இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயம்!

“சர்வேசுரன் சிநேகமாகவே இருக்கிறார்” என்கிறார் அர்ச். அருளப்பர். இந்த சிநேகமே அவருடைய சாரமாக இருக்கிறது. அவர் முழுமையும் நேசமாகவே இருக்கிறார். ஆயினும் அவர் கண்களுக்குப் புலப்படாதவராகவும், நம் எவ்வளவோ உலகத்தன்மையாகவும், புலன்களால் சுற்றப்பட்டவர்களாகவும் இருப்பதால், கடவுள் தமது அத்தியந்த சிநேகத்தின் காணக் கூடிய சித்திரம் ஒன்றை நமக்குத் தர சித்தம் கொண்டார். 

காய்ந்த புல்லின்மேல் படுத்திருக்கிற ஒரு சிறு குழந்தையாக, அவர் தம் மிகச் சிறிய கரங்களை விரித்து, தம் அருகே வரும்படி நம்மிடம் கெஞ்சுகிறார். அவர் தனித்து செயல்பட முடியாத ஒரு பாலகனாக இருப்பதால், நம் சர்வேசுரனிடம் போக நாம் பயப்படக் கூடாது. நேசத்தோடு நாம் அவரை அணுகிச் செல்ல வேண்டும். அது நம் இருதயங்களைத் திறக்கிறது. உடனே அவர் திறந்திருக்கிற நம் இருதயங்களுக்குள் மறைவான திரவியங்களை வைக்கிறார். அதுவே உண்மையான சிநேகமாக இருக்கிறது! 

மனிதன் தம்மை நேசிக்கும்படி செய்வதற்காக சர்வேசுரன் ஒரு குழந்தையாகிறார்; அதன் பின் கடவுள் மனிதனை அர்ச்சித்து, அவனுடைய நேசத்திற்காக அவனுக்கு சன்மானமளிக்கிறார். கடவுள் நம்மீது கொண்டுள்ள சிநேகத்தை எண்பிக்கும்படி அவர் எவ்வளவோ அதியற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார். அவற்றில் எல்லாம் மிகப் பெரிய நிரூபணம் அவருடைய சிலுவை மரணம் ஆகும். 

திவ்ய பலி பூசை அந்தப் பலியின் இடையறாத புதுப்பித்தலாக இருக்கிறது. திவ்ய நற்கருணையோ இடையறாத ஞாபகார்த்தமாக இருக்கிறது. அவருடைய திரு இருதயம் சிநேகம் பற்றியெரிகிற சூளையாக இருக்கிறது என்பதை அந்த மரணம் நிரூபிக்கிறது. 

ஒரு நண்பனுக்குத் தன் அன்பை எண்பிக்கும்படி மிகக் கொடூரமான வேதனைகளை அனுபவிக்க சித்தம் கொள்ளும் அளவுக்கு, அந்த நண்பனின் நலத்தை இவ்வளவு ஏக்கத்தோடு ஒருவன் தேடுகிறான் என்றால், அவனுடைய இருதயம் அன்பின் சூளையாகவே இருக்க வேண்டும். 

நாம் எவ்வளவு சோம்பேறிகள், எவ்வளவு குளிர்ந்தவர்கள், உலகத்தின் மென்மையான ஜீவியத்தின்மேல் எவ்வளவு நாட்டமுள்ளவர்கள் என்பதை சேசுநாதர் அறிந்திருந்தார். பசாசின் புகழ்ச்சியான வார்த்தைகள் நம்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருந்தார். 

ஒரு சிறு சோதனை முதலாய் கடவுளை நாம் கைவிடும்படி செய்து, சாத்தானைத் தெரிந்து கொள்ளச் செய்யும் அளவுக்கு, நல்ல சர்வேசுரனின் மீது நமக்குள்ள நேசம் எவ்வளவு பலவீனமானது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் அவர் நம்மை வெகுவாக நேசித்தார். 

நாம் காலத்தின்போதும், நித்தியத்திலும் அந்த மிருகத் தன்மையுள்ள பசாசுக்கு அடிமைகளாக ஆகக் கூடாதென்று அவர் விரும்பினார். இத்தகையதொரு நினைவு அவருடைய நேச இருதயத்தை நசுக்கியது. சாத்தியமான ஒவ்வொரு வழியிலும், இருதயத்தைப் பிளப்பதாகிய மிகக் கொடிய வாதைகளுக்கு மத்தியில் தம் உயிரைக் கொடுத்தாவது நம் மீது வெற்றிகொள்ள வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். 

தயவிரக்கம் நேசத்தை விழித்தெழச் செய்கிறது என்றும், நாம் நேசிக்கும்போது, நம்மை இரட்சிக்கத் தம்மால் இயலும் என்றும் அவர் அறிந்திருந்தார். சிலுவையின் மீது நம் நேசர் அடைந்த இவ்வளவு பயங்கரமுள்ள மரணத்தின் பின்னால் இருக்கிற அத்தியந்த சிநேகம் இதுதான். ஆனால் இன்னமும், தேவ சிநேகத்தின் இந்தச் சூளைக்கு மிக அருகில் இருக்கும்போதும் கூட பெரும்பாலான நேரங்களில் நாம் குளிர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்! 

கடவுளுக்காக, இந்த நேசத்தின் சூளையில் சுவாலித்தெரிகிற அந்தப் பரலோக நெருப்பில் ஒரு சிறு தீப்பொறியையாவது நாம் பற்றிக் கொள்ளத் தக்கதாக, நம் இருதயங்களிலிருந்து உலக நேசங்களின் எல்லா அழுக்குகளையும் வெளியே தள்ளிவிடுவோமானால்! 

ஆனால் இல்லை, நம் சொகுசான வாழ்வை கடவுளை விட அதிகமாக நேசிக்கிறோம். கடவுளின் சித்தத்தைவிட நம் சித்தத்தை அதிகமாக நேசிக்கிறோம். நன்மைத்தனத்தினுடையவும், சிநேகத்தினுடையவும் அளவற்ற பெருங்கடலை நாம் நேசிப்பதை விட, நம்முடைய பழைய பாவகரமான வெறுமைகளை நாம் அதிகமாக நேசிக்கிறோம். 

நாம் என்னவாக இருந்தோம் என்று நம் அயலான் சொன்ன ஒரே காரணத்திற்காக, அவனைப் பிறர் சிநேகமின்றி நாம் நடத்தும் வரையிலும், கடவுள் நம் நேசத்தின் மேல் தாகங் கொண்டிருக்கிறார் என்று அறிந்த பிறகும், மனித ஆசாபாசங்களில் நாம் தாகம் கொண்டிருக்கிற வரையிலும், இந்த உலக நேசம் கடவுளுக்குப் பகையாக இருக்கிறது என்று தெரிந்து பிறகும், நாம் உலகத்தையும், அதன் வெறுமையான, பேய்த்தனமுள்ள, வஞ்சகமான பொருட்களையும் நேசிக்கும் வரையிலும்-ஒரே வார்த்தையில் கூறுவதானால், இந்த நேசத்தின் பெருங்கடலுக்குள் விழுவதைத் தவிர வேறு எதையும் செய்ய நாம் ஆசிக்கும் வரையிலும், இவ்வளவு காலமாக நாம் கடவுளை நேசியாமல் இருந்திருக்கிறோம். 

மாறாக, நம் பனிக்குளிர்ச்சியுள்ள நன்றிகெட்டதனத்தாலும், அருவருக்கத்தக்க ஆங்காரத்தினாலும் அவரை அவமானப்படுத்தி வந்திருக்கிறோம்!


சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!