இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுநாதருடைய போதனை

திவ்ய வார்த்தையான தேவசுதன், பூவுலக மனிதர் ஒவ்வொருவரையும் கூவியழைத்து, "என்னைப் பின் செல்” எனக் கட்டளையிடுகிறார். அவ்விதமே நாம் அவரைப் பின்பற்றுவோமானால், இயற்கை வனப்பு மிகுந்த குறுநிலங்கள் மத்தியில் நம்மை இட்டுக்கொண்டு போய், இந்த இனிய ஆசிரியர் தம் திருவாய் மலர்ந்து கூறும் இனிய போதனைகள் இவையே :

* பரமண்டலங்களையும், பல உலக சராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்தி வரும் தெய்வீக அரூபியானவர், எங்கும் விரிந்து, பரந்து, நிறைந்திருக்கும் பரம் பொருள், தெய்வம், உங்கள் ஆண்டவர் மாத்திரமல்ல, உங்களைப் பெற்ற தகப்பனிலும் உற்ற தகப்பன் ஆவார். ஆதலால் அவரை அழைக்கும் பொழுது, "அப்பா பிதாவே” என்று அழையுங்கள்.

* உங்களுக்கு முற்பிறப்பு, பூர்வ ஜென்மம் என்பது ஒன்றுமில்லை. ஆயினும் இவ்வுலகில் பிறந்த பின், நீங்கள் ஞானவிதமாய்ப் புதுப்பிறப்பு அடைய வேண்டும். அதாவது, உங்கள் பரம பிதாவின் வரப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் மோட்சம் அடைய இயலாது. ஆண்டவர் முன் ஆண்கள் - பெண்கள், அரசன் - அடிமை என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் சமமான விதமாய் சர்வேசுரனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.

* இவ்விதம் ஞான விதமாய்த் தேவ புத்திரர்கள் ஆன நீங்கள் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களைப் போல, தேவன் உங்களுக்கு அளித்திருக்கும் நற்கொடைகளை மேன்மேலும் அதிகரிக்கச் செய்து, அவரது ஊழியத்தில் நிலைத்திருங்கள்.

* நன்மையில் நிலைக்காமல், பலவீனத்தால் தவறி, ஊதாரிகளாய் உங்கள் ஞானக் கொடைகளை வீணாக்கித் தத்தளிக்கும் காலத்தில் திரும்பவும் உங்கள் தகப்பனிடம் செல்ல முயற்சி எடுங்கள். ஏனெனில் எப்போது நீங்கள் மனந்திரும்புவீர்கள் என எதிர்பார்த்திருக்கும் அந்த இரக்கமுள்ள தந்தை உங்களைத் திரும்ப ஏற்றுக்கொள்வார்.

* அந்த நல்ல பிதாவின் சமாதான அமரிக்கையில் மரிப்பீர்கள் என்றால், மோட்சம் செல்வீர்கள். அங்கு துன்பம், துயரம், மண வாழ்வு, மரணம் என்பவை இல்லை. எல்லோரும் சரீரமற்ற சம்மனசுக்களைப் போல தேவதரிசன பேரின்பத்தில் ஆழ்ந்து நித்திய ஆனந்தம் அடைவார்கள்.

* இவ்வுலகில் சர்வேசுரன் உங்கள் நன்மைக்காகவே நீங்கள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். ஆகவே பொறுமை சாந்தமுள்ளவர்களாய், அடக்கமும் தாழ்ச்சியும் உள்ளவர்களாய், யாருக்கும் தீங்கு நினைக்காதவர்களாய், உள்ளத்தில் கூட இச்சை கொள்ளாத உயர்ந்த பரிசுத்தர்களாய், நன்மை செய்யும் போதும் பிறர் மதிப்பை எதிர்பாராதவர்களாய், தேவனுக்காகச் சகலமும் செய்வீர்களானால், உங்கள் இருதயங்களை அறியும் அவர் உங்களுக்கு சம்பாவனை அளிப்பார்.

* ஒருவர் ஒருவரை நேசியுங்கள். உங்கள் உறவினர்களை மட்டுமல்ல, அயலாரையும் நேசி யுங்கள். உங்களுக்கு நன்மை செய்தவர்களை மாத்திரமல்ல, தின்மை செய்த எதிரிகளையும் நேசியுங்கள். 

* நீங்கள் பிறரை மன்னிப்பது போல், உங்கள் பரம பிதா உங்களையும் மன்னிப்பார். 

* "மனத்தரித்திரர் பாக்கியவான்கள் : ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

* சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

* நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் திருப்தி யடைவார்கள்.

* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

* தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் சர்வேசுரனைத் தரிசிப்பார்கள்.

* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் எனப்படுவார்கள்.

* நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் : ஏனெனில் மோட்ச இராச்சியம் அவர்களுடையது.

* என்னைப்பற்றி மனிதர் உங்களைச் சபித்துத் துன்பப்படுத்தி, உங்கள் மேல் சகல தின்மை யையும் அபாண்டமாய்ச் சொல்லும்போது, நீங்கள் பாக்கியவான்கள். அப்போது அகமகிழ்ந்து அக்களியுங்கள்; ஏனெனில் பரலோகத்தில் உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கிறது. இவ்வண் ணமே உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் உபத்திரவப்படுத்தினார்கள்'' (மத். 5:3-12).

* "வேதப் பிரமாணத்தையாகிலும், தீர்க்கதரிசனங்களையாகிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" (மத். 5:17).

மனுமக்களின் மனதைக் கொள்ளை கொள்ள வல்லவரான இந்த மகத்துவமுள்ள ஆசிரியரின் போதனைகளைச் சுவிசேஷங்களில் காணலாம். இப்போதனைகள் உலகத்தில் மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதும், உலக சரித்திரத்தைத் திருத்தி அமைத்ததும் சாத்தியமான உண்மை .