5 மார்ச் 1944.
போலியான விஞ்ஞானத்தால் மிகவும் குழம்பி பின்னிக் கிடக்கிற மனங்களின் மலைத்த சிந்தனைகளைக் கூட என் அன்னையின் வார்த்தைகள் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்...
“உருவகமான மரம்” என்று நான் கூறினேன். இப்பொழுது “அடையாள மரம்” என்கிறேன். இதை நீங்கள் அதிக நன்றாய்க் கண்டுபிடிக்கக் கூடும். அதன் அடையாளம் தெளிவாயிருக்கிறது. கடவுளின் அவ்விரு குழந்தைகளும் நன்மை மீதும் தீமை மீதும் கொண்டிருந்த சார்பு, அம்மரத்தின் மட்டில் அவர்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்து அறியப்படும். பொன்னையும் பொன் வேலை செய்பவன் அதன் மாற்றை அளக்கிற தராசையும் பரிசீலிக்கிற “இராஜ நீர்மத்தைப்” (புஸுற்ழி யூeஆஷ்ழி) போன்று அம்மரம் கடவுளின் கட்டளையால், அவர்களைப் பரிசோதிக்கும் கருவியாக ஆனது. ஆதாம் ஏவாளுடைய அடையாள உலோகச் சுத்தத்தின் அளவையும் ஆயிற்று.
உங்களுடைய எதிர்க் கேள்வி எனக்கு ஏற்கெனவே கேட்கிறது: “அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை வரை கடந்ததல்லவா? அவர்களைத் தீர்ப்பிட பயன்படுத்தப்பட்ட கருவி சிறுபிள்ளைத்தனமானதல்லவா?”
அப்படியல்ல. அவர்களுடைய வாரிசுகளான உங்கள் நடைமுறைக் கீழ்ப்படியாமை அவர்களுடையதைப் போல் அவ்வளவு கனமானதல்ல. நீங்கள் என்னால் மீட்கப் பட்டிருக்கிறீர்கள். ஆயினும் இரத்தத்திலிருந்து முற்றிலும் ஒருபோதும் அகலாத சில நோய்களைப்போல, சாத்தானுடைய விஷம் மீண்டும் தலைதூக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. முதல் பெற்றோரிடம் வரப்பிரசாதம் இருந்தது. அது இல்லாத நிலையை அவர்கள் நெருங்கக் கூட இல்லை. ஆதலால் அவர்கள் அதிக வலிமையோடும் வரப்பிரசாதத்தினால் அதிக உறுதியாகத் துணை செய்யப்பட்டும் இருந்தார்கள். அது அவர்களிடம் சிநேகத்தையும் மாசின்மையையும் பிறப்பித்தது. கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கொடை எல்லையற்றதா யிருந்தது. அது இருந்தும் அவர்கள் வீழ்ந்ததால் அவ்வீழ்ச்சி மிகப் பெரிதாயிருந்தது.
மேலும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவர்களால் உண்ணப்பட்ட கனியும் ஒரு அடையாளமாயிருந்தது. தேவ கட்டளையை மீறும்படி சாத்தானால் தூண்டப்பட்டு அவர்கள் கொள்ள விரும்பிய ஒரு அனுபவத்தின் கனி அது. நான் அன்பை மனிதர்களுக்கு விலக்கவில்லை. அவர்கள் தீமையில்லாமல், என்னுடைய தூய்மையில் நான் அவர்களை நேசித்ததுபோல் அவர்களும் இச்சையினால் கறைபடாத புனிதமான பாசத்தில் ஒருவரை ஒருவர் நேசித்திருக்க வேண்டுமென்றே விரும்பினேன்.
வரப்பிரசாதம் என்பது ஒளி எனபதை மறக்கக் கூடாது. வரபபிரசாதத்தைக் கொண்டிருக்கிறவன் நன்மையானதையும், பயனுள்ளதையும் அறிந்து கொள்கிறான். வரப்பிரசாதத்தினால் நிறைந்திருந்த மாமரி எல்லாவற்றையும் அறிந்திருந்தார்கள். ஏனெனறால் ஞானத்தினால் படிப்பிக்கப்பட்டிருந்தார்கள். ஞானம், அதாவது தேவ வரப்பிரசாதம். ஆகவே பரிசுத்தமான முறையில் வாழ அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏவாளும் அவள் அறிவதற்கு நலமானதை அறிந்திருந்தாள். ஆனால் அதற்கு மேல் இல்லை. ஏனென்றால் நன்மை அல்லாததை அறிந்திருப்பது பயனற்றது. ஆனால் அவளுக்கு கடவுளின் வார்த்தையில் நம்பிக்கையில்லை. தன் கீழ்ப்படிதல் வாக்குறுதிக்கு அவள் பிரமாணிக்கமாயிருக்கவில்லை. அவள் சாத்தானை நம்பினாள், தன் வாக்குறுதியை மீறினாள். நன்மை அல்லாததை அறிய விரும்பினாள். மனஸ்தாபமில்லாமல் அதில் விருப்பம் கொண்டாள். நான் புனிதமானதாக அனுமதித்திருந்த அன்பை, கெடுக்கப்பட்ட இகழ்ச்சிக்குரியதாக மாற்றினாள். கறைப்பட்ட சம்மனசாக, சகதியிலும் குப்பையிலும் புரண்டாள். அவள் பூமியின் சிங்காரத் தோட்டத்தில் மலர்களினூடே மகிழ்ச்சியாக ஓடியாடியிருந்திருக்கலாம். பூக்களால் நிறைந்து அசுத்தத்தில் தன் கிளைகள் வளையாமல் நிற்கும் செடியைப்போல் அவளைச் சுற்றி தன் பிள்ளைகள் செழித்து வளர்வதைக் கண்டிருக்கலாம்.
சுவிசேஷத்தில் நான் குறிப்பிடுகிற மூடக் குழந்தைகளைப் போல் இராதேயுங்கள். மற்றக் குழந்தைகள் பாடுவதை அவர்கள் கேட்டார்கள். ஆனால் தங்கள் காதுகளை மூடிக் கொண்டார்கள். மற்றவர்கள் குழல்கள் ஊதக் கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஆடவில்லை. மற்றவர்கள் அழும் குரலைக் கேட்டார்கள். ஆனால் தாங்கள் சிரிக்க விரும்பினார்கள். குறுகிய மனம் உடையவர்களாயும், மறுக்கிறவர்களாயும் இராதீர்கள். கபடமும் பிடிவாதமும் கேலியும் அவிசுவாசமும் இன்றி ஒளியை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுபற்றிக் கூறப்பட்டவை போதும்.
உங்களை மேலே மோட்சத்திற்கு உயர்த்துவதற்காகவும், சாத்தானின் ஆசாபாசத்தை தோற்கடிப்பதற்காகவும் மரணமடைந் தவருக்கு நீங்கள் எவ்வளவு நன்றி காட்ட வேண்டுமென்று உங்களுக்கு உணர்த்துவதற்காகவும் உயிர்த்த திருநாளுக்கு ஆயத்தம் செய்கிற இந்நாட்களில் உங்களுடன் நான் பேச விரும்பினேன். எதனைப்பற்றியென்றால்: பரம பிதாவின் வார்த்தையானவர் மரணத்திற்கு இழுக்கப்பட்ட, தெய்வீக செம்மறியை வெட்டுமிடத்திற்குக் கொணடு வந்த, சங்கிலியின் முதல் கண்ணியைப் பற்றித்தான். அதைப்பற்றி உங்களுக்குக் கூற நான் விரும்புவதேனென்றால், இப்பொழுது, உங்களில் தொண்ணூறு சதமானவர்கள் லூஸிபரின் சுவாசத்தாலும் வார்த்தையாலும் போதை கொண்டிருந்த ஏவாளைப் போலிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஒருவரையயாருவர் நேசிப்பதற்காக வாழவில்லை. ஆசாபாசத்தால் தெவிட்டுமளவு உங்களை நிரப்பிக் கொள்ளவே வாழ்கிறீர்கள். மோட்சத்திற்காக நீங்கள் வாழவில்லை. அசுத்தத்திற்காக வாழ்கிறீர்கள். ஆத்துமமம் அறிவும் கொடையாகப் பெற்ற சிருஷ்டிகளல்ல நீங்கள். ஆத்துமம் இல்லாமல் அறிவுமில்லாமல் இருக்கிற நாய்களாகவே இருக்கிறீர்கள். உங்கள் ஆத்துமங்களைக் கொலை செய்து உங்கள் அறிவைத் திரித்து விட்டீர்கள். வெளிப்படையாய் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன், அன்பின் நேர்மையில் மிருகங்கள் உங்களைவிட மேலாயிருக்கின்றன.