இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் நம்பிக்கையான சேசுநாதரின் மரணம்

சேசுநாதர் நம் இரட்சணியத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். ""வேறு எவராலும் இரட்சணியமில்லை'' (அப்.4:12). ஓ, பாறையின் புனிதப் பிளவுகளில், அதாவது, சேசுகிறீஸ்துநாதரின் திருக்காயங்களில் எத்தகைய பாதுகாப்பான புகலிடத்தை நாம் காண்கிறோம்! அங்கே, நம் பாவங்களின் காட்சி நம்மில் உண்டாக்கும் அவநம்பிக்கையின் உணர்விலிருந்து நாம் விடுவிக்கப்படுவோம். அங்கே சோதனைகளுக்கு எதிரான பாதுகாப்பின் போர்க்கருவிகளை நாம் காண்போம்; அங்கே உலகத்தின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கப் போதுமான பலத்தை நாம் கண்டடைவோம். நான் மட்டுமே வாசல் என்கிறார் சேசுநாதர்; என் வழியாக நுழைபவன் நிச்சயமாக நித்திய வாழ்வைக் கண்டடைவான்: ""நானே வாசல், என் வழியாய்ப் பிரவேசிக்கும் எவனும் இரட்சிக்கப்படுவான்'' (அரு.10:9). சேசுநாதர் தமது திரு இரத்தத்தாலும், தமது திருமரணத்தாலும் நம் பொருட்டு, தேவ நீதிக்குப் பரிகாரம் செய்யாமல் இருந்திருந்தால், மன்னிக்கப் படுவேன் என்ற நம்பிக்கையை எந்தப் பாவிதான் கொண்டிருக்க முடியும்? ""அவர் அவர்களுடைய அக்கிரமங்களைத் தாங்கிக் கொள்வார்'' (இசை. 3). இதனாலேயே அப்போஸ்தலர் நம்மிடம்: ""வெள்ளாட்டுகிடாய்கள், காளைகள் இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்களின்மேல் தெளிக்கப்படுகிற கிடாரியின் சாம்பலும், மாம்ச அசுத்தத்தை நீக்கி, அவர்களைச் சுத்தப்படுத்துமானால், நாம் ஜீவியரான கடவுளைச் சேவிக்கும்படிக்கு இஸ்பிரீத்துசாந்துவினால் மாசில்லாத பலியாகத் தம்மைத்தாமே சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்த கிறீஸ்துநாதருடைய இரத்தம் எவ்வளவோ அதிகமாய் நம்முடைய மனச்சாட்சிகளைச் செத்த கிரியைகளினின்று சுத்திகரிக்கும்!'' (எபி.10:13). பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் காளைகளின் இரத்தம் யூதர்கள் தேவாலய வழிபாட்டில் அனுமதிக்கப்படும்படி, அவர்களிடமிருந்து வெளியரங்கமான சரீர அசுத்தங்களை அகற்றுமானால், அன்பிற்காகத் தம்மையே நமக்கென பாவப் பரிகாரப் பலியாக ஒப்புக்கொடுத்தவராகிய சேசுநாதரின் திரு இரத்தம் இன்னும் எவ்வளவு அதிகமாக, உன்னதரான நம் தேவனுக்கு ஊழியம் செய்ய நமக்கு உதவும்படி நம் ஆத்துமங்களிலிருந்து பாவத்தை அகற்றும்!

நம் அன்புள்ள இரட்சகர் வேறு எதற்காகவும் அன்றி பாவிகளை இரட்சிக்கும் ஒரே நோக்கத்துடன் உலகிற்கு வந்தார். நம் பாவங்களின் காரணமாக, நமக்கு எதிராக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த தண்டனைத் தீர்ப்பைக் கண்டபின் அவர் என்ன செய்தார்? தமது சொந்த மரணத்தால் நம் பாவங்களுக்குரிய பரிகாரத்தை அவர் செலுத்தினார்; தேவ நீதி இனி நம் பாவங்களுக்குரிய பரிகாரத்தை நம்மிடமிருந்து தேடாதபடி தமது சொந்த இரத்தத்தைக் கொண்டு நம் தண்டனைத் தீர்ப்பை அவர் ரத்துச் செய்தார், அவர் தாம் எதன்மீது மரித்தாரோ, அதே சிலுவையின் மீது நமக்குரிய தண்டனைத் தீர்ப்பையும் அறைந்து விட்டார்; ""நமக்கு எதிரிடையாயும், நமக்கு விரோதமாயுமிருந்த தீர்ப்பின் கையெழுத்தை அழித்து, அதைச் சிலுவையில் அறைந்து, முழுதும் ஒழித்துப்போட்டார்'' (கொலோ.2:14). 

"கிறீஸ்துநாதர்...பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, நித்திய இரட்சணியத்தை நமக்குப் பெறுவித்தார்'' (எபி.9:12). ஆ, என் சேசுவே, எங்களுக்காகப் பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு நீர் இந்த வழியைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், வேறு யாரால் அதைக் கண்டுபிடித்திருக்க முடியும்? ""அவருடைய வழிகளை அறிவியுங்கள்'' என்று தாவீது காரணத்தோடுதான் கூக்குரலிட்டார் (சங்.9:12). ஓ, பரலோகவாசிகளே, நம்மை இரட்சிக்கும்படி நம் சர்வேசுரன் பயன்படுத்திய நேசத்திற்குரிய அற்புதத் திட்டங்களை அறிவியுங்கள். ஆகவே, ஓ என் இனிய இரட்சகரே, நீர் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறீர் என்பதால், எனக்கு இரக்கமக் காட்டுவதை ஒருபோதும் நிறுத்தி விடாதிரும். நீர் உமது இரத்தத்தைக் கொண்டு லூசிபரின் கைகளிலிருந்து என்னைக் காப்பாற்றி வீட்டீர். உமது கரங்களில் நான் என் ஆத்துமத்தை ஒப்படைக்கிறேன்; அதை இரட்சிப்பது உம் பொறுப்பு: ""உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்படைக்கிறேன்; ஓ சத்தியத்தின் தேவனே, நீர் என்னை மீட்டு இரட்சித்தீர்.''

"என் பாலகரே, நீங்கள் பாவஞ் செய்யாதிருக்கும்படிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஆகிலும் யாதொருவன் பாவஞ்செய்தால், நீதிபரனாகிய சேசுக்கிறீஸ்துநாதர் பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களுக்கு அவரே பரிகாரப் பலியாய் இருக்கிறார்'' (1 அரு.2:1). சேசுநாதர் தமது மரணத்தைக் கொண்டு, நித்தியப் பிதாவிடம் நமக்காகப் பரிந்துபேசுவதை முடிவுக்குக் கொண்டு வந்து விடவில்லை. இப்போதும் கூட அவர் நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்; மேலும் அர்ச். சின்னப்பர் எழுதுவது போல, நமக்கு இரக்கம் காட்டும்படி தம் பிதாவைத் தூண்டுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று தெரியாதவரைப் போல அவர் தோன்றுகிறார்: ""நமக்காகப் பரிந்துபேசுவதற்காகவே என்றென்றும் ஜீவிக்கிறார்'' (எபி.7:25). மேலும் இதற்காகத்தான் நம் இரட்சகர் பரலோகத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார் என்றும் அப்போஸ்தலர் கூறுகிறார்:""சர்வேசுரனுடைய சமூகத்தில் நமக்காகத் தாம் பரிந்துபேசும்படிக்கு'' (எபி.9:24). கலகக்காரர்கள் தங்கள் அரசனின் சமூகத்திலிருந்து துரத்தியடிக்கப்படுவது போலவே பாவிகளாகிய நாமும், கடவுளின் மன்னிப்பைக் கேட்கவும் கூட நம் சர்வேசுரனின் சமூகத்தில் அனுமதிக்கப்படத் தகுதியற்றவர்களாக, அவர் முன்னிலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருப்போம். ஆனால் சேசுநாதர், நம் மீட்பர் என்ற முறையில் தேவப் பிரசன்னத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார், தமது பேறுபலன்களின் வழியாக. நாம் இழந்து போன வரப்பிரசாதத்தைத் திரும்பவும் நமக்குப் பெற்றுத் தருகிறார்: ""புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய சேசுவிடமும், ஆபேலின் இரத்தத்தை விட அதிக நன்றாய்ப் பேசுகிற இரத்தத் தெளிப்பிடமும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்'' (எபி.12:24). ஓ, எவ்வளவு பெருமளவு பலனுள்ள வகையில் இரட்சகரின் திரு இரத்தம், காயீனின் தண்டனைக்காக மன்றாடிய ஆபேலின் இரத்தத்தை விட அதிகமாக, நமக்காகத் தேவ இரக்கத்தை மன்றாடிக் கேட்கிறது! கடவுள் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாளிடம், ""சேசுகிறீஸ்துவின் மாசற்ற சரீரம் பழிவாங்கப்பட்டதன் காரணமாக, என் நீதி இரக்கமாக மாற்றப்பட்டு விட்டது. என் மகனின் திரு இரத்தம் ஆபேலின் இரத்தத்தைப் போல, பழிவாங்கும்படி என்னிடம் மன்றாடவில்லை, மாறாக, அது இரக்கத்திற்காகவும், தயவிற்காகவும் மன்றாடுகிறது. அதன் குரல் சத்தத்தில், என் நீதி சாந்தமடையாமல் இருக்க இயலாது. இந்த இரத்தம் நீதியின் கரங்களை எந்த அளவுக்குக் கட்டிப் போடுகிறது என்றால், ஒரு பேச்சுவகைக்கு, முன்பு அது பாவத்திற்குப் பழிவாங்கிக் கொண்டிருந்தது போல் இப்போது பழிவாங்க இயலாமல் இருக்கிறது'' என்றார்.

"பிணையாளியின் உபகாரத்தை மறந்து விடாதே'' (சீராக்.29:19). ஆ, என் இனிய இரட்சகராகிய சேசுவே, என் பாவங்களுக்குப் பிறகு, நான் ஏற்கனவே தேவ நீதிக்குப் பரிகாரம் செய்ய இயலாமல் இருந்தபோது, நீர் உமது மரணத்தின் மூலம் எனக்காகப் பரிகாரம் செய்ய சித்தமாயிருந்தீர். ஓ, உம்முடைய இந்த மாபெரும் இரக்கத்தை நான் மறப்பேன் என்றால், இப்போது நான் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருப்பேன்! இல்லை, என் மீட்பரே, இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதற்காக எப்போதும் உமக்கு நன்றிசெலுத்திக் கொண்டிருக்கவும், உம்மை நேசிப்பதன் மூலமும், உம்மை மகிழ்விக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதன் மூலமும் என் நன்றியறிதலைக் காட்டவும் நான் ஆசையாயிருக்கிறேன். மிக அநேக துன்பங்களால் நீர் எனக்காக சம்பாதித்துள்ள வரப்பிரசாதத்தைக் கொண்டு எனக்கு உதவி செய்தருளும். என் சேசுவே, என் அன்பரே, என் நம்பிக்கையே, நான் உம்மை நேசிக்கிறேன்!