தேவ ஞானமானவரை நேசிப்பதற்கும், அவரைத் தேடுவதற்கும், அவரை அறிவது நமக்குத் தேவை!

நித்திய ஞானமானவரைப் பற்றிய அறிவைப் பெற நமக்குள்ள தேவை

8. நாம் அறியாத ஒருவரை நேசிக்க நம்மால் முடியுமா? அரைகுறையாக நாம் அறிந்துள்ள ஒருவரை ஆழமாக நேசிக்க நம்மால் முடியுமா? மனிதனாக அவதரித்த ஆராதனைக்குரிய நித்திய ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் மிகக் குறைவாக அறியப்பட்டிருப்பதாலும், அல்லது அவர் முற்றிலுமாக அறியப் படாதவராக இருக்கிறார் என்பதாலும் அன்றி, அவர் இவ்வளவு குறைவாக நேசிக்கப்படுவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

சேசுக்கிறீஸ்துநாதரைப் பற்றிய உன்னதமான அறிவு, பரலோகத்திலும், பூலோகத்திலுமுள்ள எல்லா அறிவுகளிலும் அதிக மேன்மை யுள்ளதும், அதிக ஆறுதல் தருவதும், அதிக பயனுள்ளதும், அதிக வீரியமுள்ளதும் இன்றியமையாததுமான அறிவாக இருக்கிறது.

9.1. முதலாவதாக, அது எல்லா அறிவுகளிலும் அதிக மேன்மையுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் அதன் கருப்பொருள் அனைத்திலும் அதிக மேன்மையுள்ளதும், அதிக பக்திக்குரியது மானது. அது : சிருஷ்டிக்கப்படாதவரும், மனிதனாக அவதரித் தவருமாகிய கடவுளாக இருக்கிறது. அவர் தம்மில் தெய்வீகத்தின் நிறைவையும், அதே விதமாக மனுஷீகத்தின் நிறைவையும், பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள பெரிதான காரியங்கள் அனைத்தையும், அதாவது காண்பவை, காணாதவையும், ஞான ரீதியானவையும், பருப்பொருள் சார்ந்தவையுமான அனைத்து சிருஷ்டிகளையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்.

நம் ஆண்டவர் கடவுளின் சகல கைவேலைகளின் சுருக்கமாக இருக்கிறார் என்றும், கடவுளிலும், அவருடைய சிருஷ்டிகளிலும் காணப்படும் உத்தம் இலட்சணங்கள் அனைத்தையும் அவர் தமக்குள் அடக்கியுள்ளார் என்றும் (கொலோ.1:16; 2:9 காண்க) அர்ச் க்றீ சோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார்.

'சேசுக்கிறீஸ்துநாதர் நீ விரும்பக் கூடியதும், விரும்ப வேண்டி யதுமான எல்லாமுமாக இருக்கிறார். அவருக்காக ஏங்கு அவரைத் தேடு, ஏனெனில் எந்த ஒப்பற்ற , விலைமதிக்கப்படாத முத்திற்காக நீ உனக்குள்ளதெல்லாம் விற்கத் தயாராக இருக்க வேண்டுமோ, அந்த முத்து அவரேதான்.''

"ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம். படைவீரன் தன் புஜ பலத்தைப் பெரிதாய் எண்ண வேண்டாம். செல்வந்தன் தன் செல்வங்களின் நிமித்தம் கர்வம் கொள்ள வேண்டாம். பெருமை அடைய விரும்புகிறவன், நம்மை அறியும் ஞானத் திலேயே பெருமை அடைய வேண்டும்" (எரேமி. 9:23-24). 

10. 2. தேவ ஞானமானவரை அறிவதை விட அதிக ஆறுதல் தருவது வேறு எதுவுமில்லை. அவர் சொல்வதைக் கேட்பவர்கள் பேறுபெற்றவர்கள். அவரை ஆசித்துத் தேடுபவர்கள் அவர் களிலும் பேறுபெற்றவர்கள்; அவருடைய சட்டங்களை அனுசரிப்பவர்கள் அனைவரிலும் அதிக பேறுபெற்றவர்கள். அவர்களுடைய இருதயங்கள் நித்திய பிதாவின் சந்தோஷமும், மகிழ்ச்சியும், சம்மனசுக்களின் மகிமையுமான அந்த அளவற்ற ஆறுதலால் நிரப்பப்படும் (பழ. 2:1-9).

தேவ ஞானமானவரின் அழகைப் பகுத்துணர்வதும், தெய் வீகக் கருணையின் அமுதால் போஷிக்கப்படுவதுமான ஆத்துமத்தின் மகிழ்ச்சியை மட்டும் நாம் அறிவோமானால், உன்னத சங்கீத மணவாளியோடு சேர்ந்து : "உமது நேசம் திராட்சை இரசத்தை விட சிறந்தது" (1:3) என்று நாமும் கூக்குர லிடுவோம். அது படைக்கப்பட்ட சகல இன்பங்களையும் விட பாரதூரமான அளவுக்கு மிகச் சிறந்தது. குறிப்பாக, "சுவைத்துக் காணுங்கள் (சங். 33:9), "சிநேகிதரே, புசியுங்கள், பிரியமானவர் களே குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்" (உந்.சங் 5:1) என்று தேவ ஞானமானவர் தம்மைக் கண்டு தியானிக்கிறவர்களிடம் சொல்லும் போது இது இன்னும் அதிக உண்மையாக இருக்கிறது. ஏனெனில் என்னோடு உரையாடுவது எந்த விதத்திலும் வெறுப்புக் குரியதாக இராது என்றும், என் தோழமை ஒருபோதும் சோர் வூட்டுவதாக இராது என்பதையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். என்னில் மட்டுமே நீங்கள் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கண்ட டைவீர்கள் (ஞான . 8:16). 

11. 3. நித்திய ஞானமானவரைப் பற்றிய இந்த அறிவு அனைத் திலும் மேன்மையுள்ளதும், அனைத்திலும் அதிக ஆறுதல் தருவதும் மட்டுமல்ல, மாறாக அது அனைத்திலும் அதிக பயனுள்ளதும், அதிக அவசியமானதுமாக இருக்கிறது. ஏனெனில் சர்வேசுரனையும், அவருடைய திருச்சுதனாகிய சேசுக்கிறீஸ்து நாதரையும் அறிவதிலேயே நித்திய ஜீவியம் அடங்கியுள்ளது (அரு. 17:3 காண்க).

ஞானியானவர் நித்திய ஞானமானவரிடம் பேசும் போது, "உம்மை அறிவதே உத்தம நீதியாயிருக்கிறது. உம்முடைய நீதியையும், வல்லமையையும் அறிவதோ நித்திய பாக்கியத்தின் அஸ்திவாரமாயிருக்கிறது" (ஞான. 15:3) என்கிறார். நாம் உண்மை யாகவே நித்திய ஜீவியம் அடைய விரும்பினால், நித்திய ஞான மானவரைப் பற்றி நாம் அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து கொள்வோமாக.

நித்திய அழியாமையின் வேர்கள் நம் இருதயத்தில் ஆழமாக இறங்க வேண்டுமென நாம் விரும்பினால், நித்திய ஞானமான வரைப் பற்றிய அறிவை நாம் நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். மனிதனாக அவதரித்த ஞானமாகிய சேசுக்கிறீஸ்து நாதரை அறிவது மட்டும் நமக்குப் போதுமானது. எல்லாவற் றையும் அறிந்துள்ளதாகத் தவறாக எண்ணுவதும், அவரை அறியாதிருப்பதும், முழு அறியாமையாக மட்டுமே இருக்கிறது.

12. அம்பு எய்பவன் தன் குறியின் மையத்தைத் தாக்க முடியா விடில், அதன் வெளிப்புறத்தைத் தாக்குவதால் அவனுக்கு என்ன பயன்? ஒரே அத்தியாவசியமான அறிவாகிய நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளாமல், அறிவின் மற்ற பிரிவுகள் அனைத்தையும் கற்றுக்கொள்வதில் நமக்கு என்ன நன்மை விளையக் கூடும்? அறிவின் மற்ற எல்லாக் கிளைகளும் சேசுநாதரைப் பற்றிய அறிவைத்தானே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன!

மாபெரும் அப்போஸ்தலரான அர்ச் சின்னப்பர் மிகப் பரந்த அறிவுள்ளவர், மனிதக் கல்வியறிவில் மிகச் சிறந்தவர் என்றாலும், தாம் சிலுவையில் அறையப்பட்ட சேசுநாதரையேயன்றி வேறொன்றையும் அறிந்தவராயிருக்க வேண்டுமென்று எண்ண வில்லை என்று அவர் கூறினார் (1 கொரி. 2: 2).

ஆகவே நாம் அவரோடு சேர்ந்து, 'எனக்கு லாபமாயிருந்த காரியங்களைக் கிறீஸ்துநாதருக்கு முன் நஷ்டமென்று மதித்தேன். என் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவை அறிகிற உன்னதமான அறிவைப்பற்றி நான் எல்லாவற்றையும் நஷ்டமென்று மதிக் கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அவை களைக் குப்பையென்றும் எண்ணுகிறேன்" (பிலிப். 3:7-8) என்று சொல்வோமாக.

நான் இதுவரை வழக்கமாக மிக அதிகமாக நேசித்து வந்த அறிவின் மற்ற பிரிவுகளில் இனியும் ஆர்வம் கொள்ள இயலாத அளவுக்கு, சேசுநாதரைப் பற்றிய இந்த அறிவு எவ்வளவோ அதிக அற்புதமானதாகவும், வசீகரமுள்ளதாகவும், ஆதாயமுள்ள தாகவும், வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது என்பதை இப்போது நான் கண்டுணர்கிறேன். மற்ற எல்லாமும் அர்த்தமற்றதாகவும், அபத்தமானதாகவும், மூடத்தனமான நேர விரயமாகவும் இருக் கிறது. 'நுட்ப வாக்கியங்களால் உங்களை ஒருவனும் ஏய்க்காத படிக்கு நான் இதைச் சொல்லுகிறேன். கிறீஸ்துநாதருக்குப் பொருந்தாததுமான தத்துவ சாஸ்திரத்தாலும், மாயமான தந்திர நியாயங்களாலும் ஒருவனும் உங்களை ஏய்க்காதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்" (கொலோ. 2:4, 8). போதகர்களின் அலங்காரமான, பளபளப்பான வார்த்தைகளாலோ, அல்லது தத்துவவாதிகளின் ஆடம்பரமான பதித வாதங்களாலோ ஏமாற்றப்பட நீங்கள் உங்களை அனுமதிக்காதபடி, சேசுநாதரே சகல அறிவினுடையவும் பாதாளமாக இருக்கிறார் என்று நான் அறிக்கையிடுகிறேன். "இஷ்டப்பிரசாதத்திலும் நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துவை அறியும் அறிவிலும் வளர்ந்து வருவீர்களாக" (2 இரா. 3:18).

நமதாண்டவரும், இரட்சகரும், மனிதனாக அவதரித்த ஞானமுமாகிய சேசுக்கிறீஸ்துநாதரை அறியும் அறிவிலும், இஷ்டப்பிரசாதத்திலும் நாம் வளரும்படியாக, பின்வரும் அத்தியாயங்களில் அவரைப் பற்றிப் பேசப் போகிறோம். ஆனால் முதலில், நாம் ஞானத்தின் வெவ்வேறு வகைகளைப் பற்றி சிந்திப்போம்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...