இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

விமர்சனப் பக்தர்கள்

93. விமர்சனப் பக்தர்கள் பெரும்பாலும் இறுகிய மனமும் சுய நிறைவும் கொண்ட பெருமையுள்ள அறிஞர்கள். இவர்களிடம் மொத்தத்தில் மாதா பக்தி கொஞ்சம் இருக்கும். ஆனால் சாதாரண மக்கள் எளிமையுடனும் பக்தியுடனும் இந்நல்ல அன்னைக்கு மகிமையாகச் செய்யும் ஏறக்குறைய எல்லாப் பக்தி முயற்சிகளையும் தங்களுடைய விருப்பத்திற்கு இசைவாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். 

மரியாயின் இரக்கத்துக்கும் வல்லமைக்கும் சான்றாக நம்பிக்கைக்குரியவர்கள் எழுதி வைத்ததும் துறவற சபைகளின் குறிப்புகளிலிருந்து எடுக்கப் பட்டதுமான எல்லாப் புதுமைகளையும் கதைகளையும் இவர்கள் சரியா என்று கேள்வி கேட்பார்கள். 

எளிய தாழ்வுள்ள மக்கள் ஏதோ ஒரு தெருக்கோடியில் மாதாவின் பீடம் முன்பாகவோ அல்லது மாதா சுரூபத்தின் முன்பாகவோ கடவுளுக்குத் தங்கள் மன்றாட்டுக்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டு முழங்காலிலிருப்பதை இவர்கள் பார்த்து சகித்துக்கொள்ள மாட்டார்கள். 

இந்த மக்கள் ஒரு கல்லையோ மரத்தையோ ஆராதிப்பது போல் அவர்கள் விக்கிரக ஆராதனை செய்வதாகக் குற்றஞ் சாட்டுவார்கள். இந்த வெளிப் பக்திமுயற்சிகளில் தங்களுக்கு விருப்பமே இல்லை என்பார்கள். 

மாதாவைப் பற்றிச் சொல்லப்படும் எல்லாக் கதைகளையும் நம்புமளவிற்கு தாங்கள் அவ்வளவு பேதைகளல்ல என்று கூறுவார்கள். 

வேத பிதாக்கள் மாதாவுக்குச் சூட்டியுள்ள அதிசயமான வாழ்த்துக்களை அவர்களிடம் எடுத்துக் கூறினால் பிதாக்கள், மேடைப் பேச்சாகத்தான் அப்படிக் கூறியதாகவும் உயர்வு நவிற்சியில் அப்படிப் பேசியதாகவும் பதிலிறுப்பார்கள் அல்லது பிதாக்களின் வார்த்தைகளைப் புரட்டி வேறு அர்த்தம் கொடுப்பார்கள். 

இத்தகைய தவறான பக்தர்களும் உலகைச் சார்ந்த மனிதர்களும் மிகவும் அஞ்சப்பட வேண்டியவர்கள். இவர்கள் மரியாயின் பக்திக்கு அளவற்ற தீமை செய்கிறார்கள். அன்னையின் பக்தியிலுள்ள தவறுகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு மக்களை அப்பக்தியிலிருந்தே அகற்றி விடுவதில் இவர்கள் நல்ல வெற்றி அடைகிறார்கள்,