இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிதாபத்திற்குரிய பாவிகளுக்குப் பசாசு காட்டும் மாயத் தோற்றங்கள்

ஓர் இளைஞன் சாவான பாவங்களைச் செய்திருக்கிறான், என்றாலும் அவற்றை அவன் சங்கீர்த்தனம் செய்து, தேவ வரப்பிரசாதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான். இந்நிலையில் அவன் பாவம் செய்யுமாறு பசாசு மீண்டும் அவனைச் சோதிக்கிறது; அவன் எதிர்த்து நிற்கிறான், ஆனால் ஏற்கெனவே, எதிரி தனக்குக் கூறும் வஞ்சகமான காரியங்களின் காரணமாக, அவன் தடுமாறத் தொடங்குகிறான். நான் அந்த மனிதனிடம்: ""எனக்குப் பதில் சொல்:நீ திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதும், அகில உலகையும் விட அதிக மதிப்புள்ளதுமாகிய தேவ வரப்பிரசாதத்தை, இந்த நீசமான சந்தோஷத்திற்காக இப்போது இழந்து விடப் போகிறாயா? உன் நித்திய மரணத்தின் தீர்ப்பை நீயே எழுதி, நித்தியத்திற்கும் நரகத்தில் கிடந்து எரியும்படி உனக்கு நீயே தண்டனைத் தீர்ப்பிட்டுக் கொள்ளப் போகிறாயா?'' என்று கேட்கிறேன். ""இல்லை, நான் எனக்குத் தண்டனைத் தீர்ப்பிட விரும்பவில்லை, இரட்சிக்கப் படவே நான் விரும்புகிறேன். இப்போது இந்தப் பாவத்தை நான் செய்தாலும், பிற்பாடு அதைப் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லிக் கொள்வேன்'' என்று நீ சொல்கிறாய். இதோ, சோதிப்பவனின் முதல் மாய்கை! ஆக, பிற்பாடு பாவசங்கீர்த்தனம் செய்து கொள்வேன் என்று நீ என்னிடம் சொல்கிறாயா? ஆனால் இதனிடையே நீ ஏற்கெனவே உன் ஆத்துமத்தைக் கையளித்து விட்டாயே! எனக்குச் சொல், உன் கையில் ஓராயிரம் பொற்கிரீடங்களுக்குச் சமமான மதிப்புள்ள ஓர் அணிகலன் இருக்கிறது என்றால், பிற்பாடு நான் கவனமாகத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்லியபடி அதை ஆற்றில் எறியத் துணிவாயா? சேசுநாதர் தமது திரு இரத்தத்தால் விலைக்கு வாங்கிய உனது ஆத்துமமாகிய விலையேறப் பெற்ற அணிகலனை நீ உன் கையில் வைத்திருக்கிறாய். அதை நீயாகவே நரகத்தில் வீசியெறிந்து விட்டு, (ஏனெனில் பாவம் செய்வதில், தேவ நீதியின்படி நீ ஏற்கனவே தண்டனைத் தீர்ப்புப் பெறுகிறாய்.) பாவசங்கீர்த்தனத்தில் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன் என்கிறாய். ஆனால் ஒருவேளை அதை உன்னால் திரும்பப் பெற முடியாமல் போய் விட்டால்? அதைத் திரும்பப் பெறுவதற்கு நீ உண்மையான மனஸ்தாபப்பட வேண்டும், அந்த மனஸ்தாபமோ கடவுளின் கொடையாக இருக்கிறது; கடவுள் இந்த மனஸ்தாபத்தை உனக்குத் தரவில்லை என்றால்? பாவசங்கீர்த்தனம் செய்ய உனக்கு நேரம் தராமல் மரணம் வந்து விடும் என்றால்?

பாவசங்கீர்த்தனம் செய்யாமல் ஒரு வார காலம் கடந்து போக நான் அனுமதிக்க மாட்டேன் என்கிறாய். ஒரு வார காலம் உயிரோடிருப்பாய் என்று உனக்கு வாக்களித்தவர் யார்? நாளைக்குப் பாவசங்கீர்த்தனம் செய்வேன் என்கிறாய். நாளைய தினத்தை உனக்கு வாக்களித்தவர் யார்? ""கடவுள் உனக்கு நாளைய தினத்தை வாக்களிக்கவில்லை. ஒரு வேளை அவர் அதை உனக்குத் தரலாம், தராமலும் போகலாம்'' என்று அர்ச். அகுஸ்தினார் சொல்கிறார். இரவில் நல்ல உடல்நலத்தோடு படுக்கைக்குச் சென்று, காலையில் இறந்தவர்களாகக் காணப்பட்ட பலருக்குக் கடவுள் அதைத் தர மறுத்திருக்கிறார். பாவம் செய்து கொண்டிருக்கும்போதே எத்தனை பேரைக் கடவுள் அடித்து வீழ்த்தி, நரகத்திற்கு அனுப்பியிருக்கிறார்!

அதையே உனக்கும் அவர் செய்வார் என்றால், உன் நித்திய அழிவை நீ எப்படி சரிசெய்து கொள்ள முடியும்? ""நான் பிற்பாடு பாவசங்கீர்த்தனம் செய்து கொள்வேன்'' என்ற இந்த மாய்கையின் வழியாக, பசாசு ஆயிரமாயிரம் ஆன்மாக்களை நரகத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. தன்னையே தீர்ப்பிட்டுக் கொள்ளத் தீர்மானிக்கும் அளவுக்கு அவநம்பிக்கை கொண்ட ஒரு பாவியைக் கண்டுபிடிப்பது நமக்கு மிகவும் அரிதான காரியம்: எதிர்காலப் பாவசங்கீர்த்தனம் என்ற நம்பிக்கையில் பாவம் செய்யும்போதும் கூட, அனைவருமே இப்படிச் செய்கிறார்கள். இவப்வாறு ஏராளமான பரிதாபத்திற்குரிய ஆத்துமங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் தங்கள் கடந்த காலத்தை இனி சரிசெய்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே, என் தேவனே, நீர் எனக்கு மிக நல்லவராய் இருந்திருப்பதாலேயே நான் இப்படி உம்மிடம் நன்றியற்றவனாக இருந்து வந்திருக்கிறேனா? நாம் ஒரு போட்டியில் ஈடுபட்டிருக்கிறோம்: நான் உம்மிடமிருந்து விலகியோட வேண்டும், நீர் என்னைத் துரத்திக் கொண்டு வர வேண்டும்; நீர் எனக்கு நன்மை செய்ய வேண்டும், பதிலுக்கு நான் உமக்குத் தீமை செய்ய வேண்டும்! ஆ, என் ஆண்டவரே, வேறு எந்தக் காரணமும் இல்லாதிருந்தாலும் கூட, எனக்கு நீர் காண்பித்துள்ள நன்மைத்தனம் ஒன்றே உம்மை நான் நேசிக்கச் செய்திருக்க வேண்டுமே, ஏனெனில் நான் என் பாவங்களை அதிகரித்துக் கொண்டிருந்த போது, நீரோ உமது வரப்பிரசாதங்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறீர்; இப்போது நீர் எனக்குத் தரும் இந்த ஞான ஒளிக்கு நான் தகுதி பெற்றிருப்பது எப்படி? என் ஆண்டவரே, இதற்காக என் முழு இருதயத்தோடு நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; நித்திய காலமும் மோட்சத்தில் இதற்காக நான் உமக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்பேன் என்று நம்பியிருக்கிறேன்.

ஆனால்: தற்போது, சோதனையை எதிர்த்து நிற்க என்னிடம் பலமிருப்பதாக நான் உணரவில்லை என்று நீ சொல்கிறாய். இதோ பசாசின் இரண்டாவது மாய்கை! தற்போதைய ஆசாபாசத்தை எதிர்த்து நிற்பது சாத்தியமில்லை என்று உனக்குத் தோன்றும்படி அவன் செய்கிறான். முதலாவதாக, அப்போஸ்தலர் கூறுவது போல கடவுள் பிரமாணிக்கமுள்ளவர், நம் பலத்துக்கு மேலாக சோதிக்கப்பட அவர் நம்மை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்: ""சர்வேசுரன் பிரமாணிக்கம் உள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார்'' (1கொரி.10:130. மேலும், நான் உன்னிடம் கேட்கிறேன், இப்போது எதிர்த்து நிற்கும் நம்பிக்கை உன்னிடம் இல்லை என்றால், பிற்பாடு எதிர்த்து நிற்க உன்னால் முடியும் என்று எப்படி நம்புவாய்? இனி, வேறு பாவங்களுக்கு உன்னைச் சோதிக்கப் பசாசு தவற மாட்டான்; அதன்பின் அவன் உனக்கு எதிராக மேன்மேலும் அதிக பலம் பெறுவான், நீயோ அதிகமதிகம் பலவீனமுள்ளவன் ஆவாய். ஆகவே, இந்த நெருப்பை இப்போது உன்னால் அணைக்க முடியாது என்று நீ உணர்கிறாய் என்றால், அது அளவிட முடியாத வண்ணம் பெரிதாகி விடும்போது எப்படி அதை அணைப்பாய்? கடவுள் எனக்கு உதவுவார் என்கிறாயா? ஆனால் இப்போதும் உனக்கு உதவ அவர் தயாராக இருக்கிறாரே! அப்படியிருக்க, இந்த உதவியைக் கொண்டு நீ ஏன் பாவத்தை எதிர்த்து நிற்கக் கூடாது? இப்போது உனக்கு அதிக உதவியும் பலமும் தேவை என்றால், அதை ஏன் நீ கடவுளிடம் கேட்கக் கூடாது? தம்மிடம் கேட்கப்படும் அனைத்தையும் தந்தருள்வதாக வாக்களித்துள்ள கடவுளின் பிரமாணிக்கத்தின் மீது நீ சந்தேகப்படுகிறாயா? ""கேளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்'' (மத்.7:7). கடவுள் தவற முடியாதவர், அவரிடம் தஞ்சமடைவாய், அப்போது அவர் எதிர்த்து நிற்க உனக்குத் தேவையான பலத்தைத் தந்தருள்வார். ""சாத்தியமில்லாதவற்றைக் கடவுள் கட்டளை இடுவதில்லை, மாறாக, கட்டளையிடுவதன் மூலம் உன்னால் செய்ய முடிவதைச் செய்யும்படி அவர் உனக்கு அறிவுறுத்துவதோடு, உன்னால் (செய்ய) முடியாததற்காக ஜெபிக்கும்படியும் அவர் உன்னிடம் கூறுகிறார். உன்னால் செய்ய முடியும்படி அவர் உனக்கு உதவி செய்கிறார். செய்ய முடியாத எதையும் கடவுள் கட்டளையிடுவதில்லை. ஆனால் தமது கட்டளைகளை நம்மீது சுமத்துவதன் மூலம், அவர் நம்மீது பொழியும் உதவியைக் கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்யும்படி அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்'' என்று திரிதெந்தின் பொதுச்சங்கம் கூறுகிறது. அந்த உதவி எதிர்த்து நிற்க நமக்குப் போதாது என்றால், இன்னும் அதிக உதவிக்காக மன்றாடும்படி அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்; நாம் முறையான விதத்தில் அதைக் கேட்டு மன்றாடுவோம் என்றால், அவர் நிச்சயமாக அதை நமக்குத் தந்தருள்வார்.

ஓ என் பிரியமுள்ள சேசுவே, நான் உம்மிடம் வருகிறேன். உமது திரு இரத்தத்தின் வழியாக நான் இரட்சிக்கப்படுவேன் என்று நம்புகிறேன். இதை நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் நீர் எனக்கு அத்தகைய மாபெரும் இரக்கம் காட்டியிருக்கிறீர். இதனிடையே, உமக்கு இனி ஒருபோதும் துரோகம் செய்யாதிருக்க எனக்குப் பலம் தருவீர் என்றும் நான் நம்புகிறேன். நான் மிக அதிகமாக உம்மை நோகச் செய்து விட்டேன். என் எஞ்சிய வாழ்வில் நான் உம்மை நேசிப்பேன். எனக்காக மரித்த பின், நான் அவருக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் மீறி மிகுந்த பொறுமையோடு என்னைப் பொறுத்துக் கொண்டுள்ளவருமாகிய இந்த சர்வேசுரனை நான் எப்படி நேசிக்காதிருக்க முடியும்? ஓ என் ஆத்துமத்தின் தேவனே, என் முழு இருதயத்தோடு நான் மனஸ்தாபப்படுகிறேன்; என்னை விட அதிகமாக நான் உம்மை நேசிக்கிறேன். நித்தியப் பிதாவே, சேசுகிறீஸ்துநாதரின் பேறுபலன்களின் வழியாக, உம்மை நேசிக்க விரும்பும் நீசப் பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும். மரியாயே, என் நம்பிக்கையே, எனக்கு ஒத்தாசையாயிருங்கள்; பசாசு மீண்டும் பாவம் செய்யும்படி என்னைச் சோதிக்கும் ஒவ்வொரு முறையும் உம் திருமகனிடமும், உங்களிடமும் எப்போதும் தஞ்சமடையும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்.