தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே!

இயற்கை வனப்பிற்கு மெருகூட்டும்வண்ணம் அமைந்துள்ள நானாவித மலர்களுக்கெல்லாம் இராணி யாகத் திகழும் தனிப் பெருமையுடைத்தது ரோஜா மலர்; சிருஷ்டிப்பின் சிகரமாக அமைந்த மனிதர்களுக்கெல்லாம் இராக்கினியாக விளங்கும் மாதரசியோ பரிசுத்த கன்னி மாமரி. எனவே திருச்சபை மிகப் பொருத்தமாக இம்மாதரசியை ரோஜா மலருக்கு ஒப்பிட்டு அவர்களைப் புகழ்கின்றது. ஆதலால் தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா மலர் மாமரிக்கு உபமானம்; மாமரி மலருக்கு உபமேயம்.

பரிசுத்த திரித்துவத்தின் அன்பு முழுமையும் கவர்ந்து கொண்டவர்கள் மாமரி: பிதாவாகிய சர்வேசுர னின் பிரிய குமாரத்தி அவர்கள்; சுதனாகிய சர்வேசுரனின் நேசத்தாய்; இஸ்பிரீத்துசாந்துவின் இனிய பத்தினி. ஏக திரித்துவ சர்வேசுரன் அவர்களிடம் மகத்தானவைகளைச் செய்தார். மனிதாவதாரத்தின் பரம இரகசியமும், இரட்சணியத்தின் பரம இரகசியமும் நிறைவேற அவர் மாமரியைத் தெரிந்து கொண்டார். இதனால்தான் திருச்சபை அன்னையைத் “தேவ இரகசியத்தைக் கொண் டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே” என்று வாழ்த்துகிறது.

ரோஜாச்செடி முட்கள் நிறைந்தது. ரோஜா மலர் இம்முட்செடியில் தோன்றிய போதிலும் முட்களால் குத்தப்படாது விரிந்து மலர்ந்து அழகை அள்ளி வீசுகிறது. கண்ணைக் கவரும் அதன் நிறம் அழகுக்கு அழகுசெய்கின்றது. ரோஜாவின் நறுமணமோ எங்கும் நிறைந்து உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்றது. ரோஜாவின் இத்தன்மை ஒவ்வொன்றிலும் தேவதாயின் பெருமை பிரதிபலிக்கின்றது என்று சொல்லலாம்.

ரோஜாச்செடி பாவ மாசு படிந்த மனுக்குலம். இச்செடியிலிருந்து தோன்றிய மலரே மாமரி. முட்கள் பாவங்களையும், துன்பங்களையும் காட்டுகின்றன. சிலர் யூதர்களை முட்களுக்கும், மாமரியை மலருக்கும் ஒப்பிடு வர். ஏவாளை முள் என்றும், மாதாவை அம்முள் மானிட சந்ததிக்கு இழைத்த தீங்கை நீக்க வந்த ரோஜா மலர் என்றும் கூறலாம். இதை எண்பிக்கவே கன்னிமாமரி ரோஜாச் செடியினிடையில் பன்முறை தோன்றினார்கள் போலும். 

லூர்து கெபியில் பெர்னதெத் என்னும் பெண்ணுக்குக் காட்சி தந்த போதும் முட்கள் நிறைந்த ரோஜாச் செடியின் மத்தியிலேதான் தோன்றினார்கள். ஆனால், மனுக்குல முட்செடியினின்று மலர்ந்த போதி லும் யூத முள், பூவாகிய கன்னிகையைத் தொடவில்லை. மானிட சந்ததியைப் புண்படுத்திய முள்ளாகிய ஏவாளின் மகளானாலும் அம்முள் நம் அன்னையைப் புண்படுத்த வில்லை. அவர்கள் என்றும் “ஜென்மப் பாவக் கணுவும், கர்மப் பாவப்பட்டையும் அணுகாது” ஆண்டவரின் வரப்பிரசாதம் நிறைந்து எழில் மிகுந்து விளங்கினார்கள்.

ஞான நூலாசிரியர்கள் மலர்களைப் புண்ணியங் களுக்கு ஒப்பிட்டுக் கூறுவது சகஜம். அதற்கொப்ப வயலட் என்னும் ஊதா நிறப்பூ தாழ்ச்சியின் அறிகுறி; தூய வெண்ணிற லீலி கற்பின் அடையாளம்; மலர்களின் இராணியான ரோஜாவோ புண்ணியங்களின் அரசியான தேவசிநேகத்தின் சின்னம். இரம்மியமளிக்கும் அதன் மதுர மணம், கன்னிமாமரியின் இருதய பீடத்தில் பற்றி எரியும் தேவ சிநேக அக்கினிக்கு அடையாளம்.

ரோஜா மலர் தன் அழகோடும், நிறத்தோடும், நறு மணம் வீசி யாவரையும் வசீகரிக்கின்றது. அதன் மணத்தை நுகர்ந்து இரசிக்கின்றனர் மாந்தர். மலர் அளிக்கும் மதுவுண்டு மகிழ்கின்றன வண்டினங்கள். இதுபோல, ரோஜா மலரான கன்னிமாமரியும் தன் வாசனையை எங்கும் பரப்புகின்றார்கள். “நாங்கள் கிறீஸ்துவின் நல்வாசனையாயிருக்கிறோம்” (கொரிந். 2:15) என்று வேதபோதகர்களைப் பற்றி அர்ச். சின்னப்பர் பகருகின்றார். 

அப்படியானால் கிறீஸ்துவின் தாயாகிய கன்னிமாமரியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? சேசுவின் சுகந்த வாசனை மரியாயின் வழியாகவே மானிடருக்கு வந்தது. மாமரி தனது சாதனை யினால் நமக்கு நல்வாசனையாயிருக்கின்றார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. அவர்களது புண்ணியங் களின் மணம் எங்கும் கமழ்கின்றது; இம்மணத்தால் மைந்தர்கள் அனைவரையும் தன்பக்கம் இழுக்கின்றார்கள். தன்னை அண்டுவோருக்கு அன்புத் தேன் அளித்து வேண்டிய உதவி புரியக் காத்திருக்கின்றார்கள்.

ஆனால், மரியாயின் புண்ணியங்களின் மணத்தை நுகர்ந்து அவர்களை அணுகுவோர் எத்தனை பேர்? அவளது அன்பின் ஆழத்தை அறிந்து அதைப் பருகுவோர் எத்தனை பேர்? பரிதாபம்! அன்னை வீசும் நறுமணத்தால் வசீகரிக்கப்படாது, உலகமளிக்கும் துர்நாற்றத்தால் இழக்கப்பட்டு அதைச் சுகித்து மோசம் போகிறவர்கள் அநேகர். உலக ஆசாபாசங்களில் அமிழ்ந்து பாவமாகிய முள்ளினால் குத்தப்பட்டுக் குற்றுயிராய்க் கிடப்பவர்கள் பலர். தேவசிநேகமும், பிறர் சிநேகமுமின்றி, நாஸ்திக மனப்பான்மைக்கும், பகைக்கும், வர்மத்திற்கும், குரோதத் திற்கும் தம்மைக் கையளித்துத் திரிகிறவர்களும் இல்லாமல் இல்லை. இப்பரிதாப நிலையிலிருந்து மீளச் சிறந்த நிவாரணம் பாவ மாசணுகா பரிசுத்த மாமரியை நோக்குவதே.

இவ்வுலகம் ஒரு சத்துரு. பாவமாகிய முட்கள் மத்தியில் நாம் வாழ்கின்றோம். துன்ப துரிதங்கள் நம் மைச் சூழ்கின்றன. ஆனால் நாம் அஞ்ச வேண்டிய தில்லை. கன்னிமாமரியும் இச்சூழ்நிலையிலேயே வாழ நேர்ந்தது. ஆயினும் பாவத்தால் பாதிக்கப்படவில்லை. ஆகையால், முட்களால் குலைக்கப்படாத இம்மலரிடத் தில் விரைந்தேகுவோம். ஆபத்து அடுத்து வரும்போது, “அம்மா” என்று அலறிக்கொண்டு அன்னையிடத்தில் அடைக்கலம் புகும் குழந்தையைப் போல, நாமும் நம் ஆத்தும சரீர இடைஞ்சல்களில் நம் அன்னையிடத்தில் தஞ்சமடைவோம். 

“தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா மலர்” இன்றும் வாடிவிடவில்லை. சிவப்பு நிறத்திற்கொத்த தேவசிநேகமும், பிறர் சிநேகமும் இன்றும் மங்கிக் குன்றிவிடவில்லை. அதற்கு மாறாக, அவர்களது நேசம் பன்மடங்கு அதிகரிக்க, பரலோகத்தில் நம் அன்னை பரலோக பூலோக இராக்கினியாக வீற்றிருக்கின்றார்கள். இந்த இராக்கினியிடத்தில் ஓடி, அவர்களது புண்ணியங்களின் சுகந்த வாசனையைச் சுகிப்போம். 

இதற்கோர் சிறந்த வழி ரோஜா மாலையெனப் புகழப்படும் (Rosarium) ஜெபமாலையே. இவ்வாடா மாலையைத் தொகுத்து ரோஜா மலருக்கொப்பான இராணிக்குச் சூட்டுவோம். கன்னிமாமரி தன் புண்ணிய மாதிரிகை யாலும், நற்குணங்களாலும் நம் ஜீவியத்தை நலம்படச் செய்வார்கள். அபரிமிதமாய் புண்ணிய பரிமளம் வீசி கஷ்டமான புண்ணிய பாதையை இலகுவாக்கி தன் கரங்களால் என்றும் நம்மை அரவணைப்பார்கள்.

“பரிசுத்த தாயே! பாவமாசுற்ற சந்ததியில் உதித்த போதிலும், அதனால் பாதிக்கப்படாத உத்தமி நீர். தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே! உமது புண்ணியங்களின் நறுமணம் எங்கும் கமழுகின்றது. உமது தேவ சிநேகத் தீ எங்கும் பிரகாசிக்கின்றது. இரக்கமுள்ள தாயாரே! இப்புண்ணிய பரிமளத்தைச் சுகித்து, நாங்கள் கிறீஸ்துவின் நல் வாசனையாயிருக்க தயை செய்தருளும். உமது தேவ சிநேகக் கனலால் எங்கள் உள்ளங்களையும் சுட்டெரித்தருளும். முட்களால் பாதிக்கப்படாத ரோஜா மலரே! எங்களைச் சூழ்ந்திருக்கும் பாவ முட்கள் எம்மைப் புண்படுத்தா வண்ணம் அரவணைத்துக் காத்தருளும்.” 


தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!