இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பத்து குன்றுகள்

அக்டோபர் 1864 : டொன் போஸ்கோ ஒரு பரந்த பள்ளத் தாக்கில் இருப்பதாகத் தோன்றியது. அங்கு ஆயிரமாயிரம் சிறுவர்கள் இருந்தார்கள் - உண்மையில் அவர்கள் மிக ஏராளமாக இருந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கை நாம் நம்பக் கூடிய தற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்களிடையே கடந்த கால, மற்றும் நிகழ்கால மாணவர்கள் அனைவரையும் அவர் கண்டார்; மீதமுள்ளவர்கள் ஒருவேளை இனி வரவிருந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் மத்தியில், அப்போது ஆரட்டரியில் இருந்த குருக்களும், துறவியரும் சிதறலாகக் காணப்பட்டார்கள்.

ஓர் உயர்ந்த கரை, பள்ளத்தாக்கின் ஒரு முனையை மறித்துக் கொண்டிருந்தது. இந்த எல்லாச் சிறுவர்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று டொன் போஸ்கோ வியந்து கொண்டிருந்தபோது, ஒரு குரல் அவரிடம்: “அந்தக் கரை உனக்குத் தெரிகிறதா? நல்லது நீயும், சிறுவர்களும் அதன் உச்சியைச் சென்றடைய வேண்டும்” என்று கூறியது.

டொன் போஸ்கோ உத்தரவு கொடுத்ததும், அந்த எல்லாச் சிறுவர்களும் அந்தக் கரையை நோக்கி விரைந்தோடினார்கள். குருக்களும் கூட அந்தச் சரிவில் ஏறி ஓடினார்கள். அவர்கள் சிறுவர்களை முன்னோக்கித் தள்ளினார்கள், விழுந்தவர்களைத் தூக்கி விட்டார்கள், மேற்கொண்டு ஏற முடியாத அளவுக்கு சோர்ந்து போனவர்களைத் தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டார்கள். சுவாமி ருவா, தம் அங்கியின் கைகளைச் சுருட்டி விட்டக் கொண்டு, எல்லோரையும் விட அதிகக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார். அவர் ஒரே சமயத்தில் இரண்டு சிறுவர்களைப் பிடித்து, உள்ளபடியே அந்தக் கரையின் உச்சியை நோக்கி வேகமாக வீசியெறிந்தார். அங்கே அவர்கள் சரியாகக் காலூன்றியபடி இறங்கி, உற்சாகமாகக் குதித்தோடத் தொடங்கி னார்கள். இதற்கிடையே, சுவாமி காலியேரோவும், சுவாமி ஃப்ரான்செஸியாவும் மேலே ஏற சிறுவர்களை உற்சாகப்படுத்தியபடி மேலும் கீழுமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கரையின் உச்சியை அடைய அவர்கள் எல்லோ ருக்கும் நீண்ட நேரம் பிடிக்கவில்லை. “இப்போது நாம் என்ன செய்வது?” என்று டொன் போஸ்கோ கேட்டார்.

“நீங்கள் உங்களுக்கு முன் உள்ள பத்துக் குன்றுகளிலும் ஏற வேண்டும்” என்று அந்தக் குரல் பதிலளித்தது.

“வாய்ப்பேயில்லை! மிக ஏராளமான இளம் சிறுவர்கள், பலவீனமான சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக இதைச் செய்து முடிக்க முடியாது.”

“முடியாதவர்கள் சுமந்து செல்லப்படட்டும்” என்று அந்தக் குரல் பதிலுக்குப் பதில் கூறியது.