இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்யும்படி ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தீர்மானங்கள்.

தியானம் முடிந்த பின் பத்து நிமிஷமாகிலும், இந்தப் தீர்மானங்களின்படி, தியானத்தை நீ செய்தாயா என்று சோதிப்பது தியான நன்மைக்கு உத்தம வழி.

1. நான் இரவில் படுக்குமுன் மறுநாள் காலையில் செய்ய வேண்டிய தியானத்தின் பொருளைச் சுருக்கமாய் என் ஞாபகத்தில் வரச் செய்வேன்.

2. காலையில் எழுந்திருந்தவுடனே வீண் நினைவுகளை நீக்கி, நான் தியானிக்கும் பொருளை நினைத்து, அதற்கு இசைந்த உணர்ச்சிகள் மனதில் உண்டாகச் செய்வேன்.

3. தியானம் துவக்குமுன் நான் இருக்குமிடத்துக்கு இரண்டடி அப்பால் நின்று சர்வேசுரன் என்னைப் பார்க்கிறாரென்று விசுவசித்து வணக்கத்தோடு அவரை ஆராதித்து தரையை முத்தி செய்வேன்.

4. தியானத்துக்கு முன் தியான ஆரம்பச் செயல்களை மறந்து போகாமல் ஒழுங்காய்ச் செய்வேன்.

5. தியானம் முடிந்தபின் பத்து நிமிஷமாவது தியானம் செய்த வகையைப் பற்றி சோதித்து, நன்றாய்ச் செய்தால் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் செய்வேன்; குறைவாய்ச் செய்தால் துக்கப்பட்டு, அதன் காரணம் இன்னதென்று விசாரித்து, அடுத்த முறை குறைவின்றி செய்ய தீர்மானிப்பேன்.

6. முதல் வாரத்தின் தியானம் செய்யும்போது சூரியப் பிரகாசம், விநோதகாட்சி முதலிய சந்தோஷகரமானவைகளைப் பார்க்கமாட்டேன்.

7. தியான நாட்களில் சிரிப்பையும் சிரிப்புண்டாக்கக் கூடிய எதையும் நீக்கி மரியாதை அடக்கத்துடன் இருப்பேன்.

8. தகுந்த காரணமின்றி எவரோடும் பேசாமல் மெளனமா யிருப்பேன்.

9. பாவம், சேசுவின் பாடுகள் இவை பற்றி, தியானிக்கும் நாட்களில் என் ஆன்ம குருவின் உத்தரவோடு சில தபசு முயற்சிகள் செய்வேன்.

10. தேவநற்கருணையிலிருக்கும் சேசுநாதர் சுவாமியை அடிக்கடி சந்திக்கப் போவேன்.

11. தேவமாதாவின் உதவியை ஒருநாளில் பலமுறை சலியாமல் கேட்பேன்.

12. மனதில் கலக்கமும், பயமும், சலிப்பும் உண்டாகும் போது என் ஆத்தும் குருவிடம் போய் அவருக்கு என் மனதைத் திறந்து காண்பித்து, அவர் கொடுக்கும் ஆலோசனைப்படி நடப்பேன்.

விபரம் : தியான நாட்களில் செய்யத்தகும் தனி ஆத்தும் சோதனை, இங்கே குறித்திருக்கும் 12 விஷயங்களைச் சார்ந்தது. இவைகளை நீ சரியாய்ச் செய்தாயோ அல்லவோ என்று நீ ஆத்தும் சோதனை செய்யும் வேளையில் சோதிக்க வேண்டும். அப்படியே,

முதலாவது : நான் இரவில் படுக்குமுன் மறுநாள் செய்ய வேண்டிய தியானத்தின் பொருளைச் சுருக்கமாய் என் மனதில் வரச் செய்தேனா? இப்படியே மற்ற விஷயங்களைப் பற்றி உன்னையே நீ கேட்டு விசாரித்து உன்னைத் திருத்துவாயாக.