28 ஆகஸ்ட் 1944.
ஜெருசலேமில் சுவக்கீனையும், அன்னம்மாளையும் காண்கிறேன். அவர்கள் சக்கரியாஸ், எலிசபெத்துடன் இருக்கிறார்கள். ஒரு வீட்டிலிருந்து அவர்கள் வருகிறார்கள். அது அவர்களுடைய நண்பர்களுக்கு, அல்லது உறவினர்களுக்குச் சொந்தமாயிருக்க வேண்டும். சுத்திகரச் சடங்கிற்காக அவர்கள் தேவாலயத்தை நோக்கிச் செல்கிறார்கள்.
கட்டுத் துகிலால் முழுவதும் மூடப்பட்ட குழந்தையை அன்னம்மாள் ஏந்திச் செல்கிறாள். ஓர் அகன்ற கம்பளித் துணியால் முற்றிலும் பொதிந்து வைத்திருக்கிறாள். அது மிருதுவாயும் உஷ்ணமாயும் இருக்க வேண்டும். அவள் எவ்வளவு கவனத்தோடும், அன்போடும் ஏந்திச் செல்கிறாள், கரிசனத்தோடிருக்கிறாள் என்று விவரிக்க இயலாது. கம்பளியின் ஓரத்தை உயர்த்தி குழந்தை தடையில்லாமல் சுவாசிக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறாள். பின் அந்தக் கூரிய குளிர் படாமல் துணியை சரிப்படுத்துகிறாள். ஆகாயம் தெளிவாக உள்ளது. ஆனால் அது குளிர்காலத்தில் குளிரான ஒரு நாள்.
எலிசபெத் கைகளில் சில பொட்டலங்கள் உள்ளன. சுவக்கீன் இரண்டு பெரிய வெள்ளை நிற ஆட்டுக் குட்டிகளை கயிற்றால் இழுத்துச் செல்கிறார். வெண்மையான கம்பளி மேல் வஸ்திரத்துக்கடியில் அவர் அணிந்துள்ள சணல் ஆடையில் அவரின் தோற்றம் எடுப்பாயிருக்கிறது. சக்கரியாஸின் கையில் ஒரு பொருளும் இல்லை. அவர் ஸ்நாபகர் பிறந்த போது அவரை நான் கண்டதைவிட அதிக இளமையாயிருக்கிறார். சக்கரியாஸ் தம் முழு மனித வடிவிலும், எலிசபெத்தம்மாள் நிறை வயதானாலும், புதிய உருவத்திலும் காணப்படுகிறார்கள். அன்னம்மாள் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் எலிசபெத்தும் உறங்கும் சிசுவின் முகத்தின் மேல் குனிந்து பரவசத்துடன் பார்க்கிறாள். இருண்ட ஊதா நிற ஆடையும், தலையை மூடி தோளில் படியும் முக்காடும், ஆடை நிறத்தை விட இருண்ட மேல் வஸ்திரமும் அணிந்துள்ள எலிசபெத் பார்வைக்கு நன்றாகவே காட்சியளிக்கிறாள்.
சுவக்கீனும் அன்னம்மாளும் தங்கள் மிகச் சிறந்த ஆடைகளில் ஆடம்பரமாய்க் காணப்படுகிறார்கள். ஏனோ அவர் தம் இருண்ட பழுப்பு நிற மேல் வஸ்திரத்தை அணியவில்லை. அதற்குப் பதிலாக ஒரு நீண்ட துகிலை - இருண்ட சிவப்பு - அதாவது அர்ச். சூசையப்பரின் சிவப்பு என்று இப்பொழுது நாம் சொல்கிறோமே, அந்த நிறத்தில் அணிந்திருக்கிறார். அதன் ஓரங்கள் புதிதாக அழகாயிருக்கின்றன. அவர் ஒரு நீண்ட சதுரப்பட்டியை முக்காடு போல், ஒரு தோல் வாரினால் கட்டியிருக்கிறார். எல்லாமே புதிதாயும், சிறந்த வகையாயும் உள்ளன.
அன்னம்மாள் இன்று இருண்ட நிறத் துணிகளை உடுத்தவில்லை. வெளிறிய மஞ்சளான, தந்தம் போன்ற நிறத்தில் ஆடை. இடையிலும் கழுத்திலும் மணிக்கட்டிலும், வெள்ளியும், தங்கமுமான கச்சையால் அது எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. அவள் தலை, மெல்லிய நெசவிலே பூப்போட்ட துணியால் மூடப்பட்டு ஒரு சிறந்த பட்டியால் நெற்றியிலே பிடிக்கப்பட்டுள்ளது. பூ வேலை செய்த கழுத்தணியும், காப்புகளும் அணிந்து அவள் ஓர் அரசியைப் போலிருக்கிறாள். உடையால் மட்டுமல்ல, அதை அணிந்துள்ள முறையாலும், விசேஷமாக இள மஞ்சள் நிற மூடு துகிலாலும் அவ்வாறு காணப்படுகிறாள். அது கிரேக்க பாணி பின்னலில் ஓரம் தைக்கப்பட்டு அழகான பூ வேலை செய்யப்பட்டிருக்கிறது.
எலிசபெத் அன்னம்மாளிடம்: “உன் திருமணத்தன்று இருந்தபடியே நீ காணப்படுகிறாய். அப்போது நான் ஒரு சிறுமியை விட சற்றுப் பெரியவளாயிருந்தேன். நீ எவ்வளவு அழகாயும் மகிழ்ச்சியாயுமிருந்தாயென்று எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது” என்கிறாள்.
“இப்போது அதைவிட மகிழ்ச்சியாயிருக்கிறேன்... அதே உடையை இந்த சடங்கிற்கு உடுத்தத் தீர்மானித்தேன். இதற்காகவே அதை வைத்திருந்தேன்... இந்த சந்தர்ப்பத்தில் அதை அணிவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
“ஆண்டவர் உன்னை மிக அதிகமாக நேசித்திருக்கிறார்...” என்கிறாள் எலிசபெத் பெருமூச்சு விட்டபடி.
“அதனால்தான் நான் மிகவும் நேசிக்கிற பொருளை அவருக்குக் கொடுக்கிறேன். இந்த என் மலரை அவருக்கு அளிக்கிறேன்” என்கிறாள் அன்னம்மாள்.
“அதற்குரிய நாள் வரும்போது இதை உன் இருதயத்திலிருந்து எப்படிப் பிய்த்தெடுக்க உனனால் முடியும்?”
“அது என்னிடம் இருக்கவில்லை; கடவுள்தான் அதை எனக்குத் தந்தார் என்பதை நினைத்துக் கொள்வேன். எப்போதையும் விட இப்போதுதான் நான் அதிக மகிழ்ச்சியாயிருந்திருப்பேன். அவள் தேவாலயத்தில் இருக்கிறாள் என்று நான் எண்ணும்போது: “அவள் கிருபாசனப் பேழையின் பக்கத்திலிருந்து மன்றாடிக் கொண்டிருக்கிறாள்; இஸ்ராயேலின் தேவனிடம் மன்றாடுகிறாள்; எனக்காகவும் மன்றாடுகிறாள்” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அது எனக்கு சமாதானத்தைத் தரும். இன்னும்: “அவள் அவருக்கே முழுச் சொந்தமாயிருக்கிறாள். அவளை மோட்சத்திலிருந்து பெற்றுக் கொண்ட இந்த இரு வயதான மகிழ்ச்சியுள்ள பெற்றோர்களும் இறந்தபின்பும், நித்தியரான அவர் அவளுடைய தந்தையாயிருப்பார்” என்று நான் சொல்வேன். அப்போது அதைவிடக் கூடுதல் அமைதி எனக்குக் கிடைக்கும். என்னை நீ நம்பு: இந்தச் சிறு மகவு எங்களுடையது அல்ல என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். என்னால் எதுவுமே செய்ய இயலாதிருந்தது. அவர்தான் அவளை என் மடியில் வைத்தார். என் கண்ணீர்களைத் துடைக்கவும், எங்கள் ஜெபங்களையும் நம்பிக்கையையும் நிறைவேற்றவும் அது ஒரு தெய்வீகக் கொடையாயிருந்தது. அதனாலேயே அவள் அவருக்குச் சொந்தமாயிருக்கிறாள். அவளுடைய கொடுத்து வைத்த காப்பாளர்கள் நாங்கள்... இதனிமித்தம் அவர் வாழ்த்தப்படுவாராக!”
அவர்கள் தேவாலயத்தின் சுவர்ப் பக்கம் வந்து விட்டார்கள்.
அப்போது சக்கரியாஸ் மற்றவர்களைப் பார்த்து: “நீங்கள் நிக்கனோர் வாசலுக்குப் போங்கள். நான் குருவிடம் போய் அறிவிக்கிறேன். அதன் பின் நானும் வருகிறேன்” என்று கூறி, மண்டபங்களால் சூழப்பட்ட ஒரு பெரிய முற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு வளைவிற்குப் பின்னால் சென்று மறைகிறார்.
மற்றவர்கள் எதிரே வரும் மண்டப மேடைகளைத் தாண்டிச் செல்கிறார்கள். இதை நான் முன்பு கூறினேனா என்பது தெரியவில்லை: தேவாலயத்தின் அடைப்புச் சுவர் தரைமட்டத்தில் இல்லை. அது அடுக்கடுக்கான நில மேடைகளில் உயர உயரமாய் எழும்புகிறது. ஒவ்வொரு மேடையையும் அடைய படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு மேடையிலும் முற்றங்களும், மண்டபங்களும் இருக்கின்றன. வாசல் நடைகல் சலவைக் கல்லில், அல்லது வெண்கலத்தில் அல்லது தங்கத்தில் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சேர வேண்டிய இடத்தை அடையுமுன், நின்று அவர்கள் தங்கள் பொட்டலங்களை அவிழ்த்து, அதிலுள்ளவற்றை எடுக்கிறார்கள். அவை, அகன்று தட்டையான இனிப்புப் பதார்த்தம் என நினைக்கிறேன். எண்ணைப் பதத்தோடு உள்ளன. கொஞ்சம் வெண்நிற மாவும் ஒரு கூடைக்குள் இரண்டு புறாக்களும், சில பெரிய வெள்ளி நாணயங்களும் இருக்கின்றன. அவை பாரமுள்ளவை. அக்காலத்தில் ஆடைகளில் பைகள் இரா. இந்த நாணயங்கள் பைகளைக் கிழித்திருக்கும்.
அழகிய நிக்கனோர் வாசல் வந்து விட்டது. முழுவதும் கனத்த வெள்ளி பூசிய வெண்கலத்தில் செதுக்கப்பட்டது. குரு ஒருவர் கம்பீரமாக லினன் உடுப்பு அணிந்து நிற்கிறார். சக்கரியாஸ் அவர் பக்கத்தில் நிற்கிறார்.
அன்னம்மாள் மீது சுத்திகரத் தணணீர் தெளிக்கப்படுகிறது. பலிபீடத்தை நோக்கி வரும்படி அவள் அழைக்கப் படுகிறாள். குழந்தை இப்பொழுது அவள் கையில் இல்லை. வாசலுக்கு அடுத்த பக்கத்தில் நிற்கிற எலிசபெத்தம்மாளிடம் உள்ளது.
கத்துகிற பரிதாபமான ஒரு ஆட்டுக் குட்டியை இழுத்தபடி சுவக்கீன் அன்னம்மாளின் பின்னால் செல்கிறார். நான் மரியாயின் சுத்திகர சமயத்தில் செய்தபடியே இப்பொழுதும் செய்கிறேன்: கொல்வதை காணாதபடி கண்களை மூடிக் கொள்கிறேன்.
அன்னம்மாளின் சுத்திகரச் சடங்கு நடைபெற்று முடிகிறது. சக்கரியாஸ் தன் சக குருவிடம் ஏதோ மெல்லக் கூறுகிறார். அவர் புன்னகையுடன் தலையசைக்கிறார்.
பின் குரு, சேர்ந்து நிற்கின்ற அவர்களின் பக்கம் வருகிறார்; பெற்றோரின் மகிழ்ச்சிக்காகவும், வாக்குறுதிகளுக்கு அவர்களுடைய பிரமாணிக்கத்திற்காகவும் அவர்களை வாழ்த்துகிறார். அவருக்கு அவ்வுணவுப் பண்டங்களும், மாவும், ஆட்டுக் குட்டியும் வழங்கப்படுகின்றன.
“இந்த மகள் ஆண்டவருக்கு நேர்ந்தளிக்கப்பட்டவளா? அவருடைய ஆசீர்வாதம் இப்பிள்ளையுடனும், உங்களுடனும் இருப்பதாக! இதோ அன்னாள் வருகிறாள். பிள்ளையின் ஆசிரியைகளில் அவளும் ஒருத்தியாயிருப்பாள். ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் குமாரத்தி. அன்னா இங்கு வா. இச்சிறு பிள்ளை புகழ்ச்சிப் பலிப் பொருளாக தேவாலயத்திற்கு அளிக்கப்படுகிறாள். நீ அவளின் ஆசிரியையாக இருக்க வேண்டும். உன் வழிநடத்துதலின் கீழ் அவள் பரிசுத்தமாக வளருவாள்” என்கிறார் குரு.
நன்றாக நரை விழுந்த அன்னா குழந்தையைச் சீராட்டுகிறாள். குழந்தை விழித்து, தன் களங்கமில்லாத கண்களால், சூரிய ஒளியில் எல்லாம் வெண்மையாயும், பொன் நிறமாயும் இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறது.
சடங்குகள் முடிந்திருக்க வேண்டும். மரியாயை ஒப்புக் கொடுக்க எந்தத் தனிச் சடங்கையும் நான் பார்க்கவில்லை. குருவிடம் சொல்வது, அல்லது அதற்கும் மேலாக கடவுளிடம் அப்புனித ஸ்தலத்தில் சொல்வதே போதுமாயிருக்கக் கூடும்.
அப்போது அன்னம்மாள்: “தேவாலய காணிக்கையைச் செலுத்தி விட்டு, சென்ற ஆண்டில் நான் அந்த ஒளியைக் கண்ட இடத்திற்குப் போக வேண்டும்” என்கிறாள்.
பானுவேலின் அன்னா உடன்வர, அவர்கள் போகிறார்கள். ஆலய எல்லைக்குள் அவர்கள் போகவில்லை. இது ஒரு பெண் குழந்தையாதலால், மாதா தன் குமாரனைக் காணிக்கையாக்கச் சென்ற இடம் வரைக்கும் கூட போகவில்லை. அவர்கள் திறந்திருக்கிற கதவுக்கு மிக அருகாமையில் போய் உள்ளே பார்க்கிறார்கள். அங்கே மங்கல் வெளிச்சமே இருக்கிறது. உள்ளிருந்து சிறுமிகளின் இனிய பாடல்கள் கேட்கின்றன. விலையுயர்ந்த விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அவை, வெள்ளை முக்காடிட்ட தலைகளாலான இரண்டு உண்மையான லீலி மலர்ப் பாத்திகள் போல் காணப்படும் அவர்கள்மீது பொன்மய ஒளியைப் பரப்புகின்றன.
அன்னம்மாள், குழந்தை மரியாயைப் பார்த்து: “மூன்று வருடத்தில், என் லீலி மலரே, நீயும் அங்கேயிருப்பாய்” என்று வாக்களிக்கிறாள். குழந்தை உள்ளே காணப்படுகிறவற்றால் கவரப்பட்டுப் பார்க்கிறது. மெதுவான பாடலைக் கேட்டுச் சிரிக்கிறது.
“குழந்தை கண்டுபிடிக்கிறாள் போலிருக்கிறதே! இவள் அழகிய பிள்ளை. இவள் என் சொந்த மகளைப் போல் எனக்கு அருமையாக இருப்பாள். அன்னம்மாள், இதை நான் உனக்கு உறுதிகூறுகிறேன் - அப்படி இருக்க எனக்கு அருளப்பட்டால்” என்கிறாள் பானுவேலின் அன்னா.
அப்போது சக்கரியாஸ்: “உனக்கு அருளப்படும். அவளை நீ புனித சிறுமிகளுடன் ஏற்பாய். நானும் அங்கிருப்பேன். முதல் கணத்திலிருந்தே அவள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளக் கேட்க வேண்டுமென்று சொல்வதற்காக நானும் அங்கிருக்க ஆசிக்கிறேன்...” என்று கூறி எலிசபெத்தைப் பார்க்கிறார். அவள் கண்டுபிடித்தவளாய் பெருமூச்சு விடுகிறாள்.
சடங்கு முடிந்து பானுவேலின் அன்னா திரும்பிச் செல்கிறாள். மற்றவர்கள் பேசிக் கொண்டே வெளியே வருகிறார்கள்.
“இந்த மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் புகழ்ச்சிக்காகவும் நான் சிறந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளை மட்டுமல்ல, என் எல்லா ஆட்டுக் குட்டிகளையும் கொடுத்திருப்பேன்” என்கிறார் சுவக்கீன். காட்சி மறைகிறது.
சேசு கூறுகிறார்:
சாலமோன் தம் ஞானாகமத்தில் உரைக்கின்றார்: “குழந்தையாயிருப்பவன் என்னிடம் வரட்டும்” என்று. உண்மையாகவே தன்னுடைய அரணிலிருந்து, தன் பட்டணத்தின் மதிற்சுவர்களிலிருந்து நித்திய ஞானமானது நித்திய கன்னியைக் கொண்டிருக்கும் தன் ஆவலினால் அவளை நோக்கிச் சொன்னது: “என்னிடம் வா!” என்று. பின்னால் இம்மிகப் புனித கன்னிகையின் குமாரன் இவ்வாறு கூறுவார்: “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். ஏனென்றால் மோட்ச இராச்சியம் அவர்களுடையது. அவர்களைப் போல் இராதவர்களுக்கு என் இராச்சியத்தில் இடம் கிடையாது” என்று. ஒன்றன்பின் ஒன்றாக குரல்கள் வருகின்றன. மோட்சத்தின் குரல் சின்ன மரியாயிடம்: “என்னிடம் வா” என்று கூறும்போது, மனிதனின் குரல் சொல்கிறது: “நீங்கள் சிறு பிள்ளைகளைப் போல் இருப்பீர்களானால், என்னிடம் வாருங்கள்” என்று. அதைக் கூறும்போது அம்மனிதன் தம் தாயை நினைத்துக் கொண்டே சொல்வார்.
என் அன்னையை உங்களுக்கு ஒரு முன்மாதிரிகையாகக் கொடுக்கிறேன்.
ஒரு புறாவின் தூய எளிய இருதயத்தையுடைய உத்தம கன்னிகை இதோ! கெட்டுப் போன திரிபடைந்த பொய்யான மனப்பான்மையின் குரூரத்தால், காலத்தாலும் உலகத் தொடர்புகளாலும், அகந்தை கொள்ளாத கன்னி இவள்! ஏனென்றால் அவள் அவற்றை விரும்பவில்லை. மரியாயை நோக்கியபடி என்னிடம் வாருங்கள்.
நீ அவளைக் காண்கிறதினால் நீ சொல்: அவள் குழந்தையாக இருக்கையில் இருந்த அவளுடைய பார்வை, சிலுவையின் அடியிலும் அல்லது பரிசுத்த ஆவியின் வருகையின் மகிழ்ச்சியிலும் அல்லது அவளுடைய இமைகள் அவளுடைய மாசற்ற கண்களின் மீது கடைசித் தடவையாக மூடிய போதும் நீ கண்டதிலிருந்து அதிக வித்தியாசமாக இருந்ததா? இல்லையே!! இதோ இங்கே ஒரு சிசுவினுடைய நிச்சயமற்ற ஆச்சரியமடைகிற பார்வை. இதற்குப் பின் மங்கள வார்த்தை சமயத்தில் வியக்கும் அடக்கமுள்ள பார்வை. அதன் பிறகு பெத்லகேமில் தாயின் மகிழ்ச்சிப் பார்வை. அதற்குப் பின் என்னுடைய முதல், உந்நத சீடனின் ஆராதிக்கும் பார்வை. பின்னர் கொல்கொத்தாவில் வதைக்கப்பட்ட தாயின் வேதனைப் பார்வை. அதன்பின் உயிர்ப்பிலும், பெந்தேக்கோஸ்தே நாளிலும் பிரகாசிக்கிற பார்வை. அதற்குப் பின் பரவசமான துயிலின் இறுதிக் காட்சியில் மறைக்கப்பட்ட பார்வை. ஆனால் அவ்விழிகள் முதல் பார்வைக்குத் திறந்த போதும், அல்லது கடைசி ஒளியில் களைப்பால் மூடியபோதும், எத்தனையோ மகிழ்ச்சிகளையும் கொடூரங்களையும் கண்ட பிறகும் அவை தெளிந்த தூய்மையுள்ள அமைதியான வானம் போலவே எப்போதும் அவளின் வெற்றியின் கீழ் பிரகாசிக்கின்றன. கோபமோ, பொய்மையோ, அகங்காரமோ, இச்சையோ, பகையோ, வினோதப் பிரியமோ, தங்கள் புகை மேகங்களால் அவ்விழிகளை ஒருபோதும் மாசுபடுத்தியதில்லை.
அழுதாலும், சிரித்தாலும் ஆண்டவர் மேல் அன்போடு நோக்கியிருப்பவை கண்கள்தான். கடவுளுக்காக அன்பு பாராட்டுவதும், மன்னிப்பதும் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வதும் கண்கள்தான். கடவுள் மீதுள்ள அன்பினால் பசாசின் தாக்குதல்களால் வெல்லப்படாதவையும் கண்கள்தான். சாத்தான், இருதயத்துக்குட் செல்வதற்கு கண்களை மிக அடிக்கடி பயன்படுத்துகிறான். தூய்மையுடையவர்களும், அர்ச்சிஷ்டவர்களும், கடவுளை நேசிக்கிறவர்களும், பரிசுத்தமான, ஓய்வான, ஆசீர்வதிக்கிற கண்களைக் கொண்டிருக்கிறார்கள்.
“கண் சரீரத்தின் விளக்காக இருக்கின்றது. உன் கண் நன்றாயிருந்தால், உன் முழு சரீரமும் பிரகாசத்தால் நிறைந்திருக்கும்; ஆனால் உன் கண் நோயுற்றிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்” என்று நான் கூறினேன். ஆத்துமத்திற்கு ஒளியாகவும் மாம்சத்திற்கு இரட்சண்யமாகவும் இருக்கிற இத்தகைய கண்களை அர்ச்சிஷ்டவர்கள் கொண்டி ருந்தார்கள். ஏனெனில் மரியாயைப் போல் அவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் கடவுளையே நோக்கியிருந்தார்கள். அதையும்விட அவர்கள் கடவுளை ஞாபகப்பட்டார்கள்.
என் சிறு குரலே, என்னுடைய இந்த வார்த்தையை உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.