இயற்கையான ஞானம்!

84. ஆபத்தானதும், கண்டனம் செய்யப்பட வேண்டியதுமான உலக ஞானத்தைத் தவிர, தத்துவவாதிகளின் இயற்கை ஞானம் என்ற ஒன்றும் இருக்கிறது.

இந்த இயற்கை ஞானத்தைத்தான் எகிப்தியர்களும், கிரேக்கர் களும் ஆவலாய்த் தேடினார்கள். "கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்" (1கொரி. 1: 22). இந்த ஞானத்தைப் பெற்றவர்கள் சாஸ்திரிகள் அல்லது ஞானிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இயற்கையின் அடிப்படை நாற்பெரும்பூதங்களில், அதைப் பற்றிய ஒரு பரந்த அறிவில் இந்த ஞானம் அடங்கியுள்ளது. இது ஆதாமின் வீழ்ச்சிக்கு முன், அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சாலமோன் மீது அது பொழியப்பட்டது. காலங்கள் தோறும் பல பெரிய மனிதர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது. 

85. தங்கள் ஞானம் தத்துவவாத தர்க்க சாஸ்திரத்தில் அடங்கி யுள்ளது என்று தத்துவவாதிகள் பெருமையடித்துக் கொள்கின் றனர். சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்றுவதாகச் சொல்லும் இரசவாதிகள் தத்துவவாதியின் கல் என்னும் இரச வாதப் பொருளை கண்டுபிடிப்பதற்கான இரகசிய யுக்திகளைப் பற்றிப் பெருமை பாராட்டுகிறார்கள். இந்தப் பொருளில் தான் இந்த ஞானத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற மாயையில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அர்ச். தாமஸ் அக்குயினாஸின் மத்திய கால தத்துவவாதம், ஓர் உண்மையான கிறீஸ்தவ முறையில் கற்றுக்கொள்ளப்படும் போது, அது மனதை விரிவாக்கி, அதிக உயர்வான அறிவுகளைப் புரிந்து கொள்ள அதற்கு உதவுகிறது. ஆனால் முற்காலத்தவர்கள் தங்களிடம் இருப்பதாகப் பெருமை பாராட்டிய இயற்கை ஞானம் என்று அழைக்கப்படும் காரியத்தை அது ஒரு போதும் தராது. 

86. இயற்கையான பொருட்கள் தங்கள் அடிப்படைக் கூறுகளின் நிலைக்குக் குறைக்கப்பட முடியும் என்று கற்பிப்பதை நோக்க மாகக் கொண்ட இரசவாதிகளின் விஞ்ஞானம் இன்னும் அதிகத் தகுதியற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது. இந்த விஞ்ஞானம், தன்னில் செல்லக் கூடியதாக இருந்தாலும், தான் அடைய முடிவதாகக் கூறும் நோக்கத்தின் காரியத்தில் பெருந் திரளான மக்களை இது வரை ஏமாற்றியே வந்துள்ளது. என் சொந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது, தத்துவவாதி யின் கல்லைக் கண்டுபிடிப்பது என்ற பாசாங்கின் கீழ், மனிதர்கள் பண நஷ்டமும், கால விரயமும், வரப்பிரசாத இழப்பும், இறுதி யாக ஆன்ம இழப்பும் அடையச் செய்வதற்கு இந்தப் போலியான விஞ்ஞானத்தைப் பசாசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். வேறு எந்த விஞ்ஞானமும் இவ்வளவு வெளிப்படையான வழிகளைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கத் தன்னால் முடியும் என்று பெருமை பாராட்டுவதில்லை.

இந்த விஞ்ஞானம் தத்துவவாதியின் கல்லை, அல்லது ஒரு வகைப் பொடியை (இதை அவர்கள் ப்ராஜக்ஷன் என்று அழைக் கிறார்கள்) தன்னால் தயாரிக்க முடியும் என்று சாதிக்கிறது. இது ஏதாவது திரவ நிலையிலுள்ள உலோகத்தின் மீது வீசப்படும் போது, அதைப் பொன்னாகவோ, வெள்ளியாகவோ மாற்றி விடும், இந்த வெள்ளி அல்லது பொன், நோய்களையும் சுகவீனங் களையும் குணமாக்கும், நீடிய ஆயுளையும் தரும், இன்னும் எண்ணற்ற அதிசயங்களைச் செய்யும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அறியாத மக்கள் இதை தெய்வீகமானது. புதுமை யானது என்று நம்புகிறார்கள்.

இந்தக் கலையில் தாங்கள் நிபுணர்கள் என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் கபானியர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் இந்த விஞ்ஞானத்தின் மறைவான இரகசியங்களை எவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறார்கள் என்றால், இரகசி யங்கள் என்று சொல்லப்படும் அவற்றை வெளிப்படுத்துவதை விட இவர்கள் சாவதற்கும் தயாராக இருப்பார்கள். 

87. பின்வருவனவற்றைக் கொண்டு தாங்கள் கற்பிப்பதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்:

(1) சாலமோனின் வரலாறு. அவருக்குத் தத்துவவாதியின் கல் பற்றிய இரகசியம் தரப்பட்டிருந்தது என்று இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதற்கு சாட்சியாக அவர்கள் ஓர் இரகசியப் புத்தகத்தைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள், அது போலியானது. பேய்த்தனமுள்ளது. ''சாலமோனின் கழுத் தெலும்பு" என்பது அதன் பெயர்.

(2) எஸ்திராஸின் வரலாறு. இவருக்குக் கடவுள் ஒரு பரலோகத் திரவத்தைப் பருகத் தந்தார் என்றும், அது அவருக்கு "ஞானம் தந்தது என்றும் எஸ்திராஸ், ஏழாம் புத்தகம் கூறுகிறது.

(3) ரேமண்ட் லல்லி மற்றும் பல பெரும் தத்துவவாதிகளின் வரலாறு. இந்தத் தத்துவவாதியின் கல்லைத் தாங்கள் கண்டுபிடித் திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

(4) இறுதியாக, தங்கள் வஞ்சக போதகத்தை பக்தி என்னும் போர்வையில் இன்னும் நன்றாக மூடி மறைப்பதற்காக, அவர்கள் அதைக் கடவுளின் ஒரு கொடை என்று அழைக்கிறார்கள். இந்தக் கல்லை விடாமுயற்சியோடு கேட்டு ஜெபிப்பவர்களுக்கும், தங்கள் செயல்கள் மற்றும் ஜெபங்களால் அதை அடையத் தகுதி பெறுபவர்களுக்கும் மட்டுமே அது வழங்கப்படுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். 

88. வேறு அநேகரைப் போல நீங்களும் ஏமாற்றப்படாதிருக்கும் படியாக, இந்தப் பயனற்ற விஞ்ஞானத்தின் மாயத் தோற்றங்கள் பற்றிய ஒரு விளக்கத்தை நான் தந்திருக்கிறேன். உலகிலுள்ள மிகுந்த புகழ்ச்சிக்குரியதும், பக்திக்குரியதுமாகத் தோன்றுகிற பாசாங்குகளின் கீழ் மிக அதிகமான பணத்தையும், மிக அதிகமான காலத்தையும் வீணாக்கி விட்ட பலர், இறுதியாக இவை எல்லாவற்றிற்குமாக மனம் வருந்தி, தங்கள் போலித்தனத்தையும், தங்கள் பொய்க் கற்பனைகளையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

தத்துவவாதியின் கல் என்பது சாத்தியம்தான் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அது உண்மைதான் என்று தெல் ரியோ என்ற ஒரு அறிஞன் உறுதியாகக் கூறுகிறான், இதற்குப் பல சாட்சியங்களையும் முன்வைக்கிறான். ஆனால் மற்றவர்களோ இதை மறுக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், இதைத் தேடுவதில் ஈடுபடுவது ஒரு கிறீஸ்தவனுக்குத் தகுதியானதல்ல, அது ஆபத்தானதும் கூட. அது மனிதனாக அவதரித்த சேசு கிறீஸ்துநாதருக்கு ஓர் அவமானமாகவும் இருக்கும். ஞானம் மற்றும் தேவ அறிவின் திரவியங்கள் அனைத்தும், (கொலோ. 2:3) அவை தவிர இயற்கை, வரப்பிரசாதம், மகிமை ஆகியவற்றின் ஒவ்வொரு கொடையும் அவரில் தான் அடங்கியுள்ளன. இது மறைமுகமான விதத்தில் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படி யாமையாகவும் இருக்கிறது. "உன் பலத்திற்கு அதிகமானவை களைக் கண்டறிய நாடாதே" என்று சர்வப்பிரசங்கி ஆகமத்தில் அவர் நமக்குக் கூறுகிறார் (சீராக். 3:22).


முடிவு 

89. ஆகவே நாம் மனிதனாய் அவதரித்த நித்திய வார்த்தையாகிய சேசுநாதரோடு நிலைத்திருப்போம். அவருக்கு வெளியே, குறிக்கோளற்ற அலைச்சலும், பொய்மையும், மரணமும் தவிர வேறு எதுவுமில்லை . "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமா யிருக்கிறேன்'' (அரு. 14:6). இப்போது ஆத்துமங்களின் ஞானத்தின் விளைவுகளைப் பற்றி நாம் பார்ப்போம்.