இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயம்!

தன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவன் அல்ல, தாராளமுள்ள மனிதனே புகழப்படத் தகுதியுள்ளவனாக இருக்கிறான். இந்த உண்மை எல்லாப் புகழ்ச்சியிலிருந்தும் உடனடியாக நம்மை விலக்குகிறது. நாம் நீதியுள்ளவர்களாகக் கூட இல்லை - நாம் நம் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாகவும், செலுத்த முடியாதவர்களாகவும் கூட இருக்கிறோம். நாம் ஒரு மோசமான மின்சார மோட்டாரைப் போன்றவர்கள். அது ஏராளமான மின்னோட்டத்தைப் பெற்றுக் கொணடு, மிகச் சிறிய அளவு மின்சக்தியை மட்டும் உற்பத்தி செய்கிறது. இந்த வீணடிப்பு பயங்கரமானது. நாம் கடவுளிடமிருந்து எல்லாவிதமான பொக்கிஷங்களையும், அளவற்ற மதிப்புள்ள பொக்கிஷங்களையும் பெறுகிறோம். ஓ, எவ்வளவு அற்பமும், பலவீனமானதுமாகிய அரைகுறை நேசச் செயல்களை நாம் கடவுளுக்குச் செலுத்துகிறோம்! கடவுளின் இரக்கம் அளவற்றதாக இல்லாதிருந்தால், அவருடைய பார்வையில் ஒருநாள் கூட நீடித்திருக்க நம்மால் முடிந்திராது. நாம் எல்லோருமே உடனடியாக நரகத்திற்கு அனுப்பப்பட்டிருப்போம். ஆனால் சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக! அவருடைய இரக்கம் எல்லையற்றதாக இருக்கிறது. நாம் மிகவும் கஞ்சத்தனமுள்ளவர்களாகவும், மிகவும் வீணாக்குபவர்களாகவும் இருக்கும்போதும் கூட, அவர் தொடர்ந்து தாராளமுள்ளவராக இருக்கிறார். ஆனால் இந்த எல்லா வீணடிப்புக்காகவும் நாம் மன்னிக்கப்பட விரும்பினால், நம் வீண்தன்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியென்று நம் ஆண்டவர் கூறினார். “உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாக் காரியங்களையும் நீங்கள் செய்து முடித்த பிறகு, “நாங்கள் பயனற்ற ஊழியர்கள்” என்று சொல்லுங்கள்” என்று அவர் கூறினார். தனக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடித்தவன் யார்? யாருமில்லை, அர்ச்சிஷ்டவர்கள் கூட இல்லை. உதாரணமாக, நாம் பெருமளவில் செய்யத் தவறிவிடுகிற ஒரு காரியம் உள்ளது. நம் இரட்சகர் நம்மை நேசித்தது போல, நாமும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்று அவர் கூறினார் (அரு. 13:34). நாம் எந்த அளவுக்கு நம் அயலானை நேசிக்கிறோம். நம்மை நாம் நேசிக்கிற அளவுக்கு அவனை நாம் நேசிப்பதில்லை - அதுதான் பழைய சட்டத்தின் அடிப்படையாக இருந்தது. கடவுள் நம்மை நேசித்த அளவுக்கு நாம் நம் அயலானை நேசிக்க வேண்டுமென்று புதிய சட்டம் நமக்குக் கட்டளையிடுகிறது! கடவுளின் இருதயத்தையே நமக்குள் கொண்டிருந்து, அதைக் கொண்டு எல்லா மனிதர்களையும் நாம் நேசிக்காத வரையில், அந்தச் சட்டத்தை நம்மால் நிறைவேற்ற முடியாது! நாம் அர்ச்சிஷ்டவர்கள் ஆகும்படி கட்டளையிடப்படுகிறோம் என்பதை அது காட்டுகிறது. ஏனென்றால் கிறீஸ்துநாதர் நம்மை நேசித்தது போல, நாம் நம் அயலானை நேசிக்க வேண்டுமென்று அவர் நமக்குக் கட்டளையிட்டார். ஓர் அர்ச்சிஷ்டவன்தான் தன் அயலான் மட்டில் தெய்வீக நேசத்தைக் கொண்டிருக்க முடியும். ஆனாலும், நாம் எல்லாக் காரியங்களையும் செய்து முடித்து, அதனால் நேசத்தின் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்ட பிறகும் கூட, “நாங்கள் பயனற்ற ஊழியர்கள்” என்று அப்போதும்கூட நாம் நம்மிடமே சொல்லிக் கொள்ள வேண்டும். ஆகவே நீ இப்போது எவ்வளவு பயனற்றவனாக இருக்கிறாய் என்பதை உணர்ந்து கொள்ள முயற்சி செய். அப்படியானால், தன் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்துகிறவனும், எல்லாவற்றிற்கும் மேலாக, தான் கொடுக்கக் கடமைப்பட்டிருப்பதற்கும் மிக அதிகமாகக் கொடுப்பவனுமாகிய மனிதன் மட்டுமே புகழப்படத் தகுதியுள்ளவனாக இருக்கும்போது நாம் எப்படி எவ்விதப் புகழ்ச்சியையும் ஏற்றுக் கொள்ளத் துணிய முடியும்? மிக அற்பமான புகழ்ச்சியையும் கூட நாம் ஏற்றுக் கொள்கிற போது, அல்லது அதைவிட மோசமாக, நம்மையே நாம் புகழத் துணிகிற போது, கடவுளின் கண்களில் நாம் மிகவும் அநீதமுள்ளவர்களாக, ஆம், கடவுளின் மகிமையைக் கொள்ளையடிக்கிறவர்களாகக் கூட இருக்கிறோம்.

“தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகிற மனுஷன், கடவுளுக்குக் கோபமூட்டுகிறான். மனிதருடைய ஸ்துதிகளை ஒரு மனுஷன் ஏற்றுக் கொள்கிற போது, அவன் மெய்யான புண்ணியங்களிலிருந்து விலக்கப்படுகிறான்” என்று கிறீஸ்துநாதர் அநுச்சாரம் கூறுகிறது. இப்போது எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரியதாயிருக்கிற சேசுவின் திரு இருதயத்தை நோக்கி நாம் திரும்புவோம். மனிதன் ஆவது அவருடைய கடமையாக இருந்ததா? கடவுள் காப்பாராக! புழுக்களாகிய நம் மட்டில் கடவுளுக்கு எவ்விதக் கடமையுமில்லை! நம் கடன்களைச் செலுத்தும்படியாக மனிதனான பிறகும் கூட, அதைச் செய்யும்படி அத்தகைய பயங்கரத்துக்குரிய சாவை அவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமா? இல்லை. ஒரு சிறிய ஜெபத்திற்குப் பிறகு அவர் தம் மோட்சத்திற்கே திரும்பிப் போயிருக்கலாம். நம் கடன்கள் திருப்பிச் செலுத்தப் பட்டிருக்கும். விலையேறப்பெற்ற அவருடைய திரு இரத்தத்தின் ஒரு துளியும் கூட, ஓராயிரம் உலகங்களின் கடன்களை அடைக்க வல்லதாயிருந்தது! அப்படியிருக்க, நாம் கற்பனை செய்யக் கூடிய மிகக் கொடுமையான மரணத்தை, அத்தகைய பயங்கர மரணத்தை அவர் ஏன் தெரிந்து கொண்டார்? நம் இரட்சணியத்திற்கு எது தேவையாயிருந்ததோ, அதை விட அதிகமானவற்றை ஏன் செய்தார்? ஏன் இவ்வளவு தாராளம்? ஒரேயொரு காரணத்திற்காக. அவர் நம்மை வார்த்தைக்கெட்டாத விதமாக நேசித்தார். தமது நேசத்தின் நிரூபணத்தை நமக்குத் தர அவர் ஆசைப்பட்டார். அதுதான் உண்மையான தாராளம், உண்மையாகவே புகழப்படத் தகுதியுள்ளதாகிய நேசம். இத்தகைய அளவற்ற நேசத்தைப் பார்த்து, நாம் அவரை நேசித்து, அவரில் நம்பிக்கை வைத்து, அதனால் இரட்சிக்கப்படும் படியாகவும், உயர்ந்த விதமாக சன்மானம் அளிக்கப்படும்படியாகவும், அவர் நம்மை இவ்வளவு அளவற்ற விதமாகவும், இவ்வளவு தாராளமாகவும் நேசித்தார், மிகவும் காணப்படக் கூடிய விதமாக அதை நிரூபித்தார். “எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரியவர்” என்ற சொற்றொடரை நீ கேட்கும்போது, சிலுவையின் மீது அவமானத்திலும், அச்சத்திற்குரிய வாதைகளுக்கு மத்தியிலும் மரித்துக் கொண்டிருந்த சேசுவின் உடைந்த இருதயத்தை நினைத்துக் கொள்! எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரியவர்! ஓ சேசுவே, நாங்கள் எங்களுக்கென எவ்வித ஸ்துதி புகழ்ச்சியையும் ஏற்றுக் கொள்ள எங்களை ஒருபோதும் அனுமதியாதேயும். எங்கள் ஜீவிய நாட்கள் முழுவதிலும், உமது திவ்ய இருதயத்தைப் போற்றி ஸ்துதித்து, நேசிப்பதை நிறுத்தி விட எங்களை ஒருபோதும் அனுமதியாதேயும்.


எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!