குருக்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் செலுத்துவோம்!

முன்பெல்லாம் கத்தோலிக்கக் குரு ஒருவரைக் கண்டதும் "சுவாமி, சர்வேசுரனுக்குத் தோத்திரம்" என்று சொல்லி அவருக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் இருந்தது. இன்று அது அடியோடு காணாமல் போய்விட்டது. 

நாம் குருக்களைக் குற்றம் சொல்லத் துணியாதிருப்போம். தங்கள் நன்மை தீமை பற்றி அவர்கள் இறுதி நாளில் கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பார்கள். நமக்கு அந்தக் கவலை வேண்டாம். மாறாக, அவர்களுக்காக ஜெபிப்போம். 

நாம் குருக்களுக்கு வணக்கம் செலுத்துவது, தங்கள் குருத்துவத்தின் மேன்மையை அவர்கள் புரிந்து கொள்ளச் செய்யும் சாதனமாக இருக்கிறது என்பதை மறவாதிருப்போம்.


குருக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

''சாந்தமும் இருதயத் தாழ்ச்சியுமுள்ளவராகிய" கிறீஸ்துநாதரின் குருத்துவத்தை அவர்கள் தங்களில் கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகளைச் சந்தித்தல், அவர்களது தேவைகளைச் சந்தித்தல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், அவஸ்தைப்பூசுதல் (நோயிற் பூசுதல்) போன்ற குருத்துவப் பணிகளில், சேசுநாதரின் இந்த சாந்தமும், இருதயத் தாழ்ச்சியும், ஞான காரியங்களில் அக்கறையும் வெளிப்பட வேண்டும். "உங்களுக்குள் எவனாவது தலைவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியனாயிருப்பானாக" (மாற்கு 10:44) என்ற சேசுவின் கட்டளையை அவர்கள் நினைவில் கொள்வார்களாக. இதனால் தானே பாப்பரசரும் கூட, "ஆண்டவரின் ஊழியர்களின் ஊழியன்" என்று தமது மடல்களில் கையொப்பமிடுகிறார்!

மேலும், தங்கள் குருத்துவ அடையாளங்களை (குருத்துவ உடை) வெளியில் எப்போதும் தரித்திருக்கும்படி அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். அது விசுவாசிகளின் மனதில் குருத்துவத்தின் மீதான சங்கையையும், குருக்களை மதிக்கும் பண்பையும் வளர்ப்பதாக இருக்கும்.