இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகல அர்ச்சிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

அர்ப்பணம் செய்யப்பட்ட ஆத்துமங்களைப் பொறுத்த வரை, சேசுநாதர் மட்டில் அவர்கள் கொண்டுள்ள நேசம் எவ்வளவு வலிமையுள்ளதாக ஆக வேண்டுமென்றால், இந்த நேசத்திலிருந்து அவர்கள் பெரும் ஆறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் விலக்கப்பட்ட இடங்களுக்குள் வழிதவறிப் போய்விடக் கூடிய மிக மோசமான ஆபத்து அவர்களுக்கு இருக்கிறது. நேசத்திற்காகவே மனித இருதயம் உண்டாக்கப்பட்டுள்ளது. நேசத்தைக் கண்டடையும் வரை அது இளைப்பாறுவதில்லை. ஓர் ஆத்துமம் எல்லா உலக நேசங்களையும் விட்டு விலகும்என்றால், சேசுவை நேசிக்கும் இரகசியத்தைக் கற்றுக் கொள்வது அந்த ஆத்துமத்திற்கு அவசியமானதாகிறது. சில மூட மனிதர்கள் எந்த வகையான நேசமும் தங்களுக்குத் தேவையில்லை என்று கருதுகிறார்கள். அவர்கள் துரதிருஷ்டவசமாக ஏமாற்றப்படுகிறார்கள். துயரத்திற்குரிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதை அவர்கள் திடீரென்று உணர்ந்து கொள்வார்கள்.

சேசுவே எல்லா நல்ல மனிதர்களுடையவும் ஆனந்தமாகவும், நல்ல துறவறத்தாரின் ஏக இன்பமாகவும் இருக்கிறார். சேசுவை நேசிப்பதன் மகிழ்ச்சிகளைச் சுவைத்துள்ளவனுக்கு மற்ற எல்லாக் காரியங்களும், உலக மகிழ்ச்சிகளும் உயிரோட்டமும், சுவையுமற்றவையாக இருக்கின்றன. அது அப்படி இருக்க வேண்டுமென்று சேசு ஆசைப்படுகிறார். உலகக் கவர்ச்சிகளிடமிருந்து தப்புவதையும், கடமைகளைச் செய்வதில் தாராளமாக இருப்பதையும் இது எளிதாக்குகிறது. நுகத்தடியின் மறுபக்கத்தை சேசு சுமந்து கொண்டிருக்கிறார் என்றால், நம் நுகத்தடி நமக்குக் கொஞ்சமும் சுமையாயில்லை. “என் நுகம் இனியது, என் சுமை எளியது.” - “எல்லாக் கசப்பான காரியங்களையும் நேசம் இனியதாகவும், சுவையுள்ளதாகவும் ஆக்கி விடுகிறது.” நம்முடைய இந்தச் சிறிய மனித இருதயம், சேசு தமது பிரமாணிக்கமுள்ள மணவாட்டிகளின் இருதயங்களுக்குள் பாயவிடுகிற இனிய நேசத்தின் ஆறுகளை உள்ளடக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கிறது. சேசுநாதரின் நேசத்தினுடைய இந்த நெருப்பு இல்லாமல் சத்திய திருச்சபைக்கு மனந்திரும்பி வந்தவர்கள் பிழைத்திருக்க முடியாது; குருக்கள் ஒரு நல்ல போராட்டத்தை நடத்த முடியாது; வேதசாட்சிகள் தங்கள் உயிர்களைக் கையளிக்க முடியாது. நேசமானது வீரத்துவமுள்ள செயல்களைச் செய்ய வலியுறுத்துகிற மறைந்துள்ள விசையாக இருக்கிறது. “சேசுவின் உத்தமமான சிநேகம் பெரிதான கிரியைகளைச் செய்ய நம்மை உந்தித் தள்ளுகிறது. எதையும் சாதிக்க அதனால் முடியும்... நேசம் எந்தச் சுமையையும் உணராது, கடின வேலைகளைப் பற்றி யோசிக்காது; களைப்படையும்போது, அது சோர்ந்து போவதில்லை... நேசமானது மேலதிகாரிகளுக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவதாகவும், கீழ்ப்படிதலுள்ளதாகவும் இருக்கிறது...நேசம் கடவுளுக்கு நன்றியுள்ளதாயிருக்கிறது... நேசம் தாழ்ச்சியுள்ளது, தைரியமுள்ளது, ஒருபோதும் சுயநலத்தைத் தேடாது” என்று தாமஸ் ஆ கெம்ப்பிஸ் (கிறீஸ்துநாதர் அநுச்சாரம்) கூறுகிறார். உண்மையில் சேசுநாதர் பூமியிலுள்ள சகல நல்ல ஆத்துமங்களுடையவும் ஆனந்தமாக இருக்கிறார். ஜீவியத்தின் உபத்திரவங்கள் கூட, நேசிக்கிறவன் சேசுவுக்காக ஒரு நேசத்தின் பரிசை நெசவு செய்வதற்கான மூலப் பொருளாக மாறிவிடுகின்றன. சேசுநாதரோடு ஒரு நெருக்கமான சிநேகத்திற்குள் பிரவேசிப்பதற்கான இரகசியத்தைக் கற்றுக் கொண்டுள்ளவன் உண்மையில் பாக்கியவானாயிருக்கிறான். ஆனால் இதற்காக பெருந்திரளான காரியங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை - ஒன்றே ஒன்றைத்தான். தேவையானது ஒன்றே - சுய-தேடுதலின் எல்லா வடிவங்களையும் விட்டு விலகி, சேசுநாதரை மட்டுமே நேசிப்பது.

பரலோகத்திலிருக்கிற அர்ச்சிஷ்டவர்களின் மகிழ்ச்சியைப் பற்றி நாம் என்ன சொல்வது? எந்த மனித கற்பனையாவது, அது எவ்வளவுதான் உயிரோட்டமுள்ளதாக இருந்தாலும், அர்ச்சிஷ்டவர்களின் பேரானந்தங்களைச் சித்தரித்துக் காட்டமுடியுமா? முடியாது. பாக்கியவான்களின் நித்தியப் பேரானந்த சந்தோஷங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்ற அர்ச். சின்னப்பர் கூறுகிறார். ஓ, ஆத்துமங்களின் மணவாளருக்கு அருகில் இருப்பதில் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! தங்கள் நேசருடைய உன்னத அழகைக் காண்பது எத்தகைய அதிசயமாக, எத்தகைய மகிழ்ச்சியாக இருக்கிறது! சேசுநாதரே கடவுளாக இருக்கிறார் என்று தங்கள் ஜீவியம் முழுவதும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் கடவுள் இவ்வளவு அழகாயிருக்க முடியும் என்று யார்தான் கனவிலும் கருதியிருக்க முடியும்? அழகாக, நேசிக்கத் தக்கவராக, சகல வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவராக, எந்த வல்லமையாலும் புரிந்து கொள்ள முடியாதவராக! முத்துக்களின் ஒரு பெருங்கடல், அழகின் கடல், முடிவற்ற மகத்துவமும், மகிமையும்! ஆ, நாம் இயற்கையின் அற்புதங்களை ஒன்றுக்கொன்று விளக்க முயற்சி செய்கிற சிறு பூச்சிகளாக இருக்கிறோம்! எத்தகைய முட்டாள்தனமான வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம்! பரலோகப் பேரழகின் மகிமையை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை! இப்போதைய மகிமைப்படுத்தப்படாத உடல்களோடு அதை நாம் காண்போமென்றால், அந்த மகிழ்ச்சியினால் நாம் இறந்து விடவோம் என்னும் அளவுக்கு அது அவ்வளவு அழகானது. பழங்கால முதுமொழி ஒன்றுண்டு: “கடவுளைப் பார்த்து விட்டு யாரும் உயிரோடிருக்க முடியாது” என்று. இதில் தவறு என்னவென்றால், ஒரு காட்சி கண்டவர்கள், தாங்கள் சாகப் போவதாக நினைத்தார்கள். ஆனால் ஒருவன் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால், எவனும் கடவுளைப் பார்த்துவிட்டு, உயிரோடு இருக்க முடியாது என்பதுதான் உண்மை. இத்தகைய பேரழகுள்ளவரின் காட்சி எத்தகைய நேசப் பரவசத்தை மனித இருதயத்தின் வழியாக அனுப்புகிறது என்றால், உண்மையில் எளிய மனித இருதயம் அதைத் தனக்குள் அடக்கிக் கொள்ள முடியாது. நீண்ட நேரத்திற்கு இந்தக் காட்சி நிலைத்திருக்கும் என்றால் நாம் இறந்து விடுவோம். ஒரு சிறு அளவு பரலோக மகிமையின் ஒரேயொரு பார்வை, ஒரு கணம் மட்டுமே நீடிக்கும் காட்சியும் கூட, மனித ஆத்துமத்தை ஒரு மாதத்திற்கு பரலோகப் பேரின்பத்தில் வாழச் செய்யப் போதுமானது. நாம் அந்த அளவுக்கு பரிதாபத்திற்குரிய, பலவீனமுள்ள சிருஷ்டிகளாக இருக்கிறோம்! அந்தப் பரலோக ஆனந்தத்தின் ஒரு சிறு பாகத்தைக் கூட தாங்கும் அளவுக்கு நாம் போதுமான அளவு பெரியவர்களோ, பலமுள்ளவர்களோ அல்ல. துன்பப்பட நாம் கற்றுக் கொள்வோமாக. ஏனென்றால் துன்பப்படுவது நம் இருதயங்களை அதிகப் பெரியதாகவும், பரலோகப் பேரின்பத்தைத் தாங்க அதிகத் திறனுள்ளதாகவும் ஆக்குகிறது. நன்கு கவனியுங்கள், நான் துன்பம் அனுபவிப்பது என்றேன், சோகமாயிருப்பது என்று சொல்லவில்லை. கடவுள் தமது பரிசுத்த வேதத்தில் சோகத்தை விரும்பவில்லை. ஆனால் துன்பப்படுவது ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருக்கிறது. நம் ஆண்டவர் தாமே அர்ச்சிஷ்டதனத்தின் சிகரங்களுக்கு நடத்திச் சென்று கொண்டிருந்த ஒரு ஆறு வயதுக் குழந்தை துன்பத்தைத் தரும்படி ஜெபித்துக் கொண்டிருந்தது. அவள் ஏன் துன்பம் அனுபவிக்க விரும்புகிறாள் என்று கேட்டபோது, “சேசுவுக்கு எது போதுமான அளவுக்கு நல்லதாயிருக்கிறதோ, அது எனக்கும் போதுமான அளவுக்கு நல்லதாயிருக்கிறது” என்று அவள் சொன்னாள். சேசு நல்ல காரியங்களையே தேர்ந்து கொள்கிறார் என்று அவள் அறிந்திருந்தாள். ஆகவே துன்பம் ஒரு நல்ல காரியமாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் சேசு அதில் மிகப் பெரும் அளவைத் தேர்ந்து கொண்டிருக்கிறார். இது உண்மை! நம்மைப் பரலோகத்திற்குத் தயாரிக்கிற அதே காரியத்தைப் பற்றி நாம் ஏன் பயப்பட வேண்டும்? துன்பம் சோகத்தை விளைவிக்கிறது என்னும் தவறான கருத்து துன்பத்தைக் கண்டு நாம் பயப்படச் செய்கிறது. ஆனால் இது சாத்தானின் ஒரு தந்திரமாக இருக்கிறது. துன்பமானது, மகிழ்ச்சிக்காக நம்மைத் தயாரிக்கிறது. பரலோகத்திற்காக மட்டுமல்ல, மாறாக, நம் பூலோக தற்காலிக வாழ்வுக்காகவும் நம்மைத் தயாரிக்கிறது. கடவுள் தமது நன்மைத்தனத்தில் சில சமயங்களில் நம் இருதயங்களுக்குள் பொழிகிற பரலோக ஆறுதல்களை நாம் பற்றிக் கொள்ளத் தக்கதாக, அது நம் இருதயங்களை அகன்றதாக்குகிறது. ஓ மரியாயே, தேவரீருடைய மாசற்ற இருதயம் உமது தெய்வீகக் குழந்தையின் மரணத்தின் போது, வியாகுலத்தின் பெருங்கடலை ஏற்றுக் கொள்ளும்படியாக பெரிதாக்கப்பட்டதே. இப்போதோ, தேவரீர் பேரானந்தத்தின் ஒரு பெருங்கடலை உமக்குள் அடக்கியிருக்கிறீர்! கல்வாரிக்கு சேசுநாதரைப் பின்தொடர்வதிலிருந்து நாங்கள் எங்களையே சுருக்கிக் கொள்ளாதபடி, மிகவும் பிரியமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அப்போது நாங்கள் உம்மிடமும் சேசுவிடமும் வந்து, நித்தியத்திற்கும் பரலோகப் பேரானந்தங்களால் நிரப்பப்படுவோம். ஆமென்.


சகல அர்ச்சிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!