இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆன்மாவிற்கு உண்மையான விடுதலையாக இது இருக்கிறது

41. (6) இப்பக்தி முயற்சி ஆன்மாவை, சர்வேசுரனுடைய பிள்ளைகளுக்குரிய சுயாதீனத்துடன் விடுதலைப் படுத்துகிறது. 

நம்முடைய அன்புள்ள எஜமானியாகிய மரியாயின் அன்பிற்காக நாம் சுயாதீனமாய் நம்மையே அடிமைத்தனத்திற்குத் தாழ்த்துவதினால், அவர்கள் அதற்கு நன்றியாக நம் இருதயத்தை விரிவடையச் செய்வார்கள்; நம் சிநேகத்தை தீவிரப்படுத்துவார்கள்; கடவுளின் கட்டளைகளின் பாதையில் நீள்நடை நடக்கச் செய்வார்கள்; சோர்விலிருந்தும், துயரத்திலிருந்தும், வீண் சந்தேகக் குழப்பங்களிலிருந்தும் ஆன்மாவை விடுவிப்பார்கள். 

சேசுவின் ஆக்னஸ் தாயாரை, (1634-ல் அவ்வெர்ன் என்ற இடத்தில் லாஞ்ஜேக் என்ற மடத்தில் புனித மரணமடைந்த சாமிநாதர் சபையைச் சார்ந்த கன்னிகை) அவர்களைச் சோதித்த கொடிய வேதனைகளிலிருந்தும் திகைப்புகளிலிருந்தும் விடுவிக்கும் நிச்சயமான வழியாக இந்தப் பக்தி முயற்சியைத்தான் நமதாண்டவர் அவர்களுக்குப் படிப்பித்தார். "என் அன்னையின் அடிமையாக உன்னை ஆக்கிக்கொள்” என்று கூறினார். அத்தாயாரும் அவ்வாறு செய்ய, ஒரு விநாடியில் அவர்களுடைய குழப்பங்கள் நின்று போயின.

இது திருச்சபையின் ஆலோசனையையும், அர்ச்சிஷ்டவர்களின் மாதிரிகையையும் பின்பற்றி நடப்பதாகும். 

42. இப்பக்தி முயற்சி நியாயமானபடி அங்கீகாரம் பெற்றிருப்பதைக் காட்டுவதற்கு அதற்கு ஆதரவாகக் கூறுகிற பாப்பரசரின் ஆணைமடல்களையும், மேற்றிராணிமாரின் நிரூபங்களையும், அதற்கு வழங்கப்பட்டுள்ள பலன்களையும், அதன் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சபைகளையும், அதை அனுசரித்து வந்துள்ள பல அர்ச்சிஷ்டவர்களையும் மதிப்பு வாய்ந்த பெரியவர்களையும் பற்றிக் கூற வேண்டியது அவசியமாகும். ஆனால் நேரமின்மையால் அதையெல்லாம் இங்கு நான் எழுதவில்லை.