்டது என் இப்பொழுது நான் அறிகிறேன்.

ஓ, நான் பாவம் செய்ததைப் பற்றி விசனிக்கி றேன். அதற்காக மிகமிக வருந்துகிறேன். நான் கட் டிக்கொண்ட பாவங்களை நோக்குகிறேன். காட்டில் பயந்து பதுங்கிக் கிடக்கையில் அவை என் கண்முன் கடந்து செல்கின்றன. அவை எனக்குச் சொல்ல முடி யாத வெட்கத்தைத் தருகின்றன.

என் பாவங்கள் ஒவ்வொன்றாய் வருகின்றன. வெட்கத்தினால் தலைகுனிந்து; கண்ணீர் ததும்ப, அவற்றை நான் நோக்குகிறேன். என் குழந்தைப் பரு வத்தின் பாவங்கள் முதலில் வருகின்றன. கீழ்ப்படி யாமை, அவசங்கை, சிறு களவுகள், பொய்கள் முதலி யன ஊர்வலம் போல் வருகின்றன. கடவுளது அழகிய வேலையை நான் எவ்விதம் கறைபடுத்தினேன்! அவை என் பின் செல்லுகின்றன. பின் வாலிப வயதின் பாவங்கள், அடக்க ஒடுக்கமற்ற விநோதப் பிரியம், அசுத்த வார்த்தைகள், தொத்து வியாதி போல் பர விய என் துர்மாதிரி, கெட்ட பரிகாச மொழிகள், கோபம்... இந்தப்பாவங்களில் அதிக தோஷம். அவை என்னை அதிக கோரத்துக்குள்ளாக்குகின்றன. இன் னும் பாவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நேச இறைவா, இத்தனை பாவங்களை நான் செய்திருக் கிறேனே! நினைவுகள், வார்த்தைகள், செய்கைகள், செய்யாமல் விட்டவை, கைநெகிழவிட்ட வாய்ப்புகள் பிறருடன் செய்தவை, கூடிச் செய்தவை, என் வீட் டில் செய்தவை, இன்னின்ன வீடுகளில் நான் செய் தவை, வேலை நேரத்தில், விளையாடும் போது, விடு முறைகாலத்தில், இரவில், பகலில் செய்தவை...என் இறைவா. நான் என்ன செய்திருக்கிறேன்!

நினைவினால் அவற்றை நான் உற்றுநோக்கு கிறேன். தலை குனிந்து நீர் வடிக்கும் கண்களுடன், அவற்றை நான் நோக்குகையில், இன்னொருவர் என் னருகில் நின்று அவற்றை நோக்குவதை நான் பார்க் கிறேன். இன்னொருவர் அவற்றைக் கவனிப்பதைக் காண என்னால் தாங்க முடியாது. ஆதலின் கோபத் துடன் அவர் பக்கமாய்த் திரும்பி, ''உமக்கு இங்கு என்ன வேலை? இந்த இடத்தைவிட்டுப் போய்விடும்” என்கிறேன். அவரது முகத்தைப்பார்க்க எனக்குத் துணிவு வரவில்லை என்றாலும், அவரது கைகளை நான் பார்க்கிறேன். அவரது ஒவ்வொரு கையிலும் பெரிய ஆணி ஒன்று துளைத்திருக்கிறது. "உமக்கு இங்கே என்ன வேலை?'' என வாய் குளறக் கூறு கிறேன். அவரது உதடுகள் அசைகின்றன. சாந்த மாய்ப் பேசுகிறார். என்னைக் கண்டிக்கும் குரல். அதில் மன்னிப்பும் தொனிக்கிறது. “அவை என்னைக் கொலை செய்தன " என அவர் கூறுகிறார். உடனே நான் முழந்தாளிட்டு “என் ஆண்டவரே, என் தேவனே' எனக் கூவி அழுகிறேன்.

இவ்விதம் என் மனச்சாட்சியை நான் பரிசோதித் தபின் என் உண்மையான நிலையை நான் அறிகிறேன். சர்வ வல்லபரான கடவுளைப்பார்த்து, “உம்மைவிட எனக்கு அதிகம் தெரியும், நான் செய்வதே சரி, நீர் செய்வது சரியல்ல'' என்று சொன்ன முட்டாள் நான் என்று அறிகிறேன். அவர் இன்னும் என்னை உயிரு டன் வைத்திருக்கிறாரே, சகல சிருஷ்டிகளும் எனக்கு விரோதமாய் எழும்பாதிருக்கின்றனவே என நான் அதிசயிக்கிறேன். பாவத்தின் அடிமைத்தனத்தி னின்று என்னை விடுவிக்க நான் தீர்மானித்துவிட் டேன். இனிமேலாக பாவம் செய்யவே மாட்டேன். உடனே புது வாழ்க்கை தொடங்கப்போகிறேன். ஓ என் சர்வேசுரா, எனக்குத் துணைபுரிவீராக.

என் பாவங்களின் கனத்தை நான் அறிகிறேன். நான் ஞானஸ்நானம் பெற்றபோது என் ஆத்து மத்தை விட்டகலும்படி பசாசுக்கு குரு கட்டளையிட் டார். 'அசுத்த ஆவியே, இவனை விட்டகன் றுபோய் பரிசுத்த ஆவியாகிய இறைவனுக்கு இடங்கொடுப்பா யாக'' என்றார். சாவான பாவத்துக்கு நான் இணங்கு வேனானால் கடவுளைப்பார்த்து “என்னைவிட்டு அகன்று போய், பசாசுக்கு இடம் கொடும். பசாசுக்கே நான் சேவை செய்ய விரும்புகிறேன்'' என்கிறேன்.

சாவான பாவம் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத் துகிறது. கிறிஸ்துநாதரைப்போல் இருந்த என்னை யூதாஸைப்போல் ஆக்குகிறது. அழகிய ரோஜாச் செடியைத் தின்று அதன் அழகை அழிக்கும் புழுப் போன்றது சாவான பாவம். விலை மதிப்பிடமுடியாத சித்திரம் ஒன்று இருக்கிறது. ஒரு பைத்தியக்காரன் தன் கத்தியை எடுத்து அதைத் தாறுமாறாகக் கிழிக் கிறான். அதைப் போன்றது சாவான பாவம் செய்யும் நாசம். பிரேதத்தை ஒருபோதுமே பார்த்திராத மனி தனை ஒரு பிரேதத்துடன் இருளில் தனியே விடுவ தைப் போன்றது சாவான பாவத்தின் வேலை. வீட் டிலுள்ள பொருட்களையெல்லாம் துண்டு துண்டாய் நொறுக்கி, வீட்டுக்குத் தீ வைப்பதற்குச் சமானம் அது. ஒருவன் தனது பணத்தையெல்லாம் ஆற்றில் எறிவதற்குச் சமம். பிரேதம் புழுத்து நாறிக்கொண் டிருக்கிறது. அதனுடன் ஒரு மனிதனைச் சேர்த்துக் கட்டுகிறார்கள். அவன் தான் செல்லுமிடமெல்லாம் அதைத் தூக்கிக்கொண்டு போகிறதற்குச் சமம். சாவான பாவம் செய்பவன் சாவுடன் பிணைக்கப்பட்டி ருக்கிறான். ஆத்தும சாவுடன் அவன் சேர்த்துக் கட் டப்பட்டிருக்கிறான்.

சாவான பாவத்துக்கு அடுத்தபடியாக உலகி லேயே மிகப் பெரும் தீமை அற்பப் பாவமே. கடவு ளது நட்பை அற்பப் பாவத்தால் நாம் இழப்பதில்லை என்றாலும், அது கடவுளுக்கு விரோதமான குற் றமே. ஸ்பெயின் நாட்டினளான சான்ஸியா கரில்லியா என்னும் பெண்ணின் வரலாறு என் நினைவுக்கு வரு கிறது. அவிலா அருளப்பரே அவளுடைய ஆத்தும் குரு. புண்ணிய பாதையில் வெகுதூரம் அவள் முன் னேறிச் சென்றிருந்தாள். ஒரு முறை அவள் கடவுளைப் பார்த்து, “ஆண்டவரே, என் ஆத்துமத்தின் நிலையை எனக்கு அறிவியும்'' என அவள் கெஞ்சி மன்றாடி னாள். இந்தக் கருத்துக்காக அவள் பலமுறை ஜெபித் தாள், அநேக தபசு முயற்சிகளையும் செய்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் அவள் தன் அறையில் தனியே இருக்கையில், ஒரு சம்மனசு திடீரென அவள் முன் தோன்றினார். அவர் ஒரு வனவாசியைப்போல் உடை தரித்திருந்தார். அவரது கரங்களில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக்குழந்தையின் உச்சந்தலை முதல் உள் ளங்கால் வரை வைசூரி. அதைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமும், இன்னொரு பக்கம் அரோசிகமுமாயிருந் தது. “இது உன் ஆத்துமம்" என சம்மனசு கூறி உடனே மறைந்தார். அப்பெண்ணுக்குச் சொல்ல முடியாத பயம் ஏற்பட்டது. துயர மிகுதியால் அழுதாள். “என் ஆத்துமத்தைப் பார்க்க பயங்கரமாயிருக்கிறதே' என்று அவள் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். காலையில் தன் ஆத்தும் குருவை அவள் தேடிச்சென்றாள். அழுது கொண்டே நடந்ததைச்சொன்னாள். அந்தக் குழந்தை உயிருடனிருந்ததா? என ஆத்தும குரு கேட்டார். உயிருடனிருந்தது என சான்ஸியா பதிலளித்ததும், அவர் ''அப்படியானால், தேறுதலடைவாயாக. அது உயிருடனிருந்தமையால், தேவ இஷ்டப்பிரசாத உயிர் உன் ஆத்துமத்தில் இருக்கிறது எனக் காட்டுகிறது. வைசூரிப் புள்ளிகளை குழந்தை மீது நீ பார்த்தாய். அதாவது உன்னிடம் பல குற்றங்குறைகள் இருக்கின்றன. அவற்றால் சர்வ வல்லப கடவுளுக்கு நீ சற்று பிரியமற்றவளாகிறாய்” என்றார்.

தன் சுய சரிதையின் முப்பத்திரண்டாவது அதிகாரத்தில் புனித தெரேசம்மாள் தன்னைப் பற்றி எழுதி வைத்திருப்பது என் நினைவுக்கு வருகிறது. அவள் பரவசத்திலாழ்ந்திருக்கையில் ஒரு சம்மனசு வந்து நரக வேதனைகளைப் பார்க்கும்படி அவளை அழைத்துப் போனார். “நரக பாதாளத்தைப் பார். அங்கு வேதனைப்படுவோரின் மத்தியில் ஒர் இடம் வெறுமனாயிருக்கிறதல்லவா? உன் வாலிபப் பிராயத்தில் சில அற்பப் பாவங்களை நீ அகற்றாதிருந்திருந்தால் அந்த இடத்தில் கிடந்து நித்தியத்துக்கும் வேதனைப்பட்டிருப்பாய்'' என சம்மனசு அவளுக்கு அறிவித்தார்.

பரிசுத்தவான்களது வாழ்க்கை வரலாறுகளில் அற்பப் பாவங்களைப்பற்றி பல அபூர்வ சம்பவங்களைப் பார்க்கிறோம். புனித ஹிலாரியோன் ஜெபித்துக் கொண்டிருக்கையில் பராக்குகள் வந்தன. அந்தப் பராக்குகளை தக்கவிதமாக அவர் அகற்றவில்லை. அதற்காக அவர் ஒரு பசாசினால் அடிக்கப்படும்படி கடவுள் அனுமதித்தார் என புனித ஜெரோம் எழுதுகிறார்.

பரிசுத்தவான் ஒருவர் பெரும் தபசு முயற்சிகளைச் செய்து வருவார். கடவுள் ஒரு சம்மனசு வழியாக அவருக்கு உணவு அனுப்பி வந்தார். அது தூய வெண்மையான ரொட்டியே. அது பல நாட்களுக்குப் போதும். இவ்விதம் அநேக ஆண்டுகளாக நடந்து வந்தது. சில காலத்துக்குப் பிற்பாடு பெருமையான எண்ணம் அவரது உள்ளத்தில் உதித்தது. மற்றவர்களை விட தான் நல்லவன் என அவர் நினைக்கத் தொடங்கினார். அதற்குத் தண்டனையாக கடவுள் அன்றிலிருந்து அவருக்கு கறுப்பு ரொட்டி அனுப்பலானார்.

ரோமையிலிருந்த புனித பிரான்செஸ் அம்மாள் திடீரென யாரோ தன்னை அடிப்பதாக ஒரு நாள் உணர்ந்தாள். அடித்தது யார் என்றறியும்படி அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு சம்மனசு அவளருகே நின்றுகொண்டிருந்தார். அவர் கோபத்துடனிருந்தார். “நேரமானது மகா விலையேறப்பெற்றது, அதை நீ வீணாக்கியதற்குத் தண்டனையாகவே உன்னை நான் அடித்தேன் " என சம்மனசு மொழிந்தார்.

புனித மோரிஸ் என்பவர் பக்திமான். ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கத் தாமதித்த குற்றத்திற்காக தமக்கிருந்த வசதிகளை யெல்லாம் விட்டு, சாகும்வரை யாத்திரிபோல் வாழத் தீர்மானித்தார்.

புனித யுசேபியுஸ் ஜெபித்துக்கொண்டிருந்தார். பராக்கு வந்தது. அதை முற்றிலும் அகற்றவில்லை. அதற்குத் தண்டனையாக உலக பொருட்களை இனி பார்ப்பதில்லை என்று உறுதி செய்தார்.

புனித பவுலா என்பவள் தன் சிறு குற்றத்திற்காகவும் எவ்வளவு புலம்புவாளென்றால், உலகிலேயே மிகப் பெரிய குற்றவாளிபோல் அவள் தோன்றுவாள் என புனித ஜெரோம் அவளைப்பற்றி எழுதியிருக்கிறார்.

இதையெல்லாம் நினைக்கையில் நான் மிக வெட்கமடைகிறேன். நான் கத்தோலிக்கன் என்ற பெயருக்கே தகுதியற்றவன். சாவான பாவங்களை மாத்திரம் விலக்குவதுடன் கத்தோலிக்கன் ஒருபோதும் திருப்தியடையமாட்டான். அற்பப் பாவத்தையும் விலக்க அவன் தன்னாலானதையெல்லாம் செய்வான்

நான் இனி புண்ணியங்களை அனுசரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பேன். கடவுளுக்காக எல்லாவற்றையும் உத்தமமானவிதமாகச் செய்ய முயல்வேன். அர்ச்சியசிஷ்டனாவதே என் ஏக நோக்கமாயிருக்கும்.