அர்ச். தோமையார் வரலாறு - பெரியமலை கற்சிலுவை (பரங்கிமலை)

1547 ஆம் ஆண்டு மலையின் சில பாகங்களைச் சுத்தஞ் செய்வதற்காக வெட்டிச் சமப்படுத்தி வருகையில் அகன்ற ஒரு கல்லைக் கண்டெடுத்தனர். அதன் நடுவில் ஒரு சிலுவை செதுக்கப்பட்டும், அதன் சுற்றிலும் 'பெல்வி' மொழியில் எழுத்துக்கள் செதுக்கப்பட்டும் இருந்தன. 

சிலுவையின் மேலும் பக்கத்திலும் சிவப்புப் புள்ளிகள் தென்பட்டன. அவற்றைத் துடைத்துச் சுத்தஞ் செய்தார்கள். ஆச்சரியம்! திரும்பவும் அவை தென்பட்டன. இந்தச் சம்பவத்தைப் பார்த்துத் திகைத்து, இதில் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது என்று மதித்துப் பக்தியுடன் அதை எடுத்துச் சென்று கோயிலில் வைத்தனர். 

அதற்குப் பின்னர் தான் அச்சிலுவை தோமையாரால் செய்யப்பட்டது என்றும், அதன் முன் செபித்திருக்கையில் தான் ஈட்டியால் குத்துப்பட்டார் என்றும், அவருடைய இரத்தத் துளிகள் கல்லின் மேல் பட்டிருந்தன என்றும் அறியலானார்கள். அப்பால் அக் கற்சிலுவையை நடுப்பீடத்தின் மீது ஏற்றிவைத்தார்கள். அது அப்படியே இது வரையில் இருந்து வருகின்றது.

இக்கோயிலானது பூரண மாதா பெயரால் கட்டப்பட்டுள்ளது. இதில், கன்னிமரியாயி இயேசு நாதர் சுவாமியின் பிறப்பை எதிர் பார்த்திருந்த திரு நாள் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

திருவிழாவுக்கு முந்தின நாள் சில காலங்களாக மேற் சொல்லிய கற்சிலுவையினிடத்து அற்புதக் காட்சி தென்படும். கல்லின் நடுவில் செதுக்கப்பட்டுள்ள சிலுவையின் மீது இரத்தமும் தண்ணீரும் கசிந்து விழும். 

இப்புதுமை 18 ஆம் நூற்றாண்டு வரை நடந்து வந்தது என்பதற்குச் சரித்திரம் சான்று. 1711 ஆம் ஆண்டு இந்தியாவைத் தரிசிக்க, பிரான்சு நாட்டினின்று வந்த இயேசு சபை 'தாஸார்டு' சுவாமியார் மேனாட்டிலிருந்து 'தூதெரெவோன்' சுவாமியாருக்கு இவ்வற்புதத்தைப்பற்றி விவரமாக எழுதியிருக்கிறார். 

''பெரிய மலையிலிருக்கும் கற்சிலுவையானது நிறம் மாறித் தண்ணீர் கசிந்த சமயமெல்லாம், சின்ன மலையிலிருக்கும் கற்சிலுவையினிடத்தும் அவ்வாச்சரியம் தோன்றுமாம். நமது சபை 'சில் வெஸ்டர் டிசோஸா' சுவாமி அவர்கள் இப்பாகங்களில் பல ஆண்டுகளாகத் தேவ அலுவல் புரிந்து வருகிறார். சின்ன மலையிலும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். தாமே மேற்சொன்ன அற்புதத்தைக் கண் கூடாகப் பார்த்ததாக எனக்குத் தெரிவித்தார்.

''இவ்வதிசய சம்பவத்தினால் பல பேர் அக்கோயிலைத் தரிசிக்கிறார்கள். இது எல்லாருக்கும் வெளிப்படையாகக் காணப்படுகிறபடியால் மறுப்போர் ஒருவருமில்லை.

புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களும் வந்து பார்க்கப் பின் வாங்குகிறதில்லை. நமது குருக்களில் ஒருவர், இப்புதுமையை இரண்டு தடவை நேராகக் கண்டதாக எனக்குச் சொன்னார். ஒரு காலத்தில் கோயிலில் 400 க்கு மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். அவர்களுள் பல பிரிவினைக் கிறிஸ்தவர்களும், ஆங்கிலேய புராட்டஸ்டண்டாரும் அதன் உண்மையைப் பரிசோதிக்கும் பொருட்டுக் கூடினர். புதுமையைப் பார்க்கும் பாக்கியம் பெற்றார்கள். ஆனால், அதைப் பார்த்ததும் ஒன்றும் பேசாது திரும்பினார்களாம்''.

"இன்னொரு சமயம் (1711 ஆம் ஆண்டிலிருந்து) ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் தேவமாதா திரு நாளின் போது பெருந்திரளான மக்கள் கோயிலில் இருந்தார்கள். குருவானவர் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்குச் சமீபமாயிருந்த விசுவாசிகள் திடீரென எழுந்து புதுமை! புதுமை! என்று கூவினார்கள். பக்கத்திலிருந்த குருவானவர் அவர்களை அமர்த்தி எல்லாருக்கும் அன்று நடந்த அற்புதத்தைத் தெரிவித்தார். 

அவர் தாமே எனக்குச் சொன்னது என்னவென்றால்:- 'கருங்கல்லில் கரடுமுரடாய்ச் செதுக்கப்பட்ட சிலுவை கருப்பு நிறமாக மாறினது. பின்னர் வெண்ணிறமாக ஒளிர்ந்தது. அதற்குப் பிறகு ஒரு விதப் புகை அங்கு உண்டாகச் சிலுவையோ மறைந்து போயிற்று. கொஞ்ச நேரம் சென்றதும் சிலுவை தெளிவானது. அப்போது அது ஈரமாகவும், வியர்வை வடிவது போலும் நீர் கசிந்து, கீழே பீடம் மட்டும் வடிந்தோடியது. பெரிய மனிதர் சிலருடைய வேண்டுகோளுக்கு இணங்கிக் குருவானவர் பீடத்தின் மீதேறி சில துணிகளை அதில் தோய்த்து எடுத்தார். 

இச்சம்பவம் நடந்த காலம் வேனிற்காலம். ஆதலால், புதுமை என்றே எல்லாரும் ஒப்புக்கொண்டு கடவுளைத் துதித்தார்கள்'' என்பதே.

"அச்சமயம் கூடியிருந்த புராட்டஸ்டண்டாரும், பின்னர் ஓடி வந்த வேறு சிலரும் முதலில் இப்புதுமையை நம்பாதவர்களா யிருந்தார்கள். ஆதலால் அதை நன்கு பரிசோதிக்கும் பொருட்டுச் சிலர் படத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் நன்றாக உற்றுப் பார்த்து, வெளியினின்று வேறு காரணத்தாலும் வியர்வை கசியவில்லையென்று நம்பினார்கள். 

வேறு சிலர் கோவில் மேலே போய், அங்கிருந்து தந்திரமாக ஏதாகிலும் சூழ்ச்சி செய்யப்பட்டிருக்கின்றதோ என்று சோதித்துப் பார்த்து ஒன்றையும் காணாததால் திகைத்து, இது சாதாரணமாய் இயற்கையாய் நடக்கிற சம்பவமன்று; தெய்வீக சம்பவமே என்று கூறினார்கள். அவர்கள் பார்த்த நிகழ்ச்சி மெய்யான புதுமை என்றும் ஒப்புக்கொண்டார்கள். ஆயினும், அவர்களில் ஒருவராகிலும் மனந்திரும்பவில்லை.' இதுவே 'தாஸார்டு' சுவா மியார் எழுதியதாம்.

கற்சிலுவையைச் சுற்றியுள்ள எழுத்துக்கள் பெல்வி மொழியாம். அதன் பொருள் என்ன வென்று நிச்சயமாய் நிரூபிக்கக் கூடுமாயில்லை. ''இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் தோமையார், அவருடைய (இயேசுவினுடைய) பரிசுத்த கோட்பாடுகளைப் போதிக்க இங்கு அனுப்பப்பட்டார். இவ்விடத்தில் சீடர்களைச் சேர்த்தார். இவ்விடத்திலேயே வேத சாட்சியானார்'' என்று பொருள்படுகின்றதாக முன் காலத்தில் எண்ணியிருந்தார்கள். 

தற்காலத்திய பண்டிதர், "நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலேயே பெருமை பாராட்டுவேனே ஒழிய வேறொன்றுமில்லை'' என்பதே அவ்வெழுத்துக்களின் அர்த்தமென்று கருதுகிறார்கள்.