இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 5. ஜெபமாலைப் பக்தி சபை

சரியாய்ச் சொல்வதானால் ஒரே ஒரு வகையான ஜெபமாலைப் பக்தி சபை மட்டுமே இருக்க முடியும். அதாவது, அச்சபையில் உட்படுகிறவர்கள் ஒவ்வொரு நாளும் முழு ஜெபமாலை - நூற்று ஐம்பத்து மூன்று அருள் நிறை மந்திரம் கொண்ட முழு ஜெபமாலையைச் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும். ஆயினும் ஜெபமாலை சொல்லுகிறவர்களின் பக்தியின் தராதரத்தைக் கொண்டு பார்த்தால் மூன்று வகையாக அவர்களைப் பிரிக்கலாம். முதலில் சாதாரண உறுப்பினர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு முழுச் ஜெபமாலை சொல்ல வேண்டும். இரண்டாவது, நிரந்தர உறுப்பினர்கள். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முழு ஜெபமாலை சொல்வது போதும். மூன்றாவது நாள் உறுப்பினர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முழு ஜெபமாலை செய்து ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபமாலைப் பக்தி சபையில் (மேற்கூறியபடி ஒப்புக் கொண்டு) உறுப்பினராகிறவர்கள் அதைச் செய்யத் தவறினால் பாவத்திற்குள்ளாவதில்லை. தாங்கள் மேற்கொண்ட இக்கடமையை நிறைவேற்றாவிட்டால் அவர்களுக்கு அது அற்பப் பாவம் கூட இல்லை . காரணம், இது தன் சுயவிருப்பத்தால் ஏற்றுக் கொள்ளும் நிபந்தனையே; இன்றியமையாத ஒரு காரியமல்ல. தங்கள் அந்தஸ்தின் கடமைகளுக்கும் பங்கமில்லாமல் மேற்கூறிய நிபந்தனையை நிறைவேற்ற இயலாதவர்கள் இச்சபையில் சேரக்கூடாதென்று கூற தேவையில்லை.

ஜெபமாலை சொல்வது எவ்வளவோ புனிதமான காரியந்தான். ஆனால் ஒருவனுடைய வாழ்க்கை நிலையின் கடமைகளைச் செய்யமுடியாதபடி ஜெபமாலை குறுக்கிடுமானால் அவன் தன் கடமையையே செய்ய வேண்டும். இதைப் போல் நோயாளிகள் முழு ஜெபமாலையையோ அல்லது அதில் ஒரு பகுதியையோ சொல்வதற்குத் தேவையான முயற்சி அவர்களைக் களைப்படையச் செய்து நோயை அதிகரிக்குமானால், அவர்கள் ஜெபமாலை சொல்ல வேண்டியதில்லை.

கீழ்ப்படிதலினிமித்தம் ஒருவன் மேற்கொள்ளும் அலுவலினால் அவன் ஜெபமாலை சொல்லக் கூடா விட்டாலோ அல்லது ஒருவன் ஜெபமாலை சொல்ல உண்மையிலேயே மறந்து விட்டிருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு அவசர தேவையினால் ஜெபமாலை சொல்ல முடியாமல் போய் விட்டாலோ அவன் அற்பப் பாவம் முதலாய்ச் செய்ய மாட்டான். மேற்குறித்த சந்தர்ப்பங்களில் ஜெபமாலைப் பக்தி சபையின் ஞானப் பலன்களை அவன் இழப்பதில்லை. உலகமெங்கும் ஜெபமாலை சொல்லி வரும் எல்லா சகோதரர் சகோதரிகளுடைய பேறு பலன்களிலும் வரப்பிரசாதங்களிலும் அவன் பங்கு கொள்ளவே செய்கிறான்.

என் அன்புக்குரிய கத்தோலிக்க மக்களே! நீங்கள் உங்கள் கவனக்குறைவாலோ அல்லது சோம்பலினாலோ ஜெபமாலை சொல்லாமலிருந்தாலும், ஜெபமாலை மீது துவேசம் கொள்ளாத வரையிலும் நீங்கள் பாவஞ் செய்வதில்லைதான். ஆனால் நீங்கள் அவ்வாறிருந்தால் ஜெபமாலைப் பக்தி சபையின் வேண்டுதல்களிலும் நற்செயல்களிலும் பேறு பலன்களிலும் உங்களுக்குக் கிடைக்கும் பங்கை வேண்டாமென உதறித் தள்ளுகிறீர்கள். மேலும் நீங்கள் சிறியதும், அத்தியாவசியம் இல்லாததுமான காரியங்களில் பிரமாணிக்கம் தவறுவதால் ஒரு கேடு விளைகின்றது. அதாவது, செய்யாவிட்டால் பாவம் என்றுள்ள கடமைகளில் கூட தவறிப் போகும் நிலை ஏறக்குறைய நிச்சயமாய் உங்களை அறியாமலே பழக்கத்தில் வந்து விடும். ஏனென்றால் சிறு காரியங்களை அசட்டை செய்கிறவன் சிறுகச் சிறுக தவறி விடுவான் (சீராக் 19.1(b)).