இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆச்சரியத்துக்குரிய மாதாவே!

படைப்பு ஓர் அற்புதம்; படைக்கப்பட்ட பொருட்களோ அதிசயமானவை; கடவுளால் உண்டாக்கப்பட்ட எப்பொருளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வல்லது. யாவும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப்பட்டன. சூனியமாக இருந்த பூமியில் மரஞ்செடி கொடிகளையும், விலங்கினங்களையும், பறவைகளையும், நீர் நிலைகளில் வாழ்வனவற்றையும் உண்டாக்கினார்; நீல வானப் பரப்பை சூரிய சந்திர நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்தார். இச்சிருஷ்டிப்புகளுக்கெல்லாம் அரசனாக மனிதனைப் படைத்தார். தமது சாயலைக் கொண்ட ஆத்துமத்தைப் படைத்து, அதை மனித உடலோடு இணைத்து வைத்தார். எனவே உலக அதிசயங்களிலெல்லாம் மேலான அதிசயம் மனிதன் என்றால் மிகையாகாது.

மானிட உடலின் அமைப்பு அற்புதமானது. மனிதனின் எந்த அங்கத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தாலும் அதில் எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய விஷயங்களைக் காணலாம். ஆயினும் மனித உடலின் அழகும், அதில் காணப்படும் ஆச்சரியங்களும், சர்வேசுரனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டு, அவ்வுடலுக்கு உயிரளிக்கும் ஆத்துமத்திற்கு முன் என்ன? தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலுள்ள ஒரு ஆத்துமத்தின் அழகோடு ஒப்பிட இவ்வுலகில் அழகுள்ள பொருள் எதுவும் இல்லை.

பாவமின்றி பரிசுத்த நிலையிலுள்ள ஆத்துமத்தின் அழகே இவ்விதமென்றால், பாவ நிழல் அணுகாததும், சகல வரப்பிரசாதங்களும் நிறைந்து ஒளிருவதுமான நம் பரலோக மாதாவின் ஆத்துமத்தின் அழகுதான் என்னே! நமது பரலோகப் பிதாவின் விசேஷ அன்பைப் பெற்ற நேச குமாரத்தி அவர்கள்; நமது இரட்சகரின் கன்னித் தாயார் அவர்கள்; திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் பிரிய பத்தினி அவர்கள். அவர்கள் தேவனின் தாய்; மானிடரின் தாய்! எல்லாம் ஆச்சரியம்! அற்புதம்! அவர்களே அற்புத சிருஷ்டி! சிருஷ்டிப்பின் அற்புத சிகரம் அவர்களே! அவர்களிடத்தில் நிறைவேறிய ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு அற்புதம். ஜென்மப் பாவமில்லாப் பிறப்பு, தேவதூதரின் மங்கள வாழ்த்து, தேவ வல்லமையால் அற்புதமாகக் கருத்தரித்தல், அன்னையின் நித்திய கன்னிமை, அணைகடந்த வியாகுலம்; மோட்சாரோபணம், பரலோக பூலோக இராக்கினியாக முடிசூட்டப்படல்--இவை யாவும் அற்புத சம்பவங்களே! பாக்கியவதி இவர்களே! ஆச்சரியத்திற்குரியவர்கள் இவர்களே!

நம் ஆதித் தாய் தந்தையர் செய்த பாவத்தின் சாபமாக உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஜென்மப் பாவ தோஷத்துடன் பிறக்கிறது. ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக மானிடர் யாவரும் பாவக் கறையுடன் பிறக்க வேண்டுமென்பது பொதுவிதி. இவ்விதிக்கு விலக்காய் ஜென்மப் பாவ தோஷமின்றிப் பிறக்கிறார்கள் நம்மன்னை. உலக மீட்பருக்குத் தாயாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், உலகில் பாவ விதை விழுவதற்குக் காரணமான நரக சர்ப்பத்தின் நஞ்சு நிறைந்த தலையை மிதித்து நசுக்க வேண்டுமென்று திருவுளங் கொண்டு ஜென்மப் பாவக் கறையின்றி அவர்களை உற்பவிக்கச் செய்கிறார் தேவன்.

இயற்கை விதிப்படி கர்ப்பந்தரித்து ஒரு குழந்தை யைப் பெறும் எத்தாயும் தன் கன்னிமையை இழந்து விடுகிறாள். அதன் பின் அப்பெண் ஒரு தாய்; அவள் கன்னியல்ல. நம் அன்னையோ ஒரு கன்னித்தாய்; குழந்தையைப் பெற்றும் தன் கன்னிமையை இழக்காத கன்னித்தாய்; குழந்தையைப் பெறு முன்னும் பெற்ற பின்னும் நித்திய கன்னியாக விளங்குகின்றார்கள். அன்று சிங்காரத் தோப்பில் தேவனால் வாக்களிக்கப்பட்டவரும், பல்லாயிரம் வருடங்களாக பிதாப்பிதாக்களாலும், தீர்க்கதரிசிகளாலும் ஆவலாய் எதிர்பார்க்கப் பட்டவருமான மெசியாவை உலகிற்குப் பெற்றுத் தரும் பாக்கியம் பெற்றவர்கள் ஓர் அற்புத சிருஷ்டி யன்றோ! மனிதனாகப் பிறந்த தேவனுக்குத் தாயானதுடன், தன் கன்னிமையை இழக்காத கன்னித்தாயாகத் திகழ்வதும் இயற்கைச் சக்திகளுக்கு மேற்பட்ட சம்பவங்களன்றோ?

கன்னிமாமரி அடைந்த மகிமை உலகில் எவரும் அடையாத மகிமை. அவ்விதமே அவர்கள் அடைந்த துன்பமும், துயரமும், வியாகுலமும் உலகில் வேறு எவரும் அடையாதது. ஏழு வியாகுல வாட்களுக்கு இரையானது அவர்களது மாசற்ற இருதயம்; தன் மகன் மரிக்கும் சிலுவையடியில் நின்ற வியாகுல மாதா அவர்களே! தனது வாழ்நாட்களில் அவர்கள் சுமந்து சென்ற பாரமான சிலுவைக்கும், பானம்செய்த கசப்பான பாத்திரத்திற்கும் ஏற்ற சம்பாவனை பெற்றவர்களும் அவர்களே! தன் மகனைச் சகலத்திலும் பின்சென்ற அவர்கள், மரணத்திலும் மகன் வழிச்சென்று மரித்தார்கள். மரித்தபின் ஆத்தும சரீரத்தோடு மோட்சத்துக்கு எடுத்துச் செல்லப்பட் டார்கள். அன்னைமாமரி, இதோ இன்று பரலோக பூலோக இராக்கினியாய், சம்மனசுக்களின் ஒப்பற்ற அரசியாய், மனுமக்களுக்காகப் பிதாவிடம் மனுப்பேசும் மத்தியஸ்தியாய் மங்கா மாட்சியுடன் வீற்றிருக்கிறார்கள். என்ன ஆச்சரியம்! என்ன அற்புதம்!

கன்னிமாமரி சர்வேசுரனுடைய உன்னத சிருஷ்டி! சர்வேசுரனுடைய தாய்! கன்னித்தாய்! “மரியம்மாள் சிருஷ்டிகரின் நன்மைத்தனம், சிநேகம், இரக்கம், வல்லமை ஆகிய இலட்சணங்களின் சுருக்கம்; அவருடைய உத்தமதனத்தின் சுருக்கம்” (Serm. 2, de Assumpt.) என்று கூறுகிறார் க்ரீட் நகர் அர்ச். பிலவேந்திரர். ஆதாமின் பாவ சந்ததியில் உதித்த அவர்கள் அச்சந்ததியின் ஈடேற்றத்திற்குக் காரணமாக இருக் கிறார்கள். 

“வல்லமையுள்ளவர் பெருமை மிக்கவைகளைத்” தன்னிடம் செய்யும் தனிப்பெருமை பெற்ற கன்னித்தாய் கன்னிமாமரியே! அவர்கள் பரலோகத்திலும் பூலோகத்திலும் அடைந்துள்ள மகிமை எவ்வளவு என்றால், “மிகவும் வாய்ச் சாதுரியமுள்ள நாவன்மை பெற்றவரும், அவர்களுடைய மகிமையை முற்றிலும் எடுத்துரைக்க முடியாது” (St. Cyril, Hom. habita in Nestor) என்று எண்ணுகின்றனர் அர்ச். சிரிலும், பெர்நார்துவும்.

சர்வேசுரனுடைய இந்த அதிசயமான சிருஷ்டியைக் கண்டு ஆச்சரியப்பட்டால் போதுமா? சர்வேசுரனுடைய சிருஷ்டிகள் என்ற முறையில் நம்மைத்தானே நாம் நோக்குவோமானால் நம்மையும் அவர் அற்புதமான சிருஷ்டிகளாகவே செய்துள்ளார் என்பது விளங்கும். பிறக்கும் போது நாம் ஜென்மப்பாவ தோஷத்துடன் பிறக்கிறோம். ஞானஸ்நானம் பெற்றவுடனோ பசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சர்வேசுரனுடைய பிள்ளைகளாகிறோம். தேவ இஷ்டப்பிரசாதம் நம்மில் குடிகொள்ள நாம் கடவுள் வாசம் செய்யும் நடமாடும் கோவில்களாக மாறுகிறோம். 

அற்பமும், தூசியும், துரும்புமான நாம், தேவ இஷ்டப்பிரசாதங்களைப் பொழியும் வாய்க்கால்களான மற்ற தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்று, ஞான ஜீவியத்தில் வளர்கிறோம். இத்துடன் மரித்த பிறகு மோட்ச பாக்கியத்தையடையும் ஒப்பில்லாச் சுதந்திரமும் அடைகிறோம். எனவே நாமும் சர்வேசுரனுடைய அற்புத சிருஷ்டிகள் என்பதில் என்ன சந்தேகம்? சர்வேசுரன் நம் ஒவ்வொருவரிடமும் செய்துள்ளதும், ஒவ்வொரு வரிடமும் செய்து வருவதுமான அற்புதங்களை நினைவு கூர்வோமானால், சர்வேசுரனின் மட்டில்லா தயாள குணமும், நன்மைத்தனமும் நன்கு புலனாகும்; நாமும் தேவ சிநேகத்தில் நாளுக்கு நாள் வளர்வோம்.

“தாயே! நீர் முழுதும் அழகுள்ளவர்கள்! நீர் முழுதும் ஆச்சரியம் நிறைந்தவர்கள்! ஜென்மப்பாவ தோஷம் ஏதுமில்லாத தூய செல்வி நீரே! கனனிமையைக் காத்து, தாய்மையை ஏற்று, கன்னித் தாயானவர் நீரே! தேவதாய் என்னும் ஒப்பில்லா உரிமையைப் பெற்ற பெண் திலகம் நீரே! தேவ வரங்கள் சம்பூரணமாக நிறைந்த ஞானப் பொக்கிஷம் நீரே! 

சர்வேசுரன் உம்மீது வைத்த தனி அன்பாலும், நீர் அடைந்த ஒப்புவமையில்லா உரிமைகளாலும் ஆச்சரியத்திற்குரியவர் நீரே! தேவன் உம்மிடம் செய்துள்ள ஆச்சரியத்திற்குரியவைகளைத் தியானிக்கும் நாங்கள், தேவன் எங்களிடம் செய்துள்ள ஆச்சரிய அற்புதங்களை உணரச் செய்தருளும். இவ்வுலக ஜீவியத்துக்குப் பின், நீர் அரசியாக வீற்றிருக்கும் மோட்ச இராச்சியத்தை அடைந்து உம்முடன் அப்பாக்கியத்தைச் சுகித்தனுபவிக்க எங்களுக்காக என்றும் மன்றாடுவீராக.” 


ஆச்சரியத்துக்குரிய மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!