என்னுடையவும் உங்களுடையவும் பலி

திவ்விய பூசை ஒரு பரிசுத்தமான, பிரசித்தமான ஆராதனை. அதிலே குருவானவரும் சாதாரண கிறீஸ்தவர்களும் தத்தம் அந்தஸ்துக்குத் தக்கவிதமாய் பங்குபற்றுகிறார்கள். திவ்விய பூசை குருவானவருக்கு மாத்திரம் உரிய தல்ல எங்களுக்கும் உரியது என்று விசுவாசிகள் மதித்துக்கொள்ளவேணும். அ

தாவது நீங்கள் பூசைகாண்கிற அளவிலே மாத்திரம் அது உங்களுக்கு உரிமையானது என்று சொல்லுவது போதாது. அந்த அகோசர பலிக்கிருத்தியத்தை நீங்களும் ஒருவிதத்திலே குருவானவரோடுகூட நடப்பிக்கிறீர்கள். அதினாலே தான் பூசைபண்ணுகிற குருவானவர் அதை ''என் னுடையவும் உங்களுடையவும் பலி '' என்று சொல்லுகிறார்.

பூசைப்பலியைச் சருவேசுரனைத் தோத்திரிப்பதற்காகவும், பாவத்துக்குப் பரிகாரஞ்செய்வதற்காகவும் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கேட்டு மன்றாடுகிறதற்காகவும் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியறிதலாகவும் சருவேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

திவ்விய பூசை குருவானவருடையவும் உங்களுடையவும் காணிக்கை. குருவானவரோடு ஒன்றித்து நீங்களும் இந்தப் பரிசுத்த பலியை ஒப்புக்கொடுக்கிறீர்கள். முதன் முதற் பூசைப் பலி நடந்த பெரிய வியாழக்கிழமையன்று தானே நீங்களும் அப்போஸ்தலர்களோடுகூட கர்த்தருடைய இராப்போசனத்தில் பங்குபற்றுகிறீர்கள் என்று ஒருவிதத்திலே சொல்லலாம்.

அதெப்படியெனில் எங்கள் ஆண்டவர்தாமே குருவானவருடைய வாயினால் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கிறதைக் கேட்கிறீர்கள். அவரை நீங்கள் உட்கொள்ளுகிறீர்கள். அம்மட்டோ! நீங்கள் ஆண்டவர் உங்களுக்காகப் பாடுபட்டு மரிக்கிற கல்வாரி மலையிலே நிற்கிறீர்கள் என்றும் சொல்லலாம்.

ஆ! எத்தனையோ பேர் திவ்விய பூசையைக் குருமார் மாத்திரம் தனியே நடப்பிக்கிறார்களென்று நினைக்கிறார்கள். தாங்கள் அதைப் பார்த்துக்கொண்டு மாத்திரம் இருக்கவேணுமென்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். பூசை ஒப்புக்கொடுப்பதிலே தங்களுக்குப் பங்கில்லை, அதைக் காணுவதுதான் தாங்கள் செய்யவேண்டுவது என்று அவர்கள் நினைப்பது தவறு.

எந்தப் பலியிலும் உட்கருத்தும், அதைக் காண்பிக்கும் வெளிக் கிருத்தியமும் இருப்பது அவசியம். எவ்வித பலியிலும் பலிப் பொருளை அழிக்கிற அல்லது மாற்றுகிற கிருத்தியமும், அதைக் காணிக்கையாக்குகிற கருத்தியமும் ஆகிய இந்த இரண்டும் சேர்ந்திருக்கவேண்டும்.

பலிப்பொருளைக் காணிக்கையாக்குகிறதுதான் முக்கியம். இதைத் தான் திவ்வியபூசை காணும் விசுவாசிகள் பிரதானமாய்க் கவனிக்கவேண்டியது. திவ்விய பூசை ஒரு மெய்யான பலி என்பது விசுவாச சத்தியம்.

தேவ பலிப் பொருளான யேசுநாதர் தம்மைத்தாமே காணிக்கை ஆக்கும்போது நாமும் அந்தக் காணிக்கையிற் சேரவேணும். பூசைப்பலியைக் காண்கிற ஒவ்வொருவரும் அந்தக் காணிக்கையோடு ஒன்றிக்க வேண்டியவர்கள். குருவானவர் மாத்திரமே தேவவசீகரம்பண்ணுகிறவராயிருந்தபோதிலும், கிறீஸ்து நாதருடைய ஞானச் சரீத்தின் உறுப்புகளாயிருக்கிற கிறீஸ்தவர்கள் எல்லோரும் அவரோடு சேர்ந்து கிறீஸ்துநாதருடைய தேவபலியை எங்கள் காணிக்கையாகப் பிதாவானவருக்கு ஒப்புக்கொடுக்கிறோம்,

திவ்விய பூசைப்பலி திருச்சபையின் மேலான பிரசித்த ஆராதனை முறை. - அது திருச்சபைக்கு உரிமையான து. ஆனபடியால் திருச்சபையின் மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமையானது. நாங்கள் ஒவ்வொருவரும் கிறீஸ்து நாதருடைய பலியில் பங்குபற்றும் படியாகவே இந்த ஆராதனை முறை உண்டாக்கப்பட்டது.

கல்வாரி மலையில் சிலுவையிலே அறையுண்டநாதரோடு ஒன்றித்து அந்தப் பலியைப் பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுக்க இந்நாட்களிலிருக்கிற எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகையால்தான் அந்தச் சிலுவைப் பலியோடு ஒற்றுமையுள்ளதான பூசைப்பலியைக் கர்த்தர் எங்களுக்காக ஏற்படுத்தியருளினார். பூசைப்பலியிலே சமுகமாயிருப்பதும் சிலுவைப்பலியிற் சமுகமாயிருப்பதும் ஒன்று தான்.

திவ்விய பூசைப்பலியைக் குருவானவர் நடத்தும்போது அதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போதும் என்றிராமல் நாங்களும் அந்தப் பரம காணிக்கையிலே சேர்ந்துகொள்வது தான் உத்தமமான விதமாய்ப் பூசைகாணும் முறையாம்.

குருவானவர் பூசைப் பாத்திரத்தில் இரசம் வார்த்தபின் அதிலே சில துளி தண்ணீரும் விடுகின்றார். இதற்குக் கருத்தென்ன? பலிப்பொருளானவரோடு எங்களுக்கு ஐக்கியம் உண்டென்றும் நாங்களும் அவரோடு எங்களைப் பலியாக ஒப்புக்கொடுக்க வேணும் என்றுமே இது காட்டுகின்றது.

குருவானவர் திருப்பூசை முறையை ஆரம்பிக்குமுன் சபையைப் பார்த்து "ஓறாத்தெ விறாத்றெஸ்'' சகோதரரே! என்னுடையவும் உங்களுடையவும் பலியானது, சருவேசுரனுக்கு உவப்பாய் இருக்கத் தக்கதாக மன்றாடுங்கள்'' என்று சொல்லுகிறார். என்னுடையவும் உங்களுடையவும் என்ற சொற்களைக் கவனியுங்கள், இப்படியே முகவுரை தொடங்கும்பொழுதும் குருவானவருக்கும் விசுவாசிகளின் இடமாய் நிற்கின்ற பூசைப்பரிசாரகனுக்குமிடையில் ஒரு பரிசுத்த சம்பாஷணை நடக்கின்றது. இதைவிட வேறு பல செபங்களிலேயும் குருவானவர் பூசைகாணுகிற விசுவாசிகளையும் தம்மோடுகூடச் சேர்த்து நாங்கள் என்று பன்மையிலே சொல்லுகிறதைக் கவனிக்கலாம்.

கடைசியாக, சற்பிரசாத அனுபவிப்பு வருகிறது. அதுதான் குருவானவரைப்போல சாதாரண கிறீஸ்தவர்களும் பலியிலே பூரணமாய்ப் பங்கு அடைந்தார்கள் என்று காண்பிப்பது. ஆனபடியால் பூசைகாணும் ஒவ்வொருவரும் சக்கிறமேந்து வழியாக அல்லது அதற்கு ஆயத்தமில்லாவிடில் ஞான விதமாயாவது தேவ நற்கருணை உட்கொள்ளக்கடவார்கள்.

சுருக்கிச் சொல்லுகில் பூசைப்பலியாவது திருச்சபை என்னும் ஞானச் சரீரத்தின் சிரசான யேசுக்கிறிஸ்து நாதர், அந்த ஞானச் சரீரத்தின் அவயவங்களோடு தம்மைத் தாமே ஓயாமல் சருவேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தல் தான் எனலாம்.

திவ்வியபூசை காண்கிற கிறீஸ்தவர்கள் செய்யவேண்டியது வேறு ஒன்று உண்டு. கிறீஸ்து நாதரோடும் அவருடைய பதிலாளியான குருவானவரோடும் சேர்ந்து சருவேசுரனுக்குத் தேவபலியை ஒப்புக்கொடுக்கிற விசுவாசிகள் தங்களையும் சருவேசுனுக்கு உவந்த ஞானப்பலிகளாக ஒப்புக்கொடுக்கவேண்டியது, அதாவது தங்கள் ஆசாபாசங்களை ஒறுத்து அடக்கி எதிரிடைகளைப் பொறுமையோடு சகித்து தங்கள் சீவியம் கடைசிபரியந்தம் ஒரு ஞானப் பலியாக இருக்கச் செய்யவேண்டியது.

இந்த ஞானப் பலியைச் செலுத்துகிறவர்களைத்தான் அர்ச். இராயப்பர் பரிசுத்தமான சனம் இராச ஆசாரியக் கூட்டம் என்று பெயர் கொடுத்தழைத்தார். (1 இராயப். 2, 5)

(ஸ்ரீ விக்ரர் தம்பிநாயகம் இங்கிலீஷில் எழதியது.)