இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஒரு இராட்சத மாஸ்டிஃப் வகை நாய்!

1862 ஜூலை மாதத்தில் டொன் போஸ்கோ சாவான பாவங் களை வேண்டுமென்றே மறைக்கிற சிறுவர்களின் தேவத்துரோக மான பாவசங்கீர்த்தனங்களைப் பற்றிப் பேசினார். தம்மோடு தொடர்புள்ள பின்வரும் நிகழ்ச்சியைக் கொண்டு, தமது கருத்தை அவர் தெளிவுபடுத்தினார்:

ஒரு நாள் இரவில், நான் ஒரு சிறுவனைப் பற்றிக் கனவு கண்டேன். அவனுடைய இருதயத்தைப் புழுக்கள் அரித்துக் கொண் டிருக்க, அவன் அவற்றைப் பிடுங்கி வீச முயன்று கொண்டிருந்தான். நான் இந்தக் கனவுக்கு முக்கியத்துவம் தரவில்லை . ஆனால் மறுநாள் இரவில் நான் மீண்டும் இந்தச் சிறுவனைக் கண்டேன். இப்போது ஒரு இராட்சத மாஸ்டிஃப் நாய் அவன்மீது கால்களை ஊன்றி நின்றபடி, அவனுடைய இருதயத்தைக் கரம்பித் தின்றது. 

(மாஸ்டிஃப் என்பது தொங்கும் காதுகளும், உதடுகளும் உள்ள மிக வலிமையான ஒரு பெரிய நாய் வகை.)

இந்தச் சிறுவனுக்காக ஆண்டவர் ஏதோ விசேஷ தேவ அருளை வைத்திருந்தார் என்பதில் நான் நிச்சயமாயிருந்தேன். அவனுடைய மனச்சான்று மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. நான் அவன் மீது ஒரு கண் வைத்திருந்தேன். ஒரு நாள் நான் அவனை வழிமறித்தேன்.

“எனக்கு ஓர் உபகாரம் செய்வாயா?” என்று நான் கேட்டேன்.

“நிச்சயமாக, என்னால் முடிந்தால்.” 

“உன்னால் முடியும், நீ விரும்பினால்.” 

“என்ன அது?"

“உண்மையாகவே அதைச் செய்வாயா?” 

“ஆம். செய்வேன்.” 

“சொல், நீ என்றைக்காவது பாவசங்கீர்த்தனத்தில் எதையாவது மறைத்திருக்கிறாயா?”

அவன் இல்லையென்று மறுக்கப் போனான். 

ஆனால் நான் உடனடியாக தொடர்ந்து, “இன்னின்ன பாவங்களை நீ ஏன் பாவசங்கீர்த்தனத்தில் சொல்வதில்லை?” என்று கேட்டேன். 

அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். அதன்பின் கதறியழத் தொடங்கினான். 

"அது உண்மைதான். அந்தப் பாவத்தைச் சொல்ல நான் பல ஆண்டுகளாக விரும்பி வந்திருக்கிறேன். என்றாலும் அதைச் சொல்ல எனக்கு மிகவும் பயமாயிருந்தது” என்றான் அவன். நான் அவனைத் தேற்றினேன். கடவுளோடு அவன் எப்படி சமாதானம் செய்து கொள்ள முடியும் என்று நான் அவனுக்குக் கற்பித்தேன்.