இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 50. ஜெபமாலை சொல்ல பல்வேறு முறைகள் - முதலாம் முறை

புனித ஜெபமாலை சொல்வதை உங்களுக்கு எளிதாக்குமாறு இங்கு பல முறைகள் கூறப்படுகின்றன. இவை சேசு மரியாயின் சந்தோஷ துக்க, மகிமைத் தேவ இரகசியங்களைத் தியானித்தப்படி நல்ல விதமாய் ஜெபமாலை செய்ய உங்களுக்கு உதவும். எந்த முறை உங்களுக்கு விருப்பமோ, எது அதிகம் உதவுமோ அந்த முறையை எடுத்துக் கொள்ளுங்கள். புனித வாழ்வுடையோர் பலர் இதற்கு முன் செய்துள்ளது போல நீங்களே ஒரு தனி முறையை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.

சேசு மரியாயின் வாழ்க்கை , பாடுகள், மகிமை என்ற திரு நிகழ்ச்சிகளின் அருள் வரங்களை நம் மீது பெற்றுக் கொள்ள ஏதுவாக திருஜெபமாலையைச் செய்யும் முறைகள் :

முதலாம் முறை

முதலில், இஸ்பிரீத்து சாந்துவே தேவரீர் எழுந்தருளி வாரும்.... என்ற ஜெபத்தைச் சொல்லி நீங்கள் செய்யப்போகும் ஜெபமாலையை ஒப்புக் கொடுங்கள்.

என் சேசுவே! மோட்சத்திலிருக்கிற எல்லா அர்ச்சிஷ்டவர்களுடனும் உலகத்திலுள்ள நல்லோர் யாவருடனும் என்னை ஒன்றிக்கிறேன்,

உம் அன்னையை தகுந்த விதமாய் வாழ்த்திப் போற்றவும் அவர்களால், அவர்களிலேயே அதைச் செய்யவும் என்னை உம்முடனே ஒன்றிக்கிறேன்.

இச் ஜெபமாலைச் செய்யும் போது எனக்கு வரக்கூடிய பராக்கு யாவற்றையும் வெறுத்துத் தள்ளுகிறேன்,

ஓ பரிசுத்த கன்னிமாமரி அன்னையே! உலகிலிருக்கும் போது நீங்கள் கொண்டிருந்த விசுவாசத்தை மகிமைப்படுத்தும்படியாகவும் அதே விசுவாசத்தில் எங்களுக்கும் பங்கு தர வேண்டும் என்று உங்களிடம் கேட்பதற்காகவும் இந்த விசுவாச உச்சாரணத்தை ஒப்புக் கொடுக்கிறோம். (விசுவாசப் பிரமாணம் சொல்லவும்).

எங்கள் தேவனே! உமது திரித்துவ ஒருமைப்பாட்டில் உம்மை ஆராதிக்கவும் யாவற்றுக்கும் முதல் காரணமும் இறுதிக்கதியுமாய் நீர் இருப்பதை ஒப்புக் கொள்ளவும் இந்த பரலோக மந்திரத்தை ஒப்புக் கொடுக்கிறோம். (பரலோக மந்திரம் சொல்லவும்)

மகா பரிசுத்த திரித்துவமே, அர்ச். கன்னி மரியாயிக்கு நீர் அளித்த எல்லா வரங்களுக்காகவும், அவ்வன்னையின் மன்றாட்டால் எங்களுக்கு அளித்துள்ள யாவற்றுக்காகவும் நன்றி கூறும்படியாக இம்மூன்று அருள் நிறை மந்திரங்களையும் ஒப்புக் கொடுக்கிறோம். (3 அருள் நிறை மந்திரம் சொல்லவும்)

(குறிப்பு : இம்முறை இக்கால வழக்கில் சற்று மாறியுள்ளது. புனித லூயிஸ் எழுதியுள்ளபடி இதை இங்கு கொடுத்துள்ளோம்)

ஒவ்வொரு பத்து மணியையும் ஒப்புக் கொடுக்கும் முறை அடுத்த பதிவில்...