இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - கோவில்கள் வரலாறு

தோமையார் தம் காலத்திலேயே பல கோவில்களைக் கட்டிவைத்தார் என்பது பாரம்பரை. மலையாங்கரை எனும் கரங்கனூருக்கு அப்போஸ்தலர் வந்தபோது, அது ஒரு முக்கிய பட்டணமாயிருந்தது வணிகர்களுக்கு அது ஒரு களஞ்சியச் சாலை. அங்கு தான் இறைவன் கேரளப்பெருமாளை மனந்திருப்பினார். அந்த ஊரிலேயே ஒரு பிரமாண்டமான கோவிலும் கட்டப்பட்டது. கொல்லம், திருவாங்கூர் அரசின் முக்கிய பட்டணம் அங்கும் தோமையாரால் ஒரு கோவில் கட்டப்பட்டது. அது அவர் காலந்தொட்டு ஆயிரம் ஆண்டு வரையில் இருந்ததாம். அதற்குப் பின்னர் கடலானது கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கோவிலைத் தகர்த்துத் தூர்த்துப்போட்டது.

ஷாயல் என்னும் ஊரிலும் ஒரு கோவிலிருந்ததாம். ஒரு காலத்தில் அது ஓர் பெரிய கிராமம். அங்கு வசித்திருந்த குடிகள் நாளடைவில் வெளியூர்களில் குடியேறி விட்டனர். இப்போது அங்கே சில பழைய கட்டடங்களைப் பார்க்கலாம்.

கொக்கமங்கலமும் தோமையாரின் அடையாளம் பெற்ற ஓர் ஊர். அப்போஸ்தலர் அங்கு ஒகு மரச்சிலுவையை நாட்டினார். ஒரு முறை அச்சிலுவை வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகப்பட்டு, மத்தல் என்னும் தீவில் போய் ஒதுங்கிற்று. சில செம்படவர்கள் ஒரு நாள் அத் தீவில் என்றும் இல்லாத வகையில் ஒருவகை ஒளி தோன்றுவதைக் கண்டார்கள். இதை அறியும் பொருட்டு ஒளி வந்த திசையை நோக்கிப் போனார்கள். அங்கே ஒதுங்கிக் கிடந்த மரச் சிலுவையிலிருந்தே அந்த ஒளி வந்ததை அவர்கள் கண்டனர். ஆகவே, அதை எடுத்து வந்து தங்கள் ஊராகிய பல்லபுரத்தில் வணக்கத்தோடு வைத்தார்கள். பின்னர் அங்கு ஒரு கோவில் கட்டப்பட்டது. அதிலுள்ள புனித தோமையார் பீடத்தில் அச்சிலுவை வைக்கப்பட்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன் மத்தல் தீவில் அச்சிலுவை சென்றடைந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. அது இன்றளவும் இருந்து வருகின்றது.

மேலையாத்தூர் கோவில் ஒரு மலையின் உச்சியில் இருக்கின்றது. அது நிற்குமிடத்தில் தான் பரிசுத்த கன்னி மரியாயி தோமையாருக்குக் காட்சி கொடுத்தனளாம். இக் கோவிலானது அடிக்கடி மக்களால் பக்தியுடன் தரிசிக்கப் பட்டு வருகிற ஒரு திருத்தலம், இயேசு உயிர்த்த ஞாயிறுக்கு பின் வரும் முதல் ஞாயிறு மக்கள், சிறப்பாகப் புதிய மண மக்கள் அக்கோவிலுக்குத் திருயாத்திரையாகப் போகிறது வழக்கமாய் இருந்து வருகிறது. பக்தர்கள் அங்கு போகும் போது, ஜெபித்துக்கொண்டே போகிறார்கள். அடிக்கடி ''தோமா! முத்தப்பன்'' என்று அழைக்கின்றார்கள். மலையில் ஏறும்போது "பொன் சிலுவை முத்தப்பன்! மலையில் ஏறுகிறோம்'' என்றும், கீழே இறங்குகையில் 'பொன் சிலுவை முத்தப்பன்! மலையை விட்டு இறங்குகிறோம்; எங்களுக்கு உதவி செய்யும்" என்றும் வேண்டிக்கொள்ளுகிறார்கள்.

மேற்கூறிய கோவில்களே தோமையார் நாளில் கட்டப் பட்டவற்றில் இப்போது வரை பழங்கால வரலாற்றை எடுத்துக்காட்டும் சாட்சிக் குறிகளாய் மலையாளப்பகுதியில் விளங்குகின்றன.