29 ஜனவரி 1944.
உங்களுக்கு நிச்சயம் ஈடுபாடு இருக்கக்கூடிய இரண்டு காரியங்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். என் மயக்க நிலை மாறிய உடன் அதை எழுதத் தீர்மானித்திருந்தேன். ஆனால் அதைவிட அதிக அவசரமான ஒன்றுள்ளதால் அதை பிந்தி எழுதுகிறேன்...
முதல் முதலில் உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்பியது இதுதான்: ஹில்லல், கமாலியேல், ஷாமெய் என்ற பெயர்களை என்னால் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்ததென்று நீங்கள் இன்று கேட்டீர்கள்.
“இரண்டாவது குரல்” என்று நான் அழைக்கிற குரல்தான் இந்த விஷயங்களை எனக்குக் கூறுகிறது. எழுதும்படி எனக்குக் கூறுகிற சேசுவின் குரலையும் நான் எழுதுகிறதற்கு வாசகம் கூறுகிற மற்றவர்களுடைய குரல்களையும்விட மெதுவான குரல் அது. இந்தக் குரல்கள் - அவைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் - மீண்டும் சொல்கிறேன்: அவைகளை என் உள்ளத்தின் செவிப்புலன் கேட்கிறது. அவைகள் சரியாக மனிதக் குரல்களைப் போலவே உள்ளன. அவை பரிவுள்ள குரல்களாக, அல்லது கோபகக்குரல்களாக பலத்த அல்லது மெலிந்த குரல்களாக, மகிழ்ச்சிகரமாக அல்லது துயரமாக அவை கேட்கின்றன. எனக்கு மிகப் பக்கத்தில் இருந்து ஒருவர் பேசுவதுபோல் அவை உள்ளன. “இரண்டாவது குரல்” என்று நான் கூறுவது ஒரு ஒளி போலிருக்கிறது. என் உள்ளத்தில் பேசும் உள்ளொலி போலிருக்கிறது. என் உள்ளத்திற்கு அது பேசாமல் என் உள்ளத்தில் பேசுகிறது. அது ஓர் அடையாளம்.
ஆகவே வாதம் செய்துகொண்டிருந்த குழுக்களை நான் சமீபித்தபோது ஒரு வயோதிபருக்குப் பக்கத்தில் மிக வேகத்துடன் வாதித்துக் கொண்டிருந்த மதிப்பிற்குரிய ஆள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அப்போது இந்த உள்ளரங்கமான ஒன்று என்னிடம் “கமாலியேல்” - “ஹில்லல்” என்று கூறியது. முதலில் கமாலியேல் என்றுதான் கூறியது. பிறகுதான் “ஹில்லல்” என்றது. இதைப் பற்றி எந்த ஐயமும் எனக்கில்லை. இவர்கள் யாரென்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில் என் உள் அறிவிப்பாளர் அந்த விரும்பத்தகாத மூன்றாம் ஆள் யாரென்று, அந்த நபரை கமாலியேல் பெயர் சொல்லிக் கூப்பிட்ட சமயம் எனக்குச் சுட்டிக் காட்டினார். இவ்வாறு நான் பரிசேயத் தோற்றமுடைய அந்த ஆள் யாரென அறிந்து கொண்டேன்.
இன்று இந்த அந்தரங்க அறிவிப்பாளர், பிரபஞ்சத்தை அதன் மரணத்திற்குப்பின் நான் காண்பதாகக் கண்டுபிடிக்கச் செய்தார். காட்சிகளில் இப்படி அநேக சமயங்களில் நடைபெற்றுள்ளது. இந்த அறிவிக்கிறவர்தான், கண்டுபிடிப்பதற்கு அவசியமானதும் என்னால் அறிய முடியாததுமான சில விவரங்களை எனக்கு எடுத்துக் கூறுகிறார். நான் எழுதியிருப்பது உங்களுக்கு விளங்குகிறதோ என்னமோ. இப்போது இதை நிறுத்துகிறேன். ஏனென்றால் சேசு பேசத் தொடங்குகிறார்.
22 பெப்ருவரி 1944.
சேசு கூறுகிறார்:
சின்ன அருள் பொறுமையாயிரு. வேறொரு காரியம் உள்ளது. உன் ஆன்ம குருவுக்குப் பிரியமாகும்படியாக அதைச் செய்து வேலையை முடித்துவிடுவோம். அந்த வேலையை நாளைக்கு ஒப்படைக்க வேண்டும். நாளை சாம்பல் புதன் கிழமை. இந்த வேலையை நீ முடிக்க வேண்டும் என நான் விரும்புவது ஏனென்றால் நீ என்னுடன் வேதனைப்பட வேண்டுமென்று நான் ஆசிக்கிறேன்.
இனி முந்திய நாட்களுக்கு, மிக முந்திய நாட்களுக்கு நாம் செல்வோம். பன்னிரண்டு வயது பைனொக நான் தர்க்கித்த தேவாலயத்திற்குப் போவோம் - அதிலும் ஜெருசலேமுக்குச் செல்லும் சாலைகளுக்கும் ஜெருசலேமிலிருந்து தேவாலயத்திற்கும் செல்கிற வீதிகளுக்கும் செல்வோம்.
ஆண்களின் கூட்டமும் பெண்களின் கூட்டமும் சந்தித்தபோது, நான் சூசையப்பருடன் இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்த மாதாவின் சஞ்சலத்தைப் பார்.
அவர்கள் அர்ச். சூசையப்பரைக் கசந்து கடிந்து கொள்ளவில்லை. வேறு எந்தப் பெண்ணும் அப்படிச் செய்திருப்பாள். நீங்கள் எவ்வளவோ சிறிய காரியத்திற்கும் அப்படிச் செய்கிறீர்கள்; ஆண்மகன் குடும்பத்தின் தலைவன் என்பதை மறந்து விடுகிறீர்கள். ஆனால் எந்த கசந்த குற்றஞ் சாட்டுதலையும்விட அதிகமாக மாதாவின் முகத்தில் வெளிப்படும் துயரம் சூசையப்பரின் இருதயத்தை வெகுவாய் ஊடுருவுகிறது. மாமரி, எந்த உணர்வின் வெடிப்பிற்கும் இடமளிக்கவில்லை. நீங்கள் கவனிக்கப்படுவதற்கும் இரங்குதலுக்கும் விரும்புவதால் மிக அற்பமானதற்கும் அப்படிச் செய்துவிடுகிறீர்கள். மாதாவின் அடக்கப்பட்ட துயரம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நடுங்குகிறார்கள். முகம் வெளிறுகிறது. கண்கள் அகலத் திறக்கின்றன. இவற்றால், கண்ணீர்களையும் புலம்பல்களையும்விட அதிகமாக இரங்குதலை எழுப்புகிறார்கள்.
அவர்களுடைய களைப்பும் பசியும் மறைகின்றன. பயணமோ நீண்டதாயிருந்தது. பல மணி நேரமாக அவர்கள் எதுவும் உண்ணவில்லை. ஆயினும் அவர்கள் தயாரித்த படுக்கையையும் பரிமாறுவதற்கு ஆயத்தமாயிருந்த உணவையும் விட்டுவிட்டு திரும்பிச் செல்கிறார்கள். இரவு நேரம். இருட்டாக இருக்கிறது. எதுவும் ஒரு பொருட்டாயில்லை. ஒவ்வொரு எட்டும் அவர்களை ஜெருசலேமை நோக்கிக் கொண்டு செல்கின்றது. ஒட்டகப் பயணிகளையும் மற்ற யாத்ரீகர்களையும் நிறுத்தி விசாரிக்கிறார்கள். சூசையப்பர் மாதாவைப் பின்செல்கிறார். அவர்களுக்கு உதவி செய்கிறார். திரும்பவும் ஒரு நீண்டநாள் நடைப் பயணம் ஜெருசலேமை அடைவதற்கு. அடைந்ததும் பட்டணத்தில் தீவிரமாக சேசுவைத் தேடுதல்.
அவர்களுடைய சேசு எங்கே? அவர் எங்கே இருக்கக் கூடும்? கடவுளுடைய ஏற்பாட்டின்படியே அநேக மணி நேரங்களுக்கு என்னை எங்கே தேடுவதென அவர்கள் அறிய மாட்டார்கள். தேவாலயத்தில் ஒரு குழந்தையைத் தேடுவதில் அர்த்தமேயில்லை. ஒரு குழந்தை தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருக்கக் கூடும்? ஒரு குழந்தை பட்டணத்தில் தவறிப்போய் அவன் திரும்பவும் தேவாலயத்திற்கு வந்திருந்தால், அவன் தன் தாயைத் தேடி அழுதிருப்பான். அப்படி மக்களுடையவும் ஆலயக் குருக்களுடை யவும் கவனத்தை ஈர்த்திருப்பான். அவர்களும் அவன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கு அறிவிப்புகளை வாசல்களில் வைத்து தேவையான நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அங்கே எந்த அறிவிப்பும் இல்லை. பட்டணத்தில் இருந்த யாருக்கும் இந்தக் குழந்தையைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அழகான பைனொ? இளஞ் சிவப்பா? வலுவுள்ளவனா? அப்படிக் குழந்தைகள் ஏராளம் இருக்கிறார்களே! “அவனை நான் அங்கே கண்டேன், இங்கே கண்டேன்” என்று யாரும் சொல்வதற்கு இந்த அடையாளங்கள் பற்றாது.
பின்னர், மூன்று நாளைக்குப் பிறகு மாதா களைத்துப் போய் தேவாலயத்தில் நுழைகிறார்கள். இந்த மூன்று தினங்களும் பின்னால் வரப்போகிற மூன்று நாள் அவஸ்தையின் அடையாளமாயிருந்தன. தேவாலயத்தில் மாதா முற்றங்கள் வழியாகவும் நெடும் அறைகள் வழியாகவும் நடந்து செல்கிறார்கள். அவரைக் காணோம். ஒரு பையனின் குரல் கேட்டபோதெல்லாம் அப்பக்கம் ஓடுகிறார்கள். பாவம்! பெற்ற தாய். ஆட்டுக்குட்டிகளின் கதறல்கூட தன் மகன் தன்னைத் தேடி அழுவதுபோல் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் சேசு அழுது கொண்டிருக்கவில்லை. அவர் போதித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று, ஒரு ஜனக் கூட்டத்திற்கு அப்பால் அவர் இப்படிச் சொல்கிற குரல் மாதாவுக்குக் கேட்கிறது: “இந்தக் கற்களே அதிரும்...” என்று. அந்தக் கூட்டத்தினூடே செல்ல மாதா முயற்சிக்கிறார்கள். அதிகக் கஷ்டப்பட்டு போய்ச் சேருகிறார்கள். அங்கே நிற்கிறார் சேசு, சாஸ்திரிகள் மத்தியில் கைகளை விரித்துக் கொண்டு!
மரியம்மாள் விவேகமுள்ள கன்னிகை. ஆனால் இச்சந்தர்ப் பத்தில், கவலை விவேகத்தை மேற்கொள்கிறது. அது மற்ற எல்லாவற்றையும் உடைக்கும் சூறாவளி. மாதா சேசுவை நோக்கி ஓடுகிறார்கள். அவரை அரவணைத்துக் கொண்டு அவர் இருந்த மர ஆசனத்திலிருந்து அவரை இறக்கி தரையில் நிறுத்தி: “ஓ! எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தீர்? மூன்று நாளாக உம்மைத் தேடி அலைகிறோமே, மகனே! உம் தாய் வேதனையால் சாகிறாள். உம் தந்தை களைப்பால் சோர்ந்து விட்டார். ஏன் சேசு இப்படிச் செய்தீர்?” என்கிறார்கள்.
தெரிந்த அவரிடம் “ஏன்” என்று கேட்பதெங்ஙனம்? “எதற்காக” அவர் இப்படி நடந்துகொண்டார் என்று எவ்வாறு கேட்க முடியும்? தேவ அழைத்தலைப் பெற்றவர்களை, கடவுளின் குரலைப் பின்செல்வதற்காக எல்லாவற்றையும் ஏன் விட்டுச் செல்கிறார்கள் என்று கேட்பதில்லையே. நானே ஞானமாயிருக் கிறேன். எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் ஒரு அலுவலுக்கு “அழைக்கப்பட்டேன்.” அதை நிறைவேற்றினேன். பூமியில் தாய் தந்தைக்கு மேலாக தெய்வீக பிதாவான கடவுள் இருக்கிறார். அவருடைய காரியங்கள் நம்முடைய காரியங்களை விட மேலானவை. அவருடைய விருப்பங்கள் மற்றெல்லாவற் றையும்விட சிறந்தவை. அப்படியே என் தாயிடம் நான் சொன்னேன்.
வேதபாரகர்களின் இராக்கினியான மாமரிக்கு இப்பாடத் துடன் அந்த சாஸ்திரிகளுக்கு என் போதனையை முடித்துக் கொண்டேன். அதை மாதா ஒருபோதும் மறந்ததில்லை. அவர்கள் பக்கத்தில் தாழ்மையான கீழ்ப்படிதலுடன் இப்பொழுது நான் கிடைத்துவிட்டதால், அவர்களுடைய இருதயத்தில் சூரியன் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. ஆயினும் என் வார்த்தைகள் அவர்களின் மனதில் ஆழமாய் வேரூன்றி நின்றன. அவர்களுடன் நான் உலகில் இருக்கப் போகிற மீதி இருபத்தொரு வருடங்களிலும் ஆகாயத்தில் அதிக சூரிய ஒளியும் இருக்கும். அநேக மேகங்களும் திரளும். அந்த இருபத்தொரு ஆண்டுகளிலும் பெரிய மகிழ்ச்சிகளும், அநேக கண்ணீர்களும் அவர்களுடைய இருதயத்தில் மாறி மாறி நிகழும். ஆயினும்: “மகனே எங்களுக்கு ஏன் இப்படிச் செய்தீர்?” என்று மட்டும் அவர்கள் இனிமேல் கேட்க மாட்டார்கள்.
ஓ மந்தப் புத்தியுள்ள மனிதரே! உங்கள் பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இக்காட்சியை, சின்ன அருள், நானே இயக்கி ஒளிர்வித்தேன். ஏனென்றால் உன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இப்பொழுது நான் சொல்வதைக் கவனி. இந்தச் சிறு புத்தகம் இவ்வாறு இருக்க நான் விரும்புகிறேன்.
முதல் துயரம்: கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இரண்டாம் துயரம்: எஜிப்தில் தங்கியிருந்தது.
மூன்றாம் துயரம்: தேவாலயத்தில் சேசு காணாமல் போனது.
நான்காம் துயரம்: அர்ச். சூசையப்பரின் மரணம்.
ஐந்தாம் துயரம்: நான் நாசரேத்திலிருந்து புறப்பட்டுப் போனது. அதன்பின் பெப்ருவரி 10, 1944-ல் நான் கூறி நீ எழுதியது.
ஆறாம் துயரம்: பெப்ருவரி 13-ல் கிடைத்த காட்சி. (அதில் 4 குறிப்புகள்: ஜெப ஆலயம், நாசரேத் வீடு, ஜெப ஆலயத்தில் சேசுவின் பிரசங்கம், நாசரேத்திலிருந்து தப்பியபின் அவர் தம் தாயுடன் பேசியது.)
ஏழாம் துயரம்: பெப்ருவரி 14-ல் கொடுக்கப்பட்ட காட்சி. அதன்பின் பெப்ருவரி 15-ல் நான் கூறி நீ எழுதியது. அதற்குப் பின் பிப்ரவரி 16-ல் அவ்வாறே நீ எழுதியது.
எட்டாம் துயரம்: பாஸ்கா இராப்போஜனம்.
ஒன்பதாம் துயரம்: பாடுகள். 1943 பெப்ருவரி 11-ல் கொடுக்கப்பட்ட காட்சியுடன் 18 பெப்ருவரி காட்சியை இணைத்துக் கூறு.
பத்தாம் துயரம்: சேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. (19 பெப்ருவரி). அதன்பின் 21 பெப்ருவரி காட்சியும் உரையும். பின் 22 பெப்ருவரி காட்சியும் உரையும், குறிப்பிட்ட இடம் வரை. சேசுவை தேவாலயத்தில் மூன்றாம் நாள் கண்டுகொண்டதை 3-ம் துயரத்தில் அதற்குரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
முதலில் உன் ஞானத் தந்தை வழக்கம்போல் தமக்கெனவும் உனக்கெனவும் புத்தகத்தை ஆயத்தம் செய்யட்டும். அதை நீ எந்தப் பிழையும் இல்லாதபடி திருத்த வேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்களுக்கென அவர் விரும்புகிற பிரதிகளைச் செய்வார். ஒவ்வொரு காட்சியும் அதற்குரிய உரையுடன் இருக்க வேண்டும். உன் ஆன்ம குரு உயிர்ப்பு விழாவிற்கு எல்லாம் வேண்டுமென்று விரும்பினார். உயிர்ப்பிற்கு ஆயத்தமாக அது வேண்டுமென்று நான் விரும்பினேன். அதை இன்று உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஏனெனில் இன்று தபசுகால முதல் நாள், சாம்பல் புதன். ஏற்கெனவே மாலை 4.30 ஆயிற்று.
வேலையைத் தொடங்குங்கள் பிள்ளைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக. இக்கொடையை எளிய இருதயத் துடனும் விசுவாசத்துடனும் ஏற்றுக் கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. இன்றைக்கென பிதா விரும்பிய நெருப்பு அவர்களிடம் பற்றி எரியும். உலகம் தன் குரூரத்தை மாற்றாது. அது மிகுதியாகக் கெட்டுவிட்டது. ஆனால் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள் - கடவுள்மீது தாகத்தை உணருவார்கள் - அர்ச்சிப்புக்குத் தூண்டப்படுவார்கள். இவை அவர்களுக்குள் இருந்து எழும்பும்.
சின்ன அருள், சமாதானமாய்ப் போ. உன் சேசு உனக்கு நன்றி கூறி உன்னை ஆசீர்வதிக்கிறார்.