இரண்டாம் பாகம்.

ஞானத் தியானம் நன்றாய்ச் செய்வது உங்களில் ஒவ்வொரு வனுக்கும் அவசியமென்று நீங்கள் இப்போது கண்டுபிடித்திருக் கிறீர்கள். இந்த இரண்டாம் பாகத்தில் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய உங்களால் முடியுமென்று விவரிக்கப்போகிறோம்.

முன்னிலும் கவனமாய்க் கேளுங்கள். தியானம் நன்றாய்ச் செய்ய உங்களால் கூடுமென்று நாம் சொல்லும்போது, நீங்களே உங்கள் சுய பலத்தால் நன்றாய்ச் செய்வீர்களென்று எண்ண வேண்டாம். மனிதன் தன்னால் நன்மையான எதுவும் சரியாய்ச் செய்ய சக்தி அற்றவன், புண்ணியம் செய்ய பலம் இல்லாதவன்.

ஆனால் சர்வேசுரன் சர்வ வல்லமையுள்ளவர். அவர் தம்முடைய உதவியின் அநுக்கிரகம் செய்ய எப்போதும் தயாராய் காத்திருப்பவர். கொடுத்த வாக்குப் பிசகாதவர். கேளுங்கள், கேட்டதைக் கொடுப்போமென்று சத்தியப் பிரமாண வாக்களித்தபின், தமது சொல்லை மீறி மறுத்து நடப்பது அளவில்லாத ஞான சுரூபியான அவருக்கு இயல்பல்ல.

ஆனதால் தியான முயற்சிகளை நீங்கள் நன்றாய்ச் செய்து உங்கள் ஆத்துமத்தை இரட்சிப்பது சர்வேசுரனுடைய சித்தம் என்பதால், நீங்கள் இவைகளை நன்றாய்ச் செய்யத் தேவையான உதவி வரங்களை உங்களுக்கு அவர் தப்பாமல் கொடுப்பாரென்று நீங்கள் உங்கள் மனதில் திண்ணமாய்ப் பதியச் செய்து, இதில் ஊன்றிய நம்பிக்கையுடன் ஞானத்தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய என்னால் கூடும் என்று ஒவ்வொருவரும் சொல்லலாம்.

இதன்மட்டில் இன்னும் உங்களுக்கு சந்தேகமுண்டோ ?

"எனக்கு என்ன தெரியும்? தியானம் எப்படி நான் நன்றாய்ச் செய் வேன்? சிட்டுக்குருவி கருடனைப் போல் உயரப் பறக்குமா? அற்ப மனிதனாகிய நான் உன்னத வேத சத்தியங்களைப்பற்றி தியானிக்கத் துணிவது சரியோ? என்னால் இயலுமோ இது?" -- என்று இப்படி நீங்கள் சொல்லலாம். இவ்வித சந்தேகத்தால் கலங்கி பயப்பட வேண்டாம்.

உங்களுக்கு முன் எத்தனையோ பேர், உங்களைப் போல் இருந்தவர்கள், இந்த அற்புத தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்து தங்கள் ஆத்தும இரட்சணியமடைந்து இப்போது திருச்சபையில் அர்ச்சியசிஷ்டவர் களாக வணங்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு சர்வேசுரன் உதவியால் முடிந்தது உங்களுக்கு மாத்திரம் ஏன் முடியாது? சர்வேசுரன் கொடுக்கும் உதவியின் பலன் உங்கள் மட்டில் பலிக்காதோ? கருங்கல்லிலும் அமுதமான தண்ணீர் சுரந்து ஓடும்படி செய்ய வல்லவர், உங்கள் இருதயம் கல்லாயிருந்தாலும். அது இளகி கரைந்து உருகும்படி செய்ய அவரால் முடியாதோ? அவர் கையின் பலம் இப்போது குறைந்து போனதோ? அப்படியல்ல.

ஆனதால் முழு நம்பிக்கையுடன் ஞானத்தியான முயற்சிகளை நன்றாய்ச் சர்வேசுரன் கிருபையால் செய்ய என்னால் கூடுமென்று உறுதியான மனதோடு சொல்லி ஒவ்வொருவரும் தியானத்தைத் துவக்குங்கள்.