இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே!

சாலமோன் அரசன் எழுப்பிய ஜெருசலேம் தேவாலயம் ஒரு காலத்தில் மிக்க மகிமைப் பிரதாபத்துடன் விளங்கியது. அவ்வாலயத்தின் அஸ்திவாரத்திற்கு சிறந்த கற்கள் உபயோகிக்கப்பட்டன; சிறந்த வேலைப் பாடமைந்த தேக்கு மரச் சுவர்ப் பலகைகளும், தேவ தூதரின் உருவங்களும், தங்கத் தகடுகளால் ஆக்கப்பட்ட தளவரிசையும், அவ்வாலயத்தை அலங்கரித்தன. அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் தங்கம் எவ்வளவு ஏராளமாய் உபயோகிக்கப்பட்டிருந்ததென்றால், உண்மையாகவே “தங்க ஆலயம்” என்று சொல்லும்படி ஒரே பொன்மயமாய் ஜொலித்தது அவ்வாலயம் (3 அரசர். 6:22).

“தங்க ஆலயம்” என்னும் இச்சிறப்புப் பெயர் அவ்வாலயத்திற்குத் தகுமெனினும், சர்வேசுரன் தாமே தமக்கென அமைத்த உயிருள்ள ஆலயமாகிய பரிசுத்த கன்னிகைக்கே அது முற்றிலும் பொருந்தும். அர்ச். பெர்நார்தீன் சொல்லுவது போல், “அதியுன்னத கடவுள் தமக்காக ஓர் வீட்டைக் கட்டியுள்ளார்; அதுதான் பரிசுத்த கன்னிமாமரி.” இதனால் அவர்கள் பரலோக அரசருக்கு ஏற்ற இல்லமானார்கள். 

சுதனாகிய சர்வேசுரன் அவர்களுடைய உதரத்தில் அவதரிக்கும் முன்பே, விசேஷ வரங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஓர் பொன் ஆலயமாய் விளங்கினார்கள் இந்த ஒப்பற்ற கன்னிகை. ஆலயத்தைத் தாங்கி நிற்கும் தூண்களைப் போன்று இஸ்பிரீத்து சாந்துவின் கொடைகளாகிய ஞானம், புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி, தெய்வபயம் என்னும் புண்ணியங்கள் இவர்களிடம் சிறந்து விளங்கின. 

மனிதரிடத்தில் தங்கத்திற்குள்ள மதிப்பைக் காட்டிலும் பன்மடங்கு மேலாக அவர்களது ஒவ்வொரு நினைவும், விருப்பமும், வாக்கும், கிரிகையும், சர்வேசுரன் முன்னிலையில் மதிப்புப் பெற்றன. கபிரியேல் தூதன் மங்கள வார்த்தை சொன்ன அப்பெரு நாளன்று, நித்திய வார்த்தையானவர் அவர்களிடம் மாம்சமானதால், அவர்கள் உண்மையாகவே ஓர் தேவாலயமானார்கள்.

மோட்சத்தினின்று இறங்கிவந்த தேவன் உறைந்த முதற்கோவில் நம் அன்னையின் திரு உதரம். இந்த ஒரே வாக்கியத்தில் சகலமும் அடங்கிவிட்டன. உரோமாபுரியிலுள்ள அர்ச். இராயப்பர் தேவாலயம் உலகத்திலேயே பெரியதாயிருக்கலாம்; விலையுயர்ந்த பல பொருட்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் உடலோடு உடலாய், உயிரோடு உயிராய், நித்திய வார்த்தையானவரைப் பத்து மாதம் சுமந்த உயிருள்ள அம்முதல் தேவாலயத்தின் சிறப்பிற்கு முன் இவையெல்லாம் என்ன?

கன்னிமாமரி கல்லாலும் மண்ணாலும் கட்டப் பட்ட ஓர் ஆலயமல்ல; தங்க ஆலயம் அவர்கள். உலோகங் களில் சிறந்தது தங்கம்; அதன் பளபளப்பும், என்றும் மங்காத் தூய ஒளியும் மனிதரைத் தன்னிடம் இழுக்கும் சக்தி வாய்ந்தன. நம் தாயிடம் விளங்கிய பழுதற்ற கன்னிமைக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு உள்ளதோ? பசும் பொன்னிற்கு இயற்கையாகவுள்ள நெருப்பைப் போன்ற ஒருவிதப் பிரகாசத்திற்கொப்ப, தேவ சிநேகத்தால் பற்றியெரிந்த அவர்களது இருதயம் பிரகாசித்தது. 

அர்ச். அகுஸ்தீன் சொல்லுவது போல அன்பே உருவான கடவுள் தங்கியிருந்த அவர்களது திரு உதரமும் அன்பு மயமாய் மாறிப் போயிருக்குமன்றோ? (Quoted by St. Bonaventure, in spec. C.14.) அவர்களிடம் எவ்வளவு அன்பு இருந்ததென்றால், ஒரு முறை இருமுறையல்ல; ஆயிரமுறை வேண்டுமானாலும் தன் மகனுக்காகத் தன் உயிரை மனப்பூர்வமாய்ப் பலியாகக் கொடுத்திருப்பார்கள் என்று அர்ச். பெர்நார்தீன் சொல்லுகிறார் (Serm. de. Nat. B.V.).

தேவதாய் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் திவ்விய இஸ்பிரீத்து சாந்து வாசம் செய்யும் ஆலயங்கள்; ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், நற்கருணை என்னும் தேவத்திரவிய அனுமானங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயங்கள். ஆயினும் நம் அன்னையிடத்தில் விளங்கிய அத்தகைய பரிசுத்ததனமும், தேவசிநேகமும் நம்மிடம் விளங்குகின்றனவா? 

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சம்மனசுக்கள் ஓயாது வணங்கும் அத் தூய தேவன் வசிக்கத்தக்க இடமாகத் துலங்குகின்றதா நம் ஆத்துமம்? தேர்த் திருவிழாவிற்கோ, கலியாணக் காட்சிகளுக்கோ, அல்லது ஒரு விருந்தாளியை வரவேற்கவோ நம் இல்லங்களை அலங்கரிக்க எவ்வளவு ஆவலுள்ளவர்களா யிருக்கிறோம்! ஆனால் இராஜாதி இராஜனை நமது உள்ளத்தில் வரவேற்க, அதைத் தக்கபடி ஆயத்தம் செய்கிறோமா? 

புண்ணியக் கிரியைகளால் அலங்கரிக் கின்றோமா? தேவசிநேகத்தால் பற்றியெரிய வேண்டிய நம் ஆத்துமம் அநித்தியப் பொருட்கள் மீது நாட்டம் கொள்வதேன்? சிற்றின்பத்தை நாடுவதேன்? ஆம்... உண்மையாகவே வெள்ளையடித்த கல்லறைகள் நாம்! பாத்திரத்தின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தம் செய்கிற வர்கள் நாம்! இனியாவது நமது ஆத்துமத்தைப் புண்ணியச் செயல்களால் அலங்கரிக்க முயலுவோம்; இம்முயற்சியில் நம் தேவ அன்னையின் உதவியை இரந்து மன்றாடுவோம்.

“ தேவ அன்னையே! உமது மன்றாட்டால் ஆகாதது ஒன்றுமில்லை. “என்னைச் சிநேகிக்கிறவன் என் வார்த்தையை அநுசரிப்பான்; என் பிதாவும் அவனை சிநேகிப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடு வாசம் செய்வோம்” (அரு.14:23) என்ற உம் திருக்குமாரனின் திருவாக்கு எங்களிடம் நிறைவேறும்படி எங்களுக்காக மன்றாடும். 

திவ்விய சுதன் உம்மிடம் வாசம் பண்ணினதால், சாலமோன் அரசனால் கட்டப்பட்ட ஜெருசலேம் தேவாலயத்தைவிட பன்மடங்கு புகழ் பெற்றீரே! எங்களது இதய பீடத்தில் தேவசிநேக அனல் என்றும் பற்றியெரியவும், ஒருநாள் உம்மோடு சேர்ந்து அவரை வாழ்த்தி வணங்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கும்படியும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா.” 


சொர்ணமயமாயிருக்கிற ஆலயமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!