5 ஜூன் 1944.
ஜனக் கூட்டமாயிருக்கிற ஒரு நெடுஞ்சாலையைக் காண்கிறேன். பொருள்களும் கருவிகளும் ஆள்களும் அமர்ந்துள்ள கோவேறு கழுதைகள் ஒரு வழியே சென்று கொண்டிருக்கின்றன. அதே போல் எதிர்த்திசையிலும் போகின்றன. சவாரிக் கழுதைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. நடந்து செல்கிறவர்களும் வேகமாகப் போகிறார்கள். காரணம் குளிராக இருக்கிறது.
ஆகாயம் தெளிவாயும் ஈரமற்றும் உள்ளது. வானம் தெளிவாயிருந்தாலும் சீதோஷ்ணம் குளிர் காலத்தில் பொதுவாக இருப்பதுபோல் குளிர் கூர்மையாயிருக்கிறது. வெறுமையாகக் கிடக்கிற நாட்டுப்புறம் அதிக விஸ்தீரணமாய்த் தெரிகிறது. குளிர்காலக் காற்றினால் மேய்ச்சல் நிலங்களின் குட்டைப்புல் நுனி சேதமடைந்திருக்கிறது. சூரியன் மெல்லவே எழுந்து வருகிறது. ஆடுகள் மேய புல்லைத் தேடுகின்றன. வெயிலையும் எதிர்பார்க் கின்றன. அவையும் குளிரை உணர்வதால் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கின்றன. சூரியனை நோக்கி தலைகளை நிமிர்த்தி கத்துகின்றன. “சீக்கிரம் உதித்து வா, குளிருகிறது” என்று கூறுவதுபோல் கூப்பிடுகின்றன. தரை, உயர்வும், தாழ்வுமாக உள்ளது. அது வர வர தெளிவாகத் தெரிகிறது. அது உண்மையிலே ஒரு மலைப்பாங்கான இடம். புல் மூடிய பள்ளத்தாக்குகளும் சாரல்களும் முகடுகளும் காணப்படுகின்றன. அவற்றின் நடுவே தென்கிழக்காகச் செல்கிறது சாலை.
பழுப்பு நிற இளம் கோவேறு கழுதைமீது மாதா அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெரிய போர்வையால் முழுவதும் மூடப்பட்டிருக்கிறார்கள். எபிரோனுக்கு சென்ற போது காணப்பட்ட அவசர ஜாமான்கள் உள்ள சிறு பெட்டி சேணத்திலே பொருத்தப்பட்டிருக்கிறது.
கடிவாளத்தைப் பிடித்தபடி பக்கத்தில் நடந்து வருகிறார் சூசையப்பர். இடைக்கிடையே: “உங்களுக்குக் களைப்பா யிருக்கிறதா?” என்று விசாரித்துக் கொள்கிறார்.
“இல்லை. எனக்குக் களைப்பாயில்லை” என்கிறார்கள் மாதா. சூசையப்பர் மூன்றாம் தடவை அப்படிக் கேட்ட போது: “நடப்பது உங்களுக்கு களைப்பாயிருக்க வேண்டுமே” என்கிறார்கள்.
“எனக்கா? இது எனக்கு ஒன்றுமில்லை. இன்னொரு கழுதை கிடைத்திருந்தால் உங்களுக்குக் கூடுதல் செளகரியமாயிருந் திருக்கும். விரைவாகவும் போயிருக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேறொன்றைக் கண்டுபிடிப்பதே கூடாதிருந்தது. இப்போது எல்லாருக்குமே வாகனம் வேண்டியிருக்கிறது. நீங்கள் திடமாயிருங்கள். விரைவில் நாம் பெத்லகேம் போய்விடலாம். அதோ அந்த மலைக்கு அந்தப் புறத்தில் இருக்கிறது எப்பிராத்தா.”
இருவரும் மவுனமாகிறார்கள். அப்படிப் பேசாதிருக்கையில் மாதா உள்ளரங்க செபத்தில் ஊன்றுவதாகத் தெரிகிறது. தன் ஒரு நினைவைப் பற்றி இலேசாகப் புன்முறுவல் செய்வது தெரிகிறது. மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது அவர்கள் எதையும் குறிப்பாய்க் காணாதது போலிருக்கிறது - அது மனிதனா, ஸ்திரீயா, முதியவரா, இடைனொ, பணவசதி படைத்தவனா, எளியவனா என்று பிரித்துப் பார்க்கிறதாகத் தெரியவில்லை.
அப்போது காற்று வீசுகிறது. “குளிரடிக்கிறதா?” என்று கேட்கிறார் சூசையப்பர்.
“இல்லை சூசையே. நன்றி.”
ஆனால் சூசையப்பருக்கு திருப்தியில்லை. தன் தோளில் கிடந்த போர்வையை எடுத்து அதில் மாதாவின் பாதங்களை மூடி, அப்படியே அதைக் கொண்டு அவர்கள் கரங்களையும் மூடிக் கொள்ளும்படி கொடுக்கிறார்.
அப்போது அவர்கள் ஓர் இடையனைச் சந்திக்கிறார்கள். அவன் சாலையின் வலது பக்கத்திலுள்ள மேய்ச்சல் நிலத்திலிருந்து சாலையின் இடது பக்கத்திலுள்ள மேய்ச்சல் நிலத்துக்கு தன் ஆடுகளை ரோட்டின் குறுக்காக ஓட்டி வருகிறான். சூசையப்பர் குனிந்து அவனிடம் ஏதோ சொல்கிறார். அவன் சரி என்று தலையசைக்கிறான். சூசையப்பர் கழுதையை மந்தையின் பின்னால் இடது பக்கமுள்ள மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டு செல்கிறார். அந்த இடையன் தன் பையிலிருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, ஒரு பெரிய பாலாட்டில் பால் கறந்து சூசையப்பரிடம் கொடுக்க அவர் அதை மாதாவிடம் கொடுக்கிறார்.
“உங்கள் இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. உங்கள் அன்பிற்காகவும், உன் கருணைக்காகவும், உனக்காக நான் வேண்டிக் கொள்வேன்.”
“தூர இடத்திலிருந்து வருகிறீர்களா?” என்று இடையன் கேட்கிறான்.
“நாசரேத்திலிருந்து வருகிறோம்” என்று சூசையப்பர் சொல்கிறார்.
“எங்கே போகிறீர்கள்?”
“பெத்லகேமுக்கு.”
“வெகு நீண்ட பயணமாயிற்றே, இந்த அம்மாவின் நிலையில் - இவர்கள் உங்கள் மனைவியா?”
“ஆம்.”
“அங்கே தங்குவதற்கு உங்களுக்கு இடம் இருக்கிறதா?”
“ஒன்றும் இல்லை.”
“அது கஷ்டமாச்சுதே! எல்லா இடத்திலுமிருந்து பெயரெழுதிக் கொடுப்பதற்காக வந்த ஜனங்களால் பெத்லகேம் நிரம்பி வழிகிறது. அவ்வழியாய் வேறு இடங்களில் பெயர் பதியச் செய்கிறவர்களும் அங்கே வருகிறார்கள். உங்களுக்குத் தங்குமிடம் அகப்படுமென்று எனக்குத் தோன்றவில்லை. அந்த இடம் உங்களுக்கு நன்றாகப் பழக்கமானதா?”
“அவ்வளவு நன்றாகப் பழக்கமில்லை.”
“சரி, நான் விளக்கமாகச் சொல்கிறேன்... அவர்களுக் காகத்தான் (மாதாவைக் காட்டியபடி). அங்குள்ள உணவு விடுதியைக் கண்டுபிடியுங்கள். ஆனால் அது நிரம்பிப் போயிருக்கும். ஆயினும் உங்களுக்கு வழிகாட்டும்படி சொல்கிறேன். அது ஒரு சதுக்கத்தில், பெரிய சதுக்கத்தில் இருக்கிறது. இந்த பெருஞ்சாலை உங்களை அங்கு கொண்டு செல்லும். அதைத் தவறவிட முடியாது. ஒரு நீர்ச்சுனை அதன் முன்பாகக் காணப்படும். அது ஒரு தாழ்வான நீண்ட கட்டடம். கதவு மிகப் பெரிதாக இருக்கும். அது நிறைந்துதான் இருக்கும். ஆனால் அவ்வுணவு விடுதியில் இடம் அகப்படாவிட்டால், அல்லது வேறு வீடுகளிலும் இடம் கிடைக்காவிட்டால் அவ்விடுதியின் பின்னால் சுற்றி புறநகர்ப் பகுதி நோக்கிப் போங்கள். அங்கே சில மலையடித் தொழுவங்கள் உள்ளன. ஜெருசலேமுக்குப் போகிற வியாபாரிகள், விடுதியில் இடம் கிடைக்காதபோது அந்தக் குகைகளை தங்கள் கால்நடைகள் தங்குவதற்குப் பயன்படுத்து வார்கள். அவை மலைத் தொழுவங்கள். குளிராகவும் ஈரமாகவும் இருக்கும். கதவுகளும் கிடையாது. ஆயினும் அவை ஒரு பாதுகாப்பாயிருக்கும். உங்கள் மனைவியை தெருவில் விட முடியாது. அங்கே இடமிருக்கக் கூடும். படுப்பதற்கும் கழுதைக்கும் பயன்படும் வைக்கோலும் இருக்கலாம். கடவுள் உங்களை வழி நடத்துவாராக!”
“உமக்கும் மகிழ்ச்சியைத் தருவாராக!” என்கிறார்கள் மாதா.
“உமக்கு சமாதானம் உண்டாவதாக!” என்கிறார் அர்ச். சூசையப்பர்.
அவர்கள் மீண்டும் நெடுஞ்சாலை வழியே வருகிறார்கள். அவர்கள் ஏறி வந்த மேட்டிலிருந்து பார்க்க ஒரு பரந்த பள்ளத்தாக்கு தெரிகிறது. அதன் மேடுகளிலும் பள்ளங்களிலுமாக அநேக வீடுகள் இருப்பது தெரிகிறது. அதுவே பெத்லகேம்.
“இங்கே நாம் தாவீதின் நாட்டில் இருக்கிறோம் மரியா! இனி நீங்கள் ஓய்வெடுக்க முடியும். எவ்வளவு களைப்பாயிருக்கிறீர்கள்...”
“இல்லை. நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்... நினைத்துப் பார்க்கிறேன்...” பின்னும் சூசையப்பரின் கரத்தைப் பிடித்து ஒரு நல்ல புன்னகையுடன்: “என் நேரம் வந்துள்ளதென்று நிச்சயமாகத் தெரிகிறது” என்கிறார்கள் மாதா.
“ஓ இரக்கமுள்ள ஆண்டவரே! மரியா, நாம் என்ன செய்வோம்?”
“பயப்படாதீர்கள் சூசையே, திடமாயிருங்கள். நான் எவ்வளவு அமைதியோடிருக்கிறேன் பாருங்கள்.”
“ஆனால் உங்களுக்கு மிகக் கஷ்டமாக இருக்குமே!”
“அப்படி நான் ஒரு துன்பமும் படவில்லை! நான் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எவ்வளவு பெரிதென்றால், எவ்வளவு அழகியதென்றால், எவ்வளவு தாங்கக்கூடாததாயுள்ளதென்றால், என் இருதயம் துடித்துத் துடித்து என்னிடம் கூறுகிறது: “அவர் வருகிறார்! அவர் வருகிறார்!” என்று. ஒவ்வொரு துடிப்பிலும் அது அப்படி கூறுகிறது.அது, என் பிள்ளை, என் இருதயத்தைத் தட்டி: “அம்மா, இதோ நான் உங்களுக்கு ஆண்டவருடைய முத்தம் தர வருகிறேன்” என்று கூறுவதாக இருக்கிறது. சூசையே! எப்படிப்பட்ட ஆனந்தம் இது!”
ஆனால் சூசையப்பர் சந்தோஷமாயில்லை. உடனே கண்டு பிடித்தாக வேண்டிய ஒரு தங்குமிடம் பற்றி அவர் நினைக்கிறார். துரிதமாய் நடக்கிறார். வீடு வீடாய்ப் போகிறார். ஓர் அறை கிடைக்குமா என்று கேட்கிறார். கிடைத்தபாடில்லை. எல்லாம் நிரம்பிவிட்டன. அவர்கள் விடுதிக்கு வந்து சேர்கிறார்கள். அங்கே உள்ளேயுள்ள பெரிய முற்றம் போன்ற பழங்காலத்து மண்டப தார்சாக்கள் கூட பயணிகளால் நிறைந்திருக்கின்றன.
சூசையப்பர் மாதாவை அம்முற்றத்தில் கோவேறு கழுதை மீது இருந்தபடியே விட்டு விட்டு வெளியில் செல்கிறார். மற்ற வீடுகளில் இடம் கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கிறார். ஆனால் மனம் ஒடிந்துபோய் திரும்பி வருகிறார். ஒரு இடமும் அகப்படவில்லை. துரிதமாய்ப் படிகிற குளிர்கால மாலையின் அஸ்தமன நிழல் படருகிறது. விடுதித் தலைவனிடம் கெஞ்சிக் கேட்கிறார். சில பயணிகளிடமும் அவ்வாறே கேட்டுப் பார்க்கிறார். நீங்களெல்லாரும் நல்ல சுகத்துடன் இருக்கிறீர்கள் - ஆனால் பிரசவிக்கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு இடமளிக்க இரங்கக் கூடாதா என்று எடுத்துக் காட்டிப் பேசுகிறார். ஒரு பலனும் இல்லை.
ஒரு பணக்காரப் பரிசேயன் அவர்களை வெளிப்படையான எரிச்சலுடன் பார்க்கிறான். மாதா அவனருகே செல்லும்போது குஷ்டரோகியைக் கண்டு ஒதுங்குவது போல் ஒதுங்குகிறான். சூசையப்பர் அவனைப் பார்க்கிறார். அவருடைய முகம் வெறுப்பால் சிவக்கிறது. மாதா அவருடைய மணிக்கட்டில் தொட்டு அமைதிப்படுத்தி: “வற்புறுத்திக் கேட்க வேண்டாம். நாம் போய்விடுவோம். கடவுள் நமக்குத் தருவார்” என்கிறார்கள்.
அவர்கள் புறப்பட்டு வெளியே வந்து, விடுதியின் சுவரோரமாய்ச் செல்கிறார்கள். விடுதிக்கும் சில வீடுகளுக்கும் நடுவே செல்லும் சிறிய தெருவின் வழியே வருகிறார்கள். விடுதிக்குப் பின்புறமாகத் திரும்பி தொழுவங்களைத் தேடுகிறார்கள். கடைசியாக சில மலைக் கெபிகள் காணப்படுகின்றன. அவை எவ்வளவு தாழ்வாகவும், ஈரமாகவும் உள்ளனவென்றால், அவைகளைத் தொழுவங்கள் என்றுகூட சொல்ல முடியாது. நில அறைகள் என்னலாம். அதிலும் நல்லவைகள் ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. சூசையப்பர் மனம் உடைந்து விட்டார்.
“கலிலேயனே! அந்த அற்றத்தில் அந்த இடிபாடுகளுக் கடியில் பாரும். அங்கே ஒரு குகை உள்ளது. அங்கே யாரும் ஒருவேளை போய்த் தங்கியிருக்க மாட்டார்கள்” என்று ஒரு வயதான மனிதன் சூசையப்பரிடம் சத்தமாய்க் கூப்பிட்டுச் சொல்கிறான்.
அவர்கள் அந்தக் குகைக்கு விரைவாகச் செல்கிறார்கள். உண்மையிலேயே அது ஒரு குகைதான்: ஒரு பழைய கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவில் ஒரு துவாரம். மலையில் ஒரு குடைவு தெரிகிறது. அது கெபியும் அல்ல. பழைய அஸ்திவாரங்களில் முரடான மரங்களால் தாங்கப்பட்ட காரைக்கட்டி உடைவுகள் கூரையாக உள்ளன.
வெளிச்சம் இல்லை. சூசையப்பர் தோளில் தொங்கும் பையிலிருந்து உரசும் கற்களை எடுத்து ஒரு சிறு விளக்கைப் பொருத்துகிறார். குகைக்குள்ளே நுழைகிறார். அங்கிருந்து ஒரு மாடு கூப்பிடும் சத்தம் வருகிறது. “மரியா உள்ளே வாருங்கள். இது காலியாக இருக்கிறது. ஓர் எருது மட்டுமே உள்ளது” என்று கூறி புன்னகையுடன் “ஒன்றுமில்லாததற்கு இது தாவிளை...” என்கிறார்.
மாதா கோவேறு கழுதையிலிருந்து இறங்கி உள்ளே செல்கிறார்கள்.
சூசையப்பர், விளக்கை ஒரு மரத் தூணில் இருந்த ஓர் ஆணியில் தொங்க விட்டிருக்கிறார். மேலே பார்த்தால் ஒரே சிலந்திக் கூடு - உடைந்து கிடக்கும் மண் தரை - அதில் குழிகள், குப்பை, சாணம், வைக்கோல் சிதறிக் கிடக்கிறது. குகையின் உட்புறத்தில் பெரிய கண்களுடன் ஓர் எருது, அதன் வாயில் வைக்கோல் தொங்க விழித்து சுற்றிப் பார்க்கிறது. ஒரு கரடுமுரடான முக்காலி போன்ற இருக்கையும் ஒரு மூலையில் ஒரு துவாரத்தின் பக்கத்தில் இரண்டு பெரிய கற்களும் அங்கே கிடக்கின்றன. அந்த மூலையில் கரி பிடித்திருப்பதிலிருந்து அங்குதான் வழக்கமாக நெருப்பு மூட்டப்படும் என்று தெரிகிறது.
மாதாவுக்குக் குளிருகிறது. அந்த எருதுவின் அருகில் அவர்கள் செல்கிறார்கள். அதன் கழுத்தில் உஷ்ணத்திற்காக கையை வைக்கிறார்கள். அது சத்தம் கொடுக்கிறது. ஆனால் கலையவில்லை. அது கண்டுபிடித்ததுபோல் தெரிகிறது. சூசையப்பர், மாதாவுக்கு ஒரு படுக்கை தயாரிப்பதற்காக அதன் முன்னிட்டியிலிருந்து கூடுதலாக வைக்கோலை எடுப்பதற்கு அந்த எருதை ஒரு பக்கமாகத் தள்ளுகிறார். அப்போதும் அது அமைதியாக நிற்கிறது. அந்த முன்னிட்டி இரண்டு தட்டுகளை உடையது. எருது வைக்கோல் தின்னும் தட்டிற்கு மேலே உள்ள தட்டில் வைக்கோல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை சூசையப்பர் கீழே இழுத்துப் போடுகிறார். அப்போது அங்கு வருகிற கழுதைக்கும் அந்த எருது இடங்கொடுக்கிறது. பசித்துக் களைத்திருந்த கழுதையும் உடனே தின்னத் தொடங்குகிறது.
அங்கே ஒரு தகட்டால் அடித்த வாளி கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பதை சூசையப்பர் எடுத்து, வரும்வழியில் தாம் பார்த்த ஒரு சிற்றோடைக்குப் போய் அதில் கழுதைக்குத் தண்ணீர் கொண்டு வருகிறார். ஒரு ஓரமாக ஒரு கட்டு குச்சிகள் காணப்படுகிறது. அதைக் கொண்டு சூசையப்பர் தரையைச் சுத்தம் செய்ய முயல்கிறார். எருது நின்றதற்குப் பக்கத்தில்தான் அக்குகைக்குள் பாதுகாப்பான ஈரமில்லாத இடம். அதில் வைக்கோல் படுக்கை தயார் செய்கிறார். ஆனால் அந்த வைக்கோல் ஈரமாயிருக்கிறது. பெருமூச்சு விடுகிறார்.
பின் நெருப்புப் பற்றவைத்து யோபினுடைய பொறுமை யோடு வைக்கோலை உலர்த்துகிறார். ஒரு தடவைக்கு ஒரு கைப்பிடி வைக்கோலை நெருப்பின் பக்கத்தில் பிடித்து, அப்படியே அதைச் சூடாக்குகிறார்.
மாதா அந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். களைத்துப் போயிருக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்து புன்னகை செய்தபடி இருக்கிறார்கள். வைக்கோல் பரப்பி முடிகிறது. மாதா மரத்தூண் ஒன்றில் சாய்ந்தபடி கீழே வைக்கோலில் உட்கார்ந்திருக்கிறார்கள்... சூசையப்பர் வாசலாக உதவிய குகையின் துவாரத்தில் தம் மேலாடையை ஒரு திரையாகத் தொங்க விடுகிறார். அதன்பின் கொஞ்சம் ரொட்டியும், பால்கட்டியும், பாத்திரத்திலிருந்து தண்ணீரும் மாதாவுக்கு எடுத்துக் கொடுக்கிறார்.
“மரியா இனி உறங்குங்கள். நான் விழித்திருந்து நெருப்பு அணைந்துவிடாதபடி கவனிக்கிறேன். கொஞ்சம் விறகு கிடந்தது நல்லதாயிற்று. அது எரிக்க போதுமானதாயிருக்குமென்று நினைக்கிறேன். விளக்கிலுள்ள எண்ணையை மீதப்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார்.
கீழ்ப்படிதலுடன் மாதா படுத்துக் கொள்கிறார்கள்... சூசையப்பர், மாதாவின் மேல் வஸ்திரத்தையும், அந்தப் போர்வையையும் கொண்டு அவர்களை மூடுகிறார். மாதா: “உங்களுக்குக் குளிருமே” என்று கேட்கிறார்கள். “இல்லை. நான் நெருப்பின் பக்கம் இருந்து கொள்வேன். ஓய்வு எடுக்க முயலுங்கள். நாளைக்கு எல்லாம் நன்றாயிருக்கும்” என்கிறார் சூசையப்பர்.
மாதா கண்ணை மூடுகிறார்கள். சூசையப்பர் தன் இடத்திற்குப் போய் முக்காலியைப் போட்டு அமர்கிறார். விறகுக் குச்சிகள் அவர் பக்கத்தில் கிடக்கின்றன. கொஞ்சம்தான். அதிக நேரம் தாக்குப்பிடிக்காது. மாதா வலப்புறமாய் வாசலுக்கு எதிர்த் திசையிலிருக்கிறார்கள். அவர்களை அந்தத் தூணும், படுத்திருக்கிற எருதும் மறைக்கின்றன. சூசையப்பர் மாதாவுக்கு எதிர்த்திசை நோக்கியுள்ள நெருப்பைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். இடைக்கிடையே மாதா உறங்குகிறார்களா என்று திரும்பிப் பார்க்கிறார். அவர்கள் அமைதியாக உறங்குவதுபோல படுத்திருக்கிறார்கள். சூசையப்பர் முடிந்த அளவு சத்தமில்லாமல் ஒவ்வொரு குச்சியாக ஒடித்து நெருப்பில் இட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி நெருப்பு அணைந்து விடாமலும் குச்சிகள் நீடிக்கும்படியும் பார்த்துக் கொள்கிறார். நெருப்பின் வெளிச்சம் மட்டுமே அக்குகையில் உள்ளது. அது சில சமயம் பிரகாசமாயும் மற்ற நேரம் மிக மங்கலாயும் எரிகிறது. விளக்கும் அணைக்கப்பட்டுவிட்டதால் மாட்டின் வெள்ளை நிறமும் சூசையப்பரின் கைகளும் முகமும் மட்டுமே வெள்ளையாய்த் தெரிகின்றன. மற்ற எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
“இக்காட்சியே போதுமானதாயிருப்பதால் இதை விளக்கி நான் எதுவும் கூறவில்லை. இதில் விளங்கும் பிறர் சிநேகம், தாழ்ச்சி, பரிசுத்ததனம் ஆகிய பாடங்களைக் கண்டுபிடிப்பது உன்னுடையது. நான் சேசுவுக்காகக் காத்திருப்பேனே அதுபோல் நீயும் காத்திருந்தபடியே ஓய்வெடு. உனக்கு சமாதானம் கொண்டுவரும்படி அவர் வருவார்” என்று மாதா மரிய வால்டோர்ட்டாவிடம் கூறுகிறார்கள்.