இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - நாராங்கோட்டை அரசனும் அரண்மனையும்

தோமையாரும் ஹாபானும் இந்திரபட்டணம் விட்டுக் கப்பலேறி நாராங்கோட்டை வந்தடைந்தனர். அது ஒரு பெரிய நகரம். கொந்தபோரஸ் எனும் அரசன் அதை ஆண்டு வந்தான். அவ்வூரானது தற்காலத்தில் சிந்துவுக்குத் தலைநகரமாகிய ஹைதராபாத் என்று எண்ணப்படுகின்றது. ஹாபான் அரசனை அணுகி சிரியா நாட்டினின்று மிக்க ஞானமுள்ள புண்ணியசீலர் ஒருவரைத் தன்னோடு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தான். அரசன் அன்னாரைக் காண அவாவுற்றுத் தன் முன் கொண்டுவரச் சொன்னான். தோமையார் மன்னன் முன் வரவே "நீர் எனக்கோர் உயர்ந்த அரண்மனை அமைக்கக் கூடுமா?'' என்று வினவினான் கொந்த போரஸ். "ஆம். என்னால் கூடும்'' என்று விடை பகர்ந்தார். அவ்வாறு அவர் மொழிந்தபோது தாம் இந்தியாவுக்கு வந்து கட்ட நினைத்த ஞான மாளிகையையே கருதிச் சொன்னார்.

அரசன் அவரைப் பட்டணத்து வாசலுக்கு வெளியே மைதானத்திற்குக் கொண்டுபோய் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, "எனக்கு இங்கு எத்தகைய மாளிகையைக் கட்டக் கூடும்'' என்று வினவினான். அதற்கு அப்போஸ்தலர் கோலொன்றை எடுத்துத் தரையில் அடித்தளம் போடவேண்டிய முறையைக் குறிப்பிட்டார். பின்னர் மாளிகையின் அளவுக்கு இசைந்தாற்போல் சுவர்கள், வாசல்கள், சன்னல்கள் அமைக்கப்படுவதை அளந்தார். அரச குடும்பத்தார் தங்குவதற்கேற்ற சிறந்த இல்லிட மும், அவருடைய பரிவாரங்கள், ஏவலாட்கள், அரண்மனைக் கைத்தொழிலாளர் முதலியோர் வசிக்கத் தனித்தனி இடங்களும், அவரவர் அந்தஸ்திற்குத் தகுந்தாற்போல் அளவும் அழகுங்கொண்ட விதமாய்க் கட்டுவதற்குரிய மாதிரியாக 'பிளான்' ஒன்று தரையில் எழுதி அரசனுக்குக் காண்பித்தார். இதைச் செய்கையில் கடவுள் பரலோகத்தில் ஒரு மாளிகைக்கு அஸ்திவாரம் இடுகிறறென்று எண்ணிக் செய்து கொண்டிருந்தார். பின் உயரப் போகும் தனது மாளிகையின் படத்தைத் தரையில் பார்த்துப் பிரமித்தான் மன்னன்; ஆனந்தம் கொண்டான். "நீ அரசர்களுக்கு வேலை செய்யத் தகுதியுள்ள சிறந்த சிற்பியே'' என்றும் போற்றினான். வேலையைத் துவக்கி நடத்தும் பொருட்டுப் பெரும் செல்வத்தையும் அளித்தான். திருப்தியாக எல்லாம் முடியுமென மன அமைதியோடு நாராங்கோட்டையை விட்டு, அரசன் முக்கிய அலுவலாய் வேற்றூர் போயினன்.

தேவநேசம் பற்றி எரிய, பிறர்நேசம் பொங்கி நின்றது அப்போஸ்தலரிடம். ஆகவே, மக்கள் எல்லாருக்கும் நல் வழி காட்டும் வண்ணம் கடவுளால் ஏவப்பட்டு, அந்த அரசின் பட்டணங்கள், கிராமங்களுக்குப்போய், ஏழைகளுக்கு அரசனின் பொருளைத் தாராளமாக வழங்கினார். நோயாளிகள் மீது இரங்கிக் கடவுள் இரக்கத்தால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். அன்னோரது அன்பையும் செல்வாக்கையும் இவ்வாறு கைப்பற்றவும், மெய்ம்மறையைப் போதிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது அவரது போதனையைக் கேட்ட பலர் ஞான தீட்சை பெற்றனர். அரசன் அவ்வூர் திரும்புவதற்குள் பல கோவில்களைக் கட்டி ஆங்காங்கு வழிபாடு நடத்தக் குருக்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆகவே, திருச்சபையானது பலத்த அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டிருந்ததென்று சொல்லலாம்.

நம் அப்போஸ்தலரின் நடவடிக்கைகள் இப்படியிருக்கையில், இந்திர பட்டணத்தரசன், முன்னர் தோமையார் உரைத்த இனிய மொழிகளைச் சிந்தித்து, கடவுள் அருளால் ஏவப்பட்டவனாய், தன் மகளோடும் மருமகனோடும் நாராங்கோட்டைக்கு வந்து சேர்ந்தான். சேர்ந்தவுடனே அப்போஸ்தலரைத் தேடி அடைந்து, அவரை அணுகி, "பராபரனுக்கு உகந்த புண்ணியரே! நாங்கள் கிறிஸ்துவின் மட்டில் முற்றும் பற்றுதல் கொண்டுள்ளோம். எங்களைச் சத்தியத்தில் நிலை நிறுத்துவீராக” என்று வெகு விநயமாகக் கேட்டான். அவர்கள் வேத சத்தியங்களை நன்கு கற்றுக் கொண்டபின், தோமையார் அவர்களைத் திருச்சபையின் மக்களாக ஏற்றுக்கொண்டார். அரசனுக்குச் சாந்திப்புஸ் என்றும், அவர் மருமகனுக்குத் தெனிஸ் என்றும், மகளுக்கு பெலா ஜியா என்றும் பெயரிட்டார்.

மெஞ்ஞானச் சுடர் கொளுத்தப் பெற்ற இந்திர பட்டணத்து அரசராகிய சாந்திப்புஸ் தமது அரசை முற்றும் துறந்து, தேவ ஊழியத்திலேயே தமது எஞ்சிய வாழ்நாளைச் செலவழிக்கத் தீர்மானித்து அத் தீர்மானத்தைத் தோமையாருக்குத் தெரிவிக்கவே அவரும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தாற்போல மகிழ்ச்சி கொண்டு, அதற்கு இசைந்து அவருக்கு டீக்கன் பட்டமளித்து, அவரைத் தமது பிரியாத் துணையாக வைத்துக்கொண்டார். தெனிசும் பெலாஜியாவும் தமது நாட்டுக்குச் சென்று கிறிஸ்துவை எங்கும் போதித்தார்கள். அதன் பலனாகப் பலர் மெய்யங் கடவுளைத் தொழுவாராயினர். அன்னோர்க்குப் பணிபுரிய ஒரு குருவானவரைத் தோமையார் அங்கு அனுப்பினார்.

இது நடந்த சில ஆண்டுகளுக்குப்பின் தெனிசும், அவன் மனைவியும் முழுமனத்துடன் உலகப் பற்று தலை ஒழித்துக் கடவுளைச் சேவிக்க விருப்பம் கொண்டனர். அவர்களது நற்கருத்தை ஆலோசித்து அறிந்த அப்போஸ்தலர், தெனிசை இந்திர பட்டணத்து மேற்றிராணியாராக அபிஷே கம் செய் தார். பெலா ஜியாவோ, தன்னைக் கடவுளுக்கு முழு துமே தியாகம் செய் தாள் என்பதற்கு அ றி கு றி யா க த் துறவறம் பூண்டாள்.

தெனிஸ் மேற்றிராணியார் இறந்திடவே புது அரசன் பட்டத்துக்கு வந்தான். அவன் பெலாஜியாவை கிறிஸ்து வத்திலிருந்து திருப்ப முயன்றான். சிலைகளுக்குத் தீப தூபங் காட்டவேண்டும் என்று உத்தமிக்குக் கட்டளையிட்டான். பல தடவை அச்சுறுத்தி வற்புறுத்தினான். அஞ்சா நெஞ்சம் படைத்த அப்புண்ணியவதி அதற்குச் சற்றேனும் ஒப்பவில்லை. ஆதலால் சினங்கொண்டு அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். தீர்ப்பைக் கேட்டாள் திட மனத்துடன்; உயிரை ஒப்புக்கொடுத்தாள் இயேசுவுக்கு; இந்தியா விற்கு முதல் வேதசாட்சியாக விண்ணக முடி பெற்றாள்.

இரண்டு ஆண்டுகாலம் வெளியூர் போயிருந்து நாராங் கோட்டைக்குத் திரும்பிவந்தான் கொந்தபோரஸ் அரசன். தான் ஏற்பாடு செய்த உன்னத மாளிகை முடிவு பெற்று இருக்குமென்று எண்ணி, அதைப் பார்க்க அவாக்கொண்டு "அப்போஸ்தலரால் கட்டப்பட்ட எனது மாளிகையைப் பார்க்க என்னுடன் வாருங்கள்" என்று தம் நேயர்களை அழைத்தான். "அரசே! மாளிகை ஒன்றும் கட்டப்பட வில்லையே. அவர் இதுகாறும் அரண்மனை வேலையைத் தொடங்கினதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நமது அரசில் பல திசைகளுக்கும் போய், மக்களுக்கு ஒரு நூதன மதத்தைப் போதித்து அவர்களில் பலரைத் தன்வசப்படுத்தி உள்ளார். அவர் போதிப்பது நவீனமாகவே இருக்கின்றது. அம் மார்க்கத்தைத் தழுவுவோருக்கு நித்திய வாழ்வு உண்டு என்றும், அவர் போதிக்குங் கடவுளை நம்பினோர் மரணத்துக்குப்பின் நித்திய வாழ்வு அடைவார்கள் என்றும் உறுதி கூறுகிறார். இதுமட்டுமன்று; பேயை ஓட்டுகிறார், நோயாளியை குணப்படுத்துகிறார்; இறந்தோரை உயிர்ப்பிக்கிறார். இத்தகைய அற்புதமான பேருபகாரங்களுக்கு யாதொரு நன்கொடையும் கைம்மாறும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. இவர் ஒரு மந்திரவாதி என்பதில் ஐயமன்று. நாடெங்கும் உம் குடிகளை ஏமாற்றிக்கொண்டு திரிகிறார். இத்தனைக் காலமாக ஊர்கள், கிராமங்களெல்லாம் சுற்றிவிட்டு இப்போது திரும்பவும் நாராங்கோட்டைக்கு வந்திருக்கிறதாகச் செய்தி” என்று அரசனுக்கு எடுத்து உரைத்தனர். அவர் சிநேகிதர். இதைக் கேட்டவுடன் எரிகிற கொள்ளியில் எண்ணெய் இட்டாற்போல அரசனின் சினம் அதிகரித்துப் பொங்கிற்று. "உடனே அவனை என்னிடம் கொண்டு வாருங்கள் " என்று சேவகருக்குக் கட்டளையிட்டான்.

அவ்வண்ணமே அப்போஸ்தலர் அரசன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார். " நான் கட்டளையிட்ட மாளிகையை இப்பொழுதே கட்டி முடிப்பாயாக; இன்றேல் நீ உயிர் துறப்பது நிச்சயம்'' என்று வெகுவாகச் சினந்து கூறினான் அரசன். "கொந்தபோரஸ் அரசே! உமது மாளிகை கட்டியாகி விட்டது. ஆனால், அது இவ்வுலகில் அல்ல, பரலோகத்தில் இருக்கின்றது. அப்பரகதியில் போய்ச் சேர்ந்த பிறகு தான் அதை நீர் பார்த்து வியப்புறுவீர்' என்று சாந்தமாகப் பகர்ந்தார் தோமையார். “ஆகா ! நீ எங்களை ஏமாற்றுகிறாய் போலும்; நாங்கள் முழு மூடர்கள் என்று நினைத்தாயா? உன் மாயப் பேச்சால் நான் மகிழ்ந்திட மாட்டேன். எச்சரிக்கை!'' என்று கதறிக் கொண்டு அப்போஸ் தலரையும் ஹாபானையும் சிறையிலிடக் கட்டளையிட்டான். அப்போஸ்தலரோ, இயேசுவுக்காக வாதனைப்பட வேண்டியதின் நிமித்தம் ஆனந்தங்கொண்டு ஹாபானோடு மறியலறை சென்றார். ஆனால் ஹாபான் திகைத்து நிற்பதைப் பார்த்து, "சிநேகிதா! அஞ்சாதே! கடவுள் மேல் நம்பிக்கையாயிரு. இவ்வுலகைவிட்டு விலகினவுடன் பரகதியில் நித்திய பாக்கியம் அடைவாய்'' என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

அரசனோ, அப்போஸ்தலரை எத்தகைய சாவுக்கு உட்படுத்துவதென ஆலோசித்துக் கடைசியாக இருவரையும் உயிருடன் தோலுரித்து நெருப்பிலிட்டுக் கொல்வதே தகுந்த தண்டனையாகுமெனத் தீர்மானித்தான்.