2 செப்டம்பர் 1944.
நேற்று வெள்ளிக்கிழமை மாலையில்தான் மீண்டும் காணத் தொடங்கினேன். நான் கண்டது அதிக பட்சம் பன்னிரண்டு வயது மதிக்கத் தக்க மரியாயையே. குழந்தைகளுக்குரிய அவர்களின் வட்ட முகம் மாறி, நீள்வட்ட வடிவத்தில் வருங்கால ஸ்திரீயின் முகக்கட்டாக மாறத் தொடங்கியுள்ளது. அவர்களின் முடியும் மெல்லிய சுருள்களாக கழுத்தில் படியவில்லை. அது இரு தடித்த சடைப் பின்னல்களாக தோள் மேல் பட்டு இடுப்பு வரையிலும் தொங்குகிறது. அது மென் பொன் நிறமாய் வெள்ளியின் சாயல் படர்ந்திருக்கிறது. அவர்களின் முகம் ஓர் இளநங்கையின் முகமாயிருப்பினும், அதிக சிந்தனை வசப்பட்டு, முதிர்ச்சி பெற்றதாக, அழகாக, தூய்மையாக, முழுவதும் வெண்ணுடையணிந்த தோற்றமாயிருக்கிறது. அவர்கள் ஒரு மிகச் சிறிய அறையில் தையல் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அறையும் முழுவதும் வெண்மையாயிருக்கிறது. முழுதும் திறந்திருக்கிற ஜன்னல் வழியாக தேவாலயத்தின் கம்பீரமான நடுப்பாகத்தைக் காண முடிகிறது. முற்றங்களும், மண்டப வளைவுகளுக்கு ஏறும் படிக்கட்டுகளும் தெரிகின்றன. மேலும் அடைப்புச் சுவருக்கு அப்பால் பட்டணத் தெருக்களும், வீடுகளும், தோட்டங்களும், பின்னணியில் திமில் போன்ற ஒலிவ மலையின் பசுமையான உச்சியும் காணப்படுகின்றன.
மரியா தைத்துக் கொண்டே தாழ்ந்த குரலில் பாடுகிறார்கள். அது ஒரு சங்கீதமா வேறா என்று எனக்குத் தெரியவில்லை. அது வருமாறு:
தெளிந்த நீரில் தாரகை போல் - என்
இதயத்துள் ஒரு ஒளி வீசி
குழந்தை முதலே என்னுள்ளிருந்து
கனிவன்புடன் வழி நடத்துதம்மா.
என்னிருதயத்தின் ஆழத்திலே - ஒரு
பாடல் எங்கிருந்தெழுகிறது?
நீயதை அறியாய் மானிடனே - திரு
தூயவர் தங்கும் தலமிருந்தே.
முற்றும் என்னுடைய இனிய - இவ்
வொளியைத் தவிர வேறெதுவும்
இனிய பிரிய பொருளெதுவும்
வேண்டாம் அதையே நோக்குகிறேன்.
என்னில் வாழும் தாரகையே - எனை
விண்ணிலிருந்தோர் உதரத்துள்
கொண்டு வந்தென்னில் வாழ்கின்றீர் - திரைக்
கங்கே தந்தையுன் முகங்கண்டேன்.
மீட்பரின் எளிய அடிமையெனும் - ஓர்
மகிமை எப்போதெனக் கருள்வீர்?
மோட்சத்திலிருந்து மெசையாவை - இங்
கனுப்பும் என் மனு ஏற்றருள்வீர்.
மரியா இப்போது அமைதியாயிருக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். பின் பெருமூச்சு விடுகிறார்கள். அதன்பின் முழங்காலிட்டு ஜெபிக்கிறார்கள். அவர்களின் சிறிய முகம் பிரகாசமாய் ஒளிர்கிறது. தெளிந்த நீல கோடை வானத்தை நோக்கி மேலே பார்க்கிறார்கள். அவர்களின் வதனம் ஆகாயத்திலுள்ள எல்லா ஒளியையும் உட்கொண்டு பின் அதை வெளியிடுகிறது போல் தோன்றுகிறது. அதைவிட, அவர்களுக்கு உள்ளேயே மறைந்திருக்கும் ஒரு சூரியன் தன் கதிர்களைப் பரப்பி அவர்களுடைய முகத்தை ஒளிரச் செய்து அவர்களின் பனி வெண் சரீரத்தில் ஒரு ரோஜா வண்ணத்தைப் பூசுவது போலிருக்கிறது. அம்முகத்திலிருந்து புறப்படுகிற ஒளி உலகத்திலும் அதில் பிரகாசிக்கும் சூரியனிலும் படிகிறது. அது ஓர் ஆசீர்வாதம், அதிகமான நன்மைகளுக்கு ஒரு வாக்குறுதி.
ஜெபம் முடிந்து, இன்னும் அப்பரவச ஒளி முகத்தில் படர மரியா எழவும், பானுவேலின் அன்னம்மாள் அவ்வறைக்குள் நுழைகிறாள். மரியாவின் தோற்றத்தையும், நிற்கும் பாவனையையும் கண்டு திகைக்கிறாள். குறைந்த பட்சம் வியப்படைகிறாள். பின் அவள்: “மரியா!” என்று கூப்பிடுகிறாள். மரியா புன்னகையுடன் திரும்பிப் பார்த்து: “அன்னா! உங்களுக்கு சமாதானம்!” என்கிறார்கள். அந்தப் புன்னகை வேறாயிருப்பினும், எவ்வளவோ அழகாயிருக்கிறது.
“மரியா நீ ஜெபித்தாயா? உன் ஜெபம் எப்போதும் உனக்கு போதாமல்தான் இருக்குமா?”
“என் ஜெபம் போதும்தான். ஆனால் நான் கடவுளிடம் பேசுகிறேன், அன்னா! அவரை நான் எவ்வளவு நெருக்கமாக உணருகிறேன் என நீங்கள் அறிய மாட்டீர்கள். நெருக்கத்தை விட அதிகம். என் இருதயத்திற்குள் அவரை உணருகிறேன். என் தற்பெருமையைக் கடவுள் மன்னிப்பாராக. நான் தனிமையை உணரவில்லை. பாருங்கள், அதோ அங்கே, அந்தப் பொன்னும் பனி வெண்மையுமான இல்லத்தில், இரட்டைத் திரைக்குப் பின்னால் பரிசுத்தத்திலும் பரிசுத்த ஸ்தலம் உள்ளது. ஆண்டவரின் மகிமை உறையும் பாவப் பரிகார ஸ்தலத்தை பெரிய குருவைத் தவிர வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆலயக் கன்னியர்களுடையவும், லேவியருடையவும் பாடல்களினால் அதிர்கிறதும், விலைமதிப்பான சாம்பிராணிகளால் மணமூட்டப்படுகிறதுமான பூ வேலை செய்யப்பட்ட அத்திரையைப் பார்க்க வேண்டிய அவசியம், வணங்கும் என் ஆன்மாவிற்கு இல்லை. அத்துகிலினைத் துளைத்து, அதன் வழியே வாக்குத்தத்தம் பிரகாசிப்பதைக் காண நான் விரும்பவில்லை. நிச்சயம் நான் அதைப் பார்க்கிறேன்தான். இஸ்ராயேலரின் ஒவ்வொரு மைந்தனும் அதை நோக்குவது போல் நானும் வணங்கும் கண்களுடன் நோக்கவில்லை என்று எண்ணாதீர்கள். நான் இப்பொழுது கூறப்போவதை என் தற்பெருமை என்னைக் குருடாக்கி இவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது என்றும் கருதாதேயுங்கள். நான் அதைப் பார்க்கிறேன். கடவுளின் மக்களுள் மிகத்தாழ்ந்த ஊழியனைவிடவும் தாழ்ந்த முறையிலேயே கடவுளுடைய இல்லத்தை நான் பார்க்கிறேன். ஏனென்றால் அவர்கள் அனைவரிலும் நான் தாழ்ந்தவள் என்பது எனக்கு உறுதியாயிருக்கிறது. ஆனால் நான் என்ன காண்கிறேன்? ஒரு திரை. அந்தத் திரைக்குப் பின்னே என்ன இருக்கிறதாக நினைக்கிறேன்? ஒரு பேழை. அதில் என்ன இருக்கிறது? என் இருதயத்திற்கு நான் செவி கொடுத்தால், தமது நேசிக்கும் மகிமையில் பிரகாசிக்கும் கடவுளைக் காண்கிறேன். அவர் என்னை நோக்கி: “உன்னை நேசிக்கிறேன்” என்கிறார். நான் அவரை நோக்கி: “உம்மை நேசிக்கிறேன்” எனப் பதில் கூறுகிறேன். இந்தப் பரஸ்பர முத்தத்தில் நான் இறந்து, என் ஒவ்வொரு இருதயத் துடிப்பிலும் மீண்டும் படைக்கப்படுகிறேன். என் ஆசிரியர்களுக்கும், என் சகோதரிகளுக்கும் நடுவில் நான் இருக்கிறேன். ஆனால் ஒரு நெருப்பு வட்டம் என்னை உங்களிடமிருந்து தனிப்படுத்துகிறது. அவ்வட்டத்திற்குள்ளே கடவுளும் நானும் இருக்கிறோம். கடவுளின் நெருப்பின் வழியாக உங்களைக் காண்கிறேன். ஆகையினால் உங்களை நேசிக்கிறேன்... மாம்சத்திற்குரிய தன்மையில் உங்களை நேசிக்க என்னால் கூடவில்லை. அப்படி யாரையுமே நேசிக்க என்னால் கூடாது. என்னை இஸ்பிரீத்துவுக்குரிய தன்மையில் நேசிக்கிறவரை மட்டுமே நான் நேசிக்க முடியும். இதுவே என் வாழ்வின் கதி. இஸ்ராயேலின் லெளகீகச் சட்டம், ஒவ்வொரு பெண்ணும் ஒரு மனைவியாக வேண்டுமென்றும், ஒவ்வொரு மனைவியும் ஒரு தாயாக வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் சட்டத்திற்கு நான் கீழ்ப்படியும் அதே சமயத்தில் “நீ எனக்கு வேண்டும்” என்று மெல்லக் கூறுகிற குரலுக்கு நான் கீழ்ப்படிய வேண்டும். நான் ஒரு கன்னி. கன்னியாகவே இருப்பேன். இதில் எப்படி வெற்றி பெறுவேன்? என்னுள் இருக்கிற இந்த மதுரமான காணப்படாத பிரசன்னம் எனக்கு உதவி செய்யும். ஏனென்றால் அதன் விருப்பம் அதுவே. எனக்குப் பயமில்லை. எனக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை... அவர்களை இழந்த வேதனையில் எந்த மனிதப் பிறவிக்கும் என்னிடமிருந்த பாசம் எப்படி எரிக்கப்பட்டு விட்டது என்பது தேவனுக்குத் தெரியும். எனக்கு இப்பொழுது இருப்பவர் தேவன் மாத்திரமே. ஆகவே எந்தக் கேள்வியும் இல்லாமல் அவருக்கு நான் கீழ்ப்படிகிறேன். என் தந்தையும் தாயும் இருந்தாலும் நான் இவ்வாறே செய்திருப்பேன். ஏனென்றால் அந்தக் குரல் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது; அதைப் பின்செல்ல விரும்புகிறவர்கள் எவரும் தந்தை தாயையும் தாண்டி வர வேண்டும் என்று. தங்கள் திட்டத்தின்படி தங்களுடைய பிள்ளைகளை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல விரும்பி அப்பிள்ளைகளின் இருதயங்களின் மீது அன்புள்ள காவலாளிகளாக இருக்கிறார்கள் பெற்றோர்கள். எல்லையில்லா மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் வேறு திட்டங்கள் அவர்களுக்குத் தெரியாது. “வா, என் நேச பதியே” என்று என்னிடம் கூறும் குரலைப் பின்செல்வதற்காக அவர்களிடம் என் உடுப்புகளையும் மேல் வஸ்திரங்களையும் விட்டு விட்டிருப்பேன். அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்திருப்பேன். என் கண்ணீர் முத்துக்களையும் கொடுத் திருப்பேன். ஏனென்றால் அவர்களுக்குக் கீழ்ப்படியாதிருப்பதைப் பற்றியும், இரத்த பாசத்தாலும் நான் அழுதிருப்பேன். ஏனெனில் என்னை அழைக்கும் குரலைப் பின்செல்வதற்காக மரணத்தைக் கூட பொருட்படுத்த மாட்டேன். தந்தை தாயின் அன்பைவிட அதிக பெரியதும் அதிக இனியதுமான ஒன்று உண்டு. அதுவே கடவுளின் குரல் என்று அவர்களிடம் கூறியிருப்பேன். ஆனால் இப்போது பிள்ளைக்குரிய பாசம் என்னும் கட்டிலிருந்து அவர் சித்தத்தினால் விடுதலையாயிருக்கிறேன். அது எனக்கு ஒரு பிணைப்பாகவும் இருந்திராது. என்னுடைய பெற்றோர்கள் இருவரும் இரு நீதிமான்கள். கடவுள் என்னிடம் பேசுவது போல் அவர்களிடமும் பேசியிருப்பார். அவர்கள் நீதியையும், உண்மையையும் கடைப்பிடித்திருப்பார்கள். அவர்களை நான் நினைக்கும்போது, பிதாப்பிதாக்கள் மத்தியில் அமைதியான எதிர்பார்ப்பில் அவர்கள் இருப்பதாகக் கருதுகிறேன். மெசையா வந்து அவர்களுக்கு மோட்ச வாசல்களைத் திறக்கும்படியாக அவருடைய வருகையை என் பலியினால் நான் துரிதப்படுத்துகிறேன். பூமியில் நானே எனக்கு வழிகாட்டி - அதாவது, கடவுள் தம் எளிய அடிமைக்கு தமது கட்டளைகளைத் தந்து வழிநடத்துகிறார். நான் அவைகளை நிறைவேற்றுகிறேன். ஏனென்றால் கீழ்ப்படிவது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. நேரம் வரும்போது என் இரகசியத்தை நான் என் மணவாளனிடம் கூறுவேன்... அவரும் அதை ஏற்றுக் கொள்வார்.”
“ஆனால் மரியா... அவரை சம்மதிக்க வைக்க நீ என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவாய்? ஒரு மனிதனின் அன்பும், வேதப்பிரமாணமும், வாழ்க்கையும் உனக்கு எதிராய் இருக்குமே!”
“கடவுளை என்னுடன் கொண்டிருப்பேன்... என் மணவாளனின் இருதயத்தை அவர் ஒளிர்விப்பார்... புலன்களின் தூண்டுதலை வாழ்க்கை இழந்து, சிநேகத்தின் வாசனையுள்ள மலராக அது மாறிவிடும். அன்னா, என்னைத் தேவதூஷணி என்று சொல்ல வேண்டாம். வேதப் பிரமாண சட்டம் மாற்றப்படப் போகிறது என நினைக்கிறேன். அது தெய்வீகமானதாகையால் யாரால் அது மாற்றப்படும் என நினைக்கிறீர்கள்? அதை மாற்றக் கூடிய ஒருவராலேயே, கடவுளாலேயே அது மாற்றப்படும். அதற்குரிய காலம் நீங்கள் நினைப்பதைவிட அதிக சமீபத்திலிருக்கிறது. ஏனென்றால் நான் தானியேல் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய ஒளி எனக்கு வந்தது. அப்போது நான் அப்புதிரான வார்த்தையின் பொருளைக் கண்டுபிடித்தேன். நீதியுள்ள மக்களின் ஜெபங்களை முன்னிட்டு அந்த எழுபது வாரங்களும் குறைக்கப்படும். இதனால் ஆண்டுகளின் எண்ணிக்கை மாற்றப்படும் என்று அர்த்தமாகுமா? இல்லை. தீர்க்கதரிசனம் ஒருபோதும் தவறானதாயிராது. தீர்க்கதரிசனத்தின் கால அளவு சந்திரனை வைத்தே; சூரியனை வைத்தல்ல. ஆகவே கூறுகிறேன்: “கன்னிகையிடமிருந்து பிறக்கும் பாலன் அழுகிற குரல் கேட்கும் நேரம் சமீபத்திலிருக்கிறது.” என்னை நேசிக்கிற இந்த ஒளி எத்தனையோ காரியங்களை என்னிடம் கூறுவதால், சர்வேசுரனுடைய குமாரனும் தம் மக்களின் மெசையாவுமானவரைப் பெற்றெடுக்கும் பாக்கியவதியான அத்தாய் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அது எனக்குக் கூறும்படி ஆசிக்கிறேன். வெறுங்காலாய் உலகமெங்கும் நடந்து செல்வேன். குளிரோ, மூடுபனியோ, புழுதியோ, வெப்பமோ, வனவிலங்கோ, பசியோ, அப்பெண்மணியைச் சென்றடைவதிலிருந்து என்னைத் தடுக்க முடியாது. நான் அவர்களைப் பார்த்து: “உங்களுடைய ஊழியக்காரியும், கிறீஸ்துநாதருடைய ஊழியருடைய ஊழியக்காரியுமான என்னை உங்கள் இல்லத்தில் தங்க அனுமதியுங்கள். உங்கள் எந்திரக் கல்லை நான் சுற்றுவேன். உங்கள் திராட்சை ஆலையை நான் சுழற்றுவேன். உங்கள் எந்திரக் கல்லில் வேலை செய்து உங்கள் மந்தைகளைக் காக்கும் அடிமையாக என்னை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் திருக்குழந்தையின் சிற்றுடைகளை நான் சுத்தம் பண்ணச் செய்யுங்கள். உங்கள் சமையற்கட்டில் நான் வேலை செய்வேன். உங்கள் அடுப்பில், நீங்கள் எங்கு விரும்புவீர்களோ அந்த இடத்தில் ஊழியம் செய்வேன்... ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். நான் அவரைப் பார்க்க வேண்டும்! அவர் குரலை நான் கேட்க வேண்டும்! அவருடைய பார்வை என்மேல் விழ வேண்டும்!” என்று கூறுவேன். அவர்கள் என்னை விரும்பாவிட்டால் அவர்களின் வாசல்படியில் ஒரு பிச்சைக்காரியைப் போல், குளிர் வெப்ப காலங்களிலும், குழந்தை மெசையாவின் குரலைக் கேட்பதற்காக, அவருடைய சிரிப்பொலியின் எதிரொலியைக் கேட்பதற்காக, அவர் நடந்து போவதைக் காண்பதற்காக வாழ்வேன். ஒருவேளை ஒரு நாள் அவர் எனக்கொரு அப்பத் துண்டைத் தரக் கூடும்... ஆ! நான் பசியினால் சாகிறதாயிருந்தாலும், மிஞ்சிய உபவாசத்தால் மயக்கமடைவதா யிருந்தாலும் கூட அந்த அப்பத்தை நான் உண்ண மாட்டேன். அதை ஒரு விலை மதிப்புள்ள முத்துக்கள் நிரம்பிய பையைப் போல் என் நெஞ்சோடு சேர்த்துக் கொள்வேன். கிறீஸ்துவின் கரங்களின் வாசனையை முகரும்படி அதை முத்தமிடுவேன். எனக்குப் பசியோ, குளிரோ ஏற்படாது. ஏனென்றால் அதைத் தொடுவதே எனக்குப் பரவசத்தையும், உஷ்ணத்தையும் தரும். பரவசத்தையும் ஆகாரத்தையும் அளிக்கும்...”
“நீ கிறீஸ்துவை இவ்வளவு தூரம் நேசிப்பதால் நீதான் அவருடைய தாயாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நீ கன்னியாக இருக்க விரும்புகிறாயோ?”
“இல்லை, அப்படியில்லை! நான பரிதாபமும் தூசியுமாயிருக்கிறேன். தேவ மகிமையை நோக்கி என் கண்களை ஏறெடுக்கவும் துணிய மாட்டேன். இதனாலேயே ஜெஹோவாவின் கண்காணாப் பிரசன்னம் இரட்டைத் திரைக்கப்பால் உள்ளதென நான் அறிந்திருக்கிறதால், அதைப் பார்ப்பதை விட, என் உள்ளத்தினுள் உற்றுப் பார்க்கவே விரும்புகிறேன். திரைக்கங்கே பயங்கரத்துக்குரிய சீனாயின் தேவன் இருக்கிறார். இங்கே எனக்குள்ளே நம் தந்தையை நான் காண்கிறேன். புன்னகை புரிந்து என்னை ஆசீர்வதிக்கிற அன்பின் முகம். ஏனென்றால் காற்றானது பாரம் உணராமல் தாங்குகிற ஒரு சிறிய பறவையைப் போல் நான் இருக்கிறேன். பள்ளத்தாக்கின் லீலியின் தண்டு போல் பலவீனமாயிருக்கிறேன். அது பூக்கும், இனிய மணம் கொடுக்கும். தன் மணமுள்ள தூய இனிமையைத் தவிர காற்றுக்கு வேறெந்த தடுப்பையும் அது செய்யாது. கடவுளே என் அன்புக்குரிய காற்று! அதற்காக அல்ல. கன்னியிடத்தில் பிறக்கும் தேவ குமாரன், மகா பரிசுத்தரின் பரிசுத்தர், மோட்சத்தில் எதைத் தம் தாயாக தெரிந்து கொண்டாரோ, உலகத்தில் தமது பிதாவைப் பற்றித் தம்மிடம் எது பேசுமோ, அதையே, பரிசுத்தத்தையே - விரும்ப முடியும். தங்களுடைய உளறு மொழிப் போதனைகளால் வேத சட்டத்தைக் குழப்பியுள்ள போதகர்கள் தங்கள் மனதை மேலான கண்ணோட்டங்களுக்குத் திருப்பி, சுபாவத்திற்கு மேலானவற்றை நாடி, தங்கள் மிக உயர்வான கதியை மறக்கச் செய்கிற மனிதத் தன்மையான இலாபகரமான காரியங்களை விட்டுவிடும்படி வேதசட்டம் கருதுமானால், அவர்கள் பரிசுத்ததனத்தையே தங்கள் முக்கிய போதனைப் பொருளாகக் கொள்ள வேண்டும். இஸ்ராயேலின் அரசர் வரும் பொழுது அவர் அதைக் காணும்படியாக அப்படிச் செய்ய வேண்டும். சமாதானம் ஆக இருப்பவருடைய ஒலிவக் கிளைகளைக் கொண்டு, வெற்றி பெறுகிறவருடைய குருத்துக்களைக் கொண்டு, லீலிகளை, லீலிகளை, லீலிகளைப் பரப்புங்கள். ஓ, நம்மை மீட்பதற்காக நம் இரட்சகர் எவ்வளவு இரத்தம் சிந்த வேண்டியிருக்கும்! ஓ எவ்வளவு இரத்தம் அவர் சிந்துவார்! துயர மனிதனிடம் இசையாஸ் கண்ட ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து ஓர் இரத்த அருவி பாய்கிறது - ஒழுகும் பாத்திரத்திலிருந்து பனிநீர் பாய்வது போல. இந்தத் தெய்வீக இரத்தம் அவமதிப்பும் தேவதூஷணமும் உள்ள இடங்களில் பாயாமல், வாசனை வீசும் பரிசுத்த பாத்திரங்களில் விழட்டும். அப்பாத்திரங்கள் அதை சேகரித்து நோயும், குஷ்டமும் பீடித்த ஆன்மாக்கள் நடுவிலும், கடவுளுக்கு இறந்துவிட்ட ஆன்மாக்கள் நடுவிலும் அதைப் பாய விடட்டும். கிறீஸ்துவின் வியர்வையையும், கண்ணீர்களையும் அவற்றின் தூய்மையான இதழ்களால் துடைப்பதற்காக, லீலி மலர்களைக் கொடுங்கள். கொல்லப்படுவதற்கு அவருக்குள்ள வேகமுள்ள விருப்பத்திற்காக லீலி மலர்களைக் கொடுங்கள். ஓ! உம்மைப் பெற்றெடுக்கும் அந்த லீலி மலர் எங்கே உள்ளதோ! உம்முடைய தகிக்கும் தாகத்தைத் தணிக்கிற, உமது இரத்தத்தால் சிவக்கிற, நீர் சாவதைக் காணும் வேதனையால் தான் சாகிற, இரத்தமில்லாத உமது சரீரத்தின் மேல் அழுகின்ற அந்த லீலி மலர் எங்கே இருக்கிறது? ஓ! கிறீஸ்துவே! என் கிறீஸ்துவே! என் ஆசையே!...”
மரியா மேற்கொள்ளப்பட்டவர்களாய் அழுதபடி மவுனமாகிறார்கள்.
அன்னாளும் மவுனமாகிறாள். பின் உணர்வு வசப்பட்ட வயதான மாதின் தெளிந்த குரலில்: “மரியா! வேறு ஏதேனும் எனக்குக் கற்றுத்தர உள்ளதா?” என்று கேட்கிறாள்.
மரியம்மாள் விழிப்படைகிறார்கள். தன்னுடைய தாழ்ச்சியில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் - தன்ஆசிரியை தன்னைக் குற்றஞ் சொல்கிறார்கள் என்று. “ஆ! என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் ஆசிரியை. நான் ஒன்றுமில்லாமை. ஆனால் இந்தக் குரல் என் இருதயத்திலிருந்து எழுகிறது. நான் பேசாதிருக்கும்படி அதன்மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் தண்ணீரின் வேகத்தினால் கரையை உடைக்கும் நதியைப் போல் அது என்னை மேற்கொண்டு பொங்கிப் பாய்ந்து விட்டது. தயவு செய்து என்னுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் என்னுடைய தகாத் துணிவிற்குத் தண்டனையளியுங்கள். மறை பொருளான வார்த்தைகள் இருதயத்தின் ஆழத்திற்குள் இருக்க வேண்டும். அதற்கு கடவுள் தம் நன்மைத்தனத்தில் உதவுகிறார். அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த மறைந்த பிரசன்னம் எவ்வளவு மதுரமாயிருக்கிறதென்றால் நான் மகிழ்ச்சியால் நிரம்புகிறேன்... அன்னா, உங்கள் சின்ன ஊழியக்காரியை மன்னித்துக் கொள்ளுங்கள்.”
அன்னாள் தன் முதிய, வரி விழுந்து நடுங்கும் முகத்தில் கண்ணீர் மல்க மரியம்மாளை அரவணைத்துக் கொள்கிறாள். அக்கண்ணீர் அவளுடைய சுருக்கங்கள் வழியாக நிரப்பில்லாத தரையில் வழிந்தோடும் தண்ணீர் போல் நடுங்கித் தேங்குகிறது. இந்த முதிய ஆசிரியையின் நிலை சிரிப்பையல்ல, அவளுடைய அழுகை மிக ஆழ்ந்த மரியாதையைத் தூண்டுகிறது. மரியாயை அவள் அரவணைத்திருக்கிறபடியே காட்சி முடிகிறது.