இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் உணவாக இருக்கும்படி பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் தம்மையே விட்டுச் செல்லும் சேசுகிறீஸ்துநாதரின் அன்பு

சேசுநாதர் தாம் இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகவேண்டிய தம்முடைய காலம் வந்ததென்று அறிந்து, இவ்வுலகத்திலே இருந்த தம்முடையவர்களைத் தாம் சிநேகித்திருக்கையில் அவர்களை முடிவு பரியந்தம் சிநேகித்தார் (அரு.13:1).

தமது வாழ்வின் இறுதி இரவில், மனிதன் மீது தமக்குள்ள அன்பிற்காகத் தாம் மரிப்பதற்காகத் தாம் மிகுந்த ஏக்கத்தோடு எதிர்பார்த்திருந்த நேரம் வந்து விட்டதென அறிந்திருந்த நமது மகா நேசத்திற்குரிய மீட்பர், இந்தக் கண்ணீர்க் கணவாயில் நம்மைத் தனியே விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் மரணத்தால் கூட நம்மிடமிருந்து தாம் பிரிக்கப்படாமல் இருக்கும்படியாக, அவர் தம்மை முழுவதுமே பீடத்தின் தேவத்திரவிய அனுமானத்தில் உணவாக விட்டுச் செல்லத் தீர்மானித்தார். அந்த அளவற்ற மதிப்புள்ள இந்தக் கொடையை நமக்குத் தந்து விட்டதால், இதற்கு மேல் தமது அன்பை எண்பிக்க அவர் நமக்கு எதையும் தர முடியாது என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளச் செய்தார். அவர் முடிவு வரை அவர்களை நேசித்தார். கொர்னேலியுஸ் ஆ லாப்பிதே என்பவர் அர்ச். ஜான் கிறிசோஸ்தோம், தியோபிலாக்த் ஆகியோரோடு சேர்ந்து, கிரேக்க மூல பாடத்தின்படி முடிவு பரியந்தம் என்னும் வார்த்தைகளை விளக்கும் விதமாக, ""அளவுக்கு மீறியதும், உன்னதமானதுமான ஓர் அன்பைக் கொண்டு அவர் அவர்களை நேசித்தார்'' என்று கூறுகிறார். இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் மனிதர்களின் மீதான தமது நேசத்தின் கடைசி முயற்சியை அவர் செய்தருளினார். மடாதிபதி குவெரிக் சொல்வது போல, ""அவர் தமது அன்பின் முழு வல்லமையையும் தமது நண்பர்கள் மீது பொழிந்தருளினார்.''

இது திரிதெந்தீன் பொதுச் சங்கத்தால் இன்னும் நன்றாக எடுத்துரைக்கப்பட்டது. இச்சங்கம் பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தைப் பற்றிப் பேசும்போது, அதில் நம் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகர், ""நம்மீது தாம் கொண்டுள்ள அன்பின் செல்வ வளங்கள் அனைத்தையும், தம்மிலிருந்து பொழிந்தருளினார்'' என்று கூறுகிறது. ஆகவே, சம்மனசுகளுக்கு ஒப்பான புனிதரான அர்ச். தாமஸ் அக்குயினாஸ் இந்த தேவத்திரவிய அனுமானத்தை, ""தேவ அன்பின் அனுமானம், ஒரு கடவுள் மட்டுமே நமக்குத் தரக் கூடிய அனைத்திலும் மேலான அன்பின் ஓர் அடையாளம்'' என்று மிகச் சரியாகவே அழைக்கிறார். அர்ச். பெர்னார்ட் அதை ""நேசங்களின் நேசம்'' என்று அழைத்தார். அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் இது பற்றிச் சொல்லும்போது, திவ்விய நன்மை உட்கொண்டபின் ஓர் ஆத்துமம், ""எல்லாம் முடிந்தது'' என்று சொல்லலாம் என்றாள்; அதாவது, என் சர்வேசுரன் இந்தத் திவ்ய நன்மையில் தம்மையே எனக்குத் தந்து விட்டதால், இனி எனக்குத் தருவதற்கு அவரிடம் வேறு எதுவுமில்லை! இந்தப் புனிதை ஒருநாள் தனது நவகன்னியர்களில் ஒருத்தியிடம், திவ்விய நன்மை வாங்கிய பிறகு அவள் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்று கேட்க, அந்த நவகன்னிகை, ""சேசுவின் அன்பைப் பற்றி'' என்று பதிலுரைத்தாள். ""ஆம், இந்த அன்பைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, மற்ற சிந்தனைகள் எதற்கும் கடந்து போக இயலாமல், அன்பைப் பற்றிய சிந்தனையிலேயே நாம் நின்று விட வேண்டும்'' என்றாள் புனிதை.

ஓ உலக இரட்சகரே, மனிதர்களுக்கு உம்மையே உணவாகத் தர நீர் தூண்டப்படும் அளவுக்கு, அவர்களிடமிருந்து என்னதான் எதிர்பார்க்கிறீர்? உம்மை நேசிப்பதை எங்களுக்குக் கடமையாக ஆக்கும்படி, இந்தத் தேவத்திரவிய அனுமானத்திற்குப் பிறகு எங்களுககுத் தர வேறு என்னதான் உம்மிடம் எஞ்சியிருக்க முடியும்? ஆ, என் உத்தம நேசமுள்ள சர்வேசுரா, தேவ நற்கருணையில் எனக்கு உணவாக ஆகும்படி உம்மையே அளவுகடந்த விதமாய்ச் சிறியவராக்கிக் கொள்ளும் அளவுக்கு இது உமது நன்மைத்தனத்தின் எப்பேர்ப்பட்ட அபரிமிதமாக இருக்கிறது என்று நான் அறிந்து கொள்ளுமாறு, என்னை ஒளிர்வித்தருளும்! ஆகவே, தேவரீர் உம்மை முழுவதும் எனக்குத் தந்திருக்கிறீர் என்றால், நானும் என்னை முழுவதும் உமக்குத் தருவது மெய்யாகவே நீதியான காரியமாக இருக்கிறது. ஆம், என் சேசுவே, நான் என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஒவ்வொரு நன்மைக்கும் மேலான நன்மையாக நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை இன்னும் அதிகமாக நேசிக்கும் படியாக, உம்மை உட்கொள்ள ஆசிக்கிறேன். ஆகவே, வாரும், என் ஆத்துமத்திற்குள் அடிக்கடி வந்து, அதை முழுவதும் உம்முடையதாக ஆக்கிக் கொள்ளும். ஓ, அர்ச். பிலிப் நேரியார் அவஸ்தை நன்மையில் உம்மைப் உட்கொள்ளும் வேளை வந்தபோது, உம்மைப் பற்றி, ""இதோ என் நேசம்! இதோ என் நேசம்! என் நேசமானவரை எனக்குத் தாருங்கள்!'' என்றாரே! அவரைப் போலவே என்னாலும் உண்மையுள்ள உள்ளத்தோடு சொல்ல முடியுமானால்! 

"என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்'' (அரு.6:57). அரேயோப்பாகுவின் அர்ச். டெனிஸ் இதைப் பற்றி, நேசம் எப்போதும் தன்னால் நேசிக்கப்படுபவரோடு ஒன்றிக்கத் தேடுகிறது என்றார். உணவு, தன்னை உண்பவனோடு ஒரே பொருளாக ஆகிவிடுவது போல, நம் ஆண்டவரும், திவ்விய நன்மையில் தம்மை உட்கொள்வதன் மூலம் நாம் அவரோடு ஒரே பொருளாகும்படி உணவின் தன்மைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொண்டார்: ""இதை வாங்கிப் புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கிறது'' என்றார் சேசுநாதர். அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுவது போல, இது, ""அனைத்திலும் மேலான ஒன்றிப்பு நிகழும்படியாக என்னை உட்கொள்ளுங்கள்'' என்று சேசுநாதர் கூறுவதற்கு ஒப்பாகும். ஓ மனிதா, நீயும் நானும் ஒரே பொருளாகும் படியாக, நீ என்னை உட்கொள்கிறாய். உருக்கப்பட்ட இரண்டு மெழுகுத் துண்டுகள் ஒரே துண்டாக ஒன்றிப்பது போல, திவ்விய நன்மை உட்கொள்ளும் ஆத்துமம் சேசுவோடு எந்த அளவுக்கு முழுமையாக ஒன்றிக்கப்படுகிறது என்றால் சேசுநாதர் அதனிலும், அது சேசுநாதரிலும் வசிக்கிறார்கள். ""ஓ என் அன்புள்ள மீட்பரே, உமது திரு இருதயமும், எங்கள் இருதயங்களும் ஒரே இருதயமாக மாறும் அளவுக்கு எங்களை இவ்வளவு அதிகமாக நேசிக்க உம்மால் எப்படி முடிந்தது?'' என்று அர்ச். அலெக்சாந்திரியா சிரில் கேட்கிறார். ""ஓ, நாங்கள் உம்மோடு ஒரே இருதயத்தைக் கொண்டிருக்குமாறு, எங்களை உமது திருச்சரீரத்தோடு ஒன்றித்துக் கொள்ள சித்தங்கொண்டவரான எங்கள் ஆண்டவராகிய சேசுவே, உமது நேசம் எவ்வளவு அதிசயத்திற்குரியது!''