நம் தேவ அன்னை ஜெபமாலையை எவ்வளவு உயர்வாகக் கருதுகிறார்கள் என்றும், மற்ற எந்தப் பக்தி முயற்சியையும் விட இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றும் வார்த்தைகளால் கூற என்னால் இயலாது. ஜெபமாலைப் பக்தியைப் பிரசங்கிப்பவர்களுக்கு தேவ அன்னை எவ்வளவு மேலான வெகுமானம் அருளுகிறார்கள் என்றும் ஜெபமாலைக்கு எதிராக வேலை செய்கிறவர்களை எவ்வளவு உறுதியாய்த் தண்டிக்கிறார்கள் என்றும் என்னால் போதிய அளவு எடுத்துரைக்க முடியாது.
தன் வாழ் நாள் முழுவதும் அர்ச். சாமிநாதர் வேறு எதையும் விட தேவ தாயைப் போற்றுவதிலும், அவர்களின் மேன்மையை உரைப்பதிலும், எல்லாரும் ஜெபமாலையால் அவர்களை வாழ்த்தும் படி தூண்டுவதிலும் கருத்தாயிருந்தார். இதற்குப் பரிசாக அவர் தேவ அன்னையிடமிருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றார். பரலோக அரசி என்ற முறையில் நம் அன்னை , தனக்குள்ள பெரிய வல்லமையால் அவருடைய உழைப்பை பல அற்புதங்களாலும் புதுமைகளாலும் விளங்கச் செய்தார்கள். தேவ அன்னையின் வழியாக அவர் இறைவனிடம் கேட்ட எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். அவர் அடைந்த மகிமையில் சிறந்தது ஆல்பிஜென்ஸ் பதிதத்தை அன்னையின் உதவியால் முறியடித்ததும், ஒரு பெரிய துறவற சபையை நிறுவி அதன் மூப்பராக இருந்ததுமே.
ஜெபமாலை மீது பக்தியை மீண்டும் புதுப்பித்த முத். ஆலன்ரோச் என்பவர் தேவ தாயிடமிருந்து அநேக சலுகைகளைப் பெற்றார். அவர் தம் ஆன்ம இரட்சண்யத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒரு நல்ல குருவாகவும் உத்தம துறவியாகவும் நமதாண்டவரைப் போல் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும், மாதா அநேக காட்சிகள் மூலம் அன்புடன் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
முத் ஆலன் மிகக் கடுமையாக சோதிக்கப்பட்டார். பசாசால் கொடுமைப்படுத்தப்பட்டார். மிக ஆழமான துயரம் அவரை மூடிக்கொள்ளும். சில சமயம் அவநம்பிக்கையின் அருகிலும் வந்து விடுவார். ஆனால் எப்போதும் தேவதாயின் இனிய பிரசன்னத்தினால் அவர் ஆறுதல் பெற்றார். அவருடைய ஆன்மாவைக் கவ்வியிருந்த இருண்ட மேகங்களை அன்னையின் பிரசன்னம் அகற்றி விடும்.
ஜெபமாலையை எப்படிச் சொல்வது என்பதை மாதா அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் விளையும் பலனை விளக்கிச் சொன்னார்கள். ஒரு மாபெரும் மகிமையான சலுகையை தேவ அன்னை அவருக்குக் கொடுத்தார்கள். அது என்னவென்றால், தன் புதிய நேசன் என்று அழைக்கப்படும் மகிமைதான். அவர் மீது கொண்டிருந்த புனிதமான அன்பின் அடையாளமாக அவருடைய விரலில் ஒரு மோதிரத்தையும் அணிவித்தார்கள். தன் தலையில் முடியால் வனைந்த ஒரு கழுத்தணியை அவர் கழுத்தில் பூட்டினார்கள். ஒரு ஜெபமாலையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
சங்கைக்குரிய அருட்தந்தை. திரிதெம் என்பவரும் மிகவும் கற்றறிவாளர்களான கார்த்த ஜெனா , நாவார் நகர் மார்ட்டின், இன்னும் மற்றவர்களும் முத் ஆலனைப் பற்றி மிக உயர்ந்த புகழ் மொழி கூறியுள்ளார்கள். 1475-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள் ஃபிளான்டர்ஸில், சூநோல் என்னுமிடத்தில் முத் ஆலன் மரித்தார். 1,00,000 பேரை ஜெபமாலைப் பக்தி சபையில் சேர்த்திருந்தார் அவர்.
முத்திப் பேறு பெற்ற அருளப்பரின் தோமாஸ் என்று ஒருவர் இருந்தார். ஜெபமாலையைப் பிரசங்கிப்பதில் இவர் மிகவும் பெயர் பெற்றவர். ஆன்மாக்களை நல்வழிப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றிகளைக் கண்டு பொறாமைப்பட்ட சாத்தான் அவரை எவ்வளவு வாதித்ததென்றால், அவர் நோயுற்று, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். ஒரு நாள் இரவில் தான் இறந்து விடுவது உறுதி என்று அவர் நினைத்திருக்கையில், பசாசு நினைக்க முடியாத அகோர பயங்கர உருவத்தில் அவருக்குத் தோன்றியது. அவருடைய படுக்கையினருகே தேவ அன்னையின் படம் ஒன்று இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்தபடி முத். தோமாஸ் தம் முழு இருதயத்தோடும் முழு ஆன்மாவோடும் முழுப்பலத்தோடும் கதறி, 'என் இனிய, இனிய தாயே எனக்கு உதவி செய்யுங்கள் : என்னைக் காப்பாற்றுங் களம்மா!' என்றார். இதை அவர் சொல்லவும் அந்தப் படம் உயிர் பெற்றது போலாகி தேவ தாய் தன் கரத்தை நீட்டி அவர் கையைப் பிடித்துக் கொண்டு என் மகனே தோமாஸ் பயப்படாதே. இதோ நான் இருக்கிறேன். இதோ உன்னைக் காப்பாற்றினேன். எழுந்திரு. முன்பு என் ஜெபமாலையைப் பிரசங்கித்தது போல் தொடர்ந்து பிரசங்கம் செய். உன் எதிரிகளிடமிருந்து உன்னைக் காப்பேன் என உனக்கு வாக்களிக்கிறேன்' என்று கூறவும் பசாசு ஓடி ஒளிந்தது. முத். தோமாஸ் எழுந்தார். தாம் முழு சுகம் அடைந்திருப்பதை உணர்ந்தார். கண்ணீர் சிந்தி அன்னைக்கு நன்றி கூறினார். தம்முடைய ஜெபமாலை அப்போஸ்தல் அலுவலலைத் தொடர்ந்து செய்தார். அதில் ஆச்சரியத்திற்குரிய வெற்றியடைந்தார்.
ஜெபமாலையை எடுத்துச் சொல்லி பிரசங்கிப்பவர் களை மாதா ஆசீர்வதிக்கிறார்கள்; அது மட்டுமல்ல தங்கள் மாதிரிகையால் மற்றவர்கள் ஜெபமாலை செய்யத் தூண்டுகிறவர்களுக்கு மிகவும் உயரிய வெகுமானமளிக் கிறார்கள்.
லெயோன், கலீசியா ஆகிய இடங்களுக்கு அரசனாயிருந்த அல்போன்ஸ் மன்னன், தன் ஊழியர் எல்லாரும் ஜெபமாலை ஜெபித்து தேவ அன்னையை மகிமைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அவர் தம் இடைவாரில் ஒரு பெரிய ஜெபமாலையைத் தொங்க விட்டு. அதை எப்போதும் அணிந்திருந்தார். ஆனால் அவர் மட்டும் ஜெபமாலை சொல்வதேயில்லை ஆயினும் அவர் ஜெபமாலையை அவ்விதம் அணிந்திருந்ததால் அது அவர் அரண்மனையிலுள்ள வர்களுக்கு பக்தியுடன் ஜெபமாலை செய்ய ஒரு தூண்டுதலாக இருந்தது.
ஒரு நாள் அவர் நோயுற்றார். வைத்தியர்கள் நம்பிக்கையில்லை என்று கை விட்டு விட்டார்கள். அவர் இறந்து விட்டாரெனவும் எண்ணி விட்டார்கள். அச்சமயம் அவர் ஒரு காட்சியில் ஆண்டவருடைய நீதியாசனத்துக்கு முன் கொண்டு செல்லப்பட்டார். அநேக பசாசுக்கள் அவர் மீது அவருடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி குற்றம் சாட்டின. யாவருக்கும் நீதிபதியான ஆண்டவர் அவரை நரகத்துக்கு தீர்ப்பிடப் போகும் வேளையில், தேவ அன்னை அங்கு வந்து அவருக்காக மன்றாடினார்கள். ஒரு தராசை கொண்டு வரச் செய்து அதன் ஒரு தட்டில் அரசனுடைய பாவங்கள் எல்லாவற்றையும் வைத்தார்கள். மற்ற தட்டில் அவர் அணிந்திருந்த ஜெபமாலையையும் அவருடைய நன் மாதிரிகையால் சொல்லப்பட்ட எல்லா ஜெபமாலைகளையும் வைத்தார்கள். ஜெபமாலைகள் இருந்த தட்டே அதிக பாரமுள்ளதாகக் காணப்பட்டது!
தேவ அன்னை அரசனைப் பார்த்து மிகவும் கருணையுடன் : என் ஜெபமாலையை அணிந்து வந்ததினால் நீ எனக்களித்த சிறு மகிமைக்குப் பதில் நன்றியாக, என் திருக்குமாரனிடம் ஒரு பெரிய வரத்தை உனக்கெனக் கேட்டுப் பெற்றுள்ளேன். நீ இன்னும் சில ஆண்டுகள் உயிரோடிருப்பாய். அந்த ஆண்டுகளில் புத்தியோடு வாழ்ந்து தவஞ் செய் என்றார்கள்.
அரசன் சுய உணர்வு பெற்றதும் 'மகா பரிசுத்த கன்னி மரியாயின் ஜெபமாலை வாழ்த்தப்படுவதாக அதன் பலனாக நான் நித்திய தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டேன் என்றார்.
அவர் குணமடைந்த பின் தன் எஞ்சிய வாழ்நாட்களை ஜெபமாலையப் பரப்புவதில் செலவிட்டார். தினமும் ஜெபமாலையை ஜெபித்து வந்தார்.
பரிசுத்த கன்னி மரியாயை நேசிக்கிறவர்கள் அல்போன்ஸ் அரசனைக் கண்டு நடக்க வேண்டும். நான் கூறியுள்ள அர்ச்சிஷ்டவர்களையும் கண்டு ஒழுக் வேண்டும். இவ்வாறு செய்து ஜெபமாலைப் பக்தி சபைக்கு அநேகரைக் கொண்டு வரவேண்டும். இதனால் இவ்வுலகில் அவர்கள் பெரிய வரங்களை அடைவார்கள். இதற்குப் பின் நித்திய வாழ்வைப் பெறுவார்கள். என்னைப் பிறருக்கு எடுத்துச் சொல்கிறவன் நித்திய வாழ்வடைவான் (சீராக். 24:31).