சலேசிய வேதபோதகங்களின் எதிர்காலம்!

(ஐந்தாவது வேதபோதகக் கனவு)

மற்றொரு சமயம் சலேசிய வேதபோதகங்களுக்காக எதிர்காலத்தின் கைகளில் இருந்த மாபெரும் காரியங்களைப் பற்றிய ஓர் ஒளிக்கீற்று டொன் போஸ்கோவுக்குத் தரப்பட்டது. அவர் 1886-ல் பார்சலோனாவுக்குச் சென்றிருந்தார். அங்கே பல வாரங்கள் அவர் தங்கியிருந்தபோது, அவருடைய புனிதத்துவத்தை வியந்து பாராட்டிய பெரும் எண்ணிக்கையிலான ஆர்வமிக்க மக்கள் அவருக்கு மட்டற்ற கருணையும், அன்பும் காட்டியதோடு, கிட்டத் தட்ட ஒரு புனிதருக்குரிய வணக்கமும் செலுத்தினார்கள்.

ஒரு நாளிரவில் தாம் பல சிறு மரங்கள் அடர்ந்த மேட்டு நிலங்களின் நடுவே எந்த நோக்கமுமின்றி அலைந்து திரிந்து கொண் டிருந்ததாக அவருக்குத் தோன்றியது. அப்போது திடீரென தம்மை நோக்கி ஓடி வந்த குழந்தைகளின் பெருங்கூட்டத்திலிருந்து வந்த ஒரு பேரிரைச்சலால் அவர் திடுக்கிட்டுப் போனார். அவர்கள் அவரை நோக்கிப் பரவச மகிழ்ச்சியோடு, “இதோ கடைசியில் ஒருவழியாக நீர் வந்து விட்டீர்! நாங்கள் மிக நீண்ட காலமாக உமக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இப்போது எங்களிடமிருந்து நீர் போய்விட நாங்கள் விட்டுவிட மாட்டோம்!" என்று கூவினார்கள். டொன் போஸ்கோ அங்கே குழம்பிப் போனவராகவும், என்ன செய்வது என்ற நிச்சயமில்லாமலும் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே திடீரென - டொன் போஸ்கோவிடமிருந்து இந்தக் கனவைக் கேட்ட டொன் விக்லியேட்டி விவரிப்பது போல - ஒரு இடைச் சிறுமியின் பொறுப்பில் இருந்த ஒரு பெரிய செம்மறியாட்டு மந்தை அங்கே தோன்றியது. அவள் அந்த ஆடுகள் நின்று கொண்டிருந்த இடத்தின் ஒரு பக்கத்தில் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி நிறுத்தத் தொடங்கினாள். அதே சமயம் சிறுவர்கள் மறு பக்கம் வரிசையாக நின்றார்கள். அதன்பின் அவள் டொன் போஸ்கோவிடம் திரும்பி, “உமக்கு முன்பாக இங்கே இருக்கிற எல்லாவற்றையும் நீர் காண்கிறீரா?” என்று கேட்டாள்.

“நிச்சயமாக, நான் எல்லாற்றையும் மிகத் தெளிவாகப் பார்க் கிறேன்” என்றார் டொன் போஸ்கோ.

“நல்லது. கிட்டத்தட்ட உமக்குப் பத்து வயதாயிருந்தபோது, நீர் கண்ட கனவு உமக்கு நினைவிருக்கிறதா?”

“தற்போதைக்கு அதை நினைவுக்குக் கொண்டு வர என்னால் முடியாது. என் மனம் மிகவும் களைத்திருக்கிறது.”

“கொஞ்சம் யோசியும். அப்போது சீக்கிரத்தில் எல்லாமே உம் நினைவுக்கு வந்து விடும்” என்றாள் அந்த இடைச்சிறுமி.

அதன்பின் அவள் டொன் போஸ்கோவிடமும், சிறுவர் களிடமும் தன்னைப் பின்தொடர்ந்து ஒரு பக்கமாக வரும்படி கூறினாள். “இப்போது இங்கிருந்து பாருங்கள்; நீங்கள் எல்லோரும் பாருங்கள், என்ன எழுதியிருக்கக் காண்கிறீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். என்ன பார்க்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

“நான் சில மலைகளையும், அதன்பின் கடலையும், அதன்பின் சில குன்றுகளையும், இன்னும் அதிக மலைகளையும், அதன்பின் மீண்டும் கடலையும் காண்கிறேன்” என்றார் டொன் போஸ்கோ.

“நான் வால்பரைஸோவைக் காண்கிறேன்” என்றான் சிறுவர் களில் ஒருவன்.

“நான் சாண்டியாகோவைக் காண்கிறேன்'' என்றான் மற்றொருவன்.

“என்னால் அந்த இரண்டு வார்த்தைகளையும் வாசிக்க முடிகிறது” என்றான் மூன்றாவதாக ஒருவன்.

“நல்லது. இப்போது இந்த இடத்திலிருந்து புறப்படுங்கள். அப்போது எதிர்காலத்தில் சலேசியர்கள் எவ்வளவு அதிகம் செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றிய ஓர் அனுமானம் உங்களுக்குக் கிடைக்கும். இப்போது இந்தப் பக்கமாகத் திரும்புங்கள்; இங்கிருந்து மனதிற்குள் ஒரு கோடு வரையுங்கள், அதன்பின் மீண்டும் பாருங்கள்” என்றாள் அந்த இடைச்சிறுமி.

“என்னால் மலைகளையும், குன்றுகளையும், கடல்களையும் காண முடிகிறது!” என்று வியந்தபடி கூறினார் டொன் போஸ்கோ .

சிறுவர்களும் சுட்டிக் காட்டப்பட்ட திசையில் கண்களைச் சிரமப்படுத்திக் கொண்டு பார்த்து விட்டு, ஆச்சரியத்தோடு ஒரே குரலாக, “எங்களால் பெக்கின் என்ற வார்த்தையை வாசிக்க முடிகிறது!” என்று கத்தினார்கள்.

அதன்பின் டொன் போஸ்கோ ஒரு பெரிய நகரத்தைக் கண்டார். அதனூடாக ஒரு அகன்ற ஆறு பாய்ந்தது. அது பல பாலங் களால் பிரிக்கப்பட்டிருந்தது.

“மிக நல்லது” என்றாள் அவர்களுடைய ஆசிரியையைப் போலத் தோன்றிய அந்தக் கன்னிகை. “இப்போது ஒரு கோடி முனை தொடங்கி மறுகோடி முனை வரை, அதாவது பெக்கினில் தொடங்கி, சாண்டியாகோ வரை ஒரு கோடு வரையுங்கள். உங்கள் கோடு ஆப்ரிக்காவின் நடுவிலுள்ள ஒரு புள்ளியைத் தொட்டுச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது சலேசியர்களால் செய்யப்பட இருக்கும் வேலையைப் பற்றிய ஒரு துல்லியமான அறிவு உங்களுக்குக் கிடைக்கும்” என்றாள் அவள்.

“ஆனால், நாங்கள் எப்படி இவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? தூரங்கள் பிரமாண்டமானவை; குறிக்கப்பட்ட இடங்கள் போய்ச் சேரக் கடினமானவை. சலேசியர்களோ மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்” என்று எதிர்ப்புத் தெரிவித் தார் டொன் போஸ்கோ.
“இதைப் பற்றி உம்மையே குழப்பிக் கொள்ளாதீர்” என்று பதிலுக்குக் கூறினாள் அந்த இடைச்சிறுமி. “இதெல்லாம் உமது மகன்களாலும், மகன்களின் மகன்களாலும் செய்யப்படும். சபை விதியையும், சலேசிய சபையின் உணர்வையும் அனுசரிப்பதில் அவர்கள் உறுதியாக நிலைத்திருந்தால் போதும்.”

“ஆனால், இந்த மக்கள் எல்லோரும் எங்கிருந்து வரப் போகிறார்கள்?” என்று கேட்டார் டொன் போஸ்கோ.

“வந்து பாரும். அங்கே முற்றிலும் தயாராகவும், கடுமையாக உழைக்க விருப்பமுள்ளவர்களாகவும் 500 வேதபோதகர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பால் அதிகமதிகம் பேரை உம்மால் காண முடிகிறது. சாண்டியாகோ தொடங்கி, ஆப்ரிக்காவின் மத்தியப் பகுதி வரைக்கும் ஒரு கோடு வரையும். இப்போது என்ன பார்க்கிறீர்?”

“பத்து ஸ்தலங்களை, அல்லது மையங்களை என்றால் பார்க்க முடிகிறது” என்று பதிலளித்தார் டொன் போஸ்கோ .

“நீர் பார்த்த அந்த மையங்கள் கல்வி நிலையங்களாகவும், நவசந்நியாச இல்லங்களாகவும் இருக்கும். அவை குறித்த காலத்தில், இந்த நாடுகளில் வேலை செய்வதற்கான வேதபோதகர்களின் படை ஒன்றை உருவாக்கும். இப்போது இந்தப் பக்கம் திரும்பும்; இங்கே ஆப்ரிக்காவின் மத்திய பாகம் முதல் பெக்கின் வரை, மேலும் பத்து மையங்கள் இருக்கின்றன. இவை மற்ற நாடுகளுக்கான வேத போதகர்களை வழங்கும். அதன்பின் உமக்கு ஹாங்காங், கல்கத்தா, மற்றும் இங்கே மடகாஸ்கர் வரைக்கும் மையங்கள் இருக்கின்றன. இவையும், மற்ற மையங்களும் தங்கள் இல்லங்களை, அதாவது கல்வி நிலையங்களையும், நவசந்நியாச இல்லங்களையும் கொண்டிருக்கும்.”

டொன் போஸ்கோ ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து பருகியபடியும் சுட்டிக் காட்டப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கூர்ந்து கவனித்தபடியும் நின்றார். அதன்பின் அவர் மீண்டும், “ஆனால் இப்போதும் கூட இவ்வளவு அதிகமான மக்கள் எங்கிருந்து வர முடியும் என்று எனக்குப் புரியவில்லை. இந்த இடங்களுக்கு வேதபோதகர் களை எப்படி அனுப்புவது? அங்கே நரமாமிசம் தின்னும் காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள். அங்கே பதிதர்களும், அஞ்ஞானி களும் இருக்கிறார்கள். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில், இவ்வளவு அதிகமானவற்றை எப்படி சாதிக்க முடியும்?” என்று கேட்டார்.

“கேளும், நான் உமக்குச் சொல்வேன். ஒரு மேலான நல்ல மனதை எப்போதும் கொண்டிருக்கப் பாடுபடும். அதன்பின் ஒரேயொரு காரியம்தான் இருக்கிறது: என் மகன்கள் மரியாயின் சொந்தப் புண்ணியத்தை இடைவிடாமலும், கடும் உழைப்பைக் கொண்டும் தங்களில் வளர்த்துக் கொள்ளும்படி பார்த்துக்கொள்வதுதான் அது.”

“நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றையும் எல்லாவற் றையும் நான் புரிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆலோசனைகளின்படியே நான் எல்லா இடங்களிலும் எல்லோ ருக்கும் போதிப்பேன்” என்றார் டொன் போஸ்கோ.

“இப்போது எங்கும் பரவிக் கொண்டிருக்கிற ஒரு தப்பறை யைப் பற்றி விழிப்பாயிரு” என்றார்கள் மகா பரிசுத்த கன்னிகை (ஏனெனில் அந்த இடைச் சிறுமி நம் திவ்விய அன்னையைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது!): தெய்வீக மற்றும் மானிடக் கலைகளை ஒன்றாகக் கலக்க மாணவர்களிடையே நிலவும் மனநிலை தான் அந்தத் தப்பறை. பரலோக அறிவு இவ்வுலகக் காரியங்களோடு ஒருபோதும் ஒன்றாகக் கலக்கப்படக் கூடாது.”

டொன் போஸ்கோ மீண்டும் பேச முனைந்த வேளையில், அந்தக் காட்சி முழுவதும் மறைந்து போயிற்று. அவருடைய கனவு முடிந்து போயிற்று.

“நம் தாய் மாமரி நம்மை எவ்வளவாக நேசிக்கிறார்கள்!” என்பதுதான் தாம் கண்டதை பார்சலோனாவில் தமது சலேசியர்களுக்கு விவரித்து முடித்தபின் டொன் போஸ்கோ கூறிய கடைசி வாக்கியமாக இருந்தது.